தந்தி இங்கிலீஷ்



சிக்கன நாளுக்கு ஒரு சின்னத்தை உலகோர் தேர்வு செய்யவேண்டும் என்று சொன்னால், அதற்குச் சரியான அடையாளம் - தந்தை பெரியார் அவர்கள்தான்! அவர் படத்தையே போட்டு இருக்கலாமே!

அய்யாவைப்போல, அன்றாட வாழ்விலும் சிக்கனத்தையே ஒரு வாழ்க்கை முறையாகக் கொண்டு ஒழுகிய தலைவர் வேறு எவருமிலர்!

எடுத்துக்காட்டாக சில தகவல்கள்:

(1) சுமார் 80 ஆண்டுகளுக்குமுன்பு - சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலத்தில், அவருக்கு வந்த கடிதங்களின் மேல் உறைகளை அப்படியே தூக்கி - இன்று நாம் செய்வதுபோல, குப்பைக் கூடையில் போடமாட்டார்; மாறாக, அந்த உறைகளைப் பத்திரமாக வைத்துக்கொண்டு, சேதாரமில்லாமல் பிரித்து, ஒரு கிளிப்பில், பிரிக்கப்பட்ட உள் பாகத்தை - முகவரி எழுதாத பகுதியை - வெளியே வைத்து முக்கியக் குறிப்புகளை அவற்றில் எழுதி வைத்துக் கொள்ளப் பயன்படுத்திய நேர்த்தியே நேர்த்தி!

(2) 90 ரூபாய் சேர்ந்தால், பக்கத்திலுள்ள அன்னை மணியம்மையாரிடம் ஒரு 10 ரூபாய் தற்காலிக கடனாகப் பெற்று, 100 ரூபாய் நோட்டு, ஒரு பச்சை நோட்டு (இப்படித்தான் அந்தக் காலத்தில் 100 ரூபாய் நோட்டினைக் குறிப்பிடுவது வழக்கம்) ஆக்கி, தனது சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்து, பெரிய பின் ஒன்றினை குத்தி வைத்திருப்பார். பையில் உள்ளது கீழே விழுந்துபோகாமல் இருக்க வசதியாக!
(3) பெரியார் திரைப்படத்தில் வரும் இரண்டு காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்; சிக்கனமும், சிரிப்பும் இரண்டுமே வரும்!

() ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு ரயில் பயணம் செய்யும்போது, அண்ணாவை அழைத்து இரண்டு டிக்கெட் வாங்கச் சொன்ன பெரியார், கரூருக்கு (திருச்சிக்கும், ஈரோட்டுக்கும் இடையில் உள்ள பெரிய ஊர்) டிக்கெட் எடுக்கச் சொல்கிறார். வண்டி கரூரில் நீண்ட நேரம் நிற்கும்; வெளியே சென்று அங்கிருந்து திருச்சிக்கு இருவருக்கும் இரண்டு டிக்கெட் எடுக்கச் சொன்னபோது, இந்த வண்டி நேரே திருச்சிக்கே போகிறது; திருச்சிக்கு டிக்கெட் எடுத்துவிடலாமே என்று கூறுகிறார் அண்ணா! அய்யா பெரியார், இல்லிங்க அண்ணாத்துரை - நேரே துரு டிக்கெட் எடுத்தால் பணம் கூட, கரூரில் (இடையில்) இறங்கி டிக்கெட் எடுத்தால், 2 அணா ஒரு டிக்கெட்டுக்கு மிச்சம். அதன்மூலம் 4 அணா நமக்கு மிச்சமல்லவா? என்பார்!

() தந்தி கொடுக்கச் சொன்னவர், முன்பே சொல்லிவிட்டோம் என்பதை தந்தியில் இங்கிலீஷில் எழுதுங்கள் என்று அண்ணாவிடம் சொல்ல, அவர்  Alredy told  என்று எழுதிக் காட்டும்போது, தந்தை பெரியார் 2 வார்த்தைகள் ஆகிவிட்டனவே - செலவு ஆகுமே, அதற்குப் பதிலாக  tolded – told – tolded என்பதாகப் போடலாமே என்பார். அண்ணா அப்படி ஒரு சொல் இங்கிலீஷில் இல்லையே, வழக்கத்திலும் இல்லையே என்றவுடன், தந்தி இங்கிலீஷீக்கு எதுக்குங்க இலக்கணம்? எல்லாம் படிப்பவங்க புரிந்துகொள்வாங்களே என்பார்! அண்ணா, இதைச் சொல்லிச் சொல்லி வாழ்நாள் முழுவதும் சிரிப்பார்; சிரித்துக்கொண்டே இருந்தார்!

அய்யாவையும் மீறிய சிக்கனம் அம்மா மணியம்மையாருடையது! ஒரு சிறு பை, மாற்றுக்கு ஒரே புடவை. அதையே துவைத்துக் கட்டிக் கொள்வார். சலவையாளருக்கு பெரியார் வீட்டில் தேவையே இல்லாத வாழ்க்கை. இருவரது சிக்கனமும் தமிழ்நாட்டுக்கும், உலகத்திற்குமே அறக்கொடைகளாகி, கல்லூரிப் பல்கலைக் கழகமாகி, வளர்ந்தோங்கியுள்ளது - இந்தச் சிக்கனத்தால்தானே!

- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி – 4



Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை