நாற்காலியை உள்ளே கொண்டு போய் வை
திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் அய்யா அவர்கள் மீது வழக்கு. வழக்கம்போல சிறைக்குச் செல்ல மூட்டை முடிச்சுகளுடன் அய்யா வந்தார்.
நீதிமன்றம் மாடியில். படியேறி மாடிக்கு வந்தார்கள். நீதிமன்றத்தின் பணி தொடர இன்னும் நேரம் இருந்தது. எனவே அய்யா அவர்கள் வெளியில் நின்றார்கள்.
உடன் வந்த ஒரு தோழர், நீதிமன்றத்துள் சென்று, ஒரு நற்காலியைக் கொண்டு வந்து உட்காருங்கள் அய்யா என்றார். அய்யா அவர்கள் மிகுந்த கோபத்துடன், நாற்காலியை உள்ளே கொண்டு போய் வை என்று கூவிக் கொண்டு, அந்தத் தோழரை அடிக்கக் கைத்தடியை ஓங்கிவிட்டார்கள். மரியாதை என்பது நாமாக எடுத்துக் கொள்வது அல்ல. அவர்கள் கொடுப்பது என்றும் சொன்னார்கள். அய்யா அவர்களுக்கு அவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததேயில்லை!
இந்தக் கேசில் அய்யா அவர்களுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி வயதானவர். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. கால், கைகள் ஆடுகின்றன என்று தீர்ப்பில் நீதிபதி சிவசுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். இதுபற்றி இராஜாஜி அவர்கள் சட்டம் வயதைப் பார்க்கக்கூடாது, குற்றத்தின் தன்மைக்கு ஏற்பத் தண்டனை விதிக்க வேண்டும் என்று கல்கியில் எழுதினார். நீதிபதி சிவசுப்பிரமணியம் அவர்களுடன் நான் தனிமையில் பேசிக் கொண்டு இருந்தபொழுது இதுபற்றி பேச்சு வந்தது. பெரியாருக்கு எதிராகப் பிராமணர்கள் தீவிரப் பிரச்சாரம் செய்கிறார்கள். எனவே, பெரியாரை சிறையில் வைக்கவேண்டிய நெருக்கடியில் அரசாங்கம் இருக்கிறது. நான் விடுதலை செய்து இருந்தால், அரசாங்கம் அப்பீல் செய்யும். இரண்டு மூன்று ஆண்டு தண்டனை கிடைக்கக்கூடும். அதனால்தான் நான் தண்டனை விதிக்க வேண்டியதாகிவிட்டது. பெரியாருக்கும் கொஞ்சம் ஓய்வும் கிடைக்கும் என்று சொன்னார்கள்.
- அ.மா.சாமி, தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள்
விடுதலை
மலர்
Comments
Post a Comment