திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி இலக்கிய மன்ற விழா

திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி இலக்கிய மன்ற விழா (26.8.1957)

(தந்தை பெரியார் உரைத் தொகுப்பு)


26.08.1957 அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் இலக்கிய மன்றத்தில் திரு தி.பொ.வேதாசலனார் அவர்கள் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரைக்குப் பின்னர் தந்தை பெரியார் .வெ.ராமசாமி அவர்கள் இலக்கியம் பற்றி ஆற்றிய உரை:-
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தவத்திரு அடிகளார் அவர்களே ! தாய்மார்களே! தோழர்களே!

இன்றையதினம் நமது பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்கவிழா என்னும் பேரால் இந்த விழா நடைபெறுகிறது. (குன்றக்குடி) அடிகளார் அவர்கள் வந்து நல்லா அறிவுறுத்திக்கூறி, ஆசிகூறி நமக்குப் பெரும்பேரு அளித்திருக்கிறார்கள். தலைவர் (திரு தி.பொ.வேதாசலனார்) அவர்களும் இன்றைய முக்கியக் கருத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள் நானும் சிலவார்த்தை சொல்லுகிறேன்.

இலக்கியம் பற்றி பேச தகுதி வேண்டுமா?

இலக்கியத்தைப்பற்றிப் பேசுவது என்றால் சுவாமிகள் போன்றவர்களுக்குத்தான் தகும். நல்ல ஆராய்ச்சியோடு கஷ்டப்பட்டு எல்லா விஷயங்களையும் உணர்ந்து, அதற்கு வேண்டிய கருத்துக்களையும் விளக்கி மக்களுக்கு அது எப்படி பயன்படும்படி சொல்ல வேண்டும் என்பதிலேயும் மிக்கக் கவலை கொண்டு, நல்ல வண்ணம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அந்த முறையிலேயே நான் கிட்டே நிற்பதற்குக் கூட தகுதியுடையவன் அல்ல. அவர் (தலைவர்) நண்பர் வேதாசலனார் அவர்கள் சொன்னது போல, ருயேயீயீசடிஉயடெந யனே ருளேவயடெந என்று சொல்லுகிற அளவிலேதான், ஆனாலும் ஏதோ இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்என்னுடைய கருத்துக்களையும் எடுத்துச் சொல்கிறேன்.கொஞ்சம் முதலிலேயே பேசி இருக்கவேண்டும். நான் பேசி இருந்தால் அதற்குண்டான விளக்கத்தை அடிகளார் அவர்கள் ஏதாவது சொல்லியிருக்கக்கூடும், இப்போது நான் சொல்லுவது என்பதில் அதைக் கேட்டு, என் கருத்தை மாற்றவோ பிறகு திருத்தவோ வகையில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதை எடுத்துச் சொல்லுகிறேன். அடிகளார் அவர்களும் அந்தக்கருத்துபடியே இலக்கியத்தைப் பற்றி நன்றாக விளக்கியிருக்கிறார்கள்.

நான் ஒரு நாத்திகன். நாத்திகன் நாத்திகம் என்பதனை விளக்கத் தமிழில் வார்த்தை இல்லை சொல்லுவதற்கு. அப்படி ஆயிப் போச்சி. ஆனாலும் நான் ஒரு நாத்திகன். என்னுடைய கருத்திலே நான் எப்படி இலக்கியத்தைப் பற்றி எப்படி காண்கிறேனோ அப்படிச் சொல்லுகிறேன். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ஏதாவது உண்டு என்று தாங்கள் நினைப்பீர்கள். அப்படி ஒன்றுமில்லை. ஆஸ்திகம்- நாஸ்திகம் என்று சொல்லுவதிலே நம்ம நாட்டிலே இருக்கிற பழக்கம் ஆஸ்திகன் என்றால் கடவுள் நம்பிக்கை உள்ளவன் நாஸ்திகர்கள் என்றால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று கருதுகிறார்களே அந்த முறையிலே நான் சொல்லவரவில்லை. ஆஸ்திகன் என்றால் பெரியோர்களைப் பின்பற்றி பெரியோர்களுடைய நெறிகளைக் கருத்துக்களைப் பின்பற்றி நடக்கிறவர்கள் ஆஸ்திகர்களாவார்கள் என்று கருதுகிறவர்கள். நாஸ்திகன் என்றால் அவைகளை முக்கியமாகக் கருத மாட்டார்கள். அதற்கு ஏதாவது ஏற்றது எடுத்துக்காட்டுக்கு வேண்டுமானால் தங்களை ஆதரிப்பதற்கு ஏதாவது இருக்குமானால் பார்த்துக் கொண்டு, மற்றபடி ஒவ்வொரு விஷயத்தையும் தங்கள் அறிவுக்கு தங்கள் அனுபவத்துக்கு தெளிவாக எது ஏற்படுகிறதோ அதைப் பேசுகிறவர்கள். அப்படிதான் கருதுவது சாதாரணமாக. அது சுவாமிகளே சொன்னார்கள் அந்தக் காலம் வேறெ, இந்தக்காலம் வேறெ, அந்த நாகரிகம் வேறெ, இந்த நாகரிகம் வேறெ, அடிக்கடி நாகரிகம் வரும் - போகும் என்றெல்லாம்; உண்மைதான். அது மாதிரி நிலைமையிலே சிலபேர் ஒரு நாகரிகப்பற்றுடனே இருக்கக்கூடும். சிலபேர் ஒன்றையும் பற்றுக் கொள்ளாமல் எது வசதியோ? எது சௌகரியமோ? எது பயன்படக்கூடியதோ? எது தற்காலத்துக்குத் தெளிவோ? அத்தோடுதான் நிற்கிறார்கள். அந்த முறையிலே சொல்லுகிறேன்.

இலக்கியத்திற்கு இலக்கணம்

இலக்கியம் என்று சொல்லுவதைப்பற்றி முதலாவது நாம் அதற்கு ஒரு வரையறை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியம்னா, யாரோ நாலுபேரு பாடின கவி இருக்கிறது, ரொம்ப பெரிய காலத்துக்கு முன்னே அற்புதமான கருத்துக்களைப் புகுத்தியிருக்கிறார்கள் என்பது மாத்திரம் போதாது. இலக்கியம் என்றால் நமக்கு என்ன அதனாலே பலன்? நாம் அதைப் பின்பற்றி நடக்க முடிகிறதா? அல்லது நம்மை அது பின்பற்றும்படியாகவாவது கட்டாயப்படுத்தும்படியான சக்தி இருக்கிறதா? அத்தோடு மாத்திரமல்லாமல் அது இன்றைக்கு மக்களுக்குப் பயன்படுகிறதா? அவைகளை நாம் நன்றாகக் கவனிக்க வேண்டும், (என்னய்யா பெரிய நியூசெனஸ்) (மாணவர்கள் இரைச்சல்)

பயனற்ற இலக்கியம்  முதலாவது நாம் இலக்கியத்தைப் பற்றி எப்போதும் குறை கூறுபவர்கள். துவக்கத்திலேயே என்ன காரணமோ தெரியவில்லை? இரண்டாவது நமக்கு இலக்கியமில்லை என்கிற கருத்துடையவன் நான். இன்றைக்கு இலக்கியம் நமக்கு பயன்படும் படியாக ஒண்ணுமில்லை. நிறைய (இலக்கியங்கள் என்பதாக) இருக்கலாம். இருந்தும் (அவற்றால்) என்ன பிரயோஜனம்? ஏராளமான பிரபுக்கள் இருக்கிற போது நாட்டிலே இருக்கிற ஜனங்கள் எல்லாம் பட்டினியிலே சாவுகிறாங்கன்னா எப்படியோ அது மாதிரி இன்றைய தினம் பின்பற்றத் தகுந்ததோ, நம்மை ஒரு நெறியிலே அடக்கி ஆளக் கூடியதான இலக்கியம் நமக்கு இல்லே. நான் இன்னும் கூட சொன்னேன். இன்றைய நம் புலவர்களுக்குக்கூடசொன்னேன். நமக்கு பயன்படும் படியான அளவு படிப்பதற்கு அவர்களுக்கும்கூட இலக்கியமில்லேன்னு நான் (25.08.1957இல்) நேற்று பேசும்போது சொல்லியிருக்கிறேன்.

காலமும் கருத்தும்

அந்த மாதிரி ஆயிப்போச்சி, இருக்கிறதெல்லாம் அருகிப்போச்சி. எங்கெங்கேயோ போயிட்டுது, மறைஞ்சும் போயிட்டுது. காலத்துக்கு ஏற்காததாகவும் போயிட்டுது. ஏனென்றால் காலம் மாறுது. எவ்வளவுதான் நாம் பிடிவாதமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தாலும் கால வேறுபாடு நம்மை மாற்றிக் கொண்டுதான் போகும். ஒவ்வொரு காலத்திலே ஒவ்வொரு கருத்துக்குச் செல்வாக்கு இருந்தது. அந்தக் கருத்துக்கள் கூட நல்ல பெருமைபடத்தக்கக் கருத்தாயிருக்கலாம் - நமக்கு அது பயன்படுதா? இன்றைய வாழ்வுக்கு தேவைபடுகிறதா? என்று பார்க்கணும்.

வள்ளுவர் சொன்னாருன்னு சுவாமிகள் சொன்னாரு ரொம்ப சரி, அது எதுக்கு உதவும்? பேச்சு அலங்காரத்துக்கு உதவுமே தவிர கருத்துக்கு எங்கே உதவுது?
பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் (குறள் 580)
அதாவது, அதிலே ( இக்குறளுக்கு) சுவாமிகள் இன்றைக்கு இங்கே அதற்குப் புது அர்த்தம் சொன்னார். அது எனக்கு ரொம்ப சந்தோஷம் (சிரிப்பு கைத்தட்டல்) நஞ்சுண்டவர்களும் சாகாதிருக்கனுமென்றார், (வெடிச்சிரிப்பு), நாம் என்ன சொன்னோம்? ஏதோ தாட்சண்யத்துக்குத் தட்டமுடியாமல் இணங்குவாங்க, எவ்வளவு கொடுமையான சங்கதி களாயிருந்தாலும் நண்பர்கள் விஷயத்தில் தாட்சண்யத்துக்காக என்று அது அவ்வளவோடுநிற்கலே.நஞ்சுண்டும்
சாகாதிருக்கிறாங்கன்னு சொன்னாரு ரொம்ப சரி.

கருத்தொற்றுமை கொண்ட வள்ளுவரும் இயேசுவும் நான் ஏறக்குறைய வள்ளுவரின் சங்கதிகளைக் கிருஸ்துவுக்கும்

பொருத்துவதுண்டு. ஆனால் நான் வள்ளுவர் முந்தியா? கிருஸ்து முந்தியா? என்பதில் நான் கிருஸ்து முந்தின்னு சொன்னால் கொஞ்சம் தகராறு வரும். ஆனால் அவர் வெகு துரத்திலே 5000, 6000 மைலுக்கு அப்பாலே இருந்தவர்.இவர் (வள்ளுவர்) இப்பால் இருந்தவர்.இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் காப்பி அடிச்சிருக்க மாட்டாங்க - வைச்சிகங்க, ஆனாலும் கருத்து ஒண்ணாயிருக்கும். நல்லா மகிழ்ச்சியோடு அன்போடு அவரவர்கள் கருத்தைக் காட்டியிருக்கிறார்கள் ரொம்பசரி. இவர் போல்தான் சொல்லியிருக்கிறார் கிருஸ்து. இந்த (வலது) கன்னத்தில் அறைந்தால், இந்த(இடது) கன்னத்தையும் காட்டு என்று! மேல்சொக்காயைப் பிடுங்கினால் அடிச் சொக்காயையும் கழட்டிக் கொடுன்னார்! (சிரிப்பு) சரிரொம்ப - அன்புக்கும் அது சரி. ரொம்ப ஆழ்ந்த ஞானத்துக்கும் அது இருக்குது. அது இன்னைக்கு முடியுமோ? இந்த கன்னத்தில் அறைஞ்சதும் நீ மறுகன்னத்தையும் காட்டினால் வாயில் உள்ள முப்பத்திரண்டு பல்லும் போயிடும்(சிரிப்பு) வெறும் ஆளாய்த்தான் போய் சேருவான், கொஞ்சம் எதிர்த்தால் தான் முடியும். இன்றைக்கு அப்படி வேண்டியிருக்குது. அவர்கள் அப்பொழுது அப்படி இருந்தார்கள், அவர்கள் பயித்தியக்காரர்கள் அல்ல.அன்றையக் காலம் அப்படி இருந்திருக்கும். ஒரு சமயம் அது போலவே நம்ம இலக்கியங்களிலே அனேக சங்கதிகள் இருக்கு. அதை சுவாமிகளும் சொல்லியிருக்கிறாங்க. அதை நம்புகிறோமோ இல்லையோ அது மாதிரி நடந்ததோ, இல்லையோ அதிலே இருக்கிற கருத்துக்கள் ரொம்ப சரி சிலது அப்படியே இருக்குது. அதுகளெல்லாம் இன்றைக்குப் பயன்படறாப்பிலே இல்லை. நான் சும்மா கற்பனையாகச் சொல்லலே.

இலக்கியம் போல் சமூகம் இல்ல

இன்றைக்கு எப்படி இருக்குது நம்ம நிலை? ஒன்றே குலம் - ஒருவனே தேவன்-ன்னு சொல்லியிருக்கிறான் மூவாயிரம் வருஷத்துக்கு முன்னேன்னா? எதுக்கு உதவுது அது? யாருக்கு என்ன பயன்படுது? ஒன்றே குலம்-ன்னா நாம ஆயிரத்து அய்ந்நூறு குலமாயிருக்கிறோம். (சிரிப்பு) ஒருவனே தேவன்னா நமக்கு முப்பத்து மூணுகோடி தேவர்கள் இருக்கிறாங்க. இது ஒழியறத்துக்கு இன்றைக்கு இருக்கிற கொடுமைகளுக்கு பரிகாரம் என்னா? யாரோ ஒருத்தர் ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்னான்னு போயிகிட்டே சும்மா இருக்கிற தேவனை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும், இருக்கிற குலத்தை எல்லாம் ஒண்ணும் பண்ணாமலும் இருக்கட்டும் என்றால், எங்கே மாறுவது? இது மாத்திரம் மட்டுமல்ல, இன்னும் அனேக சங்கதிகள் இருக்கு. எல்லாம் சரி

அவைகளை நான் மற்றும் யாரும் மறுக்கக்கூடியது இல்லை. இன்றைக்குப் பயன்படும்படியான இலக்கியம் நமக்கு இல்லை. நம்மகிட்டே வருவதற்கு தகுதியில்லை. சங்க இலக்கியங்கள் நிறைய கிடக்குது. யாருக்கு தெரியும்? சுவாமிகள் (குன்றக்குடி அடிகளார்) சொல்லிதான் சில பேரை எல்லாம் எனக்குத் தெரிஞ்சுது (சிரிப்பு)பொய் இல்லே, அது நமக்குப் பயன்படலே, ஏன் பயன்படலே? அது நம்மை அவ்வளவு கட்டாயப் படுத்துகிற மாதிரியாக நம்மைக் கொண்டு செலுத்துகிற மாதிரியாக இலக்கியங்களாக இல்லை. நமக்கும் அதைப் பின்பற்றுவதற்கும் வாய்ப்போ வசதியோ அல்லது வேறுவிதமான நிபந்தனைகளோ நமக்குமில்லை. பலபேர் பலவிதமாய்க் கருத்துக்களை எடுத்துச் சொன்னாங்க. ஆனால் அந்தக்காலத்திலே அறிவு நிறைஞ்சி இருக்குது, நல்ல ஆராய்ச்சி கருத்துக்கள் இருக்குது, கற்பனை சக்திகள் இருக்குது; நம்முன்னோர்கள் பெரியவர்கள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் யார் யாரிடத்திலோ சொன்ன கருத்துகள் எல்லாம் இருக்குது. எல்லாம் சரி. இன்று வேறு காலம், இனி அந்த காலத்துக்கு இது போகாது. அது யாரோ நம்மை வந்து அடக்கி ஆண்டுட்டாங்க நம்மை வெற்றி கொண்டிட்டாங்கன்னு மாத்திரம் சொல்ல முடியாது, நம்ம நிலைமை அப்படி வந்துவிட்டது. இனி இந்தப்பக்கம் திருப்புகிறதுக்கும் வகையில்லே. திருப்பும் படியான வாய்ப்புமில்லே. திரும்பவேணும்ன்னா பெரிய போராட்டம் நடக்கணும். அதற்கு நம்ம மக்கள் தயாராகவுமில்லே, இருக்கிற நிலைமையிலேயே எப்படி இருந்தால் தேவலாம் என்பதற்கு ஏதாவது நாம் கண்டு பிடிக்கணும். பிரச்சினைதான் பார்த்தால் தெரியும்?

இலக்கியத்தால் நம்மை பக்குவப்படுத்த முடிகிறதா?

முக்கியமாக நமக்கு வந்தக் கேடு என்னான்னா? இன்றையதினம் பெரியோர்களாலே சொல்லபடுகிற இலக்கியங்கள் எல்லாம் கவிகளாய் இருந்தது. பாட்டாய் இருந்தது. சரி வராதது - பார்க்காதது. அதற்கு அடிகளார் போன்றவர்கள் தான் சரி. இருந்தும் நாம் அதை என்ன பண்ண முடியும்? (சிரிப்பு) அந்த இலக்கியம், இந்த இலக்கியம், சங்க இலக்கியம் - இவைகளை எல்லாம் வச்சிகிட்டு நாம் என்ன செய்யமுடியும்? அல்லது நமக்குள்ளே புகுத்தி நம்மை அதற்குப் பக்குவப்படுத்திடவழி இருக்கிறதா? இல்லை. ஏன் அப்படி சொல்லுகிறேன்னா? அந்தக் காலத்திலே எல்லாம் பாட்டாய்ப் போச்சீங்கிறது ஒரு காரணம், வேறு விசேஷமாய் ஒண்ணுமில்லை. அந்த காலத்திலே எழுத்து அவ்வளவு சல்லிசாய் இல்லை. படித்த ஜனங்களும் அதிகம் பேராய் இல்லை. எழுதி வைச்சிகிறதுக்குச் சாதனமும் இல்லை. ஆகையினோலே அது பாட்டு ரூபமாக வந்து அது அந்தப்படிக்கு உள்ளத்திலேயே புகுந்திருந்தால் கொஞ்சம் பதிந்திருக்கும். இலக்கியம் அப்படி பதியாது. சாதாரணமாக நான் கூட 30-40 வருஷங்களுக்கு முன்னாலே ஏதோ படிச்ச பாட்டுகள் எதிலேயோ ராமாயணத்திலேயோ அல்லது பாரதத்திலேயோ அல்லது வேறு காவியத்திலேயோ இலக்கியத்திலேயோ பாட்டுகள் படிச்சிருக்கிறேன். அந்தப்பாட்டுக்கள் எல்லாம் இன்னைக்கு ஞாபகமில்லை. அதை பாருங்க ஒரு வார்த்தை அதிலே ஞாபகப் படுத்திகிட்டேன்னா கொண்டாந்து விட்டுது பாக்கி எல்லாம் (சிரிப்பு) கவி-ன்னா உபயோகமற்றதுன்னு சொல்ல முடியாது. இலக்கியம்படிச்சா ஞாபகத்திலே இருக்காது. கருத்துதான் வரும். பாட்டு படிச்சா சங்கதி பூராவும்மே மனசுக்கு வரும். ஏன்னா? ஒருவார்த்தை எடுத்துக்கிட்டா முதல் வார்த்தையோ பின்னாலேயே வார்த்தையோ எதையாவது ஒன்ணை எடுத்து கிட்டா அந்தப்பாட்டு அப்படியே வந்திடும். அவ்வளவு தூரம் அது எதுகை முகணையோடு அதைப் பொறுத்தியிருக்கிறாங்க, அது நல்லாயிருந்தது. அனேகம் பேர் படிக்கிறதுக்கு முடியாவிட்டாலும் சிலபேர் மாத்திரம் படிச்சிருந்தாலும் அதைப் பாட்டாக வைச்சி பயன்படுத்தும் படியாக இருந்தது.

அப்புறம் எழுத்து வந்தாச்சி, எழுதுகிற சாதனங்கள் வந்தாச்சி, அச்சு வந்தாச்சி, ஏராளமான பிரதிகள் போடும் படியாச்சு, அதிகம் பேருக்கு அந்தப் பாட்டுகள் வர்ரதுக்கு இடமில்லே. அந்தப் பாட்டுகள் வெளிவர்ரதுக்கு இடமில்லாது போன காரணத்திலேயே; இப்பொழுது சுவாமிகள் (குன்றக்குடிஅடிகளார்) அவர்களால் தெளிவுபடுத்தப்பட்ட அநேக இலக்கியங்கள் நமக்கு ஒண்ணுமே தெரியாது. எதையும் தெரியலேன்னு என்னைப் போல ஒரு அஞ்சு பேருக்கு மாத்திரம் தெரியலேன்னு சொல்லமுடியுமா? எழுதப்படிக்கத் தெரிஞ்சவனே இன்றைக்கு 100 க்கு 15 பேரு இருக்கிறான். அதுவும் இன்றைக்கு பதினைந்து பேர் என்றால், இதுவரைக்கும் இருந்தவங்க அய்ந்து பேரு ஏழுபேருன்னாங்க. அவர்களுக்கு இவ்வளவு பெரிய சரக்கு போராப்பிலே இல்லை. அதிலேயும் மோசம் என்னா ஆயிப்போச்சீன்னா? இந்தப் படிப்பு முறை மாறினதினாலே சுத்தமா நமக்கு அது கிட்டே வருவதற்கே லாயக்கில்லாது போச்சி. படிப்புமுறையை அரசாங்கம் என்ன காரணம் வைத்தோ எதை எதையோ மாத்திட்டாங்க. நான் சின்னப்பிள்ளையாக இருக்கிறபோது, திண்னைப் பள்ளிக்கூடத்திலே படிக்கிறபோது, சில இலக்கியங்களின் இரண்டு பாட்டுகள் வரும், ஏதோ நல்வழி நீதி மஞ்சரி இன்னா நாற்பது இனியவை நாற்பதுன்னு சொல்லுவாங்க. அந்த சதகம் - இந்த சதகம்ன்னு, அப்புறம் நன்னுல் அப்போது இந்த பாட்டெல்லாம் பள்ளிகூடத்திலே வைச்சிருப்பாங்க. அதிலே பத்துப்பாட்டு மனசுக்கு வந்திடும், அடிக்கடி அதை எடுத்து பயன்படுத்துகிறாப்பிலே வரும். கொஞ்சம் கொஞ்சமாக வரும். இப்போது அது இல்லவே இல்லை. இப்ப என்னவோ இலக்கியம், பாரதம், இராமாயணம்தான், புராணங்கள் தான். இவைகளைப் பயன்படுத்த வழியில்லாமல் போச்சி.இன்றைக்கு நமக்கு நெறி ஏதாவது ஒன்று வேண்டுமானால் எதை எடுத்துக் கொள்ளுகிறது? அடிகளார் நல்லவண்ணம் அழுத்திச் சொன்னார்கள், பல தடவை ஒரு தடவைக்குமேல் 10 ,30 தடவைச் சொன்னார்கள், குறளைப் பற்றி ரொம்ப சரி, அவ்வளவு தான் இருக்குது. வேறு ஒன்றை அது கிட்டே வைக்கிறதுக்கு இல்லை. இருக்கலாமோ என்னமோ? நமக்கு தெரியலே.
ஆகவே நமக்கு இன்னைக்கு இலக்கியம் இல்லேன்னு சொல்லுகிறேன் நான். எந்தக் கருத்திலே சொல்லுகிறேன், இலக்கியம் எதுக்காக இருக்கவேணும்? இலக்கியம் மனிதனை நடத்த வேண்டும். மனிதனாலே நடத்தப்படகூடாது இலக்கியம். இலக்கியம் அதனுடைய கருத்துக்கள்
மனிதனை நீ இந்த இந்த மாதிரி இரு. இப்படி இப்படி நட. இந்த இந்த காரியத்திலே என்று அது உதவ வேண்டும். மேல் நாட்டு இலக்கியம் இருக்கிறது பின்பற்ற என்று சொன்னாலும் அதையும் பார்த்து ஏறக்குறைய நாம் கொஞ்சம் திருத்தும் படியாக இருக்கும்; என்று கூறி என் பேச்சை முடித்துக் கொள்ளுகிறேன். வணக்கம், நன்றி.

திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)

1957 அக்டோபர் 12-ம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் .வெ. ராமசாமி அவர்களுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது வெள்ளி சம்மட்டி அன்பளிப்பளித்தபின் தந்தை பெரியார் அவர்களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-

காந்தி சகாப்தத்தால் வந்த கேடு

நான் சமுதாயத்தொண்டன். என் போன்று பாடுபட இந்த காரியத்திலே யாரும் முன்வரலே. நமது காரியம் முடிகிற சந்தர்ப்பத்திலே தான் இந்த நாசமாய்ப் போன இந்த காந்தி சகாப்தம் வந்தது. இல்லாது போனால் அப்பவே நமது காரியம் முடிஞ்சி போயிருக்கும். வெள்ளைக்காரன் செய்ததைவிட இந்தக் காங்கிரசு வந்து ஒண்ணும் பண்ணிடலே. அந்தக் காலத்திலேயே பறையனையும், பாப்பானையும் சக்கிலியையும்,சட்ட சபையிலே ஒண்ணா உட்காராப்பிலே பண்ணிட்டான். பள்ளிக் கூடத்திலே உட்காராப்பிலே பண்ணினான். உத்தியோகத்திலே உட்காராப்பிலே பண்ணினான். இந்த மாதிரி ஒவ்வொரு காரியத்தையும் அவன்தான் பண்ணிகிட்டு வந்திருக்கிறான் பெருத்த எதிர்ப்புக்கிடையே. 1936-1937-லே எல்லா மாகாணத்திலேயும் காங்கிரசே ஜெயித்தது. அப்பதான் ஜஸ்டிஸ் கட்சி ஒழிஞ்சிது. எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு காங்கிரசு இந்தியா பூராவும் ஆட்சி. 13 மாகாணத்துக்கும் 13 முதன்மந்திரிகளும் பார்ப்பார். இங்கே சென்னை மாகாணத்திலே, திரு. ராஜகோபாலாச்சாரி காங்கிரசிலே பாடுபட்டார். அதனாலே அவர் முதல் மந்திரின்னு சொல்லலாம், மற்ற மாகாணத்திலே என்னா காரணம், மனுதர்மத்தைக் காப்பாற்றவே வந்தார்கள் எல்லாரும். திரு.ராஜகோபாலாச்சாரியும் அப்படியே. காந்தியும் - மனுதர்மத்தைக் காக்கவும் - ராமராஜ்யத்தை - ஏற்படுத்தவும், - வருணாச்சிரம தர்மத்துக்காகவும் பாடுபட்டார். முதலிலே அவர் காட்டினார் சூத்திரன் மந்திரியாகக் கூடாது, நிர்வாகஅதிகாரியாகக் கூடாது, உத்தியோகத்திலே இருக்கக்கூடாது.அதனாலே உத்தியோகம் பாப்பானுக்கே வந்தது. அயோக்கியப் பாப்பானை எல்லாம் போட்டார் காந்தியார்.எப்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அரசியல் சட்டப்படி செல்லாது என்றானோ, அதுபோல் ஜாதி ஒழிப்புக்கும் சட்டப்படி செய்ய முடியாது.

தீண்டாமையையே ஒழிக்கிறபோது ஜாதியும் ஒழியாமலா போயிடும்னு நம்பின பயித்தியக்காரனிலே நானும் ஒருத்தன். தீண்டாமையை ஒழிக்க திட்டங்கள் தயாரித்தபோது காந்தி தெளிவாகவே சொன்னார், கோயில் பிரவேசமோ ஜாதி ஒழிப்போ குளங்களில் தண்ணீர் எடுப்பதோ இந்த உரிமையெல்லாம் கேட்கக்கூடாது என்று காந்தியார் சொன்னார். மனுதர்மம் இருக்கிறபோது அதற்குமாறான காரியம் எதுவும் தீண்டாமை விலக்குத் தொண்டிலே சம்பந்தப் படுத்தக் கூடாது என்றார்.இந்த நாட்டு மக்களுக்கு ஓட்டுரிமை தந்தது 1952லே. 1949 லேயே சட்டம் பண்ணிட்டான். இதை நாம ஒத்துக்கிட்டேங்கிறான். 1949லே யார் இந்தப் பிரதிநிதிகள்? 1949லே நாம இல்லாத போது செய்துகிட்ட சட்டம். நமது பொது மக்களுக்கு ஓட்டுரிமையில்லாத போது ஏற்படுத்திக்கிட்ட சட்டம். நம்மைச் சுதந்திரத்தின்பேராலே, சட்டசபை இல்லாத காலத்திலே, ஏற்படுத்தின சட்டம் எப்படி நம்மைக் கட்டுப்படுத்தும்? இப்படியாக ஏராளமான பித்தலாட்டம்.

தமிழன் பதவிக்குவரணும்

நான் காமராஜரை ஆதரிக்கிறேன்னு கூட பலபேருக்குக் கூட சங்கடம் இருக்கலாம். காங்கிரசை ஆதரிக்கிறேன்னு இல்லே. தமிழன் பதவிக்குவரணும். நான் காங்கிரசை வளர்க்க விரும்பலே, என் தயவும் காங்கிரசுக்குத் தேவையில்லை. ஆனால், என்ன அவசியமிருந்தது எனக்கு,. காங்கிரசு ஜெயிக்காமல் போனால் பழயபடி பாப்பான் வந்திட்டால் நமது கதி என்னவாகும்? யாராவது ஒரு தமிழன் இருக்கட்டும். இந்த மாதிரி உணர்ச்சியைக் கொண்டுதான் இந்த எண்ணத்தின் பேரிலே ஏதோ காங்கிரசு வந்தாலும் தேவலாம்ன்னுதான் கருதினேன். என் சொந்தத்துக்காக இல்லை. ஏதோ இப்பவும் அந்த ஆள் (காமராசர்) இருக்கிற வரைக்கும், ஏதோ நம்மவர்களுக்கு உத்தியோகம் பாப்பானுக்கு வராமலிருக்க வேணும்னு கருதினேன். உத்தியோகம் தானே முக்கியம். அதுக்குத் தானே எல்லாரும் வசப்பட்டிருக்கிறாங்க.

அதனாலேதானே எல்லா காரியமும் செய்ய முடியுது. நாம சட்ட சபை மூலம் ஒண்ணும் செய்ய முடியாது. நாமளும் போவதில்லை. பின்னே எது மூலம் செய்யலாம்? சட்ட சபையிலும் நம்முடைய பிரதிநிதிகளுக்குப் பெரும்பாலும் இடமில்லை. எல்லாம் பார்ப்பனமயமாகி, எல்லாம் அவன் கைக்கே போயிட்டா, சர்வாதிகாரமாய் இருந்திட்டா, அவனுக்கு வேண்டியவன் களுக்காகவே நடத்த ஆரம்பிச்சிகிட்டானா நம்ம ஆளுங்க பெரும்பாலும் பாப்பானுக்கு அடிமையாய் இருந்திடுவாங்க. உணர்ச்சி இருக்கிறதும் கெட்டுப்போவும்.வைத்திய இலாகாவிலே ஒரு வேலை காலியாச்சி, ஒரு தமிழனுக்குக் கொடுத்தார் காமராசர், ராஜகோபாலாச்சாரி இருந்திருந்தா கட்டாயம் பாப்பானுக்குதான் கொடுத்திருப்பாரு நிர்வாகம் பார்க்கிற வேலைதான் அது. அந்த இலாகாவின் தலைமை.

இதை வைத்துகிட்டுதான் எழுதறான் சுதேசமித்திரன் பத்திரிக்கையிலே இவருக்கு முன்னாடி இருந்தவர் யாரைப்போடுன்னு சொல்லிவிட்டுப் போனாரோ அதன்படி காமராஜர் போடலே. அவன் அனுபவஸ்தன், படிச்சவன் பாஸ் பண்ணினவன். இந்த ஆளுக்கு என்ன தெரியும்? என்று எழுதுகிறான். இந்த ஆணவம் நிலைக்குமா? காமராசர் ஒழிஞ்சி நாங்க வந்தோமானால் நியாயமா உங்களுக்குக் கிடைக்கிறது கூட இனி கிடைக்குமா? தலை எடுக்க விடமாட்டோம், இதை அவன் சொல்றானைய்யா 1957லே காந்திநாடு ஏற்புடையதா? இந்த 1957-லேயாவது இந்த நாட்டுக்கு காந்தி நாடுன்னுபேரு வைச்சா நான் வரவேற்பேன். காந்தி-சகாப்தமானாலும் நான் வரவேற்பேன். ஏன்? அஸ்திவாரமே இல்லாத நமக்கு, சம்பந்தமே இல்லாத நமக்கு, இழிவு தரும்படியான ஒரு நிலைமையில் உள்ள பேரு பாரதநாடு என்று இந்த நாட்டுக்குப் பேரு இருப்பதைவிட யாராவது ஒரு மனுஷனுடைய பேராக இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. எதுக்காக இந்த நாட்டுக்குப் பாரதநாடு-ன்னு பேரு இருக்கவேண்டும்? அதுக்கு என்னா அர்த்தம் சரித்திரத்திலே ஏதாவது இருக்குதா? போக்கிரித்தனமாய் பாரதநாடு-ங்கிறான். காந்தியார் இறந்த உடனேயும் சொன்னேன். இந்த நாட்டுக்குக் காந்திநாடு-ன்னு
வைக்கச் சொன்னேன்.      அதாவது வருஷம் என்றதுக்கு நமக்கு ஆதாரமே கிடையாது. உலகத்திலே மற்ற எல்லாருக்கும் இருக்குது. உலகம் பூராவும் வருஷம் என்கிறதுக்குக் கிறிஸ்து பேரிலே இருக்குது. கிருஸ்து பிறந்து 1957ஆம் வருஷத்தில் இன்று நாம இருக்கிறோம். நமக்குன்னு என்னா இருக்குது சொல்லிக் கொள்ள? நான் பிரமாதி வருஷம் புரட்டாசி மாதம் பிறந்தேன். பிரமாதி வந்து எத்தனை வருஷமாச்சி, 17 வருஷமாச்சி, இன்னைக்கு எனக்கு 17 வயது இப்போ? எந்த பிரமாதி? எவனும் கேட்கிறதில்லே? பாப்பான் அவ்வளவு புரட்டு பண்ணிட்டான். 20,000 வருஷம் இந்த நாடு எங்கே எப்படி இருந்ததோ தெரியாது? முஸ்லீம் முகம்மது நபி பிறந்தது முதல் வருஷம் கணக்கிடுகிறான், எனவே காந்திபேராலே வருஷம் கணக்கிடட்டும் என்கிறேன்.



நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை