இட ஒதுக்கீட்டால் என்ன பயன்?

பெரியாரின் திராவிடக் கொள்கையை வாயாரப் போற்றி நிலைப்படுத்திய ஜாதிவழிச் சலுகை  இட ஒதுக்கீட்டு வினையால் வந்ததே கோனர் என்பது யாதவ் என்ற மாற்றம் பெறும் அழிம்புப் போக்கு. சலுகை  இட ஒதுக்கீட்டால் தமிழரிடையே எந்த அளவிற்கு ஜாதி ஒழிந்துவிட்டது?
இது குணாவின் இன்னொரு குற்றச்சாட்டு.
பெரியாருக்கும், திராவிட இயக்கத்திற்கும் அடிப்படையான, உயிர்மூச்சான கொள்கை எதுவோ அதையெல்லாம் அடித்துத் தகர்த்து, அதை தேவையற்றது, கேடு தந்தது என்று காட்டி, பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் தமிழர் நலனுக்கு எதிராக நிறுத்தும் சதிச்செயலை இந்த மோசடிப் பேர்வழி செய்து, ஆரியத்திற்குத் துணை நிற்கும் வேலையை வெகு சூழ்ச்சியாகச் செய்துள்ளார் தனது நூலில் என்பதற்கு இக்குற்றச்சாட்டு நல்லதோர் எடுத்துக்காட்டு.
நஞ்சுகூட நன்மருந்தாகும் என்ற தத்துவ அடிப்படையில் தான் இடஒதுக்கீட்டில் ஜாதி பயன்படுத்தப்படுகிறதே அல்லாமல் அது ஜாதியை வளர்க்கிறது என்பது அடிமுட்டாள்தனமான வாதம்!
அரசியல் நடத்தவும், தான் தலைவராகவும் சிலர் ஜாதியைக் கையில் பிடித்துக்கொண்டு, அதை ஊதி ஊதிப் பெருக்கச் செய்கிறார்கள் என்று அவர்களைக் கண்டிப்பதற்கு மாறாக, இட ஒதுக்கீட்டுக் கொள்கையைச் சாடுகிறார் இவர் என்றால் இவர் உள்நோக்கம் என்ன? சிந்தித்துப் பாருங்கள்!
நோய் தீர்க்க மருந்து கொடுத்தால்கூட கேடு தரும் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும், அதற்காக மருந்தே உண்ணாமல் இருந்தால் நோய் ஆளையே கொன்று விடுமேஉயிரா பக்கவிளைவா என்றால் உயிர்தான் முதன்மையென்று முட்டாள்கூடச் சொல்வானே அப்படியிருக்க இதைக்கூட உணராது இந்தக் குணா உளறுகிறார் என்றால் இவர் முட்டாள் அல்ல மோசடிப் பேர்வழி என்பதே உண்மை!
அரசுத்துறை இட ஒதுக்கீடு என்பது தமிழரில் ஒரு விழுக்காட்டினைப் பற்றியது மட்டுமே என்னும் உண்மையை மறைத்து, அதைத் திராவிட அரசியலைத் தாங்கி நிற்கும் கொள்கைத் தூண்களில் ஒன்றாக ஆக்கி வைத்தது பெரியார் இயக்கம் என்றும் ஏளனம் செய்கிறார் இந்த எத்தர்.
ஒரு சதவீதமாகவுள்ள ஆரியர்கள் 100 சதவீதம் வேலை வாய்ப்பை விழுங்கிக் கொண்டிருந்த ஆதிக்க நிலையைத் தகர்த்த அணுகுண்டுதான் இடஒதுக்கீடு என்ற உண்மையை மறைத்து, இடஒதுக்கீடு ஒரு அற்ப விஷயம் அதனால் தமிழனுக்கு வந்த கிடைத்த நன்மை பெரிதாக இல்லை என்று உயிர்மூச்சான ஒதுக்கீட்டுக் கொள்கையை ஒதுக்கப் பார்க்கிறார். இது ஓர் உளவியல் அணுகுமுறை. முதன்மையான ஒன்றை அலட்சியப்படுத்துவதன் மூலம் செல்வாக்கு இழக்கச் செய்யலாம் என்பதே அது. அந்த யுக்தியையே இங்கு இவர் கையாள்கிறார்.
இட ஒதுக்கீட்டால் பெரும் பயன் இல்லையென்றால், இட ஒதுக்கீட்டைத் தடுக்க, ஒழிக்க ஆரியப் பார்ப்பனர்கள் அயராது தீவிரங் காட்டுவது ஏன்?
இதற்கான காரணத்தை பெரியார் தெளிவாகச் சொல்கிறார் பாருங்கள்:
நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால்; நம்முடைய உரிமைகளைப் பறித்து அனுபவிக்கிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தமாகும். அவர்களின் அழிவுமீதுதான் நம் உரிமையைப் பெற முடியும் நாம் உயர்வு பெறுவதில் ஆரியப் பார்ப்பனருக்கு ஏன் ஆத்திரம் என்பதற்கு உரிய காரணம் இப்போது புரிகிறதா?
குணா போன்ற குள்ளநரிகளுக்கும் சரி, ஏமாந்து மந்தையாய் வாழும் தமிழர்களுக்கும் சரி, ஒரு செய்தியைச் சொல்ல வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
நமக்கு எது நல்லது என்பதை நாம் பெரிதாக ஆய்வு செய்து கண்டறிய வேண்டியது இல்லை. ஆரியப் பார்ப்பனர்கள் எது கூடாது என்கிறார்களோ அது நமக்கு நல்லது; அவர்கள் எது வேண்டும் என்கிறார்களோ அது நமக்குக் கேடானது. அவ்வளவே! இந்த அளவுகோலை பெரியார் தந்த அளவுகோல்  தமிழர்கள் தவறாது பயன்படுத்தினால் ஏமாற வேண்டிய நிலையே வராது. இட ஒதுக்கீட்டால் ஒரு சதவீத தமிழனுக்கே நன்மை! இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று ஆரியத்திடம் அறிவை அடமானம் வைத்துவிட்டு எழுதும் குணாக்களுக்கு, அறை கொடுத்துப் பதில் சொல்வதுபோல், மண்டையில் அடித்து விளக்கம் கொடுப்பதுபோல் மண்டல் கமிஷன் கூறியுள்ள விளக்கத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
பிற்படுத்தப்பட்டோருக்கு  சில ஆயிரம் பதவிகளைத் தந்து விடுவதன் மூலம்  சமுதாயத்தில் 52 சதவீதமாக இருக்கும் அந்த மக்கள் சமூகத்தை முன்னேறியவர்களாக மாற்றிவிட முடியும் என்பது எங்களின் வாதமே அல்ல; ஆனால், ஓர் உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். சமூக பிற்போக்கு நிலைக்கு எதிரான போராட்டத்தின் முதன்மைப் பகுதியே பிற்படுத்தப்பட்ட மக்களின் சிந்தனையில் நடத்தப்பட வேண்டும் என்பதே!
இந்தியாவில் அரசுப் பதவிகள் என்பவை எப்போதுமே செல்வாக்கு மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகவே கருதப் படுகின்றன. அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்குப் பங்கை உயர்த்துவதன் மூலம், நாட்டை ஆள்வதில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்ற உணர்வை உடனடியாக அவர்களிடம் நம்மால் உருவாக்க முடியும்.
ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் மாவட்ட ஆட்சித் தலைவராகவோ, மாவட்ட காவல்துறை அதிகாரியோ வரும்போது, அதனால் வரும் பொருளியல் தொடர்புடைய பயன் அவரின் குடும்பத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால், அதனால் உள்ளத்தில் உண்டாகும் உள்ள அளவிலான உயர் விளைவு (எழுச்சி, மிடுக்கு, திடம், உறுதி, நம்பிக்கை, ஆளுமை முதலியன) மிக மிக அபாரமானது!
தனது சமூகத்தைச் சார்ந்த ஒருவர் இந்த நிலைக்கு உயர்ந்து வந்துள்ளார் என்றதை அறியும்போது, காணும்போது  அச்சமூகம் முழுமையுமே  சமூக அளவில் உயர்ந்துவிட்ட உணர்வைப் பெறுகிறது. தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்  ஆட்சி பீடத்தில் (அதிகாரத்தில்) இடம் பெற்றிருக்கிறார் என்ற உணர்வு அச்சமூகத்திற்கு மிகப் பெரிய உந்துதலை (உற்சாகத்தை, ஊக்கத்தை) உண்டாக்குகிறது.
- (மண்டல் அறிக்கை 13ஆவது அத்தியாயம்)
இப்போதுள்ள உற்பத்தி உறவுகளில் தீவிரமான மாற்றம் ஏற்படுவதே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும், நலத்திற்கும் வழிவகுக்கும் மிக முதன்மையான வழி என்பதே மண்டல் குழுவின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
- (மண்டல் அறிக்கை 13 34)
மேற்கண்ட மண்டல் குழுவின் அறிக்கைப் பகுதியில் சுட்டப்பட்டுள்ளவற்றைக் கூர்ந்து நோக்கினால் இட ஒதுக்கீட்டின் இன்றியமையாமை, நியாயமான தேவை, அதிலுள்ள உரிமை, மனித நேயம், சமத்துவம், போன்றவை வெளிப்படும்.
1.      மக்களுள் பெரும்பான்மையினரை சிறுபான்மை ஆதிக்கவாதிகள் (உயர் ஜாதியினர் என்போர்) அடக்கி, ஒடுக்கி மேலெழாமல், உரிமை தராமல், கல்வி தராமல் அடிமைப்படுத்தி, அவர்களைப் பிற்படுத்தி, அவர்களின் அந்த நிலையை அவர்கள் ஏற்கும்படி அவர்களின் உள்ளத்தை உருவாக்கியிருந்த நிலையில், அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் உள்ளத்தில் (சிந்தனையில்) நாமும் மனிதர், நாமும் மற்றவர்களைப்போல சமவாய்ப்பும் சம உரிமையும் உடையவர்கள், நம்மை அடிமை கொள்ள எவருக்கும் உரிமையில்லை, நம் பங்கை நாம் பெற, நாம் முயல வேண்டும் என்ற உணர்வை, எழுச்சியை, விழிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படை.
2.      ஒரு குறிப்பிட்ட உயர்நிலைக்கு, பதவிக்கு, பணிக்கு நாமும் வர முடியும்; இதோ நம் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் அதை எட்டிப் பிடித்துவிட்டார்; நாமும் எட்டலாம் என்ற நம்பிக்கையை ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளத்தில் உசுப்பி விடுவதே இட ஒதுக்கீட்டு கொள்கையின் இலக்கு.
3.      அடிநிலையில் உழலும் பெற்றோர் தங்கள் பிள்ளை உயர்நிலை எட்டியதும், எம்பிள்ளை எவ்வளவு பெரிய பதவியில் உள்ளது என்று பெருமை கொள்ளும் பெற்றோர்போல, எம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இந்த உயர்வை எட்டி விட்டார் என்று அந்த அடிநிலைச் சமுதாயம் பெருமை கொள்வதன் மூலம், அந்த உயர்நிலையை நோக்கி அச்சமுதாயத்தை உந்தித் தள்ள, உற்சாகப் படுத்த, ஊக்குவிக்க இந்த இட ஒதுக்கீடு பயன்படுகிறது.
என்ற மூன்று உயரிய நோக்கங்களை மேற்கண்ட அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இப்படிப்பட்ட இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த, போராடி வென்ற திராவிட இயக்கத்தை, பெரியாரை, என்ன பெரிதாய் இதில் சாதிக்க முடிந்தது? இதில் ஜாதி வெறி வளர்ந்து கேடுதான் சூழ்ந்தது என்று உதாசீனப்படுத்தி, களங்கம் கற்பித்து ஒருவர் நூல் வெளியிடுகிறார் என்றால் அவர்களுக்கு எல்லாம் உள்ளம் இல்லை, அங்கு கள்ளமே உள்ளது என்பதே அதற்குப் பொருள். அந்தக் கள்ளர்கள் வைக்கும் கன்னியில் சிக்காமல் தமிழர்கள் விழிப்போடு சிந்திக்க வேண்டும். விலை போன குணாக்கள், இன உணர்விற்கு உலைவைக்க உட்கார்ந்து விட்டனர். அதை உடைத்தெறிய வேண்டியது ஒவ்வொரு சொரணையுள்ள தமிழனின் கடமையாகும்!
ஒரு சதவீதம் தமிழனுக்குத்தானே இந்த ஒதுக்கீட்டால் பயன்? என்று கேட்கின்ற கிறுக்கர்கள் கீழ்க்கண்டவற்றை நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது வெறும் எண்ணிக்கை சார்ந்த விஷயம் அல்ல. ஓர் ஆரிய பார்ப்பனச் சிறுவன்கூட நம் இனத்தின் முதியவர்களைப் பெயர் சொல்லி, வாடா போடா என்ற இழிநிலையை (ஆதிக்கக் கொடுமையை) அகற்றும் வகையில் அந்த ஆரியப் பார்ப்பனர் குமாஸ்தாவாக கோப்புகளைத் தூக்கிப் பின்னே வர, ஆதித் திராவிட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் மாவட்ட ஆட்சியராக முன்னே மிடுக்கோடு நடந்து செல்ல ஒரு மிகப் பெரிய சமூகப் புரட்சியைச் செய்தது எது? இட ஒதுக்கீடு அல்லவா?
ஒரு ஆரியப் பார்ப்பனர், ஒரு தோட்டியின் பிள்ளைக்குத் தன் மகளைத் திருமணம் செய்து தரமுன் வந்திருப்பது எதனால்? ஆதிக்கவாதிகளின் உள்ளத்தில் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது எது?
ஊரின் நடுவே, சேரியில் வாழ்ந்தவன் வீடு கட்டி வாழும் நிலை இன்றைக்கு வந்துள்ளதே அந்த மாற்றம் எதனால் வந்தது? சிந்திக்க வேண்டாமா?
உண்மையிலேயே சமூக அக்கறையிருந்தால், அரசுத் துறையில் உள்ளதுபோல், தனியார் துறை அனைத்திலும் இட ஒதுக்கீட்டின்படி வேலை அளிக்க வேண்டும் என்று போராட வேண்டும். ஒரு சதவீதம்தானே வேலை கிடைக்கிறது? என்ற கவலைக்கு அதுதான் தீர்வு! அதை விடுத்து அயோக்கியத்தனத்தின் உச்சத்திற்குச் சென்று, அந்த ஒரு சதவீதத்திற்கும் உலை வைத்து, ஆரியப் பார்ப்பனர்களே அனைத்தையும் அனுபவிக்கட்டும் என்று அவர்களின் கைகூலியாய் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்றால், அவர்களை அனுமதிப்பது எந்த வகையில் சொரணையுள்ள தமிழனுக்கு அழகாகும்!
உலகமயமாக்கலால் தனியார் துறை வளர்ந்து வரும் நிலையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டியது சமூக நீதியின் கட்டாயமாகும். இதற்கான பணியைச் சமூகநீதி அமைப்புகள் உடனே செய்ய வேண்டும். வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து போராட வேண்டும். குணா போன்ற குள்ளநரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக் கூடாது!
தனித்தமிழ் ஆர்வலர், தமிழரின் நலம் விரும்பி, ஆய்வு அறிஞர் என்று தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு, அடிப்படையற்ற, ஆதாரமற்ற மோசடிச் செய்திகளைப் பரப்பி, தன்னிகரில்லா தலைவரை, இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி வரும் குணாக்கள் உண்மையில் தங்கள் கருத்தில் நம்பிக்கையிருந்தால், நாள் குறித்துவிட்டுப் ஒரு பொது விவாதத்திற்கு வரத் தயாரா? என்று சவால்விட்டு கேட்க விரும்புகிறேன்! அறிவு நாணயம், நேர்மையிருந்தால் அறையைவிட்டு அரங்கிற்கு வரவேண்டும். எங்கள் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்!
மேம்புல் மேய்ந்து ஆட்டுமந்தைகளாய் அந்தக் குணாக்களின் பின் செல்லும் ஏமாளித் தமிழர்கள் இதற்கு ஏற்பாடு செய்யட்டும்! சாயம் வெளுப்பதை, சந்தி சிரிப்பதை அப்போது அறியலாம்!
 நூல் - ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம் 
    ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை