பள்ளிக்கூடத்தின் அவசியம்
இன்று
நம் நாட்டில் நம் பிள்ளைகள் படிக்கப்
பள்ளிக்கூடங்களுக்குத் தேவை அதிகமாகி விட்டது.
இந்த
4,5 வருஷங்களாகச் சண்டை ஏற்பட்ட பிறகும்
மேன்மை தங்கிய கவர்னர் சர்.
ஆர்தர் ஹோப் துரை வந்தபிறகும்,
பள்ளிக் கூடங்களில் படிக்கும் பிள்ளைகள் அதிகமாக ஆகிவிட்டதுடன், அதிகமான
எண்ணிக்கையுள்ள பிள்ளைகள் பாஸ் செய்து காலேஜ்
வகுப்புகளுக்கு யோக்கியதை உடையவர்களாகவும் ஆகிறார்கள். இந்தப் பிள்ளைகள் பெரிதும்
தங்களுக்குப் போதுமான பள்ளிக்கூடங்கள் இல்லாமல்
தவிக்கின்றார்கள். அதிலும் இவ்வருஷம் அதிகமான
தவிப்பு.
சென்றவாரம்
வந்த மெயில் பத்திரிகையில் சென்னை
காலேஜ்களில் படிக்க வரும் பிள்ளைகளின்
எண்ணிக்கை அமோகமாய்ப் பெருகிவிட்டது என்றும், அனேக காலேஜ்களில் இடமில்லை
என்று வெளியில் பலகை எழுதி தொங்கவிட்டிருக்கிறது
என்றும், பிள்ளைகள் இடமில்லாமல் தெருத்தெருவாய் அலைகிறார்கள் என்றும், உதாரணமாகச் சென்னை பச்சையப்பன் காலேஜுக்கு
600 புதுப்பிள்ளைகள் சேர்க்க வேண்டியதற்கு 2000 விண்ணப்பங்கள்
வந்து அப்போதே குவிந்து கிடக்கின்றன
என்றும் எழுதி இருக்கிறது. மற்றொரு
சேதி 60 பிள்ளைகள் சேர்க்கப்பட வேண்டிய க்ஷ.ஊடிஅ.,
வகுப்புக்கு மாத்திரம் 600 விண்ணப்பங்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோலவே மாகாணத்தில் உள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களும்
நிரம்பிவிட்டதாகவும், காலேஜுக்கு மாத்திரம் பல 1000க்கணக்கான பிள்ளைகள்
இடமில்லாமல் தவிப்பதாகவும் தெரிகிறது.
இது
நாட்டின் கல்வி ஆசைக்கு அறிகுறி
ஆனாலும் பிள்ளைகளுக்குக் கஷ்டகாலம் என்று சொல்லவேண்டி இருக்கிறது.
வகுப்பு
விகிதாச்சாரப்படி பிள்ளைகளைச் சேர்க்காமல் இந்தக் கஷ்டகாலத்திலும் பார்ப்பனப்
பிள்ளைகளுக்கு 100-க்கு 100 பேருக்கு இடம் கிடைத்த பிறகுதான்
மற்ற பிள்ளைகளின் நிலை அனேக காலேஜுகளில்
கவனிக்கப்படுவதாகப் புகார் வருகிறது. இவற்றுள்
கிறிஸ்தவப் பாதிரிகளால் நடத்தப்படும் காலேஜுகளில் பெரிதும் இந்தக் காரியங்கள் தலை
சிறந்து விளங்குகின்றன.
இன்று
கல்வியானது கல்வி ஸ்தாபனக்காரர்களுக்கு ஒரு வியாபார
சாதனம்போல் இருக்கிறது. ஹைஸ்கூல்கள் பெரிதும் நல்ல இலாபத்தில் நடைபெறுகின்றன.
பாதிரிமார் காலேஜுகள் பெரிதும் கிறிஸ்தவப் பிரசாரச் செலவுக்கு பணம் சுரக்கும் ஊற்றுகளாய்
விளங்குகின்றன; பார்ப்பன ஸ்தாபனங்களோ பார்ப்பனர்களின் உத்தியோகத்திற்கும், அந்த வகுப்புப் பிள்ளைகளின்
தனிப்பட்ட நலத்துக்கும் ஒப்பற்ற ஒதுக்கிடமாய் விளங்குகின்றன.
மற்றபடி சாதாரண பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
கல்வியில் மிகக் குறைந்த எண்ணிக்கை
உள்ள வகுப்புகளைப் பற்றி கேள்வி கேட்பாடு
இல்லாமல் இருக்கின்றன.
இந்தக்
கஷ்டமும் அக்கிரமும் பரிகரிக்கப்பட யாருக்கும் கவலை இல்லை. சண்டையில்
பணம் தேடினவர்கள் இந்தத் துறையில் சரிவரக்
கவலை செலுத்தாமல் கோவில், உற்சவம், கலியாணம்,
கருமாதி முதலிய காரியங்களில் கவலை
செலுத்துகிறார்கள்.
படித்த
கூட்டம், பட்டம் பதவிக்கு அலைகின்றார்கள்;
பணக்காரக் கூட்டம் மேலும் கொள்ளை
அடிக்கத் திரிகிறார்கள். நாட்டு மக்களின் முக்கியமான
தேவை, குறை ஆகியவவைகளைப் பற்றிக்
கவலை கொள்ளுகிறவர்கள் மிக மிகக் குறைவாகப்
போய்விட்டது.
இன்றைய
இந்த நிலையில் திருப்பதி வெங்கிடாசலபதிக்குப் 10 லட்ச ரூபாயில் கிரீடம்
செய்யப்பட்டு அதைச் சூட்ட நாள்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்ம பிரபுக்களும், மதத்
தலைவர்களும், மத இலாக்காக்காரர்களும், சர்க்காராரும் இந்த
நிலையில் இருக்கிறார்கள் என்றால், நம் அறிவற்ற மானமற்ற
தன்மைக்கு இதைவிட வேறு சாட்சியம்
என்ன வேண்டும்.
இதுதான்
இப்படி என்றால், நம் செல்வந்தர்கள் பலர்
தங்கள் மக்களைச் சாதாரணப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் பிள்ளைகளோடு சேர்ந்து கெட்டுப்போகிறார்கள் என்று கருதியும் பெருமை
கருதியும் அய்ரோப்பிய பிள்ளைகள் படிக்கும் கான்வென்ட், மான்போர்ட் ஸ்கூல் என்பது போன்ற
பெருமையுள்ள பள்ளிகளுக்கு அனுப்பி மாதம் 1-க்கு
பிள்ளை 1-க்கு 100 ரூபாய் போல் செலவு
செய்கிறார்கள். அப்படிச் செய்தாலும் அவைகளுக்குச் சரியான போஷணை பயிற்சி
இல்லாமல், பார்வை இல்லாமல் பெரிதும்
குடி, சிகரட்டு, மற்ற சில தவறான
காரியங்கள் கற்றுக்கொண்டும் மற்ற மக்களையும் இழிவாய்க்
கருதும்படியான மனப்பான்மையுடன்தான் பலர் திரும்புகிறார்கள். இந்தக்
குறைபாடுடன் மற்றொரு குறைபாடு அதாவது
கிறிஸ்தவ மத உணர்ச்சியையும். மதப்
படிப்பையும், சர்ச்சுக்கு செல்வதையும் கட்டாயமாகப் புகுத்தப்படுகிறார்கள்.
இவ்வளவு
மாத்திரம்தானா என்றால் அங்கு பிள்ளைகளை
நடத்துவதிலும் அய்ரோப்பியப் பிள்ளைகள் என்பவர்களை ஒரு விதமாகவும், மற்ற
நம் திராவிடப் பிள்ளைகள் என்பவர்கள் ஒருவிதமாகவும் நடத்துகிறார்கள் என்கின்ற புகாருக்கு அளவில்லை. மற்றும் நம் பிள்ளைகளுக்கு
அதிகச் செலவும் அய்ரோப்பிய சட்டைக்காரப்
பிள்ளைகளுக்குக் குறைந்த செலவும் ஆகின்றதாம்.
காலேஜுக்கு நல்ல இலாபமும் வருகிறதாம்.
இந்த நிலையில் ஏராளமான பணம் செலவழித்தும்
நம் இன மக்களோடு மக்களாய்
கலந்து வாழ்வதற்கு வசதி இல்லாமல் நாட்டு
வாழ்க்கை முறைக்கும் பழக்கமில்லாமல் இருப்பதில் எவ்வளவு மடமை இருக்கிறது
என்று யாரும் சிந்திப்பதில்லை.
ஏற்காடு,
கொடைக்கானல், ஊட்டி, குன்னூர் முதலிய
இடங்களில் உள்ள அய்ரோப்பிய பள்ளிக்கூடங்கள்
காலேஜுகள் போல், நம் செல்வந்தர்கள்
அப்படிப்பட்ட இடங்களில் காலேஜுகள் வைத்து நடத்துவது என்றால்
செல்வந்தர்கள் குழந்தைகளும் நல்ல பலனை அடைந்து
நம் நாட்டுக்கு, நம் இன நலனுக்கு
ஏற்ற கல்வி, பழக்கவழக்கம், பகுத்தறிவு
ஆகியவைகள் பெற்று நம் மக்களுடன்
சகோதரத் தன்மையுடன் வாழ முடியும்.
இப்போது
புதுப் பள்ளிகள், காலேஜுகள் ஏற்பட கட்டடம் கிடைப்பது
கஷ்டம் என்று சாக்கு சொல்லப்படுகிறது.
அது சரியான காரணமாக இருக்க
முடியாது, கொஞ்சகாலத்துக்கு மாத்திரம் இருக்கும் இடங்களை நெருக்கி உபயோகித்துக்
கொள்ள சர்க்கார் அனுமதிக்க வேண்டும். பெரிய கட்டடங்களை, பங்களாக்களை
சர்க்கார் மக்களிடம் வாங்கிக் கொடுக்க வேண்டும். வாடகை
நஷ்டத்தில் ஒரு நல்ல பகுதி
சர்க்கார் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனெனில்,
இந்தக் காலத்தில் மக்களுக்கு இருக்கும் ஆசையும் செலவழிப்பதில் இருக்கும்
உற்சாகமும் இனி ஒன்று இரண்டு
வருஷம் பொறுத்தால் இருக்க முடியாமல் போய்விடும்.
மற்றும்
ஈரோட்டைப் பொறுத்தவரை ஒன்று கூற ஆசைப்படுகிறோம்.
ஈரோடு
பெரிய பட்டண(நகர)மாக
ஆகிவிட்டது. பெரிய வியாபார ஸ்தலமாகவும்,
ஜவுளி, நூல் வர்த்தகத்திற்குப் பெயர்போன
மத்திய ஸ்தலமாகவும், நெசவு நெய்வது, நெல்
அரைப்பது, எண்ணெய் பிழிவது, சாயம்
அச்சு அடிப்பது முதலிய தொழிற்சாலைகள், இயந்திர
சாலைகள் அதிகமாக ஆகிவிட்டன.
ஜனத்தொகை
60000-க்குக் குறையாது. டவுனில் மாத்திரம் 4 ஹைஸ்கூல்கள்
இருக்கின்றன. ஈரோட்டிற்கு 10 மைல், 15 மைல், 20 மைல் தூரத்திலும் மற்றும்
கோயமுத்தூரைவிட சேலத்தைவிட ஈரோடு சமீபம் என்று
சொல்லும்படியான இடங்களிலுமாக சுமார் 10 ஹைஸ்கூல்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாவற்றிற்கும் பயன்படும்படியாக
ஈரோட்டில் ஒரு 2ஆம் தர
(2னே ழுசயனந) காலேஜ் ஒன்று
கட்ட, வைக்க சகல வசதியும்
இருக்கின்றன. இங்கு செல்வர்களும் லட்சாதிபதிகளும்
பல லட்சத்திற்கு அதிபதிகளுமாக 100க் கணக்காகவே இருக்கிறார்கள்.
வருஷம் 10,000 முதல் 50,000 ரூபாய் வரை இலாபம்
சம்பாதித்தவர்களும் அதுபோலவே இருக்கிறார்கள். வருமான வரி லிஸ்டைக்
கொண்டு இதை நிர்ணயிக்கக்கூடாது. நல்ல
செல்வர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இந்த ஊரில் ஒரு
2ஆம் தர காலேஜ் இல்லை
என்றால் செல்வர்களுக்கு புத்தி இல்லை என்று
சொல்லுவதா, கட்டுப்பாடு இல்லை என்று சொல்வதா,
கல்வியில் கவலை இல்லை என்று
சொல்வதா என்றால், இவை ஒன்றும் அல்ல
என்றும், எது நல்ல காரியம்,
எது அவசியமான காரியம் என்ற பகுத்தறிவில்லை
என்றும்தான் சொல்லுவோம்.
ஏனெனில்,
நாட்டில் எங்கு பார்த்தாலும் மதப்
பிரசாரக்காரர்களும், மதம் கலை, காப்பாளர்களும்,
பொது உடைமைக்காரர்களும், ராமராஜ்ஜியக்காரர்களும் தொழிலாளர் துணைவர்களும் சுயராஜ்ஜியக்காரர்களும் வழுக்கி விழுந்தால் தங்கள்மீது
விழும்படியாகப் பெருகிவிட்டார்கள்; சன்மார்க்கக்காரர்களுக்கும், சமரசக்காரர்களுக்கும், தமிழ் இசைக்காரர்களுக்கும். புராணக் கலை
வளர்ப்புக்காரருக்கும் அளவில்லை. கோயிலுக்குப் பல ஆயிரக்கணக்கில் பணம்
செலவிட்டு வாகனம் நகை முதலியவை
செய்யும் உபயக்காரர்களும் ஏராளம், ஆனால் இந்த
மிக முக்கியமான தேவையான (கல்வி) காரியத்திற்குக் கவலை
செலுத்தி உதவுவதற்கு ஆள்கள் கிடைப்பது அரிதாக
இருக்கிறது. கஸ்துரிபாய் பாண்டுகள், சில்லறை பணமுடிப்பு வசூல்கள்
ஆகிய வசூல்களுக்கும் குறைவில்லை. க்ஷயரோக ஆஸ்பத்திரி, குஷ்டரோக
ஆஸ்பத்திரி முதலிய ஆஸ்பத்திரி தர்மங்களுக்கும்
குறைவில்லை.
ஆனால்,
இவை ஏற்படாமல் தடுக்கும்படியாக மக்களுக்கு நல்லறிவு, நல்வாழ்க்கைமுறை முதலியவைகள் கற்பிக்கக் கல்வியைப் பற்றின கவலை கொள்ளச்
சர்க்கார் மீது குறை கூறுவதைத்
தவிர, காரியத்தில் செய்ய வேண்டியவர் மிக
மிக அருமையாய் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அறியாமையா, ஆரிய
சூழ்ச்சியா என்பது யோசிக்கத்தக்கதாகும்.
இவ்வூர்
(ஈரோட்டுச்) செல்வர்கள் மாரியம்மன் பண்டிகைக்கு இவ்வருஷம் 4000, 5000 வசூலித்து நாட்டாண்மைக்காரர்களாக இருந்து நடத்தினார்கள். இந்த
மாரியம்மன் உற்சவம் காட்டுமிராண்டிகள் கால
உற்சவம். இதைக் கொண்டாடும் நாட்டாண்மைக்காரர்
பெரிய மனிதர்கள் இந்தக் காலேஜ் பற்றிய
கவலை 2 மாதத்துக்கு எடுத்துக் கொண்டால் குறைந்தது 2 லட்ச ரூபாய் சேர்த்து
காலேஜ் துவக்கிவிடலாம். ஏன் இதைச் சொல்லுகிறோம்
என்றால் இந்த வருஷம் காலேஜில்
சேர மக்கள், பெற்றோர்கள், பிள்ளைகள்
பட்டபாடு அவ்வளவு பரிதபிக்கத்தக்கதாகும்.
யார்
பேரையாவது காலேஜுக்கு கொடுப்பதாயிருந்தால் அவர்களிடமிருந்து 2500-க்குக் குறைவில்லாமல் 50,000 ரூபாய் வரை
முதலில் நன்கொடை வசூலிக்கலாம் என்பது
நமது துணிவாகும். எனவே ஈரோட்டுப் பிரமுகர்கள்
சிந்திப்பார்களா?
குடிஅரசு
- தலையங்கம் - 30.06.1945
நூல் : கல்வி பற்றிய சிந்தனைகள்
ஆசிரியர் : தந்தை பெரியார்
Comments
Post a Comment