இதோ பெரியாரில் பெரியார்



வாலிபர்கள் என்றாலே பெரியாரின் அகராதியில் அனுபவம் அற்றவர்கள் என்பதுதான் பொருள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அகராதியிலோ, அவர்கள்தான் நிகழ்காலச் சிற்பிகள், எதிர்கால மன்னர்கள் தமது இஷ்டப்படி தண்டவாளத்தை பெயர்த்துத் தம்மை பதவியில் உட்கார வைக்கக் கூடியவர்களும் அவர்கள்தான் என்பார்கள். ஆனால் இதை பெரியார் ஒப்புக் கொள்ளமாட்டார். ஒப்புக் கொள்ளாமல் இருக்கக் காரணமும் உண்டு. எனது அனுபவமும் அதுதான். நான் ஒருசமயம் தோழர் அய்யப்பன் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் நடந்த ஒரு மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அதற்குச் செல்லும்பொழுது ரயிலில் நன்றாக தூங்கிவிட்டேன். வண்டி ஈரோட்டை தாண்டிச் சென்றபிறகுதான் விழித்துக் கொண்டேன். ஆகவே அடுத்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிவர மணி 11 ஆகிவிட்டது. நான் பேச வேண்டிய கட்டமும் வந்துவிடவே நானும் எனது பேச்சைத் துவக்கிவிட்டேன். தலைவர் ஏதோ அவசர வேலையாக 1 மணி வண்டிக்கே போக வேண்டியிருந்ததால் பெரியார் அவர்கள் 12.30 மணிக்கே கூட்டத்தை முடித்துவிட விரும்பி 12.15க்கே எச்சரிக்கை செய்தார். நான் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே தலைவரை எழுப்பி அழைத்துச் சென்றுவிட்டால் நான் எங்கே கோபித்துக் கொள்ளுவேனோ என்ற பயம் ஒரு புறம் தன்னை வாட்ட, அவரைக் காலா காலத்தில் அனுப்பி வைக்கவேண்டிய தமது பொறுப்பு ஒருபுறம் வேதனை செய்ய, என்னை நிறுத்திக் கொள்ளும்படி ஜாடையாகக் கேட்டார். எனக்கு அப்பொழுது மண்டைக் கர்வம் ரொம்ப அதிகம். ஆகவே இவரென்ன நம்மைத் தடைசெய்வது என்று நினைத்து இது என்ன சர்வாதிகாரமா என்று கேட்டுவிட்டு எதிரிலிருந்த தோழர்களைப் பார்த்தேன் அவர்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா? ழுடி டீ என்றார்கள், அதாவது நிறுத்தாதீர்கள், தொடர்ந்து பேசுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

நானும் விடாப்பிடியாய் பேசிக் கொண்டே இருந்தேன். குறிப்பிட்ட நேரம் வரவும் பெரியார், தோழர் அய்யப்பன் அவர்களை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். நான் பேசி முடித்ததும் ஏதோ ஒரு பெரிய காரியத்தை சாதித்துவிட்டதுபோல் நினைத்துக் கொண்டு, மாநாட்டு உணவைக் கூடச் சட்டைச் செய்யாமல் கோபத்தோடு ஹோட்டலில் சென்று சாப்பிட்டுவிட்டேன். தோழரை வழி அனுப்பிவிட்டுவந்த பெரியார் அவர்கள், திருட்டுப் பூனை கருவாட்டுத் துண்டுக்காக மோப்பம் பிடித்து திரிவது போல், கடைத்தெருவில் திரிந்து கொண்டிருந்த என்னைக் கண்டுபிடித்து விட்டார். நான் பாராததுபோல் கொஞ்சம் ரப் அண் டப் ஆக சற்று அசட்டையாக நடக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அவரா விடுகிறார், என்னாங்க சாப்பிட்டீங்களா? என்று சற்று உரக்கவே கேட்டுவிட்டார். எனது சப்தநாடிகளும் தளர்ந்துவிட்டது அதனைக் கேட்டதும், எனக்கு ரொம்பவும் அவமானமாகி விட்டது. நாம்தான் தவறு செய்துவிட்டோம் என்று உணர்ந்து கொண்டுவிட்டேன்.

- அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி

(1948இல் திருவண்ணாமலை மாநாட்டுப் பேச்சு)

நூல்: இதோ பெரியாரில் பெரியார்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை