சிக்கனமும் மனிதநேயமும்
தந்தை பெரியாரைப் புரிந்து கொள்ளாதவர்கள் அவர்களை கருமி, கஞ்சன் என்று அர்ச்சனை செய்ததுண்டு. இது ஒரு தூரத்து, தவறான பார்வை, இப்படிக் கூறும் பலரும் சிக்கனத்திற்கும் கருமித்தனத்திற்கும் என்ன வேறுபாடு என்பதை அறியாதவர்கள்!
தேவைக்குச் செலவழிப்பது சிக்கனம்
தேவைக்குமேல் செலவழிப்பது ஆடம்பரம் தேவைக்கே செலவழிக்காதது கருமித்தனம்.
கையெழுத்துப் போடுவதற்கும்கூட நாலணா வாங்கிய தந்தை பெரியார் அப்படிச் சேர்த்த அப்பணத்தை யாருக்குக் கொடுத்தார்? கல்லூரிகளுக்கும், மருத்துவமனைக்கும் தந்தார்தானே என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர்.
1966இல் திருச்சியில் அய்ந்தரை லட்ச ரூபாயை அரசு கலைக் கல்லூரி துவக்க அளித்துவிட்டு,
அதில் எவ்வித உரிமையும் பெறவும் மறுத்தவர் மாணவர் சேர்க்கையின்போது நன்கொடையாளருக்கு, இத்தனை இடங்கள் ஒதுக்கீடு உண்டா என்றால் இல்லை என்பதே உண்மை!
1967இல் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் இப்போது அது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகி விட்டது. குழந்தைகளுக்கென தனியே ஒரு பகுதியில்லை என்ற குறையைப் போக்க 2 லட்ச ரூபாய் நன்கொடை அரசுக்கு அளித்தார் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்தவுடன்!
அதன் பிறகு லட்ச ரூபாய் ஈரோடு மருத்துவமனைக்கு கலைஞர் முதல்வரான நிலையில் தந்தார். அது இன்று தலைமை மருத்துவமனை! (விரிவாக்கம் பெற்று வளர்ந்துள்ளது).
இப்படிப் பல; வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாது என்பதை ஆரவாரமில்லாது செயல்படுத்தியவர் தந்தை பெரியார்; பலர் மருத்துவ படிப்புக்கும்,
உயர் கல்வி படிப்புக்கும் உதவி செய்துவிட்டு செக் எழுதியதுகூட அன்னை மணியம்மையாரிடமோ அருகில் இருந்தவர்களிடமோ கூட கூறியது கிடையாது!
பொது வாழ்க்கைக்கு வருமுன்னரே, ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்கள் மண்டிக் கடை வாலிபர் ராமசாமியாக இருந்த காலத்திலேயே சிக்கன உணர்வுடன் செயல்பட்டவர். வீட்டை விட்டுக் கோபித்துக்கொண்டு வடக்கே சென்றபோதுகூட, அய்தராபாத்தில் பிச்சை எடுத்தும், ஏலூரில் ஒரு வியாபார நண்பரிடம் தான் அணிந்திருந்த நகைகளையெல்லாம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லி அதன்பிறகே காசி யாத்திரைக்குக் கிளம்பினார். தமது கையில் இருந்த மோதிரத்தை மட்டும் அவசரத்துக்கு உதவும் என்பதற்காக இடுப்பில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்தார் என்பதும் அதை நிரூபிக்கவில்லையா?
இந்த சின்னப் பிள்ளை ராமசாமியின் சிக்கனம் மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியிடம் இல்லையே என்று வருந்தியது உண்டு!
ஆனால் அப்போதே இளமைப் பருவத்திலேயே,
அவரது கூற்றுப்படி அவர் மைனராய் காலியாய் திரிந்தவர். (அய்யாவின் எழுத்துப்படி)
அப்படி இருந்தும் அவர் சிக்கனக்கோட்டை அதிலும் தாண்டாமல்தானே வாழ்ந்துள்ளார்.
ஆனால் அப்படி வாழ்ந்த தந்தை பெரியார், காங்கிரசில் பொறுப்பு ஏற்ற பிறகு ஒத்துழையாமை, சட்ட மறுப்பு இயக்கத்தையும், கோர்ட்டுகள் பகிஷ்கரிப்பு இயக்கமும் நடத்திட காந்தியார் இட்ட ஆணையை ஏற்று தனக்கு வரவேண்டிய
50 ஆயிரம் ரூபாய் புரோநோட்டுகளை வசூலிப்பதையே கைவிட்டவராயிற்றே முரட்டுப் பிடிவாதத்துடன்.
அந்தக் காலத்தில்
50 ஆயிரம் ரூபாய் என்பது (85
ஆண்டுகளுக்கு முன்பு) இப்போதைய மதிப்பு பல நூறு கோடிகள் அல்லவா?
சேலம் விஜயராகவாச்சாரியார் என்ற பிரபல வக்கீல் தன் பெயருக்கு மேடோவர் (madeover) பெயர் மாற்றி தந்து விட்டால் தான் கோர்ட்டின் மூலம் வசூலித்து விடுவதாகச் சொல்லியவர்.
தந்தை பெரியார் அந்தத் தொகையை அப்படி குறுக்கு வழி மூலம் பெற வேண்டியதில்லை என்று உறுதியாக மறுத்து புரோநோட்டுகளை காலாவதி ஆகச் செய்தவர் என்பது எதைக் காட்டுகிறது? அவரிடம் கருமித்தனமும்,
பணமே எல்லாமும் என்ற மனப்பாங்கும் இருந்திருந்தால் அதைச் செய்திருப்பாரா?
தன் வீட்டுத் தோப்பில் இருந்து
500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்திருப்பாரா? ஒரு கணம் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அறிஞர் அண்ணா, திராவிட நாடு ஏடு துவக்க, அய்யாவின் நிதிக்கான வேண்டுகோள் அறிக்கைதான் திராவிட நாடு ஏட்டின் முதல் பக்கத்தை அலங்கரித்தது என்பதோடு, அச்சு எந்திரப் பொருள்களையும் அவர் தந்ததோடு, நன்கொடை ரூ.100/- (அந்தக் காலத்தில் அது பெருந்தொகை) தந்தல்லவா அன்பழைப்பு,
நிதி வேண்டுகோள் விடுத்தார்
(ஆதாரம்:
திராவிட நாடு, 20.6.1943).
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிதிக் குழுவை அமைத்தபோது நாமக்கல் செல்லப்பன்,
கருப்பண்ணன் போன்றவர்களிடம் ரூ.100/- முதல் நன்கொடை அளித்து துவக்கி வைத்தவர் (ஆதாரம்:
குடிஅரசு ஏடு).
தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கவிஞர் கருணாநந்தம் அவர்கள் தன் திருமணத்திற்காக ரூபாய் 50அய் பெரியார் அவர்களிடம் கடனாகப் பெற்றதை, திரும்பி வந்து திருப்பிக் கொடுக்கையில்,
அதை வாங்கிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே அதை ரைட்ஆஃப் (Write off) செய்து விட்டேன் போங்கள் என்று கூறியதை அந்த வாழ்க்கை வரலாற்று நூலில் பதிவு செய்துள்ளார்.
(தந்தை பெரியார் நூலின் முன்னுரை பக்கம் IV).
- கி.வீரமணி
(தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்)
நூல் - பெரியாரின்
மனிதநேயம்
(பெரியார் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்)
Comments
Post a Comment