ஞானிபோல் உட்கார்ந்திருந்தார் தந்தை பெரியார்!
1955ஆம் ஆண்டு நான் சென்னையில் எம்.அய்.ஈ.டி.
கல்லூரியில் ஏரோநாட்டிகல் எஞ்சினீயரிங் படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.அந்த சமயத்தில் நாங்கள் கல்லூரியில் படித்து முடித்த பிறகு, ஒரு மாத காலம் விடுப்பில் ஒரு தொழிற்சாலைக்குச் சென்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். இது ஒரு திட்டம். நான் பயிற்சிக்கு அனுப்பப்பட்டது நாகப்பட்டினம் ஸ்டீல் ரோலிங் மில் ஆகும். அங்கு எனக்கு மோல்டிங் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்த தொழிலாளி ஒரு நாள் என்னிடம் தன் வீட்டிற்கு ஒரு நாள் வந்து சாப்பிட முடியுமா? என்று கேட்டார்.
நானும் சென்று வந்தேன். அப்போது அவர் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார்.
அவர் வேறு யாருமல்ல. தந்தை பெரியார்தான். அங்கு உட்கார்ந்திருந்தார்.
பெரியார் அவர்கள் பெரும் ஞானிபோல் உட்கார்ந்திருந்தார்.
என் பெயரைக் கேட்டார். நான் அப்துல்கலாம் என்றேன். என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டார். நான் எம்.அய்.ஈ.டி.இல் எஞ்சினீயரிங் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்.
ஓ,
கண் தெரியாத ராஜம் என்பவர் கல்வியைப் பரப்பிக் கொண்டிருக்கிறாரே அவருடைய நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டார். ஆம் என்றேன்.
அப்துல் கலாம் உன்னுடைய பணி - படிப்பு, என்னுடைய பணி, அரசியல்.
நீ படிக்கும்போது கல்வியைப் படி. நான் அரசியலில் இருக்கிறேன், ஆனால் நீ படிக்கும்போது அரசியல் பண்ணாதே! இவ்வாறு தந்தை பெரியார் கூறினார். அப்போது அவருக்கு வயது 76. உண்மையில் நான் அசந்துவிட்டேன்.
அரசியலில் உள்ள ஒரு தலைவர் என்னைப் பார்த்து படிக்கும்போது அரசியலுக்கு வராதே என்கிறார். எனவே, அவர் கூறிய அந்த அறிவுரையை இப்போது இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.
மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் நான் கூறும் திருக்குறளை என்னுடன் சேர்ந்து கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
தந்தை பெரியார் சொன்ன மாதிரியே இருக்கிறது அல்லவா? படிக்கும்போது படி; தொழில் செய்யும்போது தொழில் செய்; அரசியலில் ஈடுபடும்போது,
அரசியலில் ஈடுபடு. இதுதான் மேற்சொன்ன திருக்குறளின் சாராம்சமாகும்.
மேற்படி குறளுக்கிணங்க, நீங்கள் அனைவரும் வாழ வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.
- டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்
- தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி விழாவில் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து
20.12.2013.
(தந்தை பெரியார் 126ஆம் ஆண்டு பிறந்தநாள் விடுதலை மலர்)
Comments
Post a Comment