ஆதிக்க வாதிகள் வைத்துள்ள பெயர் பள்ளர், பறையர் கட்சி
தந்தை பெரியார் அவர்களிடமும் , கழகக் கொள்கையினிடமும் பற்றும் பாசமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான கழகக் குடும்பங்கள் தந்தை பெரியார் அவர்கள் காலத்திலும் சரி ; அய்யா மறைவுக்குப் பிறகு அம்மா அவர்கள் காலத்திலும் சரி ; இவர்கள் இருவர் மறைவிற்குப் பிறகு நமது கழகப் பொதுச் செயலாளர் காலமாகிய இன்றைக்கும் சரி தமிழகத்தின் பல பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது . பலன் கருதாக் கழகப் பணியில் ஈடுபட்டு உழைக்கும் கழகத் தோழர்களின் இல்ல நன்மை , தீமை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவர்களின் தொண்டினை புகழ்ந்து பாராட்டிச் சொல்ல தந்தை பெரியார் அவர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள் . கழகத் தொண்டர்கள் தமக்கு ஆசையோடு அளிக்கும் உணவு வகைகள் தம் உடல்நிலைக்கு ஒவ்வாது என்று தெரிந்துங்கூட , உடன் இருப்பவர்கள் அய்யா வேண்டாம் என்று தடுத்தும் கூட பொருட்படுத்தாமல் உண்டு விடுவார்கள் . பிறகு வயிற்றுப் போக்கு , வயிற்றுவலி முதலியவைகளால் அவதிப்படும் போது , கூட இருப்பவர்கள் அப்போதே சாப்பிடாதீர்கள் என்று தடுத்தபோது கேட...