ஒலிபெருக்கிக்குத் தடை - பெரியார் பேச்சோ தடைபடவில்லை!
தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் பல இடங்களில் இராமாயணத்தின் உண்மைத் தத்துவத்தில் உள்ள சத்தை எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்து வந்தார். இதைக்கண்டு வயிறெரிந்து போன மக்கள், வீதியிலே போக்குவரத்துக்கு பெரியார் கூட்டம் இடைஞ்சல் என்று புதிய தத்துவம் கூறிப் பதறினர், எழுதினர், குதித்தனர், கூவினர். அதன் விளைவு, தெருவிலே கூட்டம் நடப்பதற்கு ஒலி பெருக்கிக்கு உத்தரவு தர முடியாது என்றதொரு புது நிலைமை ஏற்பட்டு, ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற வால்மீகி இராமாயணச் சொற்பொழிவு கூட்டத்துக்கு ஒலிபெருக்கி உத்தரவு தரப்படவில்லை. சீப்பை மறைத்தால் திருமணத்தை தடை செய்துவிடலாம் என்று எண்ணியவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமக்கு உரத்த குரல் உண்டென்றும் 30 ஆண்டு காலத்திற்கு மேலாகவே ஒலி பெருக்கியே இறக்குமதி செய்யப்படாத நாளிலேயிருந்து கத்தி வருவதாகவும் தெரிவித்து, 2 மணி நேரத்திற்கு மேலாகவே ஒலிபெருக்கின்றி சொற்பொழிவாற்றினார்கள் - 5000த்துக்கு மேற்பட்டுக் கூடியிருந்த மக்களிடையே!
கழகத் தோழர்கள் இந்த ஒலிபெருக்கித் தடையுத்தரவை மீறுவதற்கும் தயாராய் இருந்தனர். பெரியார் அவர்கள்தான் அதைத் தடுத்து இதை மீறுவதால் ஒன்றும் நட்டம் வந்துவிடாதென்றாலும்கூட இன்றைய சர்க்காருக்கும் நமக்கும் மோதுதல் ஏற்படுத்தி கண்டு, ரசிக்க வேண்டும் என்று சிண்டு முடிந்துவிடும் பண்பினரின் எண்ணம் நிறைவேற இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிடும் என்பதால், அதற்கு நாம் இடங்கொடுக்கக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள்.
- விடுதலை, 14.11.1954
Comments
Post a Comment