ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!
(தந்தை பெரியார் உரைத் தொகுப்பு)


தஞ்சையில் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் அவர்களின் உரை (3.11.1957) 03-11-1957ல் தஞ்சையில் முதலாவது சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றியும் 2ஆவது தந்தை பெரியார் அவர்களின் எடைக்கு எடை வெள்ளி அளிக்கப்பட்ட நிகழ்ச்சியிலும், தந்தை பெரியார் .வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய இன எழுச்சி உரை:-

அன்புமிக்க தாய்மார்களே! அருமைத்தோழர்களே! வரவேற்புக் கழகத்தலைவர் அவர்களே! மற்றும் மகாநாட்டு வரவேற்புக்குழு அங்கத்தினர்களே! இந்த மகாநாடானது சென்ற இரண்டுமாதத்துக்கு முன்னாலே திருச்சியில் கூட்டப்பட்ட திராவிடர்கழக மத்திய நிர்வாக சபைக் கூட்டத்தில் கண்டபடி அரசியல் சட்டத்தை எரிப்பதும், காந்தி படத்தை எரிப்பதும், காந்தி சிலையை நம் நாட்டை விட்டு அகற்றுவதும் முதலிய பல தீர்மானங்கள் அதில் வந்த பொழுது அங்கத்தினர்கள் பெரும்பாலோர் இந்தத் தீர்மானங்களை நாம் இந்த மத்திய கழகத்தில், மத்திய நிர்வாக சபைக் கழகத்தின் மூலமாகவே தீர்மானிப்பதைவிட இதற்கென்று ஒரு தனி மகாநாடு கூட்டி அதில் இந்த இத்தீர்மானங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி இந்நாட்டு மக்களுடைய ஆதரவைப் பெற்று அதன் பிறகு சிறிது நாள் தவணை கொடுத்து, பிரச்சாரம் செய்து இவைகளை அமலுக்குக் கொண்டு வருவோம் என்று தீர்மானிக்கப்பட்டது.

பிறந்தநாள்விழா மாநாடு

அந்த தீர்மானத்தின் கருத்துப்படியே திராவிடர் கழக தனி மாநாடு இவ்வாண்டிலேயே கூட்டுவதென்ற முயற்சி இருந்தது. அது அநேகமாக டிசம்பர் மாதத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று நான் இரண்டொருதடவை சொன்னேன், இந்த நிலையில் எனது பிறந்த நாளை முன்னிட்டு நமது தமிழ்நாட்டின் பல இடங்களில் பலவிழாக்கள் நடத்தப்பட்டிருந்த போதிலும் கூட, பல மாதிரியாக நடத்தப்பட்டிருந்த போதிலும் கூட, இந்த தஞ்சை மாவட்டத்தில் நடத்துகிற இந்த எனது பிறந்தநாள் விழாவானது சற்று விஷேசமாக இருக்க வேண்டுமென்று கருதி அவர்கள், என்னுடைய எடைக்கு எடை வெள்ளி நாணயம் கொடுப்பது என்று முடிவு செய்து அதன்படி அவ்விழாவை நடத்த முயன்றார்கள். அந்த முயற்சியில் கண்ட ஒரு விஷேசமானது இந்த விழாவுக் காகப் பெரும்பாலான மக்கள் ஊருக்கு வருவார்கள். வருவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதாக எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணத்தின்படியே பத்திரிகைகளில் பார்க்கிறபொழுது மாவட்ட மக்கள் எல்லோரும் வருவார்கள் என்றே தோன்றிற்று. இப்படிப்பட்ட ஒரு சமயத்தில் நான் முன்னமேயே குறிப்பு வைத்திருக்கிற இந்த தனிமாநாட்டை நடத்திவிட்டால் மக்களுக்கு இரண்டு விதமான செலவு இருக்காது, தொந்தரவும் இருக்காது, மக்களும் ஏராளமாக வந்து தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிற வாய்ப்பு இருக்கும் என்கின்ற எண்ணத்தின் மீதே இந்த விழாவை ஒட்டியே ஒரு தனி மகாநாடு என்று ஏற்பாடு செய்யப்பட்டது.

ஜஸ்டிஸ்கட்சி தலைவராக காரணம் இந்த மாநாட்டு ஏற்பாடுகள் எல்லாம் ரொம்ப சுருக்கம். கொஞ்சமாய்ப் பத்து நாளிலேயே துவக்கம். இப்படி இருந்த போதிலும் கூட அது நாட்டிலே உண்டாக்கின கிளர்ச்சியும், மக்களை இங்கு கொண்டுவந்து சேர்த்த இந்த முயற்சியும், மிக மிகப் பாராட்டத் தக்கதாக ஆகிவிட்டது. உண்மையிலேயே சொல்லுவேன் தங்களுடைய இயக்கத்துக்குத் தனியாக என்னுடைய உணர்ச்சிக்கும், முயற்சிக்கும், இயக்கத்தை நடத்துகிற போக்குக்கும் இந்த தமிழ்நாட்டிலே தஞ்சாவூர் மாவட்டம் தான் முதன்மையானதாக இருந்திருக்கிறது. (கைத்தட்டல்) இந்த தஞ்சாவூர் மாவட்டம் முதன்மை என்றால் திராவிடர் கழகத்துக்கு நான் வந்த பிறகு மாத்திரம் அல்ல நான் காங்கிரசிலே இருந்த காலத்திலேயும்- தஞ்சாவூர் மாவட்டம் எனக்குப் பெரிய ஆதரவு. அதைவிட்டு வெளியிலே வந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த (1925) காலத்திலேயும் ஏராளமான ஆதரவு. அந்த சுயமரியாதை இயக்கம் நடத்தின காலத்தில் ஏற்பட்ட இந்த தஞ்சாவூர் ஆதரவுதான் - என்னை ஜஸ்டிஸ் கட்சிக்குக் கூட தலைவனாக ஆக்கியது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வளவு செல்வாக்கை உண்டாக்கிக் கொடுத்தது. எந்தக் கொள்கையைச் சொல்லுகிறோமோ- மக்களிடத்தில் எது எதிர்ப்பார்க்கலாமோ அதில் தமிழ்நாட்டிலே பூராவும் பகுதிஎன்றால் - தஞ்சை மாவட்டம் பகுதிக்குக் குறையாமலேயே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல ஆதரவை அளித்து வந்திருக்கிறது.

நாணயத்தைக் காப்பவர் திராவிடர் கழகத்தினர்

அதற்குப் பிறகு திராவிடர் கழகம் நடைபெற்று வந்த இந்த 10, 15ஆண்டு காலத்திலேயும் தஞ்சாவூரினுடைய பெருத்த ஆதரவினாலே தான் இந்தத் தமிழ்நாட்டிற்குள்ளே எத்தனையோ கட்சிகளிலே தலைசிறந்த கட்சி இந்த திராவிடர் கழகம்தான், கட்டுப்பாடான கட்சி திராவிடர் கழகம்தான். நாணயமாகப் பின்பற்றுகிற மக்கள் திராவிடர் கழகத்தில்தான் இருக்கிறார்கள். எந்த விதமான சுயநலமும், வயிற்றுப் பிழைப்பும், வாழ்க்கை நயமும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் வீட்டுச் சோற்றை உண்டு எல்லாவிதமான தியாகத்துக்கும் முன்னின்று பாடுபடத்தக்க மக்கள் தஞ்சை மாவட்டத்தில் தான் என்று சொல்லும்படியான - திராவிடர் கழகத்தில்தான் என்று சொல்லும்படியான ஒரு நல்ல பெயரையும் புகழையும் இந்த தஞ்சைமாவட்டம் தான் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அந்த முறையிலேயே இந்த மாநாட்டின் நடவடிக்கைகளை பார்க்கிறபோது உண்மையிலேயே நான் சொல்லுகிறேன், பகுதி மக்கள் இன்னும் வெளியிலே இருக்கிறார்கள் இடம் இங்கே இல்லாததினாலே டிக்கட் கொடுப்பதையும் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்று கருதுகிறேன். நானும் சொல்லிவிட்டு வந்தேன். அவ்வளவு பெருங்கூட்டம்.

தலைசிறந்த தஞ்சை மகாநாடு உங்களுக்குத் தெரியும் என்னுடைய இந்த நாற்பது வயது பொது வாழ்விலே எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. நானும் எத்தனையோ மாநாடுகளில் தலைமை வகித்திருக்கிறேன். சிறப்பாக பெரிய மாநாடுகள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் போது நடந்தது, பிறகு முதல் சுயமரியாதை மகாநாடு என்பதாக செங்கற்பட்டிலே (1929)இல் நடந்த ஒரு மகாநாடு ரெக்கார்டு மகாநாடு என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலே நடந்த எல்லா மகாநாடுகளையும் விட ரொம்ப குறிப்பிடத்தகுந்தது. எல்லா மக்களும் வந்திருந்தார்கள், அதில் ஜமீன்தார்கள் மாத்திரம் 60-65 பேர்கள் வந்திருந்தார்கள். சட்டசபை மெம்பர்கள் எல்லாரும், மந்திரிகள் எல்லோரும், செல்வவான்கள் எல்லோரும், அப்புறம் நம்முடைய மக்கள் இவைகளை எல்லாம் கணக்கு பார்த்தால் சற்று ஏறக்குறைய இதிலே பகுதிமக்கள் இருக்கலாம் அல்லது முக்கால் பகுதி இருக்கலாம் என்று சொல்லலாம். அதற்குப்பிறகும் பலமகாநாடுகள் நடந்தாலும் அதை தொடும்படியான அளவிலே மகாநாடு இல்லே, ஏதோ இருந்திருக்கும் அந்தக்காலத்து நடப்புக்கும், இதுக்கும், கணக்குப் பார்த்தால் நிறைய வித்தியாசம் இருக்கும். ஆனால் இப்பொழுதும் இன்று நடைபெறுகிற இந்த திராவிடர் கழக தனி மகாநாடு என்பது என்னுடைய கணக்கு தவறாய் இருந்தாலும் இருக்கும். ஆனால் நான் தவறு இல்லை என்று நினைக்கிறேன். இதுவரையிலும் நடந்த மகாநாடுகளில் இது சிறப்பான மகாநாடு, அதிகம் மக்கள் ஆதரவாளர்கள் வந்திருக்கிற மகாநாடு, எல்லா மகாநாட்டையும் விட இதற்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால் கண்மூடித்தனமான நம்பிக்கை என்னிடத்தில் வைத்து என்னசொன்னாலும் சரி என்று கருதும்படியான (கைத்தட்டல்) இவ்வளவு உறுதியான எண்ணத்தோடு ஏறக்குறைய நான் சென்றிருந்த அநேக கிராமங்களில் அநேக நகரங்களில் உள்ள அநேக குடும்பங்கள் என்னை தங்கள்குடும்பத்திலே சேர்ந்த ஒருவர் போல கருதும்படியான அவ்வளவு அன்பும் இந்த மக்கள் கொண்டதுமான இந்த மகாநாடாகவும் இது நடைபெறுகிறது. உள்ளபடியே நல்ல பிரதிநிதித்துவம் நல்ல கூட்டம் நல்ல உணர்ச்சி இப்படிப்பட்ட ஒரு நல்ல மகாநாடு இது. இதற்கு ஆதரவாய் இருந்தும் இந்த மகாநாடு இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு காரணமாய் இருந்தது,

இது ஒரு தனி மகாநாடு

என்று சொல்லுவது ஒருபக்கம் இருந்தாலும் எடைக்கு எடை வெள்ளி நாணயம் கொடுக்கிற விழா என்கிற காரணம், பகுதிக்கு மேல் மகாநாட்டின் பெருமைக்குக் காரணமென்றே நான் சொல்லுவேன். அவருடைய மதிப்புக்குரிய ஒரு நண்பருக்கோ, தலைவருக்கோ, வழிகாட்டிக்கோ, நம்மிடையே நடந்திராத ஒரு மாதிரியான மரியாதை நடக்கப் போகுது, நாமெல்லாம் போய்க் காண வேண்டாமா என்கிற நிலையிலே - அது ஒவ்வொருத்தருடைய உள்ளத்திலேயும் தூண்டி- இவ்வளவு பெரிய மகாநாடாக நடக்குது. நான் எந்தக் கூட்டத்திலேயாவது கூட்டம் குறைவாய் இருந்தால் நான் சொல்லிவிடுவது வழக்கம் ரொம்ப மோசமாய்ப் போச்சேன்னு, அதிகமாக நான் ஒன்றும் புகழ்ந்து சொல்லுவதுமில்லை. உள்ளபடியே நானும் என்னுடைய நண்பர்களும் மற்றும் கூட்டுத் தொண்டர் குழு எல்லாருமாகச் சேர்ந்து ரொம்பவும் மனம் திருப்தி அடைகிறார்கள். நல்ல ஒரு பிரதிநிதித்துவமான மகாநாடு என்று.

இதை எல்லாம் விட இன்று காலையிலே நடந்த ஊர்வலம் எல்லாரையும் மயக்கிவிட்டது (கைதட்டல்). ஆம், எல்லாரையும் மயக்கியே விட்டது ஒருத்தர் 4 லட்சம்கிறார், ஒருத்தர் 3லட்சம்கிறார். பத்திரிகைக்குத் தந்தி கொடுத்திட்டான். 1-1/2 லட்சம், 2 லட்சமென்று, இப்படி ஏராளமான ஜனங்கள், உள்ளபடியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு என்று தெரியாது. எல்லோருக்கும் கணக்கும் குறைச்சலாகத்தான் தோணும், அவ்வளவு ஜாஸ்தி தான். (கைதட்டல்) அவ்வளவு பெருமைக்குரியது இம்மாநாடு.

இந்த மாநாட்டுப் பல வாய்ப்புகளிலே இந்த மழை ஒரு அருமையான உதவி செய்தது. (சிரிப்பு கைதட்டல்) நேற்று இரண்டு தடவை மழை, முந்தாநாள் ஒரு தடவை மழை, இங்கே எல்லாம் தண்ணி காலமே பார்த்தாலும் மழையில்லை. எல்லோருக்கும் ஒரு திருப்தி, இன்னைக்கு மழை இல்லேன்னு, கடைசியிலே தாராளமாக காலை 9-1/2 முதல் 12.05 மணி வரையிலும் ஊர்கோலம் நடக்கிற வரைக்கும், மழையில்லை - மழையில்லை, போச்சி - போச்சி (சிரிப்பு) இன்னமே மழை வராது என்று பேசிக் கொண்டு இருந்தார்கள். அது மரியாதையாகக் காத்துக்கொண்டே இருந்து ஊர்வலம் கொட்டகைக்குள் புகுந்தது (சிரிப்பு). இவ்வளவு தான் தாங்குவேன் இன்னமே தாங்கவே மாட்டேன்னுது (பலத்த வெடிச் சிரிப்பு  கைத்தட்டல்) நானும் என்னா மழை இப்படி ஆச்சே என்றார்கள். எப்படி ஆனால் என்னா மாநாடு நடந்து போச்சி போதும் போ (ஆரவாரச் சிரிப்பு) இனி என்னா? கொடுத்த ரூபாயை என்னா திருப்பிக் கொடுத்திடப் போறாங்களா? (சிரிப்பு) மழை இருந்தால் எங்கேயாவது தாவாரத்திலேயாவது எனக்கு வைச்சிக் கொடுத்திடுவாங்க. (கைத்தட்டல்) நான் எடுத்துக் கிட்டுதான் போகப் போறேன்னேன். மழை வந்திட்டுது, நாங்கள் வீட்டுக்குப் போயிட்டோம். மழை நின்னு போச்சி எனக்கு இடம் ரொம்ப மோசமாய்ப் போச்சி, எப்படி உட்காருவாங்கன்னு நினைச்சேன். இங்கே குந்திருக்கிறதைப் பார்த்தா எள் விழறதுக்குக் கூட இடமில்லாமே அவ்வளவு வசதியாய் உட்கார்ந்திருக்காங்க (சிரிப்பு) ஆனதினாலே எல்லாவிதத்திலும் மக்களும் நமக்கு ரொம்ப மகிழ்ச்சிக்குரியதும் பெருமை அமையத்தக்கதுமான மகாநாடாக இது நடக்கப் பெற்றிருக்கிறது, இதிலே மிக முக்கியமான தீர்மானம்.

எனக்குத் தோன்றுவதை நான் சொல்லுகிறேன். இந்த மகாநாடு திராவிடர் கழகத் தனி மாநாடு என்று சொல்லப்பட்டாலும் கூட என்னமா முடியுமென்றால், உங்கள் தலைவரும் மற்றும் உங்களுடைய முக்கியமான தொண்டர்களும் ஜெயிலுக்குப் போவதற்கு இது ஒரு வழியனுப்பும் மாநாடாகத்தான் முடியுமென்று கருதுகிறேன். (ஆமாம்! ஆமாம்! போகிறோம்! கைதட்டல் - தொண்டர்கள் ஆரவாரம்) அந்த மாதிரி நிலை, அந்த மாதிரி சமயம், நம்முடைய சுற்றுச் சார்பெல்லாம் அதிலேரொம்ப முயற்சி எடுத்து எப்படியாவது உங்களை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டுமென்கிற ஆசையில், இந்த மாதிரி நிலையில்

- இங்கே நாம் கூடியிருக்கிறோம். இந்த மகாநாட்டினுடைய பலன், வெற்றி அதுவாகத்தான் முடியும். கூடிய சீக்கிரத்திலே நாங்களெல்லாம் அரசாங்கத்தின் விருந்தினராக இருக்கும்படியான ஒரு வாய்ப்புக்குத் தான் இங்கே கூடியிருக்கிறோம். அது மிகவும் மகிழ்ச்சிகரமான காரியம். லேசிலே நமக்கு எல்லாம் அந்தப் பதவி கிடைக்காது. முன்பு சாதாரணமாகக் கிடைக்கும். இப்ப ரொம்ப கஷ்டம்.

பிள்ளையாரை உடைச்சோம். ஏன்னு கேட்க ஆளைக் காணோம்? இந்தியை அழிச்சோம். ஏன்னு கேட்க ஆளைக்காணோம்? ராமன் படத்தைக் கொளுத்தினோம். ஏன்னு கேட்க ஆளைக் காணோம்? கொடியைக் கொளுத்தப் போறேன்னோம். ஏன்னு கேட்கிறதுக்கில்லே? இப்படி ஊரிலே எல்லாம் நமக்கு ஒரு கெட்டபேரு. ஏன்னு கேட்க மாட்டேங்கிறாங்களேன்னுட்டு (சிரிப்பு) நல்ல வேளை திரு.ராஜகோபாலாச்சாரியார் காலத்திலே இதை ஒண்ணும் பண்ணாமல் இதை விட்டுப் போகாதிருந்தால் திரு.காமராசரை எப்படியாவது சரிகட்டிப்போவாங்க நீங்கள் அதை இதையெல்லாம் பண்ணினியேன்னு- ஏன் ஒண்ணும் பண்ணலேன்னு? சொல்லிப் போடுவாங்கன்னு போப்பா, ராஜகோபாலாச்சாரியார் காலத்திலேயே அவுகளை ஒண்ணும் பண்ணலே, அதுக்கு ஒரே பதில் போப்பா நான் தானா பண்ணப் போறேன். அப்படீன்னு சொல்லிப் போடுவாரு(கைதட்டல்).

ஆனால் செய்கிறதுக்கு ஒண்ணுமே இல்லே என் மனசார நான் சொல்றேன். நாம செய்யற காரியமெல்லாம் நாணயமான- அவசியமான காரியங்கள் அதுக்கெல்லாம் சர்க்கார் செய்கிறதுக்கு ஒரு சட்டமும் இல்லே. வெங்காயமும் இல்லே (கைதட்டல்) சும்மா மிரட்டுது, பூச்சாண்டி பிடிக்கிறது. ஏதாவது பண்ணாமலே இருப்பாங்கன்னு என்னானாலும் சரி எல்லாம் ஆயிட்டுது. அது மாதிரி காரியங்களாலே நமக்கு ஒன்றும் ஏற்படாதுங்கிற மாதிரி தான் இருக்கிறோம். ஆனால் இப்போ ரொம்பவும் அரசாங்கத்தை நெருக்குகிறார்கள். மேலே இருந்து நெருக்குகிறார்கள். இங்கே இருக்கிற பத்திரிக்கைக்காரர்களும் நெருக்குகிறார்கள் - பாப்பான்கள் எல்லாம் நெருக்கிடுகிறாங்க - இன்னும் நமக்குண்டான இயற்கையா - எதிரிகள் எல்லாம் எதிர்க்கிறாங்க. ஏன் விட்டுட்டு இருக்கிறீங்க? ஏன் விட்டுட்டு இருக்கிறீங்கன்னு? ஏன் இப்படி அவர்கள் எதனாலே நெருக்குகிறார்கள் என்று பார்த்தால், குற்றம் கண்டு பிடிச்சி நெருக்கலே, பொறாமை.

நம்மளாலேயெல்லாம் நினைக்க முடியாதது - பேசமுடியாதது -செய்யமுடியாதது. அதை இந்தக் கூட்டம் செய்யுதே - இதனாலே நமக்கெல்லாம் யோக்கியதைப் போயிட்டுதே. நாமெல்லாம் பிள்ளைப் பூச்சியாயிட்டோமே - நாம அப்படி ஆயிட்டோமே. இப்ப அவுகதானே, இப்போ உத்தரவிடற கூட்டமாய் இருக்கிறாங்களே. இப்படியே இன்னும் கொஞ்ச நாள் போனால் நாமெல்லாம் செத்துப் போக வேண்டியதுதானே, பொதுவாழ்விலே. ஆனதினாலே இவுகளைக் கொஞ்சம் அடக்கினாதான் நமக்கு மரியாதை இருக்கும் என்கிற எண்ணத்திலே பல பேர் நம்மவர்கள் இதைப் பற்றி எண்ணலானார்கள். என்ன இருந்தாலும் நமக்கு வந்து சேருகிற பல உணர்ச்சிகள் நடத்தைகள் எப்படியாவது சர்க்காரும் - முயற்சி எடுத்து ஏதாவது பண்ணித் தான் தீரவேண்டும் என்கிற நிலைமையை உண்டாக்கத் தக்கதாகத்தான் இருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் கண்டிப்பாக வரும். வந்தால் ஏதோ தங்களுக்கு இஷ்டமில்லாவிட்டாலும் ஊராரைத் திருப்தி பண்றதுக்காவது நம்ம அரசாங்கம் நம்மையெல்லாம் பிடிச்சி அடைச்சி வைக்க வேண்டி வரும். எப்படிப்பிடிக்கிறார்கள். எதற்காகப் பிடிக்கிறார்கள்? ஏன் அடைப்பார்கள்? இது ஒண்ணும் தெரியலே. ஆனாலும் நிலைமை அப்படி இருக்கு. ஆகையினாலே அது நடந்துதான் தீரும். அப்படிப்பட்ட ஒரு நல்ல காரியத்துக்காகத்தான் இந்த மகாநாடு நடந்தேறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

ஜாதி ஒழிய வேண்டும் தோழர்களே! நம்முடைய இன்றைய லட்சியம் முயற்சி உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான், என்னா? சாதாரணமான சங்கதி. ஆனால் இன்றைக்கு அது பிரமாதமான சங்கதியாக நம் மக்களிடையே காணப்படுகிறது. அதை நம் எதிரிகள் மகா மகா பிரமாதமாகக் சொல்லுகிறார்கள். என்னா? சுருக்கமான சங்கதி ஒரு வார்த்தையிலே, நாங்கள் ஒண்ணும் பிறவியிலே தாழ்ந்தவர்கள் அல்ல. எவருக்கும் நாங்கள் இளைத்தவர்கள் அல்ல, எங்களுக்கு மேலே எவருமில்லே. மக்களையெல்லாம் பிறவியிலே சமம். இந்த ஒரே கொள்கைதான் நாம இப்ப சொல்றது. இந்தக் கொள்கை நமக்குத்தான் அதிசயமாகத் தோணுதே தவிர உலகத்திலே இந்தக் கொள்கைக்கு மாறாக எங்குமே நடப்பு இல்லே. எல்லா நாட்டிலும் எல்லா மக்களும் பிறவியிலே சமம், அதுவும் நம்ம நாட்டிலே இருக்கிற அதிசயம் என்னான்னா எல்லா மக்களுக்கும் நாங்கள் சமத்துவம் வேணும்கிறோம். எல்லாத்துறையிலும் என்று சொல்லிட்டு இந்த நாட்டிலே மாத்திரம் ஜாதியிலே நாலு பேரு உண்டு. அதிலே ஒருத்தன் மேல் ஜாதி, ஒருத்தன் கீழ் ஜாதி, ஒருத்தன் வைப்பாட்டி மகன், அவனுக்கு (பாப்பானுக்கு) ஒருத்தன் தேவடியாள் மகன், ஒருத்தன் ஏன் அவனுக்கு இழிந்தவன், ஒருத்தன் ஏன் அவனுக்குப் பாடுபட்டுப் போடணும், ஒருத்தன் ஏன் அவன் உட்கார்ந்துகிட்டுச் சாப்பிடனும் - என்கிற இந்த பிரிவினைகளும் இதைத் தடுக்கிறதுக்குத் தந்திரமாக இவன் (சூத்திரன்)படிக்கவே கூடாது. இவன் (பாப்பான்) உத்தியோகத்துக்கு போகிறதுக்கு தகுந்தவன் இவன் மோட்சத்துக்கு. இவன்(சூத்திரன்) ஏர் ஓட்டத்தான் தகுந்தவன் என்கிற இந்த பிரிவுகள் எல்லாம் அப்படியே இருக்கணும். நாங்க இதையெல்லாம் காப்பாத்திக் கொடுப்போம் என்று சொல்லுகிற அரசாங்கம் தன்மையிலே இருந்து வருகிற கொடுமை ஒழிக்கப்படவேண்டும், என்பதற்காக நாம் பாடுபடுகிறோம். என்னா நம்முடைய பாடு? அய்யா - மனிதன் பிறவியிலே. வித்தியாசமில்லே - பேதம் இருக்கக் கூடாது - எல்லாம் ஒரே ஜாதி. இந்த ஒரு காரியம்தான் இன்றைய தினம் இந்த நாட்டிலே இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கி விட்டிருக்கிறது. இது ஏதாவது பெரிய கிளர்ச்சிக்குரிய காரியமாகுமோ? மனிதன் பிறவியிலே அப்படி. நீங்க சீமையிலே போய் பேசினீங்கன்னா உனக்குப் பயித்தியம் பிடிச்சிருக்குதா என்பான். ஏன்னா இதில் என்ன வித்தியாசம் மனிதனாலே இருக்குது? எதுக்காக இப்படி சொன்னாங்க என்பான்? நம்ம நாட்டிலே அப்படிப்பட்ட பிரிவை வைத்து விட்டதினாலே அந்தப் பிரிவு ஒருத்தருக்குச் சாதகமாகவும் - மற்றொருத்தருக்கு நஷ்டமாகவும்- இருக்கிறதனாலே இது சம்பந்தமான கிளர்ச்சிகள் இருக்க வேண்டியது அவசியமாகி விட்டது. இதற்குப் பரிகாரம் இல்லாமலே போயிட்டுது.

தீண்டாமை ஒழிந்துவிட்டதா?

சாதாரணமாக அரசாங்கம் யோக்கியதையாய் இருக்குமானால்- அரசாங்கம் பொது மக்களுடைய அரசாங்கமாக இருக்குமானால் மேல் ஜாதிக்காரனுடைய ஆதிக்கமில்லாதிருக்குமானால் - ஒருவரியிலேயே இதை அறிவித்திருக்க வேண்டியதுதானே?. எப்படி? இந்த நாட்டிலே தீண்டாமை என்கிற ஒன்று கிடையாது என்று சொன்னார்கள், ஒருவரியிலே போட்டுட்டாங்க. தீண்டாமை இல்லாமல் போயிட்டுதா? இருந்து கொண்டிருக்கிறது. ஜாதி இருக்கிறபோது - அந்தந்த ஜாதியினுடைய தன்மைகளைச் சொல்லுகிறபோது - ஏதோ சாஸ்திரப்படியினாலும் பழக்கப்படியினாலும் வேண்டியதில்லை என்று தோன்றிச்சி. எந்தக் காரணத்துக்கு தோன்றினாலும் தீண்டாமை இல்லேன்னுட்டாங்க. அது எத்தனையோ காரியத்துக்கு விரோதம்தான். எத்தனையோ ஆகமங்களுக்கு விரோதம் தான் - ஆனால் அது அவசியமிருந்ததினாலே, அது என்னைக்கும் விரோதமில்லை என்று சொல்லி ஓங்கி அடிச்சு தீண்டாமை இல்லேன்னுட்டாங்க. தீண்டாமை எப்போ இல்லையோ - மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் - பேதம் இல்லை என்று சொன்னார்களோ மனிதனுக்கு மனிதன் தெருவிலே ஏன் வேறு வேறு? அதுக்கு ஒண்ணும் சமாதானம் இன்னையவரைக்கும் சொல்லலே. யார் யாரோ நம்மைப் பற்றி கோவித்துக் கொள்ளுகிறார்கள். நம்மீது ரொம்ப வேகமாக எழுதுகிறார்கள். இப்படி எல்லாம் விட்டுக்கிட்டே இருந்தால் என்னா ஏது என்று? இதுக்கெல்லாம் அவர்களுக்கு உணர்ச்சி வருகிறதே தவிர, அடே இந்த ஜாதியில் என்னய்யா இருக்கிறது? அது ஏன் இல்லேன்னு ஒருவரி எழுதக்கூடாது? ஜாதியின் பேராலே இருக்கிற கஷ்டங்களுக்கெல்லாம் ஏன் பரிகாரம் செய்யக்கூடாது? என்று கேட்டால் யார் பரிகாரம் சொன்னார்கள்? இதுக்கு இது வரையிலும் சொல்லுங்களே நீங்களேதான், நினைச்சிபாருங்கள் யாராவது.

மனிதனுக்கு உரிமை இல்லாத நாடு ஒரு நாடா?

நான் அப்படி பேசுகிறேன், இப்படி பேசுகிறேன்னு எழுதுகின்றாரே தவிர, நிறையா அவன் பேசுகிறதினாலே என்ன தப்பு? அவன் ஜாதி ஒழியவேணும்னு சொல்லுகிறதினாலே என்ன கெட்டுப் போகும். எதுக்கு விரோதம் அவன் சொல்றது? ஏன் (ஜாதியை) ஒழிக்கிறதுக்கு எல்லோரும் முயற்சி பண்ணக் கூடாது? சர்க்கார்தான் ஏன் அதற்கு ஆதரவு பண்ணக்கூடாது? என்று யாரும் கேட்பாரில்லை, ஜாதி ஒழியவேணும்னு சொல்றவனை ஏன் இன்னும் வைச்சிகிட்டு இருக்கிறீங்களேன்னு தான் எல்லோரும் கேட்கிறார்களே தவிர, வேறு என்ன? ஒரு மனிதன் தான் ஏன் பிறவியிலே இழிவு என்று கேட்கவும், அந்த இழிவு நீங்க வேண்டும் என்று சொல்லலாம் மனிதனுக்கு உரிமை இல்லையென்றால் இது என்ன நாடு இது? இது என்ன அரசாங்கம்? இதில் என்ன சுதந்திரம் இருக்குது? நீங்கள் நன்றாக நினைக்கணும். உள்ளபடியே சொல்லுகிறேன். என்னுடைய இந்த 40 வருஷத்து பொதுவாழ்விலே நான் ஒருத்தனையாவது உதைச்சவன் அல்ல, யாரையாவது குத்தினவன் அல்ல, எவன் வீட்டுக்காவது நெருப்பு வைச்சவனல்ல (கைதட்டல்). பார்த்திருக்கிறேன் - இந்த முயற்சிஎல்லாம், எத்தனைக்கு எத்தனை கலவரமில்லாமல் - உதை அடி இல்லாமல் - சாவில்லாமல் - வெட்டு - குத்து - இல்லாமல் -நாசமில்லாமல் - நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நடக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவலை உள்ளவன்

கொளுத்துவோம் ; கொல்லுவோம்;வெட்டுவோம்;

குத்தாமலும், வெட்டாமலும், கொல்லாமலும், நெருப்புவச்சி கொளுத்தாமலும் காரியம் சாதிக்க முடியாதுன்னு இருந்தால் எந்த மடையன் சும்மாயிருப்பான்? (கைதட்டல்) உண்மையிலேயே நான் சொல்லுகிறேன். நீங்களே சொல்லுங்கள் தயவு செய்து ஒரு ஆயிரம் பார்ப்பனர்களையாவது கொன்னு (கைதட்டல்) ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது நெருப்பு வைச்சிக் கொளுத்தி, ஒரு நூறு பேரையாவது நெருப்பிலே தூக்கிப் போட்டால் ஒழிய (கைதட்டல்) சாதி போகாது என்கிற நிலைமை இருந்தால் நீங்கள் என்ன பண்ணுவீங்க? (மாநாட்டில் உள்ள மக்கள் கொளுத்துவோம், குத்துவோம், வெட்டுவோம் என்று ஒருமித்தகுரல் கொடுத்தனர்) பாப்பானைக் கொன்னாத்தான் ஜாதி போகும். அக்ரகாரத்திலே நெருப்பு வச்சாதான் ஜாதி போகும். நெருப்பை வைச்சி கொளுத்தி பாப்பானை தூக்கி அதனுக்குள்ளே போட்டால் தான் ஜாதி போகும். அப்படீங்கிற தீர்மானமான ஒரு நிலை இருக்குமானால் நீங்க என்ன பண்ணுவீங்க? இதைச் சொன்னதும் மக்கள் ஆவேசம் உணர்ச்சி கொண்டு வெட்டுவோம், கொளுத்துவோம், போட்டுக் கொளுத்துவோம், என்று பேரொலி எழுப்பினார்கள். நல்லா சொல்லுங்களேன், மக்கள் - ஆண் - பெண் இருபாலரும் ஒருமித்த குரலில் கொளுத்துவோம், கொல்லுவோம், வெட்டுவோம் (என்ற பேரொலி மாநாட்டுக் கொட்டகையே அதிர்ந்தது). அட பயித்தியமே நான்தானா சொல்லுகிறேன். கொளுத்துவோம், வெட்டுவோம், கொல்லுவோம்  என நான் ஒருத்தனா அப்படிச் சொல்லுகிறேன். (உடனே மக்கள் ஆவேசம் கொண்டு மீண்டும் குத்துவோம், வெட்டுவோம், கொல்லுவோம்  என்றனர், அதுக்காகத்தான் நான் சொல்லுகிறேன். இன்னைக்கு போயி குத்தவேண்டாம் ) நெருப்பு வைக்கவேண்டாம். நாளைக்கு போயிப் பார்ப்பானைத் தூக்கி நெருப்பிலே போடாதீங்க. ஆனால் நான் ஏன் தேவடியாள் மகன்? எங்க பொம்பளைங்க ஏன் வைப்பாட்டிங்க பாப்பானுக்கு? நாம் ஏன்  சூத்திரன்? நான் ஏன் பஞ்சமன்? எதற்காக அப்படி இருக்கவேணும்? என்ன அவசியம் அப்படி? என்ன எங்க வாழ்விலே அவ்வளவு கேவலமான காரியம்? நாங்கள் என்ன பேடிகளா? நாங்கள் என்னா ஊரார் உழைப்பிலே வயிறு வளர்க்கிறவங்களா? மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறவங்களா? இல்லே வேறெ குச்சிக்காரித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்களா? என்ன தப்பு எங்களிடத்திலே? ஏன் நாங்கள் கீழ் ஜாதி? இதற்கு ஒரு பரிகாரம் வேணுமின்னா அவன் குத்துறேன்னா? வெட்றேன்னா? காரணம் என்ன? குத்தாதே வெட்டாதே இருக்கிற தப்பு இந்த பசங்களுக்கு இப்படி சத்தம் போடச் சொல்லுவது? ( மீண்டும் மாநாட்டில் மக்கள் குத்துவோம் - வெட்டுவோம்  என்று குரல் கொடுத்தனர்). குத்தினால் அந்தப்பயல் என்னா பண்ணிடுவான்?வெட்டினால் அந்த பயல் என்ன பண்ணிடுவான்? நேற்று முதுகுளத்தூரிலே. (100) நூறு பேரை வெட்டி கொன்னு நெருப்பிலே போட்டு 2000 வீட்டை நெருப்பிலே வைச்சி கொளுத்தினாங்களே என்னா பண்ணிட்டான் எவனும்? (கைதட்டல்) என்ன பண்ண முடிஞ்சிது? யாரோ ஒரு நாலு பேரை ஜெயிலிலேயே பத்து நாளைக்கு போட்டு சோறு போடுகிறான், அப்புறம் வீட்டுக்கு போன்னிடுறான். எரிஞ்ச வீடு என்னாகிறது? செத்த ஆளுஎன்னா? என்ன அதிசயமான காரியம் இது? எடுத்தா குத்துறேன்னான், வெட்றேன்னான்னு, இதெல்லாம் யார்ரா சொன்னார்? எப்ப சொன்னான்? எந்த மாதிரி சொன்னார்? அந்த யோக்கியப் பொறுப்பே இல்லை இந்த பசங்களுக்கு? மந்திரி சொல்லிட்டாரு. பச்சையாய் என்னா சொன்னார் மந்திரியைப் பார்த்தாங்க, ராமசாமி இந்த மாதிரிக்குத்துறேன்னு சொன்னானே கேள்வி இல்லையான்னு, அதற்கு மந்திரி எப்படி சொன்னான்? எங்கடா சொன்னான்? கொண்டாடா கடிதாசின்னார், எல்லாபயலும் உருவிக்கிட்டு ஓடிட்டான். ஒரு பயல் கூட எதுக்காலே வரலே, பேப்பரிலே வந்திருக்குதே - அதற்கு என்னா சொல்றேன்னான்? எம் பேப்பரையும் பார்த்துக்கிறேன்னாரு - (காமராசர்). அவன் மாதம் 200 ரூபாய் கொடுத்து சி.அய்.டி. வைச்சி எழுதிக்கிட்டு போறான் வருகிறான் - அடிக்கடி என் கூட்டத்துக்கு. அவன் - அந்த சி.அய்.டி ரிப்போர்ட்டிலே இல்லையேன்னாரு, அன்னைக்கு ஓடின பசங்க இன்னைக்கும் வரலே (ஷேம் - ஷேம்) என மக்கள் குரல் இவ்வளவு அயோக்கியத்தனமாய் காரியங்களை செய்கிறாங்க.

அப்படி நாங்கள் ஒண்ணும் ஒருத்தன் முதலுக்கு ஆசைப் படவே, இல்லை. இன்னொருத்தன் பாத்தியத்திலே நாங்கள் ஒண்ணும் பிரவேசிக்கலே, எங்கள் நாட்டிலே நாங்கள் ஏன் கீழ் ஜாதின்னா? இதுக்கு சமாதானம் சொல்லாமே குத்துறேன் - வெட்றேன்னான்னா என்ன காரணம்? குத்தாமல் வெட்டாமல் ஜாதி போகாதுன்னா நாங்கள் சும்மா இருந்தால் எங்களைப்போல மடப்பயல் யாரு உலகத்திலே! சொல்லட்டுமே. அல்லது ஆம்பளைகளா இருக்கிறவங்க ஜாதி இருக்கத்தான் வேணும்; அதை ஒழிக்க முடியாது. அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது. அப்படி சொல்லட்டும். இன்னைய வரையிலும் அதை யாரும் சொல்லலியே.சென்னையில் ஆறுமாசமா நடக்குது போராட்டம் (பிராமணாள் என்கிற ஜாதிப் பெயர் பலகையைஎடுக்க (முரளீஸ் கபே)பார்ப்பன ஹோட்டல் முன்பு) மறியல், 750 பேரு ஜெயிலுக்கும் போயாச்சி, ஏராளமான அபராதம் கொடுத்தாச்சி, இதைப் பற்றி ஒரு கவலையுமில்லே, நடக்கிற கிளர்ச்சியைப்பற்றிக்கூட அவன் பேசறது கிடையாது. குத்தபோறேன்னான் - வெட்றேன்னான்னு கூப்பாடு போட்டு நம்மை அடக்கி போடலாம்னா? அவ்வளவுதான் நடப்பது நடக்கட்டும் என்று நடக்கவேண்டியது தான் என்று சொல்ல வேண்டியதைத்தவிர வேறென்னா? ஆகவே அருமைத் தோழர்களே! நம்முடைய முயற்சி இந்த மாதிரி மிரட்டுகிறதுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சியல்ல, விட்டிட்டா எங்களைப் போல ஒரு கேவலமான மானமற்ற சமுதாயம் இந்த நாட்டிலே இல்லை. சாதாரண முறையிலே சொன்னாலும் பரவாயில்லை, முக்கியமான பிரச்சினைகள் இருக்கிறபோது அதற்குச் சரியான சமாதானமும் பதிலோ சொல்ல யோக்கியதை இல்லாமல் கோழைத்தனமாக குறும்புத்தனமாக அதெல்லாம் கிடக்கட்டும், ஜாதியை சட்டத்தில் சாஸ்திரத்தில் இருப்பதை எடுக்கனும்னு சொன்னேன், அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவன் குத்தணும்னானே அதுக்கு என்னாபதில்? எங்கே சொன்னான்? என்னமா சொன்னான், இதுகளைப் பற்றி கேள்வி இல்லை.

ஜாதி ஒழிஞ்சே தீரவேண்டும்

அருமைத் தோழர்களே! இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான நிலையிலே நாம இருக்கிறோம். இப்போ நாம இரண்டிலே ஒண்ணு முடிவு பண்ண வேண்டியது? ஜாதி ஒழிய வேணுமா? ஒழிய வேண்டாமா? (மாநாட்டில் மக்கள் ஒழிஞ்சே தீரவேண்டும், ஜாதி ஒழியணும், ஜாதி ஒழிய வேண்டும், ஒழிந்தே தீரவேண்டும் என்று குரல் கொடுத்தனர்). ஜாதி ஒழிந்து தீரவேண்டும்ன்னா அதுக்குச் சட்டத்தையும் வெங்காயத்தையும் தேடினால் போதுமா? (மக்கள்: போதாது என்றனர். எதைச் செய்தால் தீருமோ அதைத் தானே செய்யணும், நீங்கள் சொல்லுங்கள் செய்கிறோம் அய்யா- என்றனர்) மாநாட்டு மக்கள்) ஜாதி ஒழிந்து - தீராது - சட்டத்தினாலே தீராது. வெங்காயத்தினாலே தீராது - பார்லிமெண்டினாலே தீராது - என்கிற ஒரு முடிவுக்கு வந்திட்டால் வீட்டிலே நாம உட்காந்துகிறதுதானா வேலை? முடியும் போல இருந்தால் செய்ய வேண்டாமா? (மக்கள் செய்யத்தான் வேண்டும்) என்றனர் அரசாங்கம் யாருக்கு? பாப்பானுக்குத்தானா அரசாங்கம்? இல்லே வடநாட்டானுக்குத்தான் இந்த அரசாங்கமா? இல்லே அங்கேபோயி உட்கார்ந்திருக்கிறவனுக்கு சட்டசபை ஆளுகளுக்குத் தான் அரசாங்கமா? பொதுமக்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லையா? அவுங்க நன்மையைப் பற்றி பேச அவர்களுக்கு உரிமையில்லையா?.

அரசாங்கமும் பத்திரிகைப் பித்தலாட்டமும்

தந்திரமாக பித்தலாட்டமாஅரசாங்கத்தையும் அமைச்சிக்கிட்டு ஒழுக்கமில்லாத, யோக்கியதை இல்லாத, சட்டங்களையும் உண்டாக்கிக்கிட்டு, யோக்கியமான மனிதன் ஜனங்களுக்குப் பிரதிநிதியாக முடியாத தேர்தல் வகையிலே, தேர்தல் முறைகளை வைச்சிகிட்டு தாங்கள் கையிலே சக்தி சிக்கிப் போச்சி, இனிமேல் நம்மை எவன் அசைக்க முடியுமென்று, வேண்டுமென்று தொட்டதுக்கெல்லாம் சட்டமிருக்குது, ஜெயில் இருக்குது, தண்டனை இருக்குதுன்னு சொன்னால் எத்தனை பேரு இந்த நிலைமையிலே எப்படியாவது மானங்கெட்ட இந்த அரசாங்கத்திலே பலர் வந்தால் போதும்னு நினைப்பான்? எத்தனை பேரு இருப்பான் இந்த உயிரை வச்சிக்கிட்டு? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு மார்க்கமில்லே, வாழ்க்கைக்கு, மரியாதைக்கு வேறு மார்க்க மில்லேங்கிற பசங்க என்ன சொன்னாலும் கேட்டுகிட்டுத்தான் இருப்பான்.

எங்களுக்கெல்லாம் என்னா லட்சியம்? பார்க்கிறோம். ஆனால் பார்க்கிறோம் - ஆகாட்டா சாகறோம்? சாகறமே ஏன் சும்மா போறதுன்னு ஒரு இரண்டு பேரை குத்திட்டு போகலாமேன்னுதான் போவான்?, வேற என்னா? (கைதட்டல்) நீங்கள் நினைக்கணும். அவனுங்க பண்ணுகிற அக்கிரமத்தைப் பற்றி சிந்தனையே இல்லை. ஏன் எனக்கு இவ்வளவுக்கு ஆத்திரம் வருதுன்னா? ஒரு சமாதானம் சொல்றேன். என்னத்துக்கு ஜாதி? நீ என்னா கேட்கிறதுன்னா? ஆகவேதான் இப்படிப் பட்ட உணர்ச்சிகள் நாட்டிலே. ஆனால் இதைச் சரியான முறையிலே பதில் சொல்லாமல் ஏதேதோ தந்திரங்களைச் செய்து நம்மை ஒழிக்கப் பார்க்கிறார்கள், அடக்கப்பார்க்கிறார்கள் - பத்திரிகையிலே வந்திருக்கிறது - நீங்கள் பார்க்கலாம். அந்த பேதத்துக்கும் குறும்புத்தனம் எப்படி இருக்கிறது என்றால், நமக்குப் பதில் சொல்லவிடாமல் போகிறதோடு நம்மை விடுகிறதில்லை. அரசாங்கம் மந்திரியை இழுத்து போட்டுகிறது. மந்திரிதான் அதுக்கெல்லாம் இடம் கொடுக்கிறார், என பொம்மை போட்டிருந்தான். மந்திரியே இடம் கொடுக்கிறார், இந்தப்பார்ப்பானுங்க பேரிலே இந்த சிங்கத்தை அவிழ்த்துவிட்டு கடிக்கச் சொல்லுகிறான், இது மாதிரிபடம் கேட்டிருக்கிறான். இந்த எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலே (படத்தைக் காட்டுகிறார் பெரியார் மாநாட்டிலுள்ள மக்களுக்கு) இது ஒரு பத்திரிகையா? நீங்கள் பார்க்கணும் என்ன இது நியாயம்? மந்திரிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? சும்மாயிருக்கிற மந்திரிக்கு. இதுவெல்லாம் சொல்லி நாங்கள் எல்லாம் சும்மாதான் இருந்தோமானால் என்னதான் அர்த்தம்?

இதோ இது பார்ப்பானுங்க நடுங்கிறானுங்க, இங்கே ஓடுங்கிறானுங்க. சிங்கம் நான் தான் அது. என் தலை போட்டிருக்கு ( கைதட்டல்) இது பார்ப்பான் மேலே பாயுது, எப்படிடா பாயுதுன்னா இங்கே காமராசர் (முதலமைச்சர்) மந்திரிகள் ஏவிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறாங்க, இந்த சிங்கம் சாப்பிடறதைப் பாருன்னு நிறைய பதினாயிரம் இருபதினாயிரம் கணக்கில் போகிற பத்திரிகை - இந்தியா பூராவும் பரவுகிற பத்திரிகை. இது இங்கே இப்படி அயோக்கியத்தனமாய் படம்போட்டு எழுதுகிறான்னா?.

நம்மில் பிரகலாதன்கள் விபீஷணன்கள்

இந்தப்பத்திரிகைக்காரனுக்குத்தான் கொஞ்சமாவது மரியாதை இருந்தால் நான் சொல்லுவதற்குச் சமாதானம் சொல்ல வேண்டாமோ? ஏன் நான் ஆத்திரப்படுகிறேன்? ஏன் நம்ம சமுதாயம் கஷ்டப்படுகிறது? இதற்கு ஒரு பயலும் பதில் சொல்லாமல் நான் பேசினதுக்காக வேண்டி இந்த அரசாங்கம் சிங்கத்தை எல்லாம் அவுத்து விட்டுட்டாங்க, பார்ப்பானை எல்லாம் அதுகடிக்க......அப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்? இவனுங்கதான் மக்கள். நாங்கள் எல்லாம் நாசமாய்ப் போனவங்களா? நாங்கள் எல்லாம் மக்கள் அல்லவா? ராஜ்யம் இவுங்களுக்குத்தானே? பட்டமும் இவுங்களுத்தானா? ஆகவே நாடு ரொம்ப கெட்டுப் போச்சி. காரணம், நம்மிலே சிலர் - காலிகள் பிரகலாதன்கள் - விபீஷணன்கள் - அவன்களுக்கு அடிமையாய்ப் போனதினாலே எப்படியாவது வயிறு வளர்த்தால் போதும்கிறதினாலே இவன்களுக்கு இம்மா அகந்தை வருது. இல்லாட்டா இப்படிப்பட்ட குறும்பெல்லாம் செய்ய முடியுமா?.

இம்மாதிரியெல்லாம் இவனுக வெளிநாட்டிலே செஞ்சா ஒரு ராத்திரியிலே கட்டிடத்தை எல்லாம் வெடிகுண்டு வைச்சித் தகர்த்திருக்க மாட்டான்களா? நீ துருக்கியிலே வைச்சிப்பாரு. பாகிஸ்தானிலே வைச்சிப்பாரு. இல்லே இங்கிலாந்திலே ஜெர்மனியிலேயோ ரூபாய் வைச்சிப்பாரு. ஒரு ராத்திரியிலே இரண்டு வெடிகுண்டு தோட்டா வைச்சி எல்லாத்தையும் நாசமாக்கிடுவான்: இந்த மானங்கெட்ட நாட்டிலே எல்லாம் உயிரோடு இருக்கிறானுங்க. இவனுக கட்டிடமெல்லாம் இருக்குது. இவனுக வாழ்க்கை எல்லாம் நடக்குது. நாங்கள் இப்படி மானங்கெட்டுத் திரியணும் என்ன நியாயம்? என்ன தப்பு சொல்லுகிறோம். நாம? என்ன அக்ரமம் பண்றோம்? எவன் முதலை எடுத்தோம்? வேண்டாமா காரணம்? ஏண்டா அடிக்கிறேன்னா? கொல்றான் கொல்றான்னு நீ சத்தம் போட்டிட்டா போதுமா? ஆகவே தோழர்களே!

இப்படிப்பட்ட கொடுமையான காரியங்கள் ஒழிய வேண்டுமென்பதற்காக முயற்சி பண்ணுகிறோம், இந்த முயற்சியிலே இதுவரைக்கும் முடிவு பண்ணலே. யாரை குத்தறது? எங்கே குத்தறது? எப்படி குத்தறது? எத்தனை பேரை குத்தறது? எந்த வீட்டுக்கு நெருப்பை வைக்கிறது என்பதைப் பற்றி எல்லாம் நான் இன்னும் முடிவுபண்ணலே. அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாராய் இருங்கன்னு கேட்டுக் கொள்ளுகிறேன் நான் பொதுமக்களையும் (மாநாட்டு மக்கள்: தயார்! தயார்! தயார்! தயார்! - என ஒலி எழுப்பினார்கள்). போறோம் ஜெயிலுக்கு, சாகறோம் நாலு பேரு, எவன்டா இங்கே சிரஞ்சீவி? ஏதோ காலம் வந்தால் நோவு வந்தால் சாகிறோம், வெறுஞ்சாவு சாகிறவன் அவுக இழிவு நீங்குகிறதுக்காக சாகணும். ஒவ்வொருத்தரும் மனுஷன் தானே? சட்டம் தான் வரட்டுமே, ஜெயிலுக்கு போகலாம். தூக்கு மேடைக்குதான் போகலாம். என்ன திருடப்போகிறோமா? இல்லே வயிற்றுக் சோற்றுக்காக வேஷம் போட்டுகிட்டுப் போறோமா? இல்லே ஒரு குடும்பம், நாங்கள் பிழைச்சா போதும்னு போறோமா? இந்த நாட்டிலே உள்ள மக்கள்லே 100 க்கு 97 பேரு நாமெல்லாம் தேவடியாள் மக்கள்ன்னா அது தான் சாஸ்திரம், அதுதான் மதம், அதுதான் தேசம், அப்படிதான் கடவுள் சொன்னார், நீ ஒத்துக்கிட்டு இருடான்னா?.

வழி அனுப்பும் மகாநாடு அப்படிச்சொன்னா என்னத்துக்கு அந்த சாஸ்திரம், வேதம், கடவுள் எல்லாம்?

 இந்த நாட்டிலே ஏன்அவைகள் இருக்க வேண்டும்? 100 க்கு 97 பேர் நாங்களாய் இருக்கிற இந்த நாட்டிலே இந்த வேதத்துக்கும் இந்த சாஸ்திரத்துக்கும் என்ன வேலை? இது தான் என்னுடைய முயற்சியே தவிர வேறு இல்லை. ஆகவே இது பற்றி ஏதோ நடக்கிறது, நடக்கட்டும். எனக்கு ஒண்ணும் பயமில்லே. உள்ளபடி அதைத்தான் சொல்லுகிறேன், இந்த மகாநாடு ஒரு வழி அனுப்பும் மகாநாடு, பண்ணுகிறேன்னு சொன்னா, நான் ஒண்ணும் பயந்துக்கிட்டு போறதில்லே, கொள்கைகளை ஒண்ணும் விட்டுவிடப் போறதில்லே, அந்த மாதிரி அவசியமிருந்தால் நாங்கள் செய்தே தீருவோம் கண்டிப்பாய். பின்னாலே போய் இருக்க மாட்டோம். எனக்கு ஒண்ணும் பயமே இல்லை. மக்களிடத்திலே நம்பிக்கைக்குக் குறைவுமில்லே. ஏன்னா? இந்த இரண்டு வருஷமாகவே எனக்கு ஒரு 20 கத்தி வெள்ளியிலே கொடுத்திருக்கிறாங்க. எதுக்காக கொடுத்தாங்க? என் கழுத்தை அறுத்துக்கவா கொடுத்தாங்க? (சிரிப்பு) இல்லே, முத்தம் கொடுக்க கொடுத்தாங்களா? இல்லே வித்து திங்கட்டும்னு கொடுத்தாங்களா? எதுக்காக எனக்கு 20 கத்தி கொடுத்திருக்கிறாங்க. (மகாநாட்டு பொதுமக்கள்  பார்ப்பானை குத்தறதுக்கு ன்னு உரத்த குரலில் கூறினார்கள்,)வேறு என்னா? நம்மாலே ஆகிறவரைக்கும்பாரு, முடியாட்டா எடுத்துக்கோ (கைதட்டல்) மக்களுடைய ஆதரவு எனக்கு அவ்வளவு இருக்குது எனக்கு.

நான் ஒருத்தனே அந்த நினைப்பு நினைக்கலே, இந்தா சம்மட்டின்னு (எனக்கு) கொடுத்திருக்காங்க. எதுக்காக காந்தி சிலையை உடைக்கிறேன்னேன். இந்தா சம்மட்டி (கைதட்டல்) அந்த மாதிரி என்கிட்டே அன்பும் நம்பிக்கையும் பின்பற்றுகிற மக்களும் ஏராளமாக இருக்கிறபோது நான் என்னா வேடிக்கை பாத்துகிட்டு உட்கார்ந்திருக்கிறதா? இவ்வளவு செல்வாக்கு இவ்வளவு மக்களுடைய ஆதரவு எல்லாம் நான் என்னா பண்றது? ஒண்ணும் பண்ணாமல் குப்பைத் தொட்டியிலே போட்டுவிட்டு நான் போக வேண்டியது தானா? இவ்வளவுவெல்லாம் உணர்ந்து அவனவன் திருந்தவேணாமா? கடைசியான நிலைமைக்கும் வரட்டும், அப்படீன்னு இன்னும் ரகளைக்குக் காத்துகிட்டு இருக்கிறதா? ஆகவேதான் இந்த மகாநாட்டைப் பற்றி அவ்வளவு தூரம் சொல்ல வேண்டியிருக்கிறது. கடைசியாகத் தீர்மானம் வரப் போகின்றன, நீங்கள் அவைகளை எல்லாம் ஆதரிக்க வேண்டும். நானும் ஒண்ணும் அவசரக்காரனல்ல. திடீரென என் பேச்சைக் கேட்கிறாங்கன்னு நான் எல்லோரையும் வெட்டு குத்துன்னு அப்படின்னு சொல்லிட்டுப் போகிறவனல்ல. தயாராய் இருங்கன்னு சொல்லுகிறேன். அதுவும் அந்த நிலைமையும், அதை தவிர வேறு மார்க்கமில்லேங்கிறபோது, நிலைமை வருகிற போது, அதை பிரயோகப்படுத்தித்தான் தீரணும். எந்த மானமுள்ளவனுக்கும் அப்படிதான் இருக்கும். எந்த நாட்டானும் அப்படி தான் செய்வான். அதனால் தண்டனை அடைவான். சாவான்கிறதை ஒப்புக்கொள்ளுகிறேன்.

அதனாலே தூக்குக்கும் போவான் என்பதையும் நான் ஒத்துக்கிறேன். அப்படிப்பட்ட முக்கியமான காரியமிருந்தால் என்ன பண்ணுகிறது மானமுள்ள மனுஷன்? அவனவனுக்குக் கொலை என்னா அதிசயமா? பத்திரிகையை எடுத்துப் பாருங்களே, தினம் எவ்வளவு கொலை மாமனாரை மருமகன்- மருமகன் மாமியாரை - அண்ணனைத் தம்பி - அப்பன் - மகன் பொண்டாட்டியை - புருஷன் இப்படி எவ்வளவோ நடக்குது. ஏன் நடக்குது இதுவெல்லாம்? அவனவனுக்குத் தோன்றுகிற உணர்ச்சி, கொன்னு போட்டு தப்புடான்னு சொல்றது 100 லே 5 பேர் தான் இருப்பான். என்னவானாலும் சரின்னு கொல்றது தான் 100க்கு 90 க்கு மேலே இருக்கும். இயற்கை அது, அந்த இயற்கையை யாரால் என்ன செய்ய முடியும்? எவனும் இதைத் தப்பான காரியத்துக்கு இதை உபயோகப்படுத்த மாட்டான். நாட்டிலே அப்படிப்பட்ட அவசிய மிருந்ததன்னா மனுஷன் தெரிஞ்சிக்கணும், அரசாங்கமும் அதைப் பற்றிக் கவனிக்கணும். மற்றும் பொதுமக்களும் வேஷம் போடுகிறவனும் இதை தெரிஞ்சுக்கணும்.

மக்களை ஏமாற்றியே காலம் கடத்திக்கிட்டு போகலாம்ன்னா எவ்வளவு நாளைக்குப் போகமுடியும்? என்ன பெரிய அதிசயம்? பாப்பானைக் கொல்றதோ, பாப்பானை குத்தறதோ இன்னைக்கு அல்ல நேற்றைக்கு அல்ல, நான் சொல்லுகிறேன், அவன் எழுதி வைச்ச புராணத்திலே இருக்குது. இன்னைக்கு சப்ளை பண்ணுவாங்க துண்டு நோட்டீசு அவன் எழுதி வைச்சிருக்கிறானே இரணியன் பிரகலாதன் சொன்னான்னு, என்னா இரணியன் பேரிலே சார்ஜ் - வர்ணாச்சிரம தர்மத்தைக்கெடுத்துப்போட்டான் - கடவுளை ஒத்துக்க மாட்டேன்கிறான், இவ்வளவுதான் அவன் பேரிலே குற்றம் ஜனங்களுக்கு என்னா கெடுதி பண்ணினான்னு அதிலே கிடையாது.அதில் அதை இரணியனே சொல்கிறான் தனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லேன்னு. இது நான் சொல்றது பாகவதத்திலும் இருக்கிறது, இது பாகவதம். (பாகவதத்தை காட்டி கூறுகிறார்) 7ஆவது ஸ்கந்தம் 2 ஆவது அத்தியாயம் இஞ்சிகொள்ளை பண்டிட் ஆர்.சிவராம சாஸ்த்திரி மொழி பெயர்ப்பு. ராபிட்சன் அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட புஸ்தகத்தின் 715,716 பக்கங்களில் உள்ளன, நேற்று (02.11.1957இல்) 16 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினாரு யாரு? விடுதலை ஆசிரியர் குருசாமி வாங்கினாரு, நான் இந்த புஸ்தகம் வாங்கி 16 வருஷமாச்சி, புதுவையிலே வாங்கினேன். ரூபாய் 1-80 க்கு அந்த புஸ்தகத்திலே இருக்குது நான் சொல்றது. ! படைவீரர்களே நான் சொல்லுவதைக் கேளுங்கள், உடனே அந்தப்படி செய்யுங்கள் நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் எழுந்தருளியிருக்கும் பூமிக்குச்சென்று, அந்த தபசு, யாகம், சந்தியா வந்தனம், விரதம், ஆகியவைகளைச் செய்கின்றவர்களை கொல்லுங்கள். நேராகப் போங்க அக்கிரகாரதுக்கு எல்லா பாப்பானையும் கொன்னு தீருங்கள்.

பிராமணர்களால் அனுஷ்டக்கப்படும் அனுஷ்டாங்களேதான் - விஷ்ணு, ஆனதால் எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ எங்கு வருணாச்சிரம தர்மங்களுக்குரிய கருமங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றனவோ அந்த தேசத்துக்கு சென்று நெருப்பு வைத்து கொளுத்துங்கள், நாசம் செய்யுங்கள்.அதைக் கேட்ட படைவீரர்கள் உடனே சென்று அக்கினியை வைத்துக் கொளுத்தினார்கள், எங்கே? அக்கிரகாரத்தை. சிலர் மண் வெட்டியை எடுத்து பிரகாரங்களையும், கோபுரங்களையும், கோயில்களையும், பிளந்து தள்ளினார்கள். சிலர் எரியும் நெருப்பைக் கொண்டு அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தினார்கள். இப்படி இவர்கள் செய்யும் போது தேவர்கள் மறைந்து வாழ்ந்தார்கள். இவை எதிலே? பாகவதத்திலே. இன்னைக்கு நடந்ததல்ல, அதை எழுதினதே குறைந்தது 2000 வருஷமிருக்கலாம். இந்த கோர்ட்டு இந்த ரகளை இந்தக் குத்தறது, வெட்றது, நெருப்பு வைச்சி கொளுத்தறது, 2000 வருஷத்துக்கு முன்னேமேயே நடந்திருக்கிறது. அந்தக் காலத்திலேயே அவுகளுக்கு இருந்த பித்தலாட்டம் ஜெயிச்சிட்டு வந்ததாக கதை எழுதியிருக்கிறாங்க, நிஜமா பொய்யோ தெரியாது இந்தக்காலத்திலேயும் அந்த பித்தலாட்டத்துக்கு உபயோகப்படுத்து கிறாங்களே தவிர, அவுகளே ஜெயிச்சாங்கிறது ஒரு நாளும் இல்லேங்கிறதை நீங்க நினைச்சிக்கங்க.

ஆகையினால் தோழர்களே ரொம்ப தீவிரமான காரியம் இது, இரண்டிலொன்று இதிலே நாம் பார்த்தே தீரணும். பாப்பான் புத்திசாலியாய் இருந்தால், இல்லே அவனுக்கு வேண்டியவனும் புத்திசாலியாக இருந்தால், ஏண்டா தகராறு - என்னடா இதிலே வாழ்வு. எடுத்துச் சொல்லிப் போடு                ஜாதிக்கும் - நமக்கும் - சம்பந்தமில்லே, இந்து மதத்திலே ஜாதி கிடையாது. ஜாதி இருக்கிறதாகச் சொல்லுகிற புராண சாஸ்திரங்களிலே சொல்லுகிற கடவுள் நமக்குக் கடவுள் அல்ல. சொல்லி போடு ஒரு வார்த்தை. விடிந்து எழுந்திருச்சா ஜாதி புஸ்தகத்தைப் படிக்கிறே, ஜாதிப் புராணத்தை படிக்கிறே, ஜாதி சாஸ்த்திரத்தைப் படிக்கிறே, ஜாதி உண்டாக்கின கடவுளை கும்பிடுகிறே, நீ மாத்திரமில்லேன்னு எங்கத்தலையிலேயும் அதை விட்டு இருக்கிறே. இந்த 1957 ஆம் ஆண்டிலே கூட இதற்கு பரிகாரம் இல்லேனா? ஆகவேதான் நாங்கள் மிகமிக வருத்தத்தோடு வெவ்வேறு விதமான பரிகாரம் இல்லாததினாலே இந்த எண்ணங்களை எண்ண வேண்டியதாகயிருக்கிறது. இப்பவும் இந்த காரியங்களுக்கு வேறேபரிகாரம் சொல்லட்டும், கேட்கத் தயாராக இருக்கிறோம், யாரு இதுவரைக்கும் என்ன பரிகாரம் சொன்னாங்க? நீங்கள் சொல்லுகிறபடி ஜாதி இல்லேன்னாவது எவனாவது சொன்னானா?

சர்க்கார்க் கொடியை கொளுத்துவோம்

நான் சொன்னேன். இந்தியைக் கட்டாயப் படுத்தினால் நீ கட்டாயப்படுத்துகிறது இல்லேன்னு சொன்னாலொழிய ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி சர்க்கார்க் கொடியை கொளுத்துவோம்ன்னு சொன்னோம். 5000 பேருக்கு மேலே கையெழுத்துப் போட்டாங்க, இதே மாதிரி ஒரு நிர்வாகக் கமிட்டியிலேயே தீர்மானம் பண்ணினோம். ஆகஸ்டு மாதம் வருகிறதுக்கு முன்னே ஜூலை மாதம் 29 தேதிலேயே சர்க்கார் சொல்லிட்டுதே, நாங்கள் இந்தியைக் கட்டாயப்படுத்துகிறதில்லே, நீ தப்பாய் நினைச்சிக்கிட்டே இருக்கிறே நாங்கள் சொல்றதை நம்பி நீ நம்பு கொடியை கொளுத்த மாட்டேன்னு,வேண்டிக்கிறோம்னு எழுதினாய்.

  கொடியை கொளுத்துகிறதுக்கு எட்டு நாளிலே சமாதானம் சொன்னியேநீ இதுக்கெல்லாம் சமாதானம் சொல்லாம உட்கார்ந்துகிட்டு இருக்கிறதுக்கு காரணம் பார்ப்பானுக்கு பயந்துகிட்டுதான் . அதுதானே தவிற வேறு இல்லே, இதைத் தவறாய் நினைச்சால் நீங்கதான் பாப்பான்தான் ஏமாந்து போவானே தவிர சர்க்கார்தான் ஏமாந்து போகுமே தவிர நாங்க ஒண்ணும் ஏமாந்து போக மாட்டோம். நாங்கள் இன்னும் செய்ய வேண்டிய காரியமிருக்கிறது. எங்களால் ஆனதெல்லாம் பார்க்கிறோம். அப்புறம் தான் நாங்கள் கண்டிப்பாய் இந்த முடிவுக்கு வருவோம்.

நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

அய்யாவின் இறுதிப் பேருரை பகுதி - 2