பெரியாரே நடத்திய விதவைத் திருமணம்


தந்தை பெரியார் அவர்கள் எதைச் சொன்னார்களோ அதைச் செய்தவர். எதைச் செய்தார்களோ அதை சொன்னவர் என்பதற்கு அடையாளமாக ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டியது முக்கியமான ஒன்றாகும். பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். அதாவது விதவைத் தன்மை எப்படியெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்; மாற்றப்பட வேண்டும் என்ற மனிதாபிமானத் தத்துவம் கூட அவர்களுக்கு திடீரென்று வரவில்லை. அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலே குடிஅரசில் எழுதினார்.

விதவைகள் கல்யாணத்தைப்பற்றி இவ்வாறு எழுதும் நான், எழுத்தளவிலும், பேச்சளவிலும் ஆதரிக்கின்றேனா? செயலிலும் அதை நான் ஆதரிக்கின்றேனா என்ற அய்யம் பல தோழர்களுக்கு உண்டாகலாம். இதன் பொருட்டே எனது கருத்தைப் பிரதிபலிக்கும் செய்தியைக் கூற விரும்புகிறேன் என்று சொல்லி, நான் கர்நாடக பலிஜா நாயுடு வகுப்பில் பிறந்தவன். எனது வகுப்பார் பெண் மக்கள் முக்காடுடன் கோசாவாக இருக்க வேண்டியவர்கள் எனவும், விதவா விவாகம் அனுமதிக்கப்படாத வகுப்பினர் எனவும் கருதப்படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மீறிய ஆச்சாரத்தையும் வைஷ்ணவ சம்பிரதாயத்தையும் கடுமையாக ஆதரிக்கும் குடும்பம். இப்படி இருந்த போதிலும் என்னுடைய ஏழாவது வயதிலிருந்தே மக்களில் உயர்வு கற்பித்ததையும், ஒருவர் தொட்டதை மற்றவர் சாப்பிடலாகாது என்று சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு, எவரையும் தொடுவதற்கும், எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின் வாங்கியதே கிடையாது. என்னைச் சிறு வயதிலிருந்து எங்கள் வீட்டு அடுப்பங்கரைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். நான் தொட்ட சொம்பை என் தகப்பனார் தவிர மற்றவர்கள் கழுவாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள்.

எங்கள் குடும்ப ஆச்சார அனுஷ்டானங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள், என்னைப் பார்த்து சாந்தி அடைந்து விடுவார்கள். நாயக்கருக்கு அவர்கள் ஆச்சாரத்துக்கு ஏற்றாற்போல்தான் ஒரு பிள்ளை நன்றாகப் பிறந்திருக்கிறது என்று சொல்லி பரிகாசம் செய்வார்கள். என்னுடைய பதினாறாவது வயதிலே பெண் மக்களை தனித்த முறையில் பழக்குவதையும், அவர்களுக்கென சில கட்டுதிட்டங்களை ஏற்படுத்துவதையும், ஆண்மக்களின் அகம்பாவம் என்று நான் நினைத்து வந்தேன்.

இஃது இவ்வாறு இருக்க, என் தங்கை தன் இளம் வயதிலேயே ஒரு பெண் குழந்தையையும், ஒரு ஆண் குழந்தையையும் பெற்றுவிட்டு இறந்துவிட்டாள். இவற்றுள் அம்மாயி என்று அழைக்கப்படும் என் தங்கையின் புதல்விக்கு பத்தாவது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கல்யாணம் செய்து வைத்ததோடு, கல்யாணம் செய்த அறுபதாம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் பதின்மூன்று வயதுள்ள சிறு பையன் ஒரு நாள் பகல் 2 மணிக்கு சீதபேதியால், காலராவால் உயிர் துறந்தான். அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும் அப்பெண் குழந்தை, அதாவது என் சகோதரியின் புதல்வி என்னிடம் ஓடி வந்து, மாமா, எனக்குக் கல்யாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா? இப்படி என் தலையில் கல்லைப் போட்டு விட்டாயே என்று கோவென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில் மண்டையில் காயம் உண்டாகும்படி திடீரென்று விழுந்தாள். இது ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொல்லுவது அதிசயமல்ல. சிதம்பரம் போன்ற பகுதிகளில் குழந்தை மணம் நடந்து கொண்டிருக்கிறது. வடநாட்டில் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது; ஆனால் அவர்களின் விதவையான நிலையை அவர்கள் சொல்லும்போது, அங்கு வந்திருந்த ஆண், பெண் உட்பட அறுநூறு, எழுநூறு பேர்கள் அக்குழந்தையையும், என்னையும் பார்த்தவண்ணமாய் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடித்தனர். எனக்கும் அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது. ஆனால், கீழே விழுந்து கிடந்த அந்தக் குழந்தையை நான் கையைப் பிடித்து தூக்கும் போதே, அதற்கு மறுபடியும் கல்யாணம் செய்துவிடுவது என்ற உறுதியுடனேயே தூக்கினேன் என்கிறார்.

பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எவ்வளவு ஆழமான பாதிப்பை அவருடைய மனதில் ஏற்படுத்தி, அது செயல் வடிவமாகப் பூத்துக்குலுங்கி காய்த்துக் கனிந்திருக்கிறது என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்தப் பெண் பக்குவமடைந்த ஒரு வருடத்துக்குப் பின், அதற்குக் கல்யாணம் செய்து வைக்க நானும் என்னுடைய மைத்துனரும் முயற்சி செய்தோம். இச்செய்தி என் பெற்றோருக்கும், மற்றோருக்கும் எட்டவே - தம் வகுப்புக்குப் பெரிய ஆபத்து வந்துவிட்டது என்று கருதி, பெரிதும் கவலையுற்று நாங்கள் பார்த்து வைத்த இரண்டு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள். முடிவில் எனது மைத்துனரின் இரண்டாவது மனைவியின் சகோதரரைப் பிடித்து சரிசெய்து, எவரும் அறியாவண்ணம் மாப்பிள்ளையை சென்னை வழியாகவும், பெண்ணை திருச்சி வழியாகவும் சிதம்பரத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு கோயிலில் கல்யாணம் செய்து வைத்து ஊருக்கு அழைத்து வரச் செய்தேன். ஆனால், நான் அங்கு போகாமல் ஊரிலேயே இருக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அவர்கள் சென்றுள்ள செய்தியை சுற்றத்தார் அறிந்தால் ஏதாவது சொல்லி மாப்பிள்ளையை தடை செய்து விடுவார்களோ என்கிற பயத்தாலும், நான் ஊரில் இருந்தால் கல்யாணத்திற்காக வெளியூர் சென்றிருக்கிறார் என்ற சந்தேகம் இராது என்ற எண்ணம் கொண்டுமேயாகும்

இக்கல்யாணத்தின் பயனாக இரண்டு மூன்று வருட காலமாக பந்துக்களுக்குள் வேற்றுமையும், பிளவும் ஏற்பட்டு, ஜாதிக்கட்டுப்பாடு இருந்து பிறகு அனைத்தும் சரிபட்டுப் போயின. பெண்ணும் மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து ஒரு ஆண் மகவைப் பெற்றனர். அவர்கள் சில காலம் வாழ்ந்து பின்பு இரண்டாவது புருஷனும் மறைந்து போனார். இப்பொழுது அந்தத் தாயும் மகனும் சவுகரியமாய் இருக்கிறார்கள் என்று 1926இல் இதை எழுதியிருக்கிறார்கள். இதை எதற்காக உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம் என்று சொன்னால், தந்தை பெரியார் விதவைத் தன்மை பற்றிய கருத்தைச் சொல்லுகின்ற நேரத்தில், ஆண் திருமணம் செய்து கொள்ளலாம், பெண் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்பதை அறவே எதிர்த்தார்கள். உயர்ந்த ஜாதிக்கு ஒரு நீதி; தாழ்ந்த ஜாதிக்கு ஒரு நீதி என்பது எவ்வளவு தவறோ, அதுபோல ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று இருப்பதும் தவறு என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தின், மனித நேய தத்துவத்தின் அடிப்படையாகும்.

- கி.வீரமணி

நூல்: தமிழக முன்னோடிகள் தந்தை பெரியார்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை