கல்வி பெருக வேண்டுமானால்?
எந்தக் கல்வித் திட்டமும் நாட்டின் தேவைக்கு ஏற்றதாயும், மாணவர்களுக்கு
பளுவற்றதாயும் இருக்க வேண்டுமென்று நாம் பல சந்தர்ப்பங்களில் எழுதி
வந்திருக்கிறோம். இதே நோக்கத்துடன்தான் இம்மாகாணத்தில் காங்கிர° மந்திரிகள்
ஆட்சி புரிந்தகாலையில் கல்வியில் இந்நாட்டின் தேவைக்கு அற்றதும்,
மாணவர்களுக்கு பளுவுற்றதுமான கட்டாய இந்தி புகுத்தியதும் நாம் எதிர்த்துக்
கிளர்ச்சி செய்ததையும், பெரியார் திக்விஜயம் செய்து போர் முழுக்கம் செய்து
சிறைக் கோட்டம் நண்ணினார் என்பதையும் வாசகர்கள் அறிவார்கள். பெரியாரும்
நாமும் எது ஒரு நாட்டின் கல்வித்திட்டத்தின் லட்சணமாயிருக்க வேண்டுமெனச்
சொன்னோமோ அதையேதான் இன்று அதாவது சென்ற மாதம் 27ஆம் தேதி
அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற 31-ஆம் மாகாண கல்வி மாநாட்டிற்குத் தலைமை
வகித்த சென்னை வைத்தியக் கல்லூரித் தலைவர் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார்
அவர்களும் வற்புறுத்திக் கூறியிருக்கிறார்.
எந்தத் திட்டமும் (கல்வியில்) நாட்டின் தேவைகளுக்கேற்றவாறும் சர்க்காரின் சக்திக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும்.
“எந்தத் திட்டமும் மாணவர்களுக்கு ஓர் பளுவாகவிருக்கக் கூடாது”
எனக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் பேசுகையில் ஒவ்வொரு திட்டமும்
வெற்றி பெறுவது ஆசிரியரின் திறமை, உற்சாகத்தைப் பொறுத்திருக்கிறதென்று
குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, கல்வியில் எத்தகைய திட்டம் புகுத்தப்பட்டாலும் அத்திட்டம் வெற்றி
பெறுவது கல்வி பெருகுவது ஆசிரியர்களின் திறமையையும் உற்சாகத்தையும்
பொறுத்திருக்கிறது என்பது இதிலிருந்து நன்கு புலனாகும்.
பிரிட்டிஷ் இந்தியாவில் வருடமொன்றுக்குக் கல்விக்காக மொத்தம் 28 கோடி
ரூபாயும், அதில் செக்கண்டரி கல்வி, ஆரம்பக்கல்வி ஆகியவைகளுக்காக சுமார் 17
கோடி ரூபாயும், செலவு செய்துவந்தும் இவ்வளவு வருடங்களாகியும் இன்னும்
எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் தொகை 100-க்கு 8,9 பேர்கள் வீதந்தான்
இருக்கிறதென்றால், ஆசிரியர்களின் உற்சாகமும் திறமையும் எந்த
அளவிலிருக்கிறது என்பது விளங்கும்.
இவ்வாறு ஆசிரியர்களின் உற்சாகமும் திறமையும் குன்றிப்போயிருப்பதற்குக்
காரணம் என்னவென்பதையும், பரிகாரம் என்ன என்பதையும் டாக்டர் அவர்கள் தமது
தலைமையுரையில் விளக்காமல் இல்லை.
“ஆசிரியர்கள் தங்கள் கடமைகளைத் திறம்பட நிறைவேற்ற வேண்டுமானால்
அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி நிலவ வசதி காணவேண்டியது அவசியம்.
கவலைகளுக்கும், அவமானங்களுக்கும் அவர்கள் ஆளாகுமாறு இருத்தல் கூடாது.
சம்பளத்தை பற்றியும், தங்களுடைய உத்தியோக வாழ்வின் எதிர்காலத்தைப்
பற்றியும் அவர்கள் மனம் வீணில் அலையும்படி இருக்கக் கூடாது” என்று
கூறியிருக்கிறார். சம்பளத்தைப் பற்றியும் தங்களுடைய உத்தியோக வாழ்வின்
எதிர்காலத்தைப் பற்றியும் சஞ்சலப்படாத ஆசிரியர்கள் ஆயிரத்தில் ஒருவர்
இருவரைத் தவிர, எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்கிறோம்.
எனவே, இந்நாட்டில் கல்விக்காக செலவாகும் கோடிக்கணக்கான பணமும் உண்மையில்
பயனளிக்கப்பட வேண்டுமானால், மக்கள் கல்வியில் உயர வேண்டுமானால் கல்வியில்
புதிது புதிதான திட்டங்கள் புகுத்திவிடுவதினால் ஏற்படாது. ஆசிரியர்கள்
சஞ்சலத்தைப் போக்கிட வேண்டும் என்பது இதிலிருந்து நன்று விளங்கும்.
“ஊருக்கு இளைத்தவன் ஆண்டி” என்றாற் போல் சிக்கனத்தைக் கையாள நேரிடும்
போதெல்லாம் ஆசிரியர்கள்தான் அதிகாரிகள் கண்களுக்கு உடனே புலனாகின்றனர்.
இத்தகைய மனோபாவம் அதிகாரிகளிடையே நிலவுவது கல்வியின் எதிர்காலத்துக்கு
நாசம் விளைக்கும் என டாக்டர் முதலியார் அவர்கள் எச்சரித்துமிருக்கிறார்.
எத்தகைய எச்சரிக்கையும் நிர்வாகிகள் மனதையோ, அதிகாரிகளது மனதையோ
மாற்றாது என்று நாம் உறுதியாகச் சொல்லுவோம். ஆசிரியர்களுக்கு இத்தகைய
நித்தியகண்டம் பூர்ணஆயுசு என்ற நிலைமை மாறவேண்டுமானால், அவர்களுக்கென
அவர்களையே கொண்ட ஒரு சங்கம் ஒன்று காணப்படவேண்டும். ‘மெயில்’ பத்திரிகை
கேட்பதுபோல், இவர்களது குறைகளை எடுத்துச்சொல்லி, ஆட்சேபணைகளை
எடுத்துக்காட்டி, இவர்களது உரிமைகளுக்காகப் போராடுவதற்கு இவர்களுக்கு என்ன
°தாபனம் இருக்கிறது என்று கேட்கிறோம்.
ஓர் அளவுக்காவது இவர்களது கஷ்டங்கள் நீங்கவேண்டுமானால், பள்ளிக்கூடங்கள்
முழுவதும் சர்க்கார் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். எந்த
°தாபனத்தினிடமும், மக்களுக்கு ஜீவாதாரமான அறிவை ஊட்டக்கூடிய பொறுப்பை
ஒப்புவிக்கக் கூடாதென்றே கருதுகிறோம். கல்வி புகட்டும் பொறுப்பை ஒவ்வொரு
தனிப்பட்ட °தாபனத்தின் வசம் ஒப்படைத்து விடுவதால் ஒவ்வொரு °தாபனமும்
டாக்டர் அவர்கள் குறிப்பிட்ட தனிப்பட்டவருக்கு நிரந்தரமாகக் கல்வியறிவை
புகட்டுவது ஆரம்பக் கல்வியின் நோக்கம் என்பதனை மறந்து தங்கள் நோக்கத்தை
நிறைவேற்ற ஒரு சாதனமாக உபயோகித்து வருகிறது என்பதை அனுபவத்தில் காணலாம்.
எந்த °தாபனமும் தனது சொந்த பொறுப்பில் எத்தகைய கல்வியைப் புகட்டினாலும்
நமக்குக் கவலை இல்லை. ஆனால் சர்க்கார் பணத்திலிருந்து அத்தகைய சலுகைகளுக்கு
இடமளித்தல் கூடாதென்றே கருதுகிறோம்.
மேலும், கல்வி கற்பிக்கும் பொறுப்பை இம்மாதிரி தனிப்பட்ட °தாபனங்களின்
கைகளில் விட்டுவிடுவதால், ஆசிரியர்களுக்குள் அய்க்கிய மனோபாவம் ஏற்படுவது
அரிதாகிவிடுகிறது. இதனால், ஆசிரியர்களுக்குப் பொதுவான ஒரு °தாபனம் காண்பது
கஷ்டமாய் விடுகிறது.
எனவே, இவர்களது குறைகள் களையப்படாமல் போய்விடுகிறது. கடைசிப் பலன் -
திறமையும் உற்சாகமும் அற்ற ஆசிரியர்களை மக்கள் அடைகின்றனர். எனவேதான்
பள்ளிக்கூடங்கள் எல்லாம் சர்க்கார் நிர்வாகத்தின் கீழே பல இலாகாக்கள்
இருப்பதுபோல் இதுவும் ஒரு இலாகாவாக இருந்தால்தான் ஆசிரியர்களின் எதிர்கால
வாழ்க்கையிலும் நம்பிக்கை ஏற்பட முடியும் என்பதோடு அவர்களும் தங்கள்
கடமையைத் திறம்பட நடத்துவார்கள்.
மேலும், “அநாவசியமாக ஆசிரியர்கள் பொறுப்புகளிலும் கடமைகளிலும் °தல
°தாபனத் தலைவர்களும், மெம்பர்களும் தலையிட்டால் (கல்வியில்) பெருத்த
கேடுகளே விளையும்” என மொழிந்திருப்பதையும் கல்வி பரவவேண்டும் என்பதில் கவலை
கொண்டுள்ளவர்கள் கவனிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலே குறிப்பிட்ட குறைகளை அறியாத மக்கள் மிகச் சிலரே இருப்பர் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் சதாரண மக்கள் கஷ்டப்படுவதின்
காரணம். பள்ளிக்கூடச் சம்பளம் அதிகமாகக் கட்டவேண்டுவது மற்றுமல்ல என்றும்,
அடிக்கடி பு°தகங்கள் மாற்றுவது, எண்ணற்ற நோட்டு புத்தகங்கள் வாங்கச்
செய்வது, விசேஷ வேலைகளைச் செய்ய செய்வது முதலியவைகளே பெரிய
சுமையாயிருக்கிறதென்றும் கடைசியாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
பணக்காரர்களும், ஏழைகளும், பாமரரும், பண்டிதரும் சுயமாக தங்கள்
பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க மேற்கண்ட கஷ்டங்களைக் கூடுமானவரை நீக்க
பள்ளிக்கூட நிர்வாகிகளும் கல்வி அதிகாரிகளும் கவனிப்பார்களாக.
இறுதியாக, இந்நாட்டில் எத்தகைய கல்வித் திட்டமும் வெற்றியடைய
வேண்டுமானால் அது ஆசிரியர்கள் திறமையையும் உற்சாகத்தையும் பொறுத்திருக்கிற
தென்பதும், அதற்குச் சர்க்காரும் பொதுமக்களும் செய்யவேண்டியது என்ன
என்பதும், சகலரும் கல்வி பெற பள்ளிக்கூடங்களில் செய்யவேண்டிய மாறுதல்கள்
என்ன என்பதும் தெரிந்து பொறுப்புள்ளவர்கள் கருத்தில் வைத்து தக்கது
செய்வார்களாக.
(குடிஅரசு - தலையங்கம் - 02.06.1940 -
நூல் : கல்வி பற்றிய சிந்தனைகள்
ஆசிரியர் : தந்தை பெரியார்
Comments
Post a Comment