தமிழ்ப் புலவர்களின் தன்மை
நம் புலவர், பண்டிதர், தமிழறிஞர் என்பவர்களுக்கு தமிழ் மொழிபற்றிய
இலக்கியம், இலக்கணம் என்னும் துறையில் ஏதாவது அறிவு, பயிற்சி இருந்தால்
இருக்க முடியுமே ஒழிய உலகம், சரித்திரம், பூகோளம், பகுத்தறிவு, விஞ்ஞானம்
என்னும் துறைகளில் அறிவோ, ஆராய்ச்சியோ இருக்க முடியுமா? என்பது பெரிதும்
ஆலோசிக்கத்தக்கதாகும்.
இதைச் சொன்னால் நம் புலவர்களுக்குக் கோபம் வருவதில் குறைவில்லை. ஆனால்
அப்புலவர்கள் தங்களைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்க்கட்டும். தங்களால்
நாட்டுக்கோ, தங்கள் சமுதாயத்துக்கோ சிறிதாவது பயன் ஏற்படும்படியான காரியம்
ஏதாவது அவர்கள் செய்கிறார்கள்? செய்யத் தகுந்த சக்தியோ, அறிவோ அவர்களுக்கு
இருக்கிறதா? என்பதை சிந்தித்துப் பார்த்து பிறகு கோபித்துக் கொண்டால்
அதற்கு மதிப்பு இருக்கும். அப்படிக்கில்லாமல் புராணங்களை உருப் போட்டுக்
கொண்டும், புராணங்களுக்குப் புதிய கருத்து சொல்லிக் கொண்டும் உலக தற்கால
நிலையை உணராமல் பார்ப்பனர்களைப் போல் வேடம் போட்டுக் கொண்டு தங்களை மேல்
ஜாதியார் என்று பிறர் மதிக்க வேண்டும் என்கின்ற ஆசையோடு திரிவது புலவர்
தன்மையாகுமா என்று கேட்கிறோம்.
புலவன் என்றாலும், பண்டிதன் என்றாலும், வித்துவான் என்றாலும், அறிவுடையவன் என்பதுதான் கருத்தாகும்.
பண்டிதன், வித்துவான் என்கின்ற சொற்கள் தமிழ் அல்ல என்றே கருதுகிறோம்.
புலமையை உடையவனே புலவன் ஆவான். நம் புலவர்களுக்கு உள்ள புலமைத் தன்மை என்ன
என்று பார்த்தால், புராணப் புலமையும் தமிழ் மொழிக்கு இலக்கணப் புலமையும்
அல்லாமல் அவர்களுக்கு வேறு எதில் புலமை இருக்கிறது என்று கேட்கிறோம்.
எனவே, மேற்கண்ட புலவர்கள் ஒரு துறையில் பயிற்சி உள்ளவர்கள் என்பது தவிர,
பொது அறிவு பெறவோ, பொது மக்களுக்கு வழி காட்டும்படியான தன்மை பெறவோ,
முன்னேற்றத்துக்கு வழிகோலவோ, புதுமையை சித்திரிக்கவோ இன்றைய புலவர்கள்
என்பவர்களுக்கு ஏதாவது பயிற்சி இருக்கிறதா என்று கேட்கிறோம். எனவே, ஒரு
துறையில் பயிற்சி பெற்றவர்கள் பொதுத் துறையில் வந்து கலந்து கொள்வதும்
அதைப் பற்றிப் பேசத் தங்களுக்கு அருகதை உண்டு என்று சொல்லிக் கொள்ளுவதும்
தங்களது குறைபாட்டைக் காட்டிக் கொள்ளுவதேயாகும். உலக இயற்கை மாறுபாட்டைக்
கொண்டதாகும்; மாறுபாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம்?
புலவர்கள் அல்லது அறிஞர்கள் என்பவர்களுக்கு அம்மாறுபாட்டை
முன்னேற்றத்துக்கு ஏற்றவண்ணம் அமைத்துக் கொடுக்க வேண்டியது அவர்கள்
கடமையாகும்.
ஆனால் நம் புலவர்கள் மாறுபாட்டை விரும்பாதவர்கள்; அது மாத்திரமல்லாமல்
1000, 2000, 3000, 5000 வருஷங்களுக்கு முன் இருந்த நிலைமையை நிலை நாட்ட
முயற்சிப்பவர்கள்; புலமைக்கும் பகுத்தறிவுக்கும் எவ்வித சம்மந்தமும்
கிடையாது என்பவர்கள்; பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனைகளிலே நம்பிக்கையும்
பக்தியும் கொண்டு அவற்றைப் உருப்போட்டு மக்களுக்குள் புகுத்துகிறவர்கள்.
இவர்களைக் கொண்ட நாடோ மக்களோ எப்படி முன்னேற்றமடைய முடியும் என்று
கேட்கிறோம். இவர்களுக்கு பொது வாழ்வில் மதிப்பு இருக்கும் பட்சம்
முன்னேற்றத்திற்கிடமுண்டா என்று கேட்கிறோம்.
பொதுவாகவே ஒரு மொழியில் இலக்கண இலக்கியங்களைப் படித்தவர்களையும், மத
சம்மந்தமான பயிற்சியும் நம்பிக்கையும் உடையவர்களையும் புலவர்கள் என்று
அழைப்பதும் கருதுவதுமே பொது அறிவையும், பொது அறிவு வளர்ச்சியையும் கொலை
செய்வதற்கு ஒப்பிடும் என்பது நமது கருத்தாகும்.
முன்னேற்றத் தன்மையான விஷயங்களிலும் மக்களை சீர்திருத்தும்
விஷயங்களிலும் மொழிப் புலவர்களுக்கும் மதப் புலவர்களுக்கும்
மதவாதிகளுக்கும் இடம் கொடுப்பதும் கலந்து கொள்ளச் செய்வதும்
முட்டுக்கட்டையான காரியமேயாகும்
மொழித் துறைக்கும், மதத்துறைக்கும்கூட முற்போக்கு வேண்டுமானால் பொது
அறிவுள்ள புலவர்கள் வேண்டுமே தவிர ஒரு மொழி, ஒரு மதம் என்பதில் புலமை
கொண்டவர்கள் பெரிதும் அம்முன்னேற்றத்துக்கு தகுதியற்றவர்கள் என்றே
சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் தாங்கள் கற்றதையும் அந்தக் கற்பிலிருந்து
தாங்கள் கொண்டதையும்தான் குரங்குப் பிடியாய் வலியுறுத்துவார்களே தவிர
திருத்தப்பாட்டிற்கு சிறிதும் சம்மதிக்க மாட்டார்கள்.
இவற்றை நாம் இன்று திடீரென்று சொல்ல வரவில்லை. புலவர்களிடம் 40, 45 வருஷ
காலமாய் பழகிவந்த அனுபவங்களைக் கொண்டே சொல்லுகிறோம். உதாரணமாக, இதுவரை
எந்தப் புலவராலாவது எந்தத் துறையிலாவது இதுவரை எதாவது ஒரு முன்னேற்றகரமான
அறிவுக்கு ஆதரவான காரியம் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா? என்று
பார்த்தால் உண்மை விளங்கிவிடும்.
ஆகவே, சீர்திருத்தக்காரர்களும் முன்னேற்றக்காரர்களும் தங்கள்
வேலைகளுக்கு புலவர்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதோடு, அவர்களுக்கு
பாமர மக்களிடம் மதிப்பு இருக்கும்படியாகவும் இடம் கொடுக்கக் கூடாது என்று
சொல்லுகிறோம். அவர்களுக்கு மதிப்பு இருப்பதால் நமக்கு இருக்கும்
தொல்லைகளுக்கும், நம் காரியங்களுக்கு இருக்கும் முட்டுக்கட்டை களுக்கும்
ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பெரிய புராணமும் கம்பராமாயணமும் பாமர
மக்களுக்குள் பரவாமல் இருக்கத்தக்கவண்ணம் அவற்றை வெறுக்கச் செய்ய வேண்டும்
என்று நான் சொன்ன உடனே, நாம் எதற்கு ஆக வெறுக்கச் சொல்லுகிறோம் என்று
எடுத்துக் காட்டும் காரணங்களுக்கு எவ்வித சமாதானமும் சொல்லாமல், அவற்றை
முன்னிலும் அதிகமாய்ப் பரப்பும் வேலைகளையும், அப்படிச் சொல்லுகிறவனை
ஆண்மையும், நேர்மையும் அற்ற முறையில் குறை காணும் வேலைகளையும், மற்றும்
இக்காரியங்களைச் செய்ய நம் பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்களின் காலுக்குள்
நுழையும் துணிவையும் கொள்ளுவது என்றால், புலவர்களின் இழி தன்மைக்கும் பொது
அறிவுடைமைக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும்?
மொழிப் பயிற்சி வேறு, கலைப் பயிற்சி வேறு என்பதே நமது புலவர்களுக்குத்
தெரிவதில்லை. மொழி, கலை, சமயம் ஆகிய மூன்றையும் ஒன்றாய்ப் போட்டுக் குழம்பி
நம் புலவர்கள் தங்கள் பொது அறிவுப் புத்தியைப் பாழ் செய்து கொண்டார்கள்.
அதனாலேயே மொழியைத் திருத்தவும், சமயத்தைப் பரிசுத்தம் செய்யவும், இன்றைய
தன்மைக்கு ஏற்ற கலைகளைப் புதுப்பிக்கவும் வெகு காலமாகவே ஒரு புலவராலும்
முடியாமல் போய்விட்டது. இன்றுள்ள மொழிப் புலவர்கள் யாருக்காவது சமயத்தையோ,
ஆண் பெண் காதலையோ சம்பந்தப்படுத்தாமல் இயல், இசை, நாடகம் என்கின்ற
முத்துறையிலும் ஏதாவது செய்யவோ சொல்லவோ தெரியுமா? சொல்லியோ செய்தோ
இருக்கிறார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
ஆகவே, நமது நண்பர்கள் நாம் புலவர்களைக் குறை கூறுகின்றோம் என்று
கருதாமல் அவர்களைப் பாராட்டும்படியான காரியம் என்ன இருக்கிறது என்பதைச்
சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதற்கு ஆகவே இதை எழுதுகிறோம்.
இப்போது சிறிது காலமாக சில வாலிப மொழிப் புலவர்கள் நம் கருத்தைச்
சிந்தித்துப் பார்த்து, சிறிது மற்றப் பழம் புலவர்கள், முதிய புலவர்கள்
ஆகியவர்களிடம் இருந்து மாறுபட்டு நம் கொள்கையை ஆதரிக்க முற்பட்டிருப்பது
கண்டு மகிழ்ச்சி அடைகிறோம் என்றாலும், சில வாலிபப் புலவர்கள் துணிவாய்
வெளியில் வந்து வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
- குடிஅரசு - தலையங்கம்- 15.01.1944
நூல் : தமிழும் தமிழரும்
ஆசிரியர் - தந்தை பெரியார்
Comments
Post a Comment