என்னைக் கவர்ந்த பெரியாரின் குணங்கள்!
தந்தை பெரியார் திடலிலும், திருச்சி மாளிகையிலும், சென்னை அரசு பொது மருத்துவமனையிலும், நெடுநேரம் உரையாடும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். அவரது எண்ணங்கள் துணிவு வெளிப்படையான குணங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அந்த மாமனிதரின் எண்ண அலைகள் இன்றும் என் நினைவுக்கு வருகின்றன. இதோ அவற்றில் சில:
தந்தை பெரியார் அவர்கள் சமூக நலம் காப்பாற்றப்பட்டு, பகுத்தறிவுப் பிரசாரம் தொடரவே திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார். தந்தை பெரியார் நினைத்திருந்தால் தமிழக முதல்வராகியிருக்க முடியும். இருப்பினும் தேர்தலில் திராவிடர் கழகம் நிற்காது என்ற முடிவில் தெளிவாக இருந்தவர். அதேநேரத்தில் ஆட்சியில் இருப்பவர்களை தம் கொள்கை நோக்கில் வேலை வாங்கினார். அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராகி, தமிழ்நாடு என பெயரிட்டார். சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும்படி ஆக்கினார். இரு மொழிக் கொள்கையை அறிவித்தார். ஆட்சியையே பெரியாருக்குக் காணிக்கை ஆக்கினார். நான் கேட்டேன், அய்யா நீங்கள் ஏன் தேர்தலைப் புறக்கணிக்கிறீர்கள்? என்று. அவர் சொன்னார்: தேர்தல் என்று வந்தால் கொள்கையைப் பேச முடியாது. ஓட்டுக்கு அலையணும். பார்ப்பனரைக்கூட சமாதானப்படுத்தணும். நான்தான் அவர்களுக்கு வேட்டு வைப்பவனாயிற்றே. எப்படி ஓட்டு கேட்க முடியும்? என்றார்கள். அவர் கண்ட இயக்கமும் அன்றுமுதல் இன்றுவரை சமுதாய நலனுக்குப் பயன்படும் என்ற அளவில் எந்த ஒரு அரசாங்கத்தையும் ஆதரிப்பதும், எதிர்ப்பதும் உள்ளதே தவிர தேர்தலில் வேட்பாளர்களாக யாரையும் நிறுத்துவதில்லை. பதவி ஆசை அறவே இல்லாதவர்கள்தான் கருப்புச் சட்டைக்காரர்கள் என்பது உலகறியும்!
Comments
Post a Comment