பெரியார் கருத்துக்களுக்கு பார்ப்பனப் பேரறிஞர்களின் ஒப்பம்
முன்ஷி - பிர்லா - ராதாகிருஷ்ணன் - வெங்கட்ராம சாஸ்திரியார் ஆராய்ச்சி நூலில் காணும் உண்மைகள் விடுதலையின் விளக்கம்:-
ஆரியர் இயல்பு
ஆரியர் என்பவர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு நாடோ, ஊரோ, குறிப்பிட்ட மொழியோ, கொள்கை கோட்பாடுகளோ கிடையாது. அவர்கள் நாடோடியாக இருந்து பல நாட்டினரின் கொள்கை கோட்பாடுகள் மொழிகள் ஆகியவற்றிலிருந்து தங்கள் சுயநலத்திற்கு ஏற்றவற்றைத் தொகுத்துக் கொண்டு தங்களைத் தனிப் பிறப்பினமாகக் கூறிக்கொள்கின்றனர். இந்த திருட்டுச் சொத்தின் வண்டவாளத்தை பிறர் சந்திக்கு இழுக்காதிருப்பதற்காகத் தெய்வீகம், தெய்வத்தின் அருள் மொழிகள், தெய்வீகத்தின் மக்கள் என்றும் பொய்யாகப் பிரசாரம் செய்து தங்களுக்குச் சிறப்புத் தேடிக்கொண்டனர்.
மற்றும், தாங்களே உயர் சாதியார் - மேல் இனத்தார் என்றும், மற்றவர்கள் எல்லாம் தங்களுடைய அடிமைகள், தாசி புத்திரர்கள், தாசர்கள் என்றும் கூறி அதற்கான ஆதாரங்களை சமஸ்கிருத வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் எனப்படும் நூல்களில் எழுதி வைத்துக்கொண்டு பிறமக்களை ஏமாற்றி அதிகாரம் செலுத்திச் சமுதாயத்தின் பெயரால், மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்தி சுரண்டிப் பிழைத்து வருகின்றனர்.
அறிவுக்கொவ்வாத இந்தக் கோட்பாடுகளையும், சுரண்டல்களையும் ஆக்கிரமிப்புப் பிடியிலிருந்தும், சுரண்டலிலிருந்தும், அவர்களால் நேர்ந்துள்ள மானக்கேடான நிலைமையிலிருந்தும் திராவிட மக்கள் மீட்சிபெற்று தன்மான - தன்னறிவு - தன்னியக்க மக்களாக வாழ்ந்து உயர் நிலைமை பெறவேண்டும் என்பதாக தன்மான இயக்கத் தந்தை பெரியாரவர்களும் திராவிடர் கழகத்தினரும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக திராவிட மக்களிடையே பிரச்சாரம் செய்து மக்கள் நல்லறிவு பெற பகுத்தறிவாளர்களாகச் செய்து வருகின்றனர்.
இதைக்கண்டு பார்ப்பனர்கள், பெரியாரவர்கள் செய்து வரும் பிரச்சாரம் வெறும் கற்பனை என்றும், ஆதாரமற்றதென்றும் எதிர்ப்பிரச்சாரம் செய்து மக்களின் அறிவுக் கண்ணில் மண் தூவ முயற்சித்து வருவதும் அறிந்ததே. அண்மையில் காங்கிரசு ஆட்சி மூலவர்களும்கூட இந்தக் குருட்டுக் கோட்பாடு வேதாந்தப் பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டு, தங்களுடைய அரசியல் ஆதிக்கச் செல்வாக்கைப் பயன்படுத்தித் திராவிட மக்களை இழிவுபடுத்தும் ஆரியக் கோட்பாடுகளுக்கும் புராண இதிகாச கட்டுக் கதைகளுக்கும் ஆக்கம் தேட முற்பட்டிருப்பதும் அறிந்ததே.
பெரியார் அவர்களும் மேற்படி கருத்துக்களை, பகுத்தறிவு கொண்டு கணித்தறிந்துதான் கூறி வருகிறார். வேதம், மதம், புராணங்களிலுள்ள மனிதத் தன்மைக்கும், பண்புக்கும், நடைமுறைகளுக்கும், நியாயத்துக்கும், நேர்மைக்கும் தகுதியற்ற கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் கண்டுதான் அவைகளின் தகுதியற்ற தன்மையை அம்பலப்படுத்தி வருகிறார். ஆனால், இது இவர் மாத்திரம் கற்பனை செய்து கூறுவதாக பார்ப்பனர்களும், வைதீகர்களும் செய்து வரும் பிரச்சாரம் முற்றும் பொய்; சுயநலப் பித்தலாட்டம் என்பதற்கு உலக வரலாற்று ஏடுகளில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
மேனாட்டுப் பேரறிஞர்கள் மாத்திரமின்றி, தமிழ்நாட்டு அறிவாளர்களும் பார்ப்பனப் பிரமுகர்களும் வங்காளத்தில் தினேஷ் சந்திரசென் போன்ற சரித்திர சமுதாய ஆராய்ச்சிப் பேரறிஞர்களும் தக்க ஆதாரங்கள் தந்துள்ளனர்; தந்து வருகின்றனர்.
முன்ஷி குழுவினர் நூல்
முன்னர் டில்லி சர்க்கார் உணவு மந்திரியாக இருந்து, இப்போது அய்க்கிய மாகாணக் கவர்னராக இருப்பவரும் வடமொழிப் புலமையாளரும் சரித்திர ஆராய்ச்சியாளரும், பார்ப்பனருமான திரு.கே.எம்.
முன்ஷியை தலைவராகவும் மற்றும் பெரும் ஆலை முதலாளியான ஜி.டி.பிர்லாவைத் துணைத் தலைவராகவும், ஆந்திர பார்ப்பனரும் உலகப் புகழ் பெற்ற தத்துவ சாஸ்திரியும் இப்போது இந்திய சர்க்கார் துணை ஜனாதிபதியாகவிருப்பவருமான டாக்டர். ராதாகிருஷ்ணன், சென்னை பார்ப்பனர் மகா சபைத் தலைவரும் சென்னை அட்வகேட் ஜெனரலாக முன்னர் வேலை பார்த்தவருமான திருவாளர் டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி மற்றும் சில வடக்கத்திக் கலைஞர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் செயலாளராகவும் கொண்ட பாரத இதிகாச சமீதி என்றொரு கழகம் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. சமஸ்கிருத வேதம், பிராமண மதம் ஆகியவற்றிற்கு உயிரளிப்பதே இக்கழகத்தின் குறிக்கோள் என்பது அக்கழக அமைப்பே சுட்டிக்காட்டும்.
இக்கழகத்தார் இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் என்ற பெயரில் ஓர் ஆராய்ச்சி நூல் ஆங்கில மொழியில் வெளியிட்டுள்ளனர். முதல் தொகுப்பு இப்போது வெளிவந்துள்ளது. வேதகாலம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஆராய்ச்சிக் கருத்துக்கள், பெரியாரவர்களின் கருத்துக்களை முழு அளவுக்கு ஆதரிப்பதாகவுள்ளன. பார்ப்பனர்களைத் தலைவராகவும், அங்கத்தினர்களாகவும் கொண்ட கழகம் பார்ப்பன ஆராய்ச்சி அறிஞர்களைக் கொண்டு ஆராய்ந்து அவர்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வடிகட்டியும் திருத்தியும் வெளியிட்டுள்ள நூலில் அதுவும் இந்திய சர்க்காரின் சரித்திர ஆதார ஏடாக மதிப்பும் பெறும் சரித்திர நிகண்டில் (என்சைக்ளோபீடியா) பெரியாரவர்களுடைய கருத்துக்கும் அவர் கூறிவரும் மெய்மைகளுக்கும் சரித்திரப் பூர்வமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இந்நூலுக்குத் திரு.கே.எம்.முன்ஷியே முன்னணிச் சிறப்புரையும் தந்திருக்கிறார். சமஸ்கிருத - வேத நூல் காப்பாளர்களும், ஆராய்ச்சியாளர்களுமான பார்ப்பன பேரறிஞர்கள் தொகுத்துள்ள இந்நூலில் பெரியாரவர்கள் கூறும் மெய்மைகளுக்கு ஆதாரமாகத் தரப்பட்டுள்ள சில முக்கிய கருத்துக்களை மாத்திரம் தொகுத்தளிக்கிறோம் பகுத்தறிவுலகத்தின் நேர்மை நியாயத்தை பொதுமக்கள் கண்டு தெளிவடைய வேண்டும்.
மேலும், சுயநலக் கும்பல்களின் பித்தலாட்டப் பிரசாரம், சுயநல வேடம் ஆகியவற்றை அறிந்து மெய்யறிவு பெற்று தன்னிறவு தன் சக்தியை பயன்படுத்தி, திராவிட மக்கள் தங்கள் நல்வாழ்வுக்குத் தாங்களே நல்வழி வகுத்துக்கொள்ள வேண்டும். மதத்தின் பெயரால், தெய்வத்தின், சமுதாயத்தின் பெயரால், விதி பிறவியின் பெயரால், கூறப்படும் உயர்வு - தாழ்வு பொய்க்கூற்றுகளை ஒதுக்கித்தள்ளி, எல்லோரும் சமத்துவமாக வாழவேண்டும் என்ற உயர்நோக்கத்துடன் தான் இக்கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
புராணங்கள் கற்பனையே
புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய்ச் சரித்திரமல்ல இவைகள் மக்கள் வரலாற்றை அறிவதற்கோ சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகாது. இவைகள் வெறும் இலக்கியத் தொகுப்புக்களே என்று திரு.முன்ஷி இந்நூலின் முன்னுரையில் ஒப்புக்கொண்டிருக்கிறார் (பக்கம் - 8).
எனவே, வேத - இதிகாச புராணங்கள், இந்தியாவில் வசித்த முற்கால மக்கள் வரலாறு என்பது பொய்யாகிறது. இந்நாட்டு மக்களுக்குரியதல்லாத கற்பனைக் கோட்பாடு முட்டுக்கட்டைகளே வேத புராணங்கள் என்ற மெய்யும் உறுதிப்படுகிறது. வைதீக கோட்பாடுகளுக்கு சரித்திர அடிப்படை இல்லை என்றும் திரு.முன்ஷியார் வெட்ட வெளிச்சமாக்குகிறார்.
மற்றும், ஆரியர்கள் அனாதி காலமக்கள் (கடவுள் புத்திரர்) சிறந்த நாகரிகம் படைத்தவர்கள் என்று கூறப்படும் கூற்றை இந்நூலுக்கு முன்னுரை தந்துள்ள பேராசிரியர் ஆர்.சி.மஜும்தார் என்பவரே பொய்ப்படுத்துகிறார்.
அதாவது, ஆரியர்கள் சிந்து வெளியில் குடியேறுவதற்கு முன்பா - பின்பா நாகரிக மக்களாயினர் என்று நிர்ணயிப்பது கடினம் என்று கூறி, மாக்கள் நிலையிலும் நாடோடிகளாகவுமிருந்த ஆரியர் சிந்து வெளியில் குடியேறி அங்கிருந்த பழங்குடி மக்களுடன் கலந்து வாழ்ந்தபின் தான் அறிவு வளர்ந்த மக்களாயினர் என்ற உண்மையை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
உபநிஷத்துக்களும் புராணங்களும்
மற்றும், வேதகாலத்தையும் உபநிஷத்துகள் சூத்திரங்கள் ஆகியவற்றின் காலத்தையும் திட்டமாக நிர்ணயிக்க முடியவில்லை என்கிறார். மற்றும், வேதவித்துகளெனப்படும் உபநிஷத்துக்களுக்கும் பிற்கால புராண இதிகாச கதைகளுக்கும் தொடர்பு காண இயலவில்லை என்றும், கி.மு.
7ஆவது 8-9ஆவது நூற்றாண்டுகளென சுமாராக அதுவும் யூகத்தால்தான் கணித்து இந்நூலில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஒப்புக்கொள்கிறார்.
இந்த நூல் தனிப்பட்ட ஒருவர் தொகுப்பு அன்றென்றும் பலர் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து சேர்த்த தொகுப்பென்றும் இந்த முன்னுரையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்நூல் நீதிபதிகளின் கூட்டுத் தீர்ப்பு போன்றதேயாகும். அதாவது, மறுக்கமுடியாத ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டதாகிறது. அதுவும், வேதகாப்பாளர் எனப்படும் பார்ப்பன அறிஞர்களின் தீர்ப்பு நகலாகிறது.
மற்றும், இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள கருத்துக்களுக்கு ஆதாரமாக, பேராசிரியர் ராதாகிருஷ்ணனும் (ஆந்திர பார்ப்பனர் - பந்துலு) மற்றும் வட இந்திய - மேனாட்டு ஆராய்ச்சியாளரும் எழுதிய நூல்களும், சர்க்கார் வசமுள்ள கல்வெட்டு ஆராய்ச்சி ஏடுகளுமான சுமார் நூற்றைம்பது ஏடுகளின் பெயர்ப் பட்டியலும் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.
ரிக்வேதம் முதலிய ஆரியமத நூல்கள் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்டவை என்று இந்நூல் கணித்துக் கூறுகிறது.
வேதங்கள்
வேதங்கள் இந்திய நாட்டு அரசியல் வரலாற்றை அறியத் துணையாகவில்லை. மத - கலாசார வரலாறுகளே காணப்படுகின்றன. எனவே, மக்களின் பழைய வரலாறு யூகத்தால் தான் அறியவேண்டியுள்ளது. இந்த யூகக் கருத்துக்களைப் பலர் பலவாறு வெளியிட்டுள்ளனர். அவை பலவகைச் சந்தேகங்களுக்கும் இடமளிக்கின்றன.
பிற்கால சரித்திரக் குறிப்புக்களிலும் புராணங்கள் ஊடுருவி மெய்வரலாற்றைக் கணித்தறியவியலாது செய்துள்ளன. ஆந்திரர் ஆட்சி முடிவுக்கு முன் 3000 ஆண்டுகளின் நாட்டு வரலாறு, சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டே யூகிக்க வேண்டியுள்ளது. - என்று இந்நூல் கருத்துத் தெரிவிக்கிறது. எனவே, இந்த புராண வரலாறுகளும், வேதக் கூற்றுகளும் பிராமணியக் கருத்துக்களும் சரித்திர ஆதாரமற்றவை என்பதாகிறது.
அதாவது, சாதாரண நாவல்கள், கட்டுக்கதைகள் என்றுதான் தீர்மானிக்கச் செய்கிறது. ஆரிய மதக் கூற்றுக்கு ஆதாரமாக இருந்த சரித்திர ஏடுகள் நாசமாகி விட்டதாகவும் கடலுண்டுவிட்டதாகவும் கூறப்படும் கூற்றுகளும் வெறும் புராணப் புளுகுகளே வாகின்றவென்பது, இந்நூலில் சுமார் 100 பக்கங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ள கருத்துக்களால் எண்ணச் செய்கிறது.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவின் விளக்கம்
வேதம் என்றால் அறிவு ஞானம் என்பதே பொருள். இந்த வேதங்கள் சுருதிகளைக் கொண்டவை. சுருதி என்றால் கேட்கக்கூடியது என்றே பொருள்.
(இசைக் கருவிகள் இப்போது இசை சுருதி - (சுதி) கூட்டப்படுவது அறிந்ததே. பிராமண மதப் பிரமாணங்களை (கொள்கைகளை)க் கொண்டதே இது.
இந்த வேதம் நான்கு:
1. ரிக் வேதம்
2. யஜுர்வேதம் 3. சாம வேதம்
4. அதர்வணவேதம்
இவைகளில் பல கடவுள்களின் (தேவர்கள்) பெயர் காணப்படுகின்றன.
பிராமணன் என்றால் தலைமைப் பூசாரி. வேதச் சடங்குகளில் தலைமை வகித்துக் கண்காணிப்பது இவர்கள் பொறுப்பு. இவர்களுக்குத் தனி வேதநூல் கிடையாது. மற்ற முப்பிரிவுப் பூசாரிகளின் வேதங்களை அறிந்து அதற்கான நடைமுறைகளைக் கவனிப்பதே இவர்களுக்கு வேலை. பூசாரிகளில் பிராமணர் நான்காம் பிரிவினர். பிராமணர்களே பிரமாணங்களைத் தோற்றுவித்துக் கொண்டனர்.
இந்தப் பிரமாணங்கள் அரண்யகா உபநிஷத்துக்கள் என்ற பிரிவினதாகும். அரண்யகா என்றால் காட்டுக்கு சம்பந்தமான நிகழ்ச்சி முறைகள் என்று அர்த்தம். அதாவது, வனவாசிகள் (சந்தியாசம், துறவு கொண்டவர்கள்) அறிந்து கொள்ளவேண்டிய அல்லது படிக்கவேண்டிய மத நூல்; மதச் சடங்குகளே இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. உபநிஷத்து என்பது தத்துவ நூல். அதாவது, கோட்பாடு விளக்க நூல். இது யூகக் கருத்துக்களையே பெரும்பான்மையாகக் கொண்டது.
வேத வரிவடிவம்
இந்த வேதங்கள் பிற்காலத்தில்தான் வரிவடிவில் எழுதப்பட்டன. அதற்குமுன் வாய்ப்பாட்டாகவே இருந்து வந்தன. எனவே வாய்ப்பாட்டில், பரம்பரைக்குப் பரம்பரை பற்பல வேறுபாடுகள் ஏற்பட்டன. அந்தந்தக் காலத்தவர் தத்தமது விருப்பு வாய்ப்புக்கேற்ப, பற்பல சுலோகங்களைத் தொகுத்துச் சேர்த்துவிட்டனர்.
இவ்வித இடைச்செருகல்கள் ஒன்றுக்கொன்று வேற்றுமை கொண்டுமுள்ளன. இவைகளுக்கு சகா அல்லது உட்பிரிவு எனப் பெயர் கொடுத்து வேதங்களுடன் சேர்த்துவிட்டனர். இந்த இடைச்செருகல் ஒரு காலத்தில் ஏராளமாக இருந்தன. ஆயினும் காலப்போக்கில் இவற்றில் சிலவே உயிர்பெற்று நீடித்திருந்தன. பிற்காலத்தில், வியாகர்ணங்கள் அல்லது விரிவுரைகளும் தோன்றின. எனவே, எது சரியான வேத சாகித்தியம் என்றோ, எது சரியான கருத்து என்றோ பிற்காலத்தவர்கள் அறிய முடியாதபடி குழப்பமடைய வேண்டியதாயிற்று. மற்றும், சடங்குகளின் பெயராலும் பற்பல சாகித்தியங்கள் தோன்றின; வேதமொழிகளும் உருமாற்றமடைந்தன. பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பிரிவுகள் வேதாகமங்கள் என்ற பெயரில் வழங்கப்பட்டன. சோதிடம், நாட்டியம், இலக்கணம், இசைக்கலை முதலியவையும் பிற்காலத்து வேதங்களோடு சேர்க்கப்பட்டன.
இந்த நான்கு வேதங்களும் ஒன்றன்பின் ஒன்றாய்க் காலப்போக்கில் தொகுக்கப்பட்டனவென்றே அவற்றின் மொழி நடை நிலவரங்களால் அறியக்கிடக்கிறது. அதாவது இந்நான்கிலும் சொல் - வாசக அமைப்புகள் மாறுபட்டுள்ளன.
சமஸ்கிருத இலக்கியம் பிற்காலத்தில் செய்யப்பட்டதே; இந்த இலக்கியம் எப்போது ஏற்பட்டதென்று திட்டவட்டமாகத் தெரியவில்லை.
வேதக் கோட்பாடுகளைப் பொதுமக்களுக்குக் கற்பிக்கும் நோக்கத்துடன் இந்த இலக்கியத் துறை தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
கி.மு.
மூன்றாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பல்வேறு மொழிகளிருந்தனவென்று தெரிகிறது. இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குப் பெரிதும் மாறுபட்டவை.
கவுதம புத்தர் கி.மு.
ஆறாம் நூற்றாண்டில் தமது கோட்பாடுகளைப் பரப்ப மகத (பீகார்) நாட்டு மொழியையே கையாண்டிருக்கிறார். இந்தோ - ஆரியர்கள், பல பிரிவினராக இந்தியாவுக்குள் நுழைந்தபோது இந்தியாவில் ஒன்றுக்கொன்று சற்று மாறுபட்ட பல மொழிகள் இருந்திருக்கின்றன.
ஆரிய மொழி ஆதிக்கம் தணிந்ததும் இம்மொழிகள் மீண்டும் புத்துயிர் பெற்று வழக்கிற்கு வந்திருக்க வேண்டும்.
இதில் ஒரு முக்கிய விஷயம் கவனிக்க வேண்டும். நாட்டு மொழிகளுக்கு கலை அந்தந்த மொழியில் இலக்கியம் கற்பிக்கப்படுவது உலக நாடுகளில் நடக்கும் வழக்கம். ஆனால், சமஸ்கிருதம் நாட்டு மக்களிடையே இடம் பெறவில்லை. நாட்டுமொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து ஒதுங்கி தனித்து வளம் பெற்றிருந்தன. இதற்குக் காரணம் என்னவென்றால் புத்தமத காலத்தில்தான் சமஸ்கிருத இலக்கண இலக்கியம் தொகுக்கப்பட்டது என்பதாகும்.
அக்காலத்தில் பவுத்த மதத்தினர் நாட்டு மொழி (பாலி) வளத்திலும் இலக்கியத்திலும் அதிகக் கவனம் செலுத்தி நாட்டு மொழிக்குப் பொது மக்களிடையே அதிக செல்வாக்கும் ஆதரவும் பெறச் செய்தனர். (இவை என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் காண்பவை).
ஆதி மனிதர்
ஆரியர்கள், தாங்கள் தான் முதல் முதல் கடவுளிடமிருந்து உற்பத்தியானதாகவும், பிரம்மா தங்கள் மூதாதையென்றும், பிரம்மாவின் அடியாகத்தான் அவருடைய நேர்வழி சந்ததியாரால் தங்களுக்குப் பிராமணரென்று இனப் பட்டப் பெயர் கிடைத்தது என்றும் உரிமை கொள்கின்றனர், பார்ப்பனர். இந்தக் கூற்றையும் பொய்யாக்குகின்றது முன்ஷி, பிர்லா, ராதாகிருஷ்ணன், வெங்கட்ராம சாஸ்திரியார்களைக் காப்பாளர்களாகக் கொண்ட இந்த பாரதீய இதிகாச சமிதி என்ற பார்ப்பனச் சமூகம் தொகுத்துள்ள இந்த நூல்.
தென்னிந்தியாவின் கீழக்கரை வட்டாரங்களின் சீதோஷ்ண நிலைமையையும், மண்கண்ட வரலாற்றையும், வடமதுரை (ராமனாதபுரம் மாவட்டம்)யில் கிடைத்துள்ள கட்டடம், முதுமக்கள் தாழிப் பொருள்கள் ஆகியவற்றையும் ஆராய்ந்து பார்க்குமிடத்து, ஆதிமனிதர் தென்னிந்தியாவில்தான் முதல்முதல் தோன்றி, பின்னர் நாளடைவில் (பனியுக முடிவில்) வடக்கு முகமாகப் பஞ்சாப் முதலியவைகளுக்குச் சென்றனர் என்று இந்நூல் (பக்கம் 132) கணித்துக் கூறுகிறது;
எனவே, ஆரியப் பார்ப்பனர், கடவுளின் நேர் வாரிசுதாரர்கள் என்பது பொய்யாகிறது. மற்றும், தாங்கள் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்ததால் தலைமைச் சிறப்புக்குரியவரென்றும், மற்றவர்கள் பிரம்மாவின் காலிலும் உடலிலும் இருந்து பிறந்தவர்களாகையால் தங்களைவிடத் தாழ்ந்த பிறவிகளென்றும், பார்ப்பனர்கூறும் கூற்றும் கந்தப் புளுகென்பதும் இதனால் வெட்ட வெளிச்சமாகிறது.
தமிழின் தொன்மை
மொழித்துறையில் இந்நூலாசிரியர்களின் ஆராய்ச்சி ஆழப்பாயவில்லை போலும். அல்லது தங்கள் வடமொழிக்கு சிறப்புத் தர எண்ணினர் போலும். தமிழ் தொன்மை மொழியல்ல அதாவது தமிழுக்கு எழுத்துருவம் முற்காலத்தில் கிடையாது. அசோகர் காலக் கல்வெட்டுகளில் காணப்படும் பிரம்மி எழுத்துக்கள்தான் இந்நாட்டில் முதல் வரிவடிவம். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள எழுத்துக்களும், பிற வடக்கத்தி மொழி எழுத்துக்களும் இந்தப் பிரம்மி எழுத்துக்களின் அடிப்படையில் சித்தரித்துக் கொள்ளப்பட்டவை என்று தீட்டியுள்ளார். இக்கூற்றும் ஆதாரமற்றதென்பது, தமிழ்நாட்டிலுள்ள பழைய கல்வெட்டுகளும் புதைபொருள் கண்டுபிடிப்புகளும் தீர்ப்புக்கூறும்.
அசோகர் காலத்தில் மாத்திரமல்ல; புத்தர் காலத்திலும் திராவிட மொழிக்கு எழுத்துருவமுள்ளதென்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் பற்பல உள்ளன. சிந்துவில் காணப்படும் மொகஞ்சதாரோ கல்வெட்டுகளிலும் ஆதாரமிருக்கின்றது.
பிரம்மி என்பது தமிழ் எழுத்து உருவத்தைத் தழுவிய வடமொழி என்று கூறலாமே தவிர, தமிழ் மொழி வடமொழிகளின் உருவத்தைச் சுவீகரித்துக் கொண்டதென சாதிப்பது, ஒரு சில குழுவினரின் சுயநல வாதமேயாகும். அதாவது தென்னாட்டார் அநாகரீகர்கள்; எழுத்தறிவற்றவர்கள் என்று சாதிக்கச் செய்யும் மூடுமந்திரமேயாகலாம்.
வட்டெழுத்து
தமிழின் ஆதி எழுத்துக்களை வட்டெழுத்து என்பர். 1837இல் ஓர் ஆங்கிலப் புலவர் இந்திய எழுத்துக்களை ஆராய்ந்து உருவம் நிர்ணயித்ததாகவும் அதன்பின்தான் இந்திய மொழிகளின் உருவம் தீர்மானமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும் இந்நூலில் காணப்படுகிறது. இதிலிருந்து தமிழுக்கு பிரம்மி எழுத்துச் சார்பான உருவம் தீட்டி ஆதி தமிழுருவமே மறைக்கப்பட்டிருக்கலாமெனவும் எண்ண இடமளிக்கிறது. வள்ளுவர் காலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னென்பர். அப்போது வள்ளுவர் ஏடும் எழுத்தாணியும் கொண்டு குறளை எழுதிவைத்தாரென்பது மெய்மை. எனவே, தமிழ்மொழி அசோகர் காலத்தில்தான் வரிவடிவம் பெற்றதென இந்நூல் குறிப்பிடுவது தவறாகும். அசோகர் காலத்திற்குப் பின்போ அல்லது 1837க்கு பின்போ தமிழ் புது உருவம் பெற்றதென்றால் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளப்படலாம். இந்தப் புது உருவமும் தனித் தமிழ் உருவத்திற்கு ஏற்பட்ட மாற்றமல்ல. சில வைஷ்ணவ நூல்கள் எழுதப்பட்டுள்ள கிரந்தமொழி என்பதைத்தான் இவர்கள் தமிழ் என்று கருதிக்கொண்டு, பிரம்மிமொழியடியாக வந்ததென்று சாதிக்கின்றனர்போலும். இந்தக் கிரந்த எழுத்துக்களே ஓரளவுக்கு வடமொழி உருவிலும் உச்சரிப்பிலுமுள்ளன.
சமஸ்கிருதம் மக்களின் ஆதரவு பெற்ற தொன்மை மொழியல்ல என்பதற்கு இந்நூலே சான்று தருகிறது.
அதாவது குப்தர் ஆட்சிக் காலத்திற்கு முன்னிருந்த கல்வெட்டுகள் 1600 கிடைத்துள்ளன. இவைகளில் எழுதப்பட்டுள்ளவைகளில் 95 சதவிகிதத்திற்கு மேல் பிராக்கிருத மொழியிலுள்ளன. (பிராக்கிருதம் திராவிட மொழியிலிருந்து உண்டானதென்பது சில மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருத்து) சமஸ்கிருதம் அவ்வளவு காணோம் என்கிறார்.
ஆகவே, குப்தர் ஆட்சியிலேயே சமஸ்கிருதம் செத்த மொழி என்பதும், சமஸ்கிருதமும் வேதங்களும் மதிப்பற்றுப் போயினவென்பதும், இலக்கிய உலகமும் சமஸ்கிருதத்தை மதிக்கவில்லை என்பதும் தெளிவுபடுகிறது.
இதே மூச்சில் மற்றொரு உண்மையையும் இவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அதாவது, வடஇந்தியாவில் ஆரிய மொழிகளும் நாகரிகமும் அதிகமாக ஆதிக்கம் கொண்டிருந்தாலும், தென்னிந்தியாவில் ஆரிய நாகரிகமும் மொழியும் அதிகம் பரவவில்லையென்கின்றனர். எனவே, வடமொழியிலிருந்து தென்மொழியுண்டானதாகக் கூறுவதும் ஆதாரமற்றதாகிறது.
ஆயினும், வடமொழியாளர்கள் சும்மா இருக்கவில்லை என்றும், தமிழ் மொழியில் சமுதாயத் துறைகளில் பங்கு கொண்டவர்களைப் போல் நடித்து இடையிடையே ஆரியப் பண்புகளையும் வடமொழி இலக்கணங்களையும் கருத்துகளையும் தென்னாட்டு மக்களிடையே சமுதாயங்களிடையே மொழி இலக்கியத் துறைகளிலே புகுத்தி விட்டனர் என்பதை இந்நூலாசிரியர்களும் ஒப்புக்கொள்கின்றனர். அதாவது, தென்னாட்டு - மொழி பழக்க வழக்க கோட்பாடுகள், வடக்கத்தி முறைகளினால் பிற்காலத்தில் பெரும் மாறுதலுற்றனவென்கின்றனர். தென்னாட்டு மொழி வகைகள் ஓரளவுக்கு மாறுதலுற்றுள்ளனவேயன்றி அடியோடு மறைந்துவிடவில்லை என்று இவர்கள் ஒப்புக் கொள்வதிலிருந்து, தமிழகத்திற்குத் தனிமொழியும் வரிவடிவம் நாகரிகமும் இருத்தல் வேண்டுமென்பதும் உறுதிப்படுகிறது.
வடக்கில் தமிழ்
திராவிடர்கள் ஒரு காலத்தில் மத்திய இந்தியாவிலும் வட இந்தியாவிலும் மேற்கிந்தியாவிலும் கிழக்கிந்தியாவிலும் ஓரளவுக்குப் பரந்து வாழ்ந்தனர் என்பதற்கு இந்த வட்டாரங்களிலேயே ஆதாரங்களுள்ளன. பலுஜிஸ்தானிலுள்ள பிராச்யீ மொழி திராவிட மொழியே; மற்றும், வடஇந்தியாவில் பல ஊர்களின் பெயர் திராவிடர் பெயர்களாகவுள்ளன. மற்றும், ஆரிய வேதங்களிலும் திராவிடச் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன.
எனவே, ஆரிய மொழியும் திராவிட மொழியைத் தழுவி மாற்றமடைந்து திராவிட மொழிகளின் புது அமைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் - என்று இந்நூல் சுட்டிக் காட்டுகிறது. (பக்கம் 155) எனவே, சமஸ்கிருதமே திராவிட மொழியைத் தழுவி உருமாற்றமடைந்தது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டதாகிறது.
இந்தத் திராவிடப் போர்வை போர்த்த சமஸ்கிருத மொழிப் புலவர்கள்தான், தமிழ் மொழியில், வடமொழிப் பண்புகளை அதிகம் நுழைத்துத் தெலுங்கு, கன்னட, மலையாளம் மொழிகளை உற்பத்தி செய்து திராவிடத் தாய்மொழியைப் பாகப்பிரிவினை செய்துவிட்டனரென்பதும் புலனாகிறது. மற்றும், இப்போதையத் தமிழையும் பிற்கால உற்பத்தி என்றும் காட்ட முயற்சித்துள்ளனர். அதாவது, செந்தமிழ் என்ற பழந்தமிழ் திராவிட மொழியிலிருந்து உண்டானதென்கின்றனர் இந்நூலாசிரியர்கள். ஆனால், அந்தத் தாய்த் திராவிட மொழியென்பது யாது என்பதை இவர்கள் திட்டவட்டமாக அறுதியிட்டுக் காட்டவுமில்லை - காணவுமில்லை.
தமிழ், தாய்மொழியல்லவென்று மாத்திரம் சாதிக்க முற்பட்டுளர் சமஸ்கிருத ஹிந்து காதலர்களான இந்த இதிகாசக் கழகத்தினர்.
தமிழ்மொழி
அடுத்தபடியாகத் தமிழ் என்பது கி.மு.
முதல் நூற்றாண்டில் னுயஅணை என்றும் அதற்குமுன் னுசயஅணைய என்றும் இருந்தாக இவர்களே ஒப்புக்கொண்டு, தமிழ் வடமொழிச் சார்பு பிற்கால சிருஷ்டி என்று முற்கூறிய கூற்றை இந்நூலாசிரியர்களே மறுக்கின்றனர். இது பல ஆசிரியர்களின் கட்டுரைத் தொகுப்பாகையால் பல கருத்து வேற்றுமைகளிருக்கலாமென முன்னுரையிலும் ஒப்புக்கொண்டுளர்.
“Damawsla”
- “Dramida” - “Dravida” என்றும் கிறிஸ்துவ சகாப்தத்திற்கு முன் மாற்றமடைந்திருக்கலாமென்கிறது இந்நூல் (பக்கம் 156) திராவிடர் ஏது, ஆரியர் ஏது என்று வாதிப்பவர்கள் கூற்றை இந்நூலாசிரியர் ஆதாரங்களுடன் மறுக்கின்றனர்.
வேத மொழிக்கு உதவி
வேத மொழியான சமஸ்கிருதம் வளம்பெற உதவியது திராவிட மொழிச் சொற்கள் என்றும், திராவிட உச்சரிப்புகளும் வேதங்களில் அதிகமுள்ளன என்றும், ஹிந்து நாகரிகத்திற்குத் திராவிடர் ஏராளமாக உதவியுள்ளரென்றும் இந்நூல் விவரிக்கிறது. எனவே, திராவிடர் அநாகரிகர், காட்டுமிராண்டிகள், ராட்சதர்கள், வானரங்கள், கரடிகள் என்றும் இராமாயண இதிகாசங்களில் வர்ணித்திருப்பது துவேஷத்தால், அதாவது சாதாரணமான மக்கள் தமது எதிராளியைத் திட்டும்போது எவ்விதம் வர்ணிப்பார்களோ, அவ்விதமும், எவ்விதச் சொற்களைக் கையாள்வார்களோ, அதே சொற்களே வேதங்களிலும் புராணங்களிலும் ஆரியர்கள் தங்கள் எதிரிகளான திராவிடர்கள் விஷயத்தில் கையாண்டிருக்கின்றனர் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆரியரைவிடத் திராவிடர்களே கலையறிவும், சிறந்த பண்புகளும் மிகுதியாகக் கொண்டிருந்தனர் என்றும் தீர்மானிக்கின்றனர் (பக்கம் 156-157).
மொகஞ்சதாரோ, ஹரப்பா வட்டாரங்களில் வாழ்ந்த ஆரியருக்கு முன்னைய மக்கள் அக்கால நாடோடி ஆரியர்களைவிடச் சிறந்த கலாச்சார அறிஞர்கள் என்று இந்நூல் தீர்ப்பளிக்கிறது. மற்றும், திராவிடர்கள் இயற்கைச் சக்தியைத்தான் தாயாக வணங்கினர் என்கிறார். திராவிடர்களுடைய கோட்பாடுகள் உலக வாழ்க்கையைப்பற்றி ஆழ்ந்த நுணுக்கக் கருத்துக் கொண்டிருந்தனவென்றும், ஆரியர்கள் வெறும் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்து ஆகாயத்தையே பிரார்த்தித்து அதாவது, ஆகாயத்தினிடம் உதவிகோரி முறையிட்டு வந்தனர் என்றும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் (பக்கம் 158).
இதிலிருந்து திராவிட மக்கள் உலக வாழ்க்கை இன்பத்தைத்தான் பெரிதும் விழைந்து, அதற்கான உலக வழிபாடு முறைகளையும் கொள்கைகளையும் கைக்கொண்டு வந்தனரென்பதும், ஆரியரே வானுலகத்தையும் மோட்ச, நரகத்தையும் கற்பனை செய்துகொண்டு அந்த வானுலக அருளை எதிர்பார்த்து ஏங்கித் தவித்தனரென்பதும் புலனாகிறது. தெளிவுறக் கூறுமிடத்து, திராவிட மக்கள் உலக நல்வாழ்வுக் கோட்பாட்டினராகிய தங்கள் சொந்த உடலுழைப்பில் அறிவுழைப்பில் நம்பிக்கை கொண்டு ஆக்கத்துறைகளில் ஈடுபட்டு, கலைவளம் பெற்றிருந்தனரென்பதும், ஆரியர் உடலுழைப்பையும் அறிவுழைப்பையும் விடுத்துக் கற்பனையில் இன்பத்தையடைய எண்ணி, அதற்கான கோட்பாடுகளைக் கற்பித்துக்கொண்டு, பிறர் உழைப்பில் தங்கள் உடல் வளர்ச்சிக்கு வழி செய்து கொண்டாரென்பதும், இவ்விதம் பிறருழைப்பைப் பெற வானுலக் கோட்பாடுகளைப் பரப்பியும், அச்சுறுத்தும் சொற்கள் பொதிந்த வேத சமஸ்கிருத அடுக்குமொழிகளை ஒப்புவித்தும் வந்தனரென்பதும் தெளிவுபடுகிறது.
Termilai
- Trmmili - Dramiza என்று மாற்றங்கள் பெற்ற சொல்லே பிற்காலத்தில் தமிழ் (Tamil) ஆயிற்றெனவும் இவர்கள் விரிவுரை காண்கின்றனர் (பக்கம் 1: 8).
கிரேக்கர் படையெடுத்து வந்தபோது, தென்சிந்து வட்டாரத்தில் அரபிதை (Arabitai) என்ற மக்கள் வசித்தனரென்றும், இவர்கள் கி.மு.
4ஆவது நூற்றாண்டில் வசித்த திராவிட மொழியாளரே என்றும், அரவலு என்று தமிழரைத் தெலுங்கர்கள் குறிப்பிடுவது இதற்கு ஆதாரமாக உள்ளதாகவும் இந்நூலில் விளக்கம் தரப்படுகிறது (பக்கம் 159).
பிற அறிஞர்களின் ஆதாரங்கள்
பிஷப் கால்டுவெல் எழுதியவற்றில் பழந்தமிழர்கள் நாடு நகரங்களில் வசித்துச் சிறந்த படிப்பறிவு மிக்கவர்களாகவும், எழுத்து வடிவம் கற்று, இறகு கொண்டு ஓலையில் எழுதி வந்ததாகவும், நீதிபதிகளும் நியாயவாதிகளுமில்லாமலேயே தங்களுக்குள் மக்களாட்சி நடத்தி வந்ததாகவும் எழுதியிருக்கிறார்.
திரு.பி.டி.சீனிவாசய்யங்காரும் திராவிட மக்கள் - பழங்காலத் தமிழர்கள் ஆரியருக்கு முன்பே சிறந்த நாகரிகக் கலாச்சார அறிவாளர்களாகத் திகழ்ந்தனர் என்று ஆதாரங்கள் தந்திருக்கிறார்.
பார்ப்பன பூசாரியின் இரகசியம்
ஆரியர்களின் ஆகம, நிகம (வேதம்) கோட்பாடுகளெல்லாம் ஆகாய வணக்கத்துக்கானவையேயாகும். அதாவது, நெருப்புப் புகையின் மூலம் ஆகாயக் கடவுள்களின் அருள்வேண்டி நின்றனர். திராவிடர்கள் நடத்தியதோ பூசைகள்; இது இவ்வுலக வாழ்க்கையைத் தழுவிய வழிபாட்டு முறையே; பூ
- அணிதல் - பூசுதல் என்ற அடிப்படையாக வந்ததே பூசை. இம்முறைகள் அறிவுக்கும் நடப்புக்கும் ஒத்தனவாகவிருந்தன. பிற்காலத்தில் ஆரிய திராவிட கோட்பாடுகள் கலப்பட முறையால் ஹிந்து மதம் தோற்றுவிக்கப்பட்டது. உண்மை ஆரியர்கள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களும் கற்றவர்களும் திராவிடர்கள் பூசை முறைகளைக் கைப்பற்றித் தமக்கு முழு உரிமையாக்கிக் கொண்டனர். இதற்குமுன் ஆரியர்களிடையே இந்தப் பூசை முறை கிடையாது. பிற்காலத்தில் தான் திராவிட முறைகளைக் கற்றுக் கொண்டு பூசாரிகளாகிப் பிழைப்புக்கு வழி செய்துகொண்டனர். ஆரிய முறைகளான ஹோமம் முதலியன இந்தப் பார்ப்பன - க்ஷத்திரியர் என்பவர்களிடையே பெயரளவில்தான் இருந்து வருகின்றன.
பூசை முறைகள்
மகாபாரதத்தில் வரும் பகவத் கீதை கிறிஸ்து வாழ்ந்த காலத்தில்தான் தொகுக்கப்பட்டிருக்க வேண்டுமென இந்நூல் ஆராய்ச்சியில் காணக் கிடக்கிறது கீதையில்தான் இந்த பூசையைப் பற்றி முதல் முதல் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக்கம் 161)
எனவே, பிச்சைக்கு வந்தவர்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளையான கதைபோல் ஆரியப் பார்ப்பனரும், திராவிடப் பூசை முறைகளை அறிந்து கொள்ள வந்தவர்கள் அந்தப் பூசாரித் தொழிலையே தமக்குப் பரம்பரைப் பாத்தியமாக்கிக் கொண்டு பூசை நடத்தத் தனியிடங்கள், கோவில்கள் அமைக்கச் செய்து அந்த இடத்தை அமைத்துக் கொடுத்த திராவிட மக்களும் அந்த இடத்துக்குள் அண்டாதபடி, கடவுளை அண்டத்தகாதவர்களாகவும், கடவுள் உருவத்தைத் அண்டத்தகாதவர்களாகவும் கடவுள் உருவத்தைத் தீண்டத்தகாதவர்களாகவும் ஆக்கி, சர்வ பாத்தியக் கடவுள் தரகர்களாகிவிட்டனர். ஆரியத் தீப்புகை விளக்க நூலான வேதப்பாடலும், இந்தப் பூசைக்கான பாடலொன்றைச் சமஸ்கிருத மொழியில் தொகுத்து நுழைத்துக் கொண்டு விட்டனர். திராவிடர் அமைத்துத் தந்த சிற்பங்களைக் கடவுளின் உருவங்களாக்கி அவற்றைக் காண அந்தத் திராவிடரிடமே கைக்காசு பெறலாயினர். இதேபோல் மக்கள் வணங்கிய இயற்கைச் சக்திகளுக்கு ஆரியர்கள் சமஸ்கிருத சொற்களில் புனைப் பெயர்கள் அளித்துத் தங்கள் கடவுள்களாக்கிக் கொண்டு பூசை நடத்திப் பிழைக்கலாயினர். முன்னர் அந்தச் சக்திகளை வணங்கி வந்த மக்களும் பார்ப்பனர் கற்பித்த அந்தச் சக்திகளின் உருவங்களை நேரிடையாக அணுகாதபடிச் செய்துவிட்டனர். இவ்வகையில் ஆரியர்கள் வழிபாடு முறைகளை ஆக்ரமித்து, தங்களுடைய முழு உரிமைச் சொத்தாக்கிக் கொண்டனர் என்பது இந்நூலில் காணும் ஆராய்ச்சி மெய்மைகளால் அறியக் கிடக்கிறது.
இந்தியக் கலாச்சாரத்தில் முக்கால் பங்கு, ஆரியருக்கு முன்னைய மக்களின் கலாச்சாரப் பண்புகளாக இருக்கின்றன. மற்றும் இந்துக்களின் உணவு வகையும், ஆதி ஆரியர்கள் உண்ட உணவுக்கு மாறுபட்டுள்ளது. ஆரியர்கள் கம்பளி உடையணிந்தவர்கள்; இந்தியர்களோ பருத்தியுடையும் வேட்டியும் அணிகின்றனர்.
திராவிடர் முறைகளே
மற்றும், கொள்கை நடைமுறைகளும் பெரும் அளவுக்குத் திராவிட முறைகளைத் தழுவியிருக்கின்றன (பக்கம் 164) என்று இந்நூலில் சுட்டிக் காட்டியிருப்பதால், ஆரியர் திராவிடரை விடச் சிறந்த அறிவாளிகள் என்றோ நாகரிகக்கலாவல்லவர்களென்றோ கூறுவதே ஆதாரமற்றதாகிறது. திராவிடர்க் கலாச்சாரப் பழக்க வழக்க முறைகளைத்தான் ஆரியர் சுவீகரித்துக் கொண்டு தங்கள் கோட்பாடுகளுக்கேற்றபடி மேல் பூச்சு மாற்றங்கள் செய்து தங்களுடைய சொந்தம் ஆக்கிக்கொண்டனர் என்பதே ஆராய்ச்சித் தீர்ப்பாகிறது. பிற்கால சமஸ்கிருதம் பெரும் அளவுக்குத் திராவிட மொழிச் சார்பினதாகவும், வேத மொழிக்கு அதிகம் மாறுபட்டதாகவுமிருப்பதால், இப்போதைய சமஸ்கிருதம் திராவிட மொழியிலிருந்து ஆக்கிக் கொண்ட இருபிறப்புமொழியேயாகும்; தனித்தாய்மொழி என்றோ ஜீவமொழியேயென்ற பார்ப்பனர் கூறுவதுபோல் தெய்வ மொழி என்றோ கூறுவதற்கில்லை. இந்த சுவீகாரத்தை மறைக்கத்தான் அந்த சமஸ்கிருதத்தைத் திராவிடர்கள் படிக்கக் கூடாதென்றும், படித்தால் தெய்வக் கோபமும் தோஷமும் பாவமும் ஏற்பட்டுவிடுமென்றும் பயமுறுத்தி, அதன் வண்டவாளத்தை மறைத்து வந்தனரெனவும் எண்ணச் செய்கிறது. சிந்துமொழி எழுத்துக்கள் இந்தியாவில் பிறந்து வளர்ந்த தனிமொழி எழுத்துக்களென்கிறார் திரு. இராமச்சந்திர தீட்சதர். சிந்து மொழியென்பது சிந்து சமவெளியில் ஆரியருக்கு முன்வாழ்ந்த மக்கள் மொழி; ஆரியருக்கு முன் தமிழரே அங்கு வாழ்ந்தாரென்பது மொகஞ்சதாரோ கல்வெட்டுகளால் அறியக்கிடக்கிறது.
எண்ணும் எழுத்தும்
எழுத்து மாத்திரமல்ல, எண்ணும் திராவிட அடிப்படையைக் கொண்டதுதானென இந்நூலாசிரியர் விளக்குகிறார்.
எட்டு என்பதை அடிப்படையாகக் கொண்டதே எண்.
எண்
- எண்ணுதல், திராவிட மொழி, இது வடமொழிகளிலும் மற்ற திராவிட மொழிகளிலும் பொதுப்படையாகவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
புராணங்கள் உற்பத்தி ரகசியங்கள்
ஆரியர்களுக்கு முன்னிருந்த ஆஸ்ட்ரிக்குகள், திராவிடர்கள் ஆகியவர்களிடையே வழங்கி வந்த வரலாற்றுக் கதைகளையே ஆரியர்கள் பிற்காலத்தில் கைக்கொண்டு, பல வேறு மாறுபாடுகளுடனும், ஆரியக் கடவுளின் பெயர்களையும், ஊர்,
நாடுகள் ஆகியவற்றின் பெயர்களையும் கொடுத்து ஆரிய மொழியில் எழுதிக் கொண்டு விட்டனர்.
இவ்விதமாக ஆரியக் கடவுள்கள் முனிவர்கள், அரசர்கள் ஆகியவர்கள் பெயரில் மாற்றியமைக்கப்பட்ட பழைய திராவிடக் கதைகளே புராணங்களில் காணப்படுவன என்று இந்நூலில் காணப்படுகின்றது (பக்கம் 165).
இராமாயணம்
இராமாயணம் வெவ்வேறு மூன்று கதைகளைக் கொண்டு புனையப்பட்ட கதம்பமெனப் புலனாகிறது. இதற்கு சரித்திர அடிப்படை இல்லை. மற்றும், இம்மூன்று கதைகளும் வெவ்வேறு காலங்களில் புனையப்பட்டுப் பின்னர் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அயோத்தியா காண்ட வரலாறு, சீதை கவரப்பட்டதும் மீட்சியும்; கிஷ்கிந்தா காண்ட வரலாறு ஆகியவைகள் தனித்தனி வரலாறுகளெனத் தெரிகிறது. கிழக்கிந்தியாவில், ஆஸ்ட்ரிக் மக்களின் கதையடிப்படையில் இது புனையப்பட்டு, பின்னர் இந்த நாகரிக விவரங்களுடன் காவியமாக்கப்பட்டதென்கின்றனர்.
மகாபாரதம்
மகாபாரதம் மேற்கு அய்க்கிய மாகாணம், கிழக்குப் பஞ்சாப் வட்டாரத்தில் நடந்ததாகக் குறிப்பிடுகிறது. இதில் ஆரிய வரலாறுகளும் ஆரியர், ஆரியரல்லாதார், கலப்பட மக்கள் வரலாறுகளும் காணப்படுகின்றன. ரிஷிகளெனப்படும் வேதியரின் வழி காட்டுதல் மீதே இந்த ஆரியர் - ஆரியர் அல்லாதார் கலப்பட இனவரலாற்றுக் கதையான சமஸ்கிருத பாரதம் புனையப்பட்டுள்ளது. எனவே, இந்தப் புராண கதைகள் எல்லாம் ஆரியருக்கு முன்பு இந்நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களான திராவிடர் முதலியவர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டும், பழங்கதைகளிலுள்ள சாதாரண கதாநாயகர்களைத் தெய்வீக புருஷர்களாக சித்தரித்துக் காட்டியும், ஆரிய புராணக் கதைகள் இட்டுக்கட்டப்பட்டனவென்பது தெளிவுபடுகிறது என்று இந்நூலே விளக்குகிறது.
இது பரதர்களின் போர் வரலாறு. இது ஒரே வித அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. இதில் பற்பல கதைகள் ஊடுருவியுள்ளன. இக்கதையை வியாசர் தொகுத்ததென்பர். வியாசர் என்றால் தொகுப்பாளர் என்றே பொருள். (கட்டுரைகள் தற்போது வியாசம் என்று பப்ளிக் கூடங்களில் குறிப்பிடப்படுவது அறிந்ததே).
குருகுலத்தார் - பாஞ்சாலர் என்ற இரு அண்டை நாட்டினருக்குள் நிகழ்ந்த போர் வரலாறுகளே இக்கதையாக இருக்கலாம் என்று கருதுகிறார் வாசென் என்பவர். இந்தோ - ஜெர்மானிய காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியாக (ஆரியர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்) இருக்கலாமென்கிறார் டாக்டர் எ.ஹால்ட்ஸ்மன் ஆனால், எது உண்மை என்று இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
வியாசர், இந்தப் பாரதக் கதையைப் பாடுவதற்கு முன் குறிப்பிட்ட முகவுரையில் நானும், எனது சீடர்களும் 8800 ஸ்லோகங்களை அறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்விதம் அறிந்தபின்னர் அதைத் தொடர்ந்து பரதர்களைப் பற்றிய பாரதம் பாடினார் எனப்படுகிறது. ஆகவே பாரதம் தனிப் புராணம் என்றே எண்ணச் செய்கிறது. இவற்றில் கூறப்பட்டுள்ள வரலாறுகள் பலவும், ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றனவாகவும், தொடர்பற்றனவாகவும், கருத்து வேறுபாடுகள் கொண்டனவாகவுமுள்ளன. ஆகவே இதில் இடைச்செருகல் அதிகம் பிற்காலத்தில் இடம் பெற்றிருக்க வேண்டுமென்று புலனாகிறது.
அதாவது, பிராமணர்கள் தங்கள் தங்கள் இன
- சாதி சுயநலக் கருத்தினால், பிற்காலத்தில் அவ்வப்போது பல கதைகளைத் தொகுத்து இந்தப் பாரதத்துடன் சேர்த்துவிட்டனர்.
(என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா)
ஆரியன் என்பது ஓரினத்தைக் குறிப்பதல்ல; ஒரு மொழியின் பெயரே என்கிறார் மாக்ஸ்முல்லர். இதிலிருந்து ஆரியர் தாய்ப் (அடிப்படை) பெயரில்லாத குழுவினர் என்பதாகிறது. இந்தியா ஆரியரின் தாயகமல்லவென்றே எல்லாத்துறை ஆராய்ச்சிகளிலும் திட்டவட்டமாக அறியக்கிடக்கிறது. ஆரியருக்கு முன் இந்தியா வெங்கும் திராவிட மொழியே வழங்கி வந்ததென்பதற்கு, பலுசிஸ்தானத்தில் ஒரு பகுதியினர் தமிழ் மொழி பேசுவதும் மற்றொரு சான்றாகும்.
அசுரர்பற்றிய உண்மை
அசுரர் என்றால் கெட்ட குணங்களைக் கொண்டவர்களென ராமாயணம் முதலிய சில புராணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது துவேஷத்தால் கூறப்படுவதேயாகும். தேவர்களைவிட அசுரர்களே நாகரிகத்தில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று ஆரியர் மத நூலான பிராமணங்கள் என்பதில் பலவிடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றும், வேதங்களிலும் பல புராணங்களிலும் தேவர்களின் அண்ணன்மாரே அசுரர் எனக் காணப்படுகிறது.
வேதம் - பாடல் திரட்டு
ரிக் வேதம் வீரர் வரலாறோ, சரித்திர வரலாறோ அல்ல. கடவுளுக்குப் பலியிடும்போது வேதியக் குழுவினர் பாடிவந்த பாடல்களின் தொகுப்பே இந்த ரிக்வேதம் என்பது. சாமவேதமோ வெறும் இசைப்பாடல்; யஜுர்வேதம் மந்திரங்களின் (ஆள் பெயர்) தொகுப்பு; யாகத்தின் போது உச்சரிக்கப்படுவன.
அதர்வண வேதம் சாதாரண மக்கள் கொண்டிருந்த கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் எடுத்துக்காட்டுவது. பிற்காலத்தில் இது பிராமண மதத்தில் சேர்க்கப்பட்டதாகும். ஆரிய வேத மதம் நீண்ட காலம் நீடித்திருக்கவில்லை என்றும், பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பப் பலவித மாறுபாடுகளைக் கொண்டு இறுதியில் இந்து மதத்தில் கலந்துவிட்டதென்றும் தெரிகிறது.
ஆரிய மதப் பிரசாரகர்கள்
ஆரியர்கள் (பார்ப்பனர்) திராவிட மக்களைக்கொண்டே திராவிடர்களை ஒடுக்கும் தந்திரத்தை மேற்கொள்ளுபவர்களென்றும், ஆரியர்களுக்கு உதவியாகவும் ஆரியர் (பார்ப்பனர்) சிறப்புப் பெறத் துணைவர்களாகவும், பார்ப்பனர்களின் தாசானுதாசர்களாகவும், அடியார்க்கு அடியார்களாகவும் இருந்த திராவிடர்களே, ஆழ்வார்களாகவும், நாயன்மார்களாகவும் ஆக்கப்பட்டனர் என்றும் விடுதலையிலும் பெரியாரவர்களும் பன்முறை எடுத்துக்காட்டியிருப்பது நினைவிருக்கலாம். இந்த உண்மையை இந்த நூலாசிரியர்களும் ஆமோதிக்கின்றனர். அதாவது, இராமனும் கிருஷ்ணமும் ஆரிய மதத்தை தென்னாட்டிலும் கிழக்கு வட்டாரங்களிலும் பரப்ப உதவி புரிந்ததால்தான் இவர்கள் பிற்காலத்தில் அவதார புருஷர்களாகப் பார்ப்பனரால் ஆக்கப்பட்டனர் என்கின்றனர். கிருஷ்ணனும் ஒரு அசுரனே (சூத்திரனே) என்றும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒரு அசுரன் (சூத்திரன்) கடவுள் அவதாரமாக்கப்பட்டது ஆரிய மதப் பிரசாரகனானதால்தான் என்பது தெளிவாகிறது. இதேபோல் இராமனும் பார்ப்பான் அல்ல. அரசகுலத் தலைவன். இவனும் ஆரிய மதத்தைத் தென்னாட்டில் பரப்ப ஆரியப் பார்ப்பனரென்ற முனிவர்களுக்கு உதவி புரிந்ததால்தான் அவதார புருஷனாக்கப்பட்டான். பிராமணர்களுக்குதவியாகவும் முன்னணியாகவும் சென்று க்ஷத்திரியர் என்ற ஆரிய அரசகுலத்தார் தென்னாட்டில் வாள் முனையால் ஆரியத்தைப் பரப்பினர். இந்த க்ஷத்திரியரைத் தொடர்ந்து வந்த பார்ப்பன முனிவர், பின்னர் தென்னாட்டில் தங்கி ஆரியக் கலாச்சாரத்தைத் தென்னாட்டு மக்களிடையே பரப்பினார் (பக்கம் 314).
ஆரிய அரசர்களின் ஆதரவும் பாதுகாப்பும் இல்லாதிருந்தால் பிராமணர்களுக்குச் (பிராமணர் மத ஏடுகள்) சக்தியற்றுப் போயிருக்கும். ராமன் போன்றோர்களின் படையெடுப்பினால் தான் பிராமண மதம் தென்னாட்டில் வேர்பற்ற வழி ஏற்பட்டது. ஆரியக் கலாச்சாரத்தை இராமன் தென்னாட்டில் பரப்பி நடத்திய படை எடுப்புப் பற்றிய வரலாறே இராமாயணம் (பக்கம் 315).
உடன்பிறப்புத் துரோக நாடகம்
தென்னாட்டில் ஆரியக் கலாச்சாரத்தைப் பரப்பவந்த பார்ப்பனர்களில் (முனிவர்) முக்கியமானவர் அகஸ்தியர். இவர் இராமர் படையெடுப்புக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தென்னாட்டை அடைந்து, இராமர் படையெடுப்புக்கு வழிகோலியவர் என ஆராய்ச்சி நூல்கள் பகருகின்றன. இராமாயணம் நெடுக உடன் பிறந்தார் துரோக நாடகமாகத்தானுள்ளது. அதாவது, திராவிட வீரர்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணன் தம்பிகளான வாலியையும் சுக்ரீவனையும் மோதவிட்டு, வாலியை ஒழித்துக்கட்டிச் சுக்ரீவனைத் தனக்குத் தாசனாக்கிக் கொண்டான் ஆரியப் பிரசாரகனான இராமன்.
அடுத்தபடி வாலியின் (சுக்ரீவன் ஆக்கிரமித்துக் கொண்ட திராவிட மக்கள்) படையைக்கொண்டே இலங்கை மீது படையெடுப்பு நடந்து, இலங்கையிலும் தம்பி விபீஷணனைத் தனக்குத் துரோகக் கையாக்கிக் கொண்டு இராமன், இராவண மாவீரனை ஒழித்தான். அண்ணனை அயலான் ஒழிக்க உதவி புரிந்ததற்காக அந்த விபீஷணனுக்கு ஆழ்வார் என்ற பட்டமளித்தனர் பார்ப்பன மதத்தரகர்கள். ஆழ்வாரென்றால் என்ன அர்த்தம் என்று தெளிவுபடவில்லை பக்தியில் ஆழ்ந்தவர்களென்கின்றனர் வைஷ்ணவர்கள்; பிராமண மதக்கோட்பாடுகளில் தமிழ்நாட்டை ஆழ்த்தியவர்கள் என்பது ஒருவாறாகப் பொருந்துமெனலாம்.
பாகவதம்
வைஷ்ணவ மதக்காரர்களின் உயிர்நூல் பாகவதம் என்பது இராமாயணமும் பாரதமும் வெறும் சண்டை வரலாறுகளானதுபோல், இந்தப் பாகவதம் நெடுக கிருஷ்ணனின் காதல் விளையாட்டு விவரங்களைக் கொண்ட நூலாகவுள்ளது. உலக நலனுக்காக, மக்கள் முன்னேற்றத்துக்காக இந்த நூலில் என்ன சீர்திருத்தக் கொள்கைகள் உள்ளனவென்பது புலனாகவில்லை. ஆயினும், வேத மதத்தார்களின் துறவுக் கொள்கையைச் செல்லாக் காசாக்கி, இல்லறச் சிறப்பை மக்கள் உணரத் தீட்டப்பட்ட நூல் பாகவதம் எனின் ஒருவாறாகப் பொருந்தும். இந்தக் கிருஷ்ணனைப் பற்றிய வரலாறுகளும் ஒன்றுக்கொன்று இணைந்ததாக இல்லை.
துவாரகைக் கிருஷ்ணன் வேறு; பாகவதக் கிருஷ்ணன் வேறு; பாரதக் கிருஷ்ணன் வேறு என்றே ஆராய்ச்சியில் அறியக்கிடக்கிறது. கிருஷ்ணனும் ஒரு அசுரனே; அதாவது ஆரியனல்லாதவன், ஆரியருக்கு முன்குடிகளான மக்களைச் சேர்ந்தவனெனவும் இந்நூலாசிரியர் கருதுகிறார். கிருஷ்ணன் ஆரியப் பார்ப்பான் அல்லன் என்பது தெளிவு. ஏனெனில் அவன் யாதவர் குலத்தினன்.
அவதாரமா?
ஆரியனல்லாத கிருஷ்ணன் ஆரியவேதியரால் எப்படி அவதார புருஷன் ஆக்கப்பட்டான் எனக் கேள்வி எழுகிறது. இவனும் விபீஷணனாகி, ஆரிய மதப் பிரசாரங்களுக்கு ஆரிய வேதக் கோட்பாடுகளை - பிராமண மதக்கொள்கைகளை இந்நாட்டில் பரப்பும் போர் நடத்தியதால்தான் இவனும் அவதாரமாக்கப்பட்டான் என்பதும் இந்நூலில் காணக்கிடக்கிறது.
கிருஷ்ணன், துவாரகையையடைந்து இயற்கை வணக்க முறையைப் பரப்பி வந்தான் என்றும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பக்கம் 299) இதிலிருந்து இந்தக் கிருஷ்ணன் வேறு, பாரதக் கிருஷ்ணன் வேறு என்று சந்தேகிக்கச் செய்கிறது. பாரதம் நடப்பதற்கு முன்பே கிருஷ்ணன் அவதாரமாக்கப்பட்டிருப்பதாகவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
பாகவதத்தையும், கிருஷ்ணன் இயற்கை மதப்பிரசாரகன் என்பதையும் கவனிக்குமிடத்து, இந்தத் துவாரகைக் கிருஷ்ணன் பிராமண மத எதிர்ப்பாளனாகவுமிருக்கலாமெனச் சந்தேகிக்கச் செய்கிறது. அப்படியிருக்க இவன் அவதார புருஷனாக்கப்பட்டதன் ரகசியம் என்ன?
பிராமண மத எதிர்ப்பாளரான புத்தரை, எப்படி விஷ்ணுவின் அவதாரமென உரிமை கொண்டாடுகிறார்களோ அதேபோலத்தான் இந்தக் கிருஷ்ணனின் அவதார ரகசியமும் இருக்க வேண்டுமென எண்ணச் செய்கிறது.
அப்படியாயின், கீதை யாரால், எப்போது உண்டாயிற்றெனக் கேள்வி பிறக்கலாம்.
கீதையின் முன்னுரையில் (துவக்க அத்தியாயத்தில்) ஒரு முனிவர் தன் சீடனுக்கு இந்த கீதையைச் சொல்வது போல அமைந்துள்ளது. எனவே, இந்த முனிவர் அல்லது வேறொருவர் பிற்காலத்தில் இந்தக் கீதையை எழுதிப் பாரதத்துடன் சேர்த்திருக்க வேண்டுமெனக் கீதையின் முதல் அத்தியாயம் எண்ணச் செய்கிறது.
தொடர்ச்சி
தொடர்ச்சி
நூல் - புரட்டு இமாலய புரட்டு
ஆசிரியர்- தந்தை பெரியார்
Comments
Post a Comment