தந்தை பெரியார் அவர்களின் பொன்னுரை
வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பித் தமது கூட்டு
வாழ்க்கையைத் துவக்கிக் கொள்ள ஆசை கொண்டு, அதற்காக ஒரு ஒப்பந்தம்
நிறைவேற்றிக் கொள்கிறார்கள் - அதற்குப் பெயரே வாழ்க்கை ஒப்பந்தம்.
வியாபாரம் தொடங்கிய பிறகு ஒப்பந்தம் செய்து கொள்வது பெரும்பாலும்
கூட்டாளிகளிடையே அதிருப்தி ஏற்படக் காரணமாய் இருப்பதால், இவர்கள்
முன்கூட்டியே ஒப்பந்தத்தைச் செய்து கொள்கிறார் கள். கூடிச் செயலாற்றுதல்,
கூடி வியாபாரம் செய்தல், கூடிப் பண்ணயம் வைத்தல் ஆகியவற்றிற்குக்
கூட்டாளிகள் முன்னாடியே தமக்குள் ஒரு திட்டம் ஏற்படுத்திக் கொள்வது
இயற்கையேயாகும்; அறிவுக்கும் பொருந் தியதே ஆகும்; மிகவும் அவசியமாகும்.
அதுபோலவேதான் வாழ்க்கை நடத்துவதும் வியாரபாரம் நடத்துவது போன்ற ஒரு
செயல்தான். வியாபாரத்திற்கு முதலும், உழைப்பும் எப்படித் தேவையோ அதேபோன்று
வாழ்க்கைக்கு ஒரு ஆணும், பெண்ணும் அவர்களது இரண்டறக் கலந்த நட்புறவும்
தேவையாய் இருக்கிறது.
இந்த வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு அறிவு, அன்புப் பொருத்தம், அனுபவம் ஆகிய
பல காரியங்களே முக்கியமானதாகும். இவற்றில் முரண்பாடு ஏற்படுமாயின் அந்தத்
தருணமே இவர்களுக்கள் ஏற்பட்ட ஒப்பந்தமே முறிந்துவிட்டதாகவே அர்த்தம்.
ஒரு தடவை ஒரு ஆணும், ஒரு பெண்ணும் கணவன் மனைவியாகி விட்டால், ஆனது
ஆனதுதான். அதில் எந்தவித மாற்றமும் இருக்கவே கூடாது. அந்தப்படி மீறி அந்தப்
பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறொருவரிடம் காதல் ஏற்பட்டுவிட்டால், அது
காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரம் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய, அது
ஒருக்காலும் காதலாகாது என்றும் கற்பித்து ஒரே புருஷனிடம் மாத்திரமே இருக்க
வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.
இதன் பலாபலன் எப்படி இருந்தாலும் இந்தப்படி சொல்கிறவர்களை எல்லாம்
உலகானுபவம், மக்கள் தன்மையில் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றும், இயற்கைத்
தன்மையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றும், அல்லது உண்மை அறிந்ததும்
வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள்
என்றுந்தான் கருத வேண்டியிருக்கிறது.
காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப்பான்மை, பக்குவம், இலட்சியம்
ஆகியவைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சகாலம் கழிந்தபின்
இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லட்சியம் மாறலாம். இந்த மாதிரிச்
சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துக்
கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது அவசியமே இல்லாத
ஒன்றாகும்.
வெளிப்படையாய், தைரியமாய், மனித இயற்கையாகவும், சுதந்திரத்தையும்,
சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், ஒரு ஆண் ஒரு பெண்ணைத்
தேடிக் கொள்வதும், ஒரு பெண் ஒரு ஆணைத் தேடிக் கொள்வதும்; ஒரு மனிதன் தனக்கு
இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த ஒரு
பலாகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும்,
மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததாகும்.
சொத்துரிமை இல்லாத ருசியா போன்ற நாடுகளில் ஆண்களும், பெண்களும் கணவன் -
மனைவி என்று இல்லாமல் நண்பர்கள், காதலர்களாகவே இருந்து வருகின்றனர்.
திருமணம் என்ற அமைப்பு முறையில் அமைப்பும், ஏற்பாடும் இல்லாமலே
வாழ்கின்றார்கள். இதற்குக் கட்டுப்பாடற்ற காதல் (குசநந டுடிஎந) என்று
பெயர். சுதந்திரமான ஆண்-பெண் உறவு வாழ்க்கை அங்கே இருக்கிறது. சொத்து,
வாரிசு உரிமை இருக்கிற காரணத்தால்தான் நம்முடைய நாட்டில் கட்டுப்பாடுள்ள
குடும்ப முறை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.
ருசியா போன்ற சொத்துரிமையற்ற நாடுகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவை
இல்லாமல் போய்விட்டது. ஏதோ இயற்கை உணர்ச்சிக்காக - ஓய்வு நேரங்களில் சாந்தி
ஏற்படுவதற்காக - ஒரு வாழ்க்கைத்துணை இருக்கவேண்டும்; அவர்கள்
சிநேகிதர்கள் மாதிரி என்றைக்கும் இருப்பார்களே தவிர, அங்குக் கலியாண
முறையே கிடையாது. இதுதான் அங்குள்ள ஆண்-பெண் உறவுத்தன்மை.
இருவரும் ஆபீசுக்குப் போகுமுன் முத்தம் கொடுத்துவிட்டுப் போகின்றனர்.
திரும்பி வந்து பார்த்தால், டேபிளில் ஒரு கார்டு இருக்கும். இதுவரைக்கும்
நாம் இருவரும் இஷ்டப்பட்டுக் கூடி சந்தோஷமாக வாழ்ந்தோம்; இனி இஷ்டமில்லை
பிரிந்துகொள்வோம்! என்று இருவரில் யாராவது ஒருவர் எழுதி வைத்து
இருப்பார்கள். ஒரு தகராறும் இல்லாமல் பிரிந்துகொள்வார்கள். அங்கு ஒருவன்
மனைவியை இன்னொருவன் அனுபவித்தான் என்ற பேச்சே வராது; அனுபவிக்கப்
பலாத்காரம் பண்ணினான் என்றால்தான் வழக்கு! எனவே, இதுபோன்ற ஆண் - பெண் உறவு
முறையே மனிதனுடைய சுய உரிமைக்கும், மனத் திருப்திக்கும், மனித
வளர்ச்சிக்கும் ஏற்ற முறையாகும்.
விபச்சாரம் இருக்காது
இதுபோன்ற அமைப்பிலே விபச்சாரம் என்பது இருக்க நியாமில்லை. ஏனெனில்
பணத்திற்காகவும், பண்டத்திற்காகவும் விபச்சாரம் என்பது அடியோடு
மறைந்துபோகும். மக்களுக்குத் தன்மான உணர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஒருவரை
ஒருவர் அடக்கி ஆளமுடியாது. ஒருவர் தயவைக்கோரி ஒருவர் இணங்கிவிட முடியாது.
ஒருவரை ஒருவர் அதாவது, ஆணும்-பெண்ணும் மனப்பூர்வமான சம விருப்பமின்றிக்
காதல் அனுபவிக்க மாட்டார்கள். கலவி விஷயத்தில் யாவருக்கும் தேர்ந்த
அறிவும், கலவியும் ஏற்படும். ஆனால், மனமொத்த உண்மைக் காதல் வாழ்க்கை
என்பதைத் தவிர, புதுமைக்காக - மாறுதலுக்காக அடிக்கடி மாறும் தன்மை
சுலபத்தில் ஏற்பட்டுவிடாது. அன்றியும் உடல் நலம் பற்றிய அறிவும் கவலையும்
ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும். தன்மான உணர்ச்சியும் இருக்கும்.
“விருப்பமில்லாத இடத்தில், சம்பந்தமில்லாத இடத்தில் இச்சை வைப்பது தனது
சுயமரியாதைக்குக் குறைவு” என்றே ஆண் - பெண் இருபாலரும், பலாத்காரமோ,
வற்புறுத்தலோ, உடல் நலத்திற்குக் கேடோ இல்லாமலும், ஒத்த காதல், ஒத்த
இன்பம், ஒன்றுபட்ட உள்ளம்கொண்ட கலவியால் சமுதாயத்திற்கோ, தனிப்பட்ட
நபருக்கோ எவ்விதக் கெடுதியும் ஏற்பட்டுவிடாது. அதனால் விபச்சாரம் என்பதற்கே
இடமில்லாமல் போகும்.
காதல் மணம்
காதல் என்பது மிகமிகச் சாதாரணமான அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது
இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல்
கொண்டு காதல் பசி தீர்ந்ததும் சலிப்படைந்து, அதன் பயனைப் பிறகு வேதனையுடன்
பொறுத்துக் கொண்டிருப்பது என்றால் அது இன்ப வாழ்க்கையாக இருக்க முடியாது.
உண்மையைப் பேச வேண்டுமானால் யாரைப் பார்த்தாலும் யாருக்குக் காதல்
இல்லாமல் இருக்க முடியும்? சமுதாயத் கட்டுப்பாடுகள் பல இருப்பதால், காதல்
கொண்டு ஏமாற்றம் அடைவதுமாக வாழ்வு முடிகிறதே ஒழிய வேறில்லை. காதலை அவரவர்
உள்ளத்திற்கே விட்டு விடுவோம். ஆனால், வாழ்க்கைத் துணை விஷயத்தில் காதல்
போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே
முக்கியமானதாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருந்திருக்கலாம்.
இப்போதைய அறிவுத் திருமணம் வாழ்நாள் முழுவதும் பொருந்தும்படியாக இருக்க
வேண்டும்.
மனித வாழ்வையும் பிறவிக் குணங்களையும் மேன்மைப்படுத்துவ தாக
இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம்தான் பெரிதும் காதலின்
முழு இடத்தையும் பெற்றுவிடுகிறது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு அந்த
இச்சைப் பெருக்கம் இருவருக்கும் போதவே போதாது. ஆகையால், அறிவையும்,
நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப் படுத்தும் காதலை மனிதன் அடக்கி, வாழ்க்கைத்
தன்மையைக் கொண்டு வாழ்க்கைத் துணையைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதே
எனது கருத்தாகும். ஆதலாலேயும், பழைய தமிழர் மணமுறை களுக்கோ, ஆரியர் மண
முறைகளுக்கோ இங்கு வேலை கிடையாது. அறிவு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின்
மீது ஏற்பட்ட மணமுறை களுக்கே இங்கு வேலை யுண்டு. அவை பழையதானாலும்,
புதியதானாலும் , தமிழனுடையதானாலும் வேற்று நாட்டுக்காரனுடையதானாலும்,
அய்ரோப்பியனுடையதானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
ஆண் - பெண் சமத்துவம்
நம் பெண்கள் நாட்டுக்கு - சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப்
பொம்மைகளானதற்கு, ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்தப்
பாழாய்ப்போன ஒழுக்கமற்ற சினிமாப் படங்களும், சினிமா நட்சத்திரங்களைப்
பார்த்து தினம் ஒரு ஃபேஷன் நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல்
ஏற்பட்டதும்தான் என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன?
என்பது எல்லாவற்றையும் நம் குலப்பெண்கள் என்பவர்கள் கருதாமல் புகழ், வீரம்,
பொதுநலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல் தாங்களும்
ஆக வேண்டும் என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது பெண்கள்
சமுதாயத்தின் கீழ்ப்போக்குதான் பயன்படும் என்று வருந்துகிறேன்.
டீசென்சி - சுத்தம், கண்ணுக்கு வெறுப்பு இல்லாத ரம்மியம் வேண்டாம் என்று
நான் சொல்வதாக யாரும் கருதக்கூடாது. அது அவசியம் வேண்டும். ஆனால், அது
அதிகப் பணம் கொண்ட மக்கள் கவனத்தை ஈர்க்கத் தகுந்த ஃபேஷன் நகை, துணி,
வெட்டுப் போன்ற அலங்காரத்தால் அல்ல என்றும், (Simple) சாதாரணக் குறைந்த
தன்மையில் முடியக் கூடியது என்றும் சொல்வேன்.
நம்நாட்டுப் பெண்கள் மேல்நாட்டுப் பெண்களைவிட சிறந்த அறிவுவன்மை, ஊக்கம்
உடையவர்கள் ஆவார்கள். நம் சீதோஷ்ண நிலை அப்படிப்பட்டது. அப்படியிருக்க,
ஒரு ருக்குமணி, ஒரு விஜயலட்சுமி என் கின்ற பார்ப்பனப் பெண்கள்தானா,
பொதுவாழ்வில் ஈடுபடத்தக்கவர்களாக, மந்திரிகளாக ஆகவேண்டும். ஏன், நம்மவர்கள்
ஏராளமாக வெளியில் வரக் கூடாது? இவர்களைத் தடுப்பது சேலை, நகை, துணி,
அலங்கார வேஷம் அல்லாமல் வேறு என்ன?
எனவே, பெற்றோர்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க
வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப்
போல் கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா, பெண்ணா என்று மற்றவர்கள்
கண்டுபிடிக்க முடியாத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்களைப்
புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல் மனித சமுதாயத்திற்குத்
தொண்டாற்றவும், கீர்த்தி புகழ் பெறும் பெண்மணியாக ஆக்கவும் வேண்டும்.
பெண்ணும் தன்னைப் பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும் படியாக
நடக்கவே கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும், நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன்
நிபந்தனை? உயர்வு - தாழ்வு ஏன்? என்ற எண்ணம் எழ வேண்டும். ஏன் இப்படிச்
சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருள்களாக
ஆக்கப்படக்கூடாது; அவர்கள் புது உலகத்தைச் சித்தரிக்க வேண்டும் என்பதுதான்
என் கருத்து. இந்தப்படி பேசுகின்ற தன்மையும் இதற்குத்தான்.
பெண்களைப் படிக்க வைப்பதுடன், நன்றாக அறிவு உள்ளவர்களாக்க வேண்டும்.
மேல்நாட்டில் ஒரு வெள்ளைக்காரனை “உன் பிள்ளைக்கு எப்போது கலியாணம்? உன்
பெண்ணுக்கு எப்போது கலியாணம்? என்றால், “நீ என்ன காட்டுமிராண்டியாக
இருக்கிறாய்?” என்பான். பிள்ளை என்றால் அவன் கல்யாணம் எப்போது என்று
அவனுக்குத் தெரியும். அவரவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தனக்கு
ஒழுக்கமான, குணமுள்ள ஒருவனைப் பார்த்து பெண்ணே தேர்ந்தெடுத்துக்கொள்ள
வேண்டும். அதற்கான அறிவு பெற அவர்களைப் படிக்க வைத்து அறிவுள்ளவர்களாக்க
வேண்டும்.
ஆண்களைப் போலவே பெண்களையும், “நீ பெண், அங்கு போகாதே, இங்கு போகாதே”
என்று சொல்லாமல், சரிசமமாக வளர்க்க வேண்டும். இன்று ஒரு பெண் போவதானால்
எவ்வளவு பெரிய பெண்ணாக இருந்தாலும் துணையில்லாமல் போக முடியாது. ஒரு சிறு
பையன்கூடப் போய் வந்துவிடுவான்! ஏன்? அப்படி வளர்த்துவிட்டோம்.
பெண்களுக்குக் குத்துச்சண்டை முதற்கொண்டு சொல்லிக் கொடுத்து ஆண்களைப் போலவே
வளர்க்க வேண்டும். இந்து மதப்படி பதிவிரதை என்பதற்கு ஒழுக்கம், நற்குணம்,
நற்பண்பு இவைகள் தேவை இல்லை. கணவன் சொல்லுகிறபடி நடப்பதுதான் பதிவிரதாத்
தன்மையாகும். அதை வலியுறுத்தவே புராணங்களில் பதிவிரதைகளின் கதை
சித்தரிக்கப் பட்டிருக்கின்றன.
அரிச்சந்திரன் தான் பட்ட கடனுக்கு சந்திரமதியை விலைப் பொருளாக விற்றான்!
இதற்குச் சந்திரமதி மறுத்துக் கூறவில்லை. சீதையின் மேல் சந்தேகப்பட்டு
காட்டுக்குக் கொண்டுபோய் விட்டு வரும்படி செய்தான் இராமன். அதற்குச் சீதை
நான் போகமாட்டேன்’ என்று மறுப்புக் கூறவில்லை! அர்ச்சுனனை மணந்த திரவுபதை
அர்ச்சுனனிடம், “என் பெற்றோர்கள் உனக்குத் திருமணம் செய்துகொடுத்தார்கள்.
ஆகவே, நான் மற்றவர்களுக்கு உடன்பட மாட்டேன்’ என்று மறுத்துக் கூறவில்லை!
கணவன் சொன்னதே சரியென்று இவள் ‘டயம்டேபிள்’ போட்டுக்கொண்டு அதன்படி
அய்ந்துபேருக்கும் உடன்பட்டு வந்தாள். இப்படியெல்லாம் பெண்கள் கணவன்
சொற்படி நடக்க வேண்டியவர்கள் என்பதை நிலை நாட்ட புராணங்களில் பத்தினித்
தன்மைகளைச் சித்தரித்திருக்கிறார்கள்.
பெண்கள் சுதந்திரமற்ற பொருள்கள்; அப்பொருளை ஆண் தன் இஷ்டப்படி
நடத்தலாம்; விற்றுப் பணம் சேர்க்கலாம்; மோட்சம் அடைய மற்றவனுக்குக்
கூட்டிக் கொடுக்கலாம் என்கிற முறைகளில் பெண்களை உபயோகப்படுத்தி
இருக்கிறார்கள்.
கோவலன் கதையில் பெண்களைக் கொடுமைப்படுத்தி இருக்கும் முறையைப் பார்த்தால் மிகவும் மோசமாக இருக்கிறது.
திருமணம் நடக்கும் மேடையிலேயே மணமகன் கோவலன், தாசியின் மேல் ஆசைப்பட்டு
அவளுடன் போய்விட்டானாம்! கோவலன் திரும்பி வரும் வரையில் கண்ணகி தன்னை
அலங்கரித்துக் கொள்ளாமல், கூந்தலை அலங்கரிக்காமலும் பொட்டிட்டுக்
கொள்ளாமலும் நல்ல உணவு இல்லாமலும் உப்பில்லாத உணவை உட்கொண்டு கவலையே
உருவவெடுத்திருந்தாளாம். எதற்காக அப்படிச் செய்யவேண்டும்?
அந்த °தானத்தில் ஒரு ஆணை வைத்துப் பார்த்தால் அப்படி நடக்குமா?
மனைவியானவள் கணவனை விட்டு வேறு ஒரு ஆணுடன் போய்விட்டால் அவள் வரும்வரையில்
கணவன் இப்படி உப்பில்லாத உணவு சாப்பிடுவானா? பகவான் பார்த்து நம்மிடம் நம்
மனைவியைக் கொண்டு வந்து சேர்க்கும் வரையில் நமக்குச் சுகம் தேவையில்லை
என்ற கவலையுடன் இருப்பானா? எனவே, இதில் ஆணுக்கு ஒரு நீதியும், பெண்ணுக்கு
ஒரு நீதியும் கூறப்படுகிறது. இப்படியே பெண்களை இழிவுபடுத்த வேண்டும்
என்பற்காக மிகவும் மோசமாக எழுதி வைத்திருக்கிறார்கள். பெண்களும் ஆண்களைப்
போலவே எதிலும் உரிமை கொள்பவர்களாக இருக்கவேண்டும்.
ஒருபால் கற்பு
நாசமாகப்போகிற ‘கற்பு கற்பு’ என்று சொல்லி நம் பெண்களை எவ்வளவு கேவலமாக
ஆக்கிவிட்டார்கள்! பார்ப்பானோ மிகக் கெட்டிக்காரன், ஆயிரம் பேரை அவள்
பார்த்திருந்தால்கூட அவளைப் பத்தினியாக்கிவிடுவான்! சீதை, துரோபதை, தாரை
இவர்களே இதற்கு உதாரணம். கற்பு என்றால் இரணடு பேருக்கும் ஒரே மாதிரியாக
அல்லவா இருக்கவேண்டும்? பைத்தியக்காரத்தனமாக மூடநம்பிக்கைகளைப் புகுத்தி
பாழாக்கி விட்டார்கள்.
கட்டுப்பாட்டிற்காகவும் நிர்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலமும்
கூடாது! கூடவே கூடாது! வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும் காதல் அன்பிற்காகவும்
இருவரையும் கற்பு என்னும் சங்கிலியால் எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக்
கட்டட்டும். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், ஒரு பிறவிக்கு ஒரு
நீதி என்கிற கற்பு மாத்திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை, மூர்க்கத்தனமே
அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும் நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை.
பாவத்திற்குப் பயந்து பதிவிரதையாய் இருப்பவளும், காவலுக்குப் பயந்து
பதிவிரதையா யிருப்பவளும், மானத்திற்குப் பயந்து பதிவிரதையா யிருப்பவளும்
ஒரே யோக்கியதை உடையவளே ஆவாள்.
பிள்ளைப் பேறு
மணமக்கள் கண்ணை மூடிக்கொண்டு பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது.
அவசரப்படாமல் அய்ந்து வருடத்திற்குப் பிறகு பிள்ளைப் பெற்றுக் கொண்டால்
நல்லது. மனைவியைக் கொஞ்சித் தீர்க்காமல், திருமணமான உடனே குழந்தையைப்
பெற்றுக்கொண்டால் மனைவியைக் கொஞ்சுவதா? குழந்தையைக் கொஞ்சுவதா? பிறகு
வாழ்க்கையில் லட்சியம் என்ன இருக்கிறது? அநாவசியமாகக் குழந்தையைப்
பெற்றுக்கொண்டால் உடம்புக்குக் கெடுதல்தான். திருமணமான எட்டு வருடத்தில்
பத்து பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டால் அவர்களை எப்படிப் படிக்க வைக்க
முடியும்? எப்படி வைத்திய வசதி செய்ய முடியும்? எப்படி வாழ்க்கை நடத்த
முடியும்?
இதற்காகச் சட்டம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். கூடிய சீக்கிரம்
போ°ட் ஆஃபிசில் மாத்திரை விற்கப் போகிறார்கள். கடவுளுக்கு மேலே உத்தரவு
போடப் போகிறார்கள் ‘கடவுள் கொடுத்தார்’; ‘எல்லாம் பகவான் செயல்’ என்பதும்,
பூச்சி, புழு ஒன்று கொடேன் என்று நம் பெண்கள் அரச மரத்தைச் சுற்றி
வேண்டிக் கொள்வதும் தவறு என்று அறிவு சொல்கிறது.
கர்ப்பக் கட்டுப்பாடு அவசியம்
மணமக்கள் கூடுமானவரைக்கும் ஒரு அய்ந்தாண்டுக்காவது பிள்ளை பெறாமல்
இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பிள்ளைகளை ஏராளமாகப் பெற்று விட்டுப்
பகவான் கொடுத்தார் என்று வேதனைப்படுவதில் என்ன லாபம்? அந்தப் பிள்ளைகளை
வளர்க்க முடியாமல் அவர்கள் ஒழுக்க ஈனமாய் நடந்து மற்றவர்களுக்கும் தொல்லை
கொடுத்தல் நல்லதா? சமுதாய ஒழுக்கக் கேட்டுக்கு அதிகப் பிள்ளைகளைப்
பெறுவதும் காரணமாகும். நான் முப்பது (30) ஆண்டுகளுக்கு முன்னாலேயே இதை
உணர்ந்து கர்ப்ப ஆட்சியைப் பற்றி எழுதியிருக்கிறேன்; புத்தகமும் போட்டேன்.
அப்போது ஜ°டி° பத்திரிகை முதல் மற்ற பத்திரிகைகளும் அதனை எதிர்த்தன.
இப்போது சர்க்கார் கர்ப்பத்தடைக்காக பல கோடி ரூபாய் செலவு
செய்கிறார்கள். இதிலாவது சர்க்கார் நேர்மையாய் நடந்துகொள்வது
போற்றத்தக்கது. அந்தக் காலத்தில் பிள்ளை பெறவேண்டுமென்றால் ராமேசுவரம்
போவார்கள். என்னையும் என் மனைவியையும் என் பெற்றோர்கள் 1902இல் ராமேசுவரம்
அழைத்துப் போனார்கள். இந்தக் காலத்தில் பிள்ளை வேண்டும் என்பவர்கள் 15
ரூபாய் எடுத்துக்கொண்டு மதராசுக்குப் போனால் முடிந்து போகிறது.
மக்கள் பெருக்கத்தால் பொதுத் தொண்டுக்கு ஆபத்து
பிள்ளைகளைப் பெற்றுவிட்டுச் சிறிதும் மானம், வெட்கம் இல்லாமல், “அய்யா
எனக்கு 7,8,9,10 பிள்ளை குட்டிகள், கடவுள் கொடுத்துவிட்டார். ஏதாவது உதவி
செய்யுங்கள்” என்று கெஞ்சுவது எவ்வளவு வேதனையாக இருக்கின்றது? இவர்கள்
தாங்கள் மடையர்களும், மானங்கெட்டவர்களும் ஆனதல்லாமல் ‘கடவுளையும்’
முட்டாளும், அயோக்கியனுமாக ஆக்கி விடுகிறார்கள்.
எனக்குப் பிள்ளை குட்டிகள் இருந்தால் இந்த அளவுக்குக்கூட பொதுத்தொண்டு
செய்யமுடியுமா? நல்ல யோக்கியர் பொதுத்தொண்டர் ஆக இருந்தவர்கள் எல்லாம்
மக்கள் பெருக்கத்தால் அயோக்கியர் - சுயநலக்காரர்களாக ஆகிவிட்டார்கள்! இது
இயற்கை.
சம்பளமே, எத்தனை பிள்ளைகளை வைத்திருக்கிறான் என்கிற வகையில்
இருக்கவேண்டும். வெளிநாடுகளில் அப்படித்தான் இருக்கிறது. கணவன் - மனைவி
இரண்டு பேர் மட்டும் இருந்துகொண்டு ரூ.250 சம்பளம் வாங்கிக் கொண்டு
இருந்தால் என்ன பொருத்தம்? அறிவுக்குப் பொருத்தமான வழியில் நடக்க வேண்டும்.
ஒழுக்கப் போதனையே தேவை!
மனிதன் நல்ல முறையில் வாழ்வதற்கு மற்றவர்களுக்குப் பயன்படு வதற்கு நல்ல
பண்புகளை எடுத்துச் சொல்லுவது, ஒழுக்கங்களைப் போதிப்பது என்பதாக
இருக்குமானால், மனித சமுதாயம் நல்வாழ்வு வாழமுடியும். அதுதான் பொதுநலத்
தொண்டுமாகும். அதை விட்டுவிட்டு நீ உன்னை பிராமணன் என்கிறாய்; என்னை
சூத்திரன், அரிஜன் என்கிறாய்; நீயா கடவுள் நம்பிக்கைக்காரன்?
வாழ்க்கையில் இலட்சியம்
“எதற்காக நீ இருக்கிறாய்?” என்று ஒருவனைக் கேட்டால் அவன், தன் மனைவி
மக்களுக்காகப் பணம் சம்பாதிக்க, பெருமைபெற இருக்கிறேன்’ என்பான். என்னைக்
கேட்டால், “நான் சாவதற்காகத்தான் இருக்கிறேன்” என்று சொல்வேன். யாவரும்
கடைசியில் சாகத்தான் செய் வார்கள். சாவதற்காக ஒருவன் வாழ்வை வீணாக்குவதா?
எனக்கு உயிர் வாழ்வதற்கு சிறிதளவு பொருள் இருந்தால்போதும்; மற்ற
பொருளெல்லாம் பிறர்க்குப் பயன்படுத்தவே செய்கிறேன். மற்றவர்கள் தாங்கள்
எதற்காகப் பொருள் சேர்க்கிறோம் என்று தெரியாமல் பணம் சேர்க்கிறார்கள்.
சாகும் போது அதன் பயன் என்ன ஆகும் என்று தெரியாமல் யாருக்கோ விட்டு
விட்டுச் சாகிறார்கள்.
மனித சுபாவம், வாழ்க்கையின் லட்சியம் மற்றவர்களுக்குத் தொண்டாற்றுவது
என்பதுதான். ஒரு சிலர் வேண்டுமானால் புலன் அடக்க முடியாமல் ஒழுக்க ஈனமாய்ப்
பணம் சம்பாதிப்பதுதான் இலட்சியம் என்று நடக்கலாம்; பெரும்பாலானவர்கள்
அப்படி இல்லை.
இப்போதெல்லாம் சிலர் பொதுத்தொண்டு என்னும் வேஷத்தைப் போட்டுக் கெண்டு
தனக்கெனவே பொதுமக்களை மோசம் துரோகம் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். எவன்
ஒருவன் மக்களை வஞ்சிக்கிறானோ, தனக்குத் தேவைக்கு மீறிய சொத்து
சேர்க்கிறானோ, அவன்தான் ஆ°திகனாவான், திருடனும் ஆவான்!
உண்மை இன்பம் எது?
வள்ளுவர் கூடச் சொல்கிறார் - “அறத்தால் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல” (குறள்) என்பதாக. பிறருக்குத் தொண்டு செய்வதாலே
ஏற்படும் இன்பம்தான் உண்மையான இன்பமாகும்; மற்றது தனக்காகச் செய்துகொள்ளும்
காரியம்; யாவும் போலிப்புகழே ஒழிய உண்மையான புகழ் இல்லை.
அறம் என்பது யாது?
இந்தக் காலத்தில் ஏமாற்றாமல், மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல்
இருப்பதே அறமாகும். தனக்காக எவ்வளவு சொத்து சேர்த்தாலும், செத்த பிறகு தன்
மகனுடைய சொத்து என்பதாக ஆகி விடுகிறது. தன் பெயர் செத்தவுடன்
அழிந்துவிடுகிறது. தன் மகன் காலித் தனமாக நடந்துகொண்டால் அந்தச் சொத்தும்
அழிந்துவிடுகிறது. அதில் என்ன பயன்? பிறருக்காக ஒரு பள்ளிக்கூடமோ, ஒரு
ஆ°பத்திரியோ கட்டிவிட்டால் அந்தப் பள்ளிக்கூடம் உள்ளவரையிலும் அவன் புகழ்
அழியாது நிலைத்து நிற்கும்.
புகழ் நிலைக்க பொதுத் தொண்டு செய்க!
ஆகவே, தன் புகழ் என்றும் நிலைக்கவாகிலும் பிறருக்காகத் தொண்டு செய்யுங்கள்.
ஒவ்வொருவரும் பொது நலத்திற்காக என்ன செய்கிறோம் என்று எண்ணிப் பார்க்க
வேண்டும். ஒரு வீடு எப்போதும் அவன் வீடாக இருக்க வேண்டுமேயானால், அது
பொதுவாக்கப்பட்டால்தான் அவன் வீடாக இருக்கும். அதுபோல முடிந்தவரை
ஒவ்வொருவரும் பொதுநலத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும்.
தனக்காக மட்டிலும் வாழ்வது என்பது ஒழுக்கமாக ஆக முடியாது.
சமுதாயத்திற்காகவும் மணமக்கள் வாழ வேண்டும். சமுதாயத்திற்காகப் பணிபுரிய
வேண்டும். வரவுக்குள் செலவு செய்ய உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொணடு,
எதிர் காலத்திற்கும் சேமித்து வைக்கும் பழக்கம் வேண்டும். ஒழுக்கத்தோடு
வாழ்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உங்கள் வீட்டுக் கதவை மூடிக் கொண்டு
வாழாதீர்கள்.
சிக்கன வாழ்க்கையே முதல் லட்சியம்
முக்கியமாகக் கணவனும் மனைவியும் தங்கள் முதல் லட்சியமாகக்
கொள்ளவேண்டியது. வரவுக்கு மீறாமல் செலவு செய்வதுதான். வரவுக்கு மேல் செலவு
செய்வது விபச்சாரம் போன்றதாகும். இப்படியெல்லாம் வாழ்க்கையில் வழுக்கி
விழக்கூடாது. ஆண்கள், பெண்களின் மூடநம்பிக்கையைப் போக்கிப் பக்குவப்படுத்த
வேண்டும். துணிமணி, நகைகளை வாங்கிக் கொடுத்து ஏமாற்றி விடுவது சரியன்று.
பெண்களுக்கு அறிவை அளிக்க வேண்டும். சிந்தனையைத் தூண்ட வேண்டும்.
இங்கிலாந்து, அமெரிக்க, ரஷ்யா, துருக்கி, ஜப்பான், சைனா போன்ற நாடுகளில்
பெண்கள் நகை அணிவதில்லை. எங்கோ பெரிய அரச குடும்பங்களில் வேண்டுமானால் நகை
இருக்கும். அவர்களும் எப்போதும் கழுத்திலும், காதிலும் அணிந்துகொண்டே
இருப்பதில்லை. நகைகளை இன்சூர் செய்து பெட்டியில் பூட்டி வைத்திருப்பார்கள்.
நாமோ, துணிமணி களுக்காகவும் நிறைய செலவு செய்கிறோம். இந்தப் பழக்கத்தை
நிறுத்த வேண்டியது அவசியமாகும்.
போலீ°காரனுக்கு ரூ.30 சம்பளம், ரூ.20 கிராக்கிப்படி! 18 குழந்தைகள்
இருந்தால் எப்படிக் குடும்பத்தை ஒழுங்காக நடத்த முடியும்?
கூலிக்காரனுக்கும் அப்படியே. கால் ரூபாய் உயருவதற்குள் இரண்டு குழந்தைகள்
பிறந்தால் செலவை எப்படிச் சமாளிக்க முடியும்? வரவுக்கு மிஞ்சின செலவு
செய்யும் குடும்பம் திருட்டுக் குடும்பம், எப்படி ஒழுங்காக இருக்கமுடியும்?
வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்தால் ஏதாவது அயோக்கியத் தனம் செய்துதான்
சரிக்கட்ட முடியும். ஆகவே, வரவுக்குத் தகுந்தாற்போல் செலவு செய்யவேண்டும்.
என்றைக்கும் வரவுக்கு மிஞ்சி செலவு செய்துவிட்டு கடனாளியாக மாறி பிறரை
ஏமாற்றுவது இழுக்கு. இதைவிட விபச்சாரம் இழிவானதல்ல. விபச்சாரத்தைவிட மோசமான
செயல் அதிகச் செலவு செய்து, அதற்காக கடன் வாங்கித் திண்டாடுவது என்றுதான்
சொல்லவேண்டும்.
30 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி, 1000 ரூபாய் சம்பாதிக்கிற வனும்
கடனாளி என்றால் என்ன அர்த்தம்? தன்னை அடக்காதவனுக்குத் தான் தரித்திரம்
உண்டாகும். அதனை அடக்காதவன்தான் விபச்சாரி. ஆகவே, சிக்கனத்தில் குறிகொண்டு
வாழுங்கள்!
மணமக்களுக்கு
மணமக்கள் இருவரும் சிநேகிதர்களாக நடந்துகொள்ள வேண்டும். நான் ஆண் பிள்ளை
என்று அதிகாரம் பேசக்கூடாது. இருவரும் சிநேகிதர்கள் என்று கருதி
இருக்கவேண்டும். அதிகாரம் என்பதை வெறுக்க வேண்டும். அன்பாக எவ்வளவு வேலை
வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்; மிரட்டக்கூடாது. அம்மாதிரியான
காரியங்கள்தான் உடலில் அன்பை அதிகமாக உண்டாக்குகிறது. வாழ்க்கையில் சதா
அடிதடி நடந்தால் என்ன பயன்? வாழ்க்கை அன்புருவாக இருக்கவேண்டும்.
ஆண்கள் பெண்களை மெதுவாகத் திருத்தவேண்டும். மணமக்கள் தங்களுக்காகவே
இல்லாமல் மற்றவருக்காகவே வாழ்கிறோம் என்று எண்ண வேண்டும். இந்து மதம்தான்
நம் மக்களிடையே புகுந்து கெடுத்துவிட்டது. “நான் மாத்திரம் மோட்சம் போக
வேண்டும்; நாம்தான் மனிதர்கள்” என்று இல்லாமல் மற்றவர்களும் நமக்காக
இருக்கிறார்கள் என்று எண்ண வேண்டும். கக்கூ° எடுப்பவர்கள், வீதியில் குப்பை
கூட்டுபவர்கள் தங்கள் சுயலத்திற்காகவா வேலை செய்கிறார்கள்? அதுபோல்
நாமும் நடக்க வேண்டும். அதுதான் பரந்த நல மனப்பான்மையாகும்.
சிரார்த்த மந்திரம்
மந்திரம்: ‘யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா, தன்மே ரேதஹ பிதா
விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே °வாஹா. ரங்கராஜ சர்மணே
அ°மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.
பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழுதுமாக அனுஷ்டிக்காமல், அதன்
காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த அக்னியில் நானிடும் ஹவிஸூக்கு உரிமை
கோரி எனது சொந்த தகப்பனார் வருவார். அப்படி அவர் இந்த ஹவிஸைப் பெறாமல்
தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ
அவர் - அதாவது எனது தாயின் கணவர் இந்த ஹவிசைப் பெறவேண்டும்.
ஆதாரம்: சுவாமி சிவானந்த சரசுவதியின் ‘ஞான சூரியன்’
விளக்கம்: இது தகப்பன் செத்தபிறகு அவருக்காக மகன் செய்யும் கருமாதி.
திதிக் காலங்களில் சொல்லப்படும் மந்திரமாகும். தன் தாயானவள் சந்தேகத்திற்கு
உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள் - மாற்றானிடம் உடல் தொடர்பு
வைத் திருந்தவள் என்ற அடிப்படை மீதே இந்த மந்திரம் சொல்லப்படுகிறது. தன்
தகப்பனுக்காகச் சிரார்த்தம் கொடுப்பவர் எவராக இருந்தாலும் அவர் தன் தாயை
விபச்சாரி என்கிற கட்டுமானத்தின் மீதுதான் இந்த மந்திரத்தைச் சொல்கிறார்
அல்லது சொல்விக்கிறார்.
(நூல் - சுயமரியாதைத் திருமணம் - ஏன்? - தந்தை பெரியார் )
Comments
Post a Comment