காவல்துறை நியதி


ஒரு சமயம் சென்னையில், பெரியார் வீட்டில் இருக்கும் பொழுது அவரைப் பார்க்க சென்னை காவல் துணைக் கமிஷனர் (காவல்துறை உடையுடன்) வந்திருந்தார். அதிகாரி வருவதை பெரியாரிடம் சொன்னவுடன், தான் உட்கார்ந்து இருந்த கட்டிலில் இருந்து எழுந்து, அதிகாரியை வரவேற்க முற்பட்டார். இது அவரின் இயல்பான குணம். அதுபோழ்து, பெரியாரின் தோளில் போட்டிருந்த கைதுண்டு நழுவி கீழே விழுந்து விட்டது. உடனே அந்தப் பெரிய அதிகாரி குனிந்து எடுத்து பவ்வியமாக பெரியாரிடம் கொடுத்தார். அய்யா அவர்கள் பெரிதும் நன்றி என்று சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்து நீங்கள் உங்கள் அசிரத்தையினால்தான் அதிகாரி உதவினார். காவல்துறை அதிகாரி காவல்துறை உடையில் இருக்கும்போது எந்தக் காரணத்தைக் கொண்டும் குனியக்கூடாது என்பது நியதி. இருந்தும் அவர் என் பேரில் உள்ள மரியாதை நிமித்தம் உதவினார். என்னைச் சுற்றி இருப்பவர்கள் அசிரத்தையாக இருந்து இருப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது என்றார்.

ஒரு சமயம் பெரியார் சென்னை மீரான்சாகிப் வீட்டில் குடியிருக்கும்போது, சென்னை காவல்துறை துணைக் கமிஷனராக இருந்த குழந்தைவேல் என்பவர், பெரியார் மற்றும் அங்கு மாடியில் இருந்தவர்களைக் கைது செய்து அழைத்துப் போக போலீஸ் வேனுடன் வந்திருந்தார். அய்யா அவர்கள் சொன்ன நபர்களை மட்டும் கைது செய்கிறோம். (அய்யாவையும் சேர்த்து) அப்போது நான், வியாபாரம் தொடர்பாக சென்றிருந்த முறையில் அங்கிருந்தேன். என்னைத் தொட்டுக் காண்பித்து, இவனைத் தவிர எல்லோரையும் கைது செய்யுங்கள் என்றும், அந்த அதிகாரியிடம் (அதிகாரி ஈரோட்டுக்காரர் மாப்பிள்ளை) இந்த நபர் நம் கண்ணு மகன் என்றார். தங்கை கண்ணம்மாளை அழைக்கும் அன்புமொழி) என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாம் கைதானார்கள். பிறர்க்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு என்பதற்கு உதாரணம் இது.

தன் தமையனார் குமாரர்கள் ஒரு பெரிய மாடிவீட்டை அவர்களாகவே முன்வந்து, பெரியாருக்கு விற்றார்கள் - பெரியார் அவர்கள் அவர் பெயருக்கு கிரையம் செய்துக் கொள்ளாமல் பெரியார் சுயமரியாதை பிரச்சார ஸ்தாபன தலைவர் .வெ.ராமசாமி என்ற பெயருக்கு கிரயப்பத்திரம் செய்துக் கொண்டார். இது எனக்குத் தெரிந்தது. அவரிடம், வீட்டை உங்கள் பெயருக்கு வாங்காமல், ஸ்தாபன பெயருக்கு வாங்கியுள்ளீர்களே என்று கேட்டதற்கு பவ்வியமாக, என் பணம்தான் ஸ்தாபனப் பணம்; நான் தான் ஸ்தாபனம், ஸ்தாபனம்தான் நான் என்று சொல்லி பெரியார் வேறு விஷயம் பேசலானார்.

பெரியாருக்கு ஓய்வு கொள்வது துருவை ஏற்பது போன்றது. (கூடி சநளவ ளை வடி சரளவ) ஒரு சமயம் திருச்சியில், என் சம்பந்தி மறைந்த கோவிந்தராஜுலுவுடன், பெரியாரைப் பார்க்கச் சென்றிருந்தேன். சிக்கய்ய நாயக்கர் கல்லூரி விஷயமாக பெரியார், நானும் சென்னைக்கு உங்களுடன் உங்கள் அம்பாசிடர் காரிலேயே வருகிறேன் என்று சென்னை வந்தார். நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. போட்டிருந்த உடையுடன் அவருடனும், அய்யாவின் உற்ற பாதுகாவலர் புலவர் இமயவரம்பன் கூட வந்திருந்தார். சென்னையில் கல்லூரி காரியம் செவ்வனே முடிந்து விட்டது. ஆனால் அன்று இரவு அய்யாவுக்கு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டு தொல்லை தந்தது. டாக்டர் ராமச்சந்திரா வைத்தியம் செய்து சரிபடுத்தி விட்டார். மத்தியானம் புறப்படலாம் என்றும் சொல்லிவிட்டார். புறப்பட்டு வேலூர் வந்தோம். சிறுநீர் வரும் டியூப் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. டாக்டர் பட் அவர்கள் உடனடியாக டியூப் மாற்ற ஏற்பாடு செய்து எல்லாம் சரி செய்துவிட்டார். பெரியார் அவர்கள் வெகுநேரம் கழித்து கண் திறந்து எள்ளுதான் எண்ணைக்குக் காயுது எலிபுளுக்கை எதற்குக் காயுது என்று வேடிக்கையாக சொல்லிவிட்டு, உங்கள் சம்பந்தியாரை மெயிலில் ஊருக்கு அனுப்பி வைத்து விடு என்று கூறிய பெரியார் அவர்கள் பனியனில் நீண்ட ஊக்குகள் கொண்ட சிறையில் பதுங்கியிருந்த பர்சை கொடுத்து ஊக்கும் கொடுத்தார். நான் காலையில் பர்சை திருப்பி ஊக்குடன் கொடுத்தபோது, எண்ணிப் பார்த்து கொள்ளுங்கள் என்றேன். பெரியார் அவர்கள், 5 வயதிலே இருந்து உன்னை அறிந்து வருகிறேன். உன் நாணயம் எனக்குத் தெரியும், புரியும் என்றார் எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி!

மனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுத்து எவரையும் எங்கும் மரியாதையாகவும் அன்பாகவும் அழைப்பது - நடத்துவது என்ற உயர்ந்த மனிதப் பண்புக்கு அவரே ஓர் உறைவிடம். பெரியார் ..வரா. என்றால் நாணயம் என்பது பொருள் என வழங்கும் தன்மையால் பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவர் உயர்ந்து திகழ்ந்து மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார்.

- ஈரோடு எஸ்.ஆர்.சாமி தந்தை பெரியார் 113ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்



Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை