மாட்டுக் கொட்டிலில் மகத்தான விருந்து!
தந்தை பெரியார் அவர்கள் சொன்னதையே செய்பவர்; செய்வதையே சொல்பவர். பொது வாழ்வின் பேரால் மேடையில் ஒன்று பேசிவிட்டு வீட்டில் அதாவது சொந்த வாழ்க்கையில் நேர்மாறாக நடப்பவர் அல்லர் என்பதும் நாடே அறிந்த உண்மையாகும். இதற்கு எத்தனையோ சான்றுகளை, சம்பவங் களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், ஒன்றினை மட்டும் காண்போம்.
தந்தை பெரியார் அவர்களுக்கு ஏர்க்காடு கடை வீதியில் ஒரு சிறிய பங்களா இருப்பது பலருக்குத் தெரியும். நாம் இங்கு கூறப்போகும் சம்பவம் அந்த வீடு வாங்கப்படாத காலத்தில் நடந்தது. அதாவது சற்றேறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது.
தந்தை பெரியார் அவர்கள் வெய்யில் காலங்களில் ஏர்க்காடு வருவதானால் சிறுவாடகை வீடு அமர்த்திக்கொண்டுதான் தங்குவது வழக்கம். ஒரு தடவை மின் வசதி கூட இல்லாத வீட்டைப் பிடித்துத் தங்கினார்கள். தங்கி இருந்த வீட்டைச்சுற்றி, மிக்க ஏழ்மையில் உழலும் தாழ்த்தப்பட்ட மக்களே பெரிதும் சிறு, சிறு குடிசைகளில் வசித்தனர். அனேகமாக ஏர்க்காட்டில் அப்படிப்பட்ட மக்கள்தான் மிகுதியாக அன்று வசித்தார்கள். சிலர் மாடு கன்றுகளை வைத்துப் பால் கறந்து பிழைத்து வந்தனர்.
தந்தை பெரியார் அவர்கள் ஏர்க்காட்டில் வந்து தங்கி இருக்கின்ற செய்தி நகரில் பரவிவிட்டது. தினம் காலை முதல் இரவு வரையில் ஏராளமான மக்கள் தந்தை பெரியார் அவர்களைக் கண்டு வணக்கம் செலுத்தி அளவளாவிச் சென்ற வண்ணம் இருந்தனர்.
இரண்டு, மூன்று தினங்களுக்குப் பிறகு சில இளைஞர்கள் அய்யா அவர்களை சந்தித்து இவ்வூர் மக்கள் தங்கள் அறிவுரையினைக் கேட்க மிக்க ஆவல் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். நாங்கள் ஓர் கூட்டம் ஏற்பாடு செய்கின்றோம். அய்யா அவர்கள் எங்கள் வேண்டுகோளை ஏற்று வந்து பேச வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
அய்யா அவர்களுக்கு ஓய்வு என்பதே பிடிக்காத ஒன்றாயிற்றே! மிக்க சலிப்போடு இருந்தவருக்கு இப்படி மக்களை வழக்கம்போல சந்தித்து அறிவுரை வழங்கும் வாய்ப்புக் கிடைத்தால் விடுவாரா? ஆகா! அப்படியா மிக்க மகிழ்ச்சி. போய் ஏற்பாடு பண்ணுங்கள்; அவசியம் கலந்து கொள்கின்றேன் என்று கூறினார்கள். வந்த தோழர்களும் அய்யாவிடம் விடை பெற்றுக்கொண்டு சென்று கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
கூட்டம் ஏரிக்கரையருகே இருந்த மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏர்க்காடு நகர மக்களே ஒருசேர ஓர் இடத்தில் திரண்டு விட்டார்கள் என்று சொல்லும் வண்ணம் ஆண்களும் பெண்களும் மிகத் திரளாகக் குழுமி இருந்தனர்.
தந்தை பெரியார் கடவுள், மதம், ஜாதி ஆகியவைகள் ஒழிக்கப்படவேண்டிய அவசியம் பற்றியும், அவைகளால் விளைந்துள்ள கேடுகள் பற்றியும், மற்றும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள், மூட நம்பிக்கைகள் ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கி உரையாற்றிக்கொண்டே வரலானார்.
கூட்டத்தில் திடீர்க் கேள்வி!
ஏற்கனவே நான்கு, அய்ந்து நாட்களாக மக்கள் ஆண்களும், பெண்களுமாக கூட்டம் கூட்டமாக தந்தை பெரியார் அவர்கள் தங்கி இருந்த இடத்திற்குச் சென்று அய்யா அவர்களைக் கண்டு களித்து அளவளாவி வருவது கண்டு பொறாமை அடைந்து இருந்த காங்கிரஸ்காரர்கள், கூட்டத்தில் தங்களின் கைப்பாவையான இரண்டொரு அப்பாவிகளைப் பிடித்து கூட்டத்தின் நடுவே எழுந்து கேள்வி கேட்கும்படி தூண்டி விட்டுவிட்டு தாங்கள் தூரவே இருந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒருவர் திடீர் என்று எழுந்து அய்யா, இப்படி எல்லாம் பேசி மக்களைக் கெடுத்துவிட்டுப் போகவா இங்கு வந்திருக்கின்றீர்கள்? ஜாதி கூடாது, மதம் கூடாது, உயர்வு தாழ்வு கூடாது என்று கூறுகின்றீர்களே, அது எப்படி முடியும்? கையில் உள்ள அய்ந்து விரல்களுமா ஒரே மாதிரியாகவா உள்ளன? எனவே, எல்லா ஜாதி மக்களும் எப்படி ஒன்றாக முடியும்? சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வைதான் எப்படி ஒழிக்க முடியும்? அது நம்ம கையிலா உள்ளது? ஆண்டவன் கட்டளையினை மாற்ற நீங்கள் யார்? ஜாதி கூடாது? மதம் கூடாது என்று மேடையிலே பேசுகின்றீர்களே, நாளை உங்கள் வீட்டுப் பெண்ணை ஒரு தாழ்த்தப்பட்ட வாலிபனுக்குத் திருமணம் செய்து கொடுக்க முன் வருவீர்களா? என்று கேட்டார்.
உங்கள் அண்ணனுக்குப் பெண் இல்லையா? தந்தை பெரியார் அவர்கள் அந்தத் தோழரைப் பார்த்து, அய்யா, பெண் விரும்பி இப்படி மணம் செய்துகொள்ள முன்வந்தால் கண்டிப்பாக நான் தடுக்க மாட்டேன். மனமுவந்து செய்து வைப்பேன். ஆனால், எனக்குப் பெண்ணோ, பையனோ இல்லையே! ஆகவே, நான் அந்தக் கருத்துக்கு உடன்பாடு உடையவனே ஒழிய நான் என்றுமே எதிர்க்க மாட்டேன் என்று சொன்னார்.
உடனே கேள்வி கேட்டவர் உங்களுக்கு பெண் இல்லை என்றால் உங்களுடைய அண்ணனுக்குப் பெண், பிள்ளைகள் இருக்கின்றனவே அவர்களுக்குச் செய்து வைப்பதுதானே? என்று கேட்டார்.
அய்யா அவர்கள் முதலில் என்னுடைய பிள்ளைகளே இருந்தால் என் பேச்சை கேட்குமா என்பதே உறுதி இல்லாதபோது அண்ணன் குடும்பத்தையோ, உறவினர் குடும்பத்தையோ பற்றிச் சொல்ல நான் தயாராக இல்லை. மக்களை எல்லாம் அறிவுள்ளவர்களாக ஆக்கி இந்தக் கருத்தை புகுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய பணியே தவிர, கட்டாயப்படுத்தி புகுத்துவதல்ல. யாராய் இருந்தாலும் சரி கட்டாயப்படுத்தி இப்படி புகுத்தக்கூடிய காரியம் அல்ல.
எனவே, மக்களுடைய அறிவினைப் பண்படுத்தி அதன் மூலம் மக்கள் உணர்ந்து அந்தக் காரியத்தை மக்களாகச் செய்ய வேண்டுமென்பதுதான் எங்களுடைய வேலை. அதற்காகத்தான் நான் பாடுபடுகின்றேன். அதற்கு வேண்டிய காரண காரியங்களை எல்லாம் தான் நான் எடுத்துச் சொல்லி வருகின்றேன். மக்கள் அவர்கள் புத்தியதனை திருத்தி இத்தகைய பணியில் ஈடுபட வேண்டும்.
ஆனால், எனக்கு என்று ஒரு பெண்ணோ, பிள்ளையோ இருக்குமேயானால் கூடுமானவரையில் அவர்கள் அறிவினைப் பண்படுத்தி என்னுடைய வழியிலேதான் செய்ய பெரிதும் முயற்சிப்பேன் என்று சொன்னார்.
எங்கள் வீட்டில் சாப்பிட வருவீர்களா?
அதற்கு அவர் அது போகட்டும். நீங்களே உங்கள் மனச்சாட்சிப்படி சொந்தமாக முடிவெடுக்கக்கூடிய ஒன்றினை கேட்கின்றோம், செய்வீர்களா என்று கேட்டனர். அய்யா அவர்கள் அதற்கு நீங்கள் எது கேட்டாலும் நானாக சொந்தமாக முடிவெடுத்துச் செய்யக்கூடிய காரியமாக இருந்தால் செய்வதற்குத் தயாராக இருக்கின்றேன் என்றார்கள்.
அதற்கு கேள்வி கேட்டவருக்கு துணையாக நின்றுகொண்டு இருந்த ஒருவர் ஜாதி கூடாது, மதம் கூடாது, எல்லோரும் சமத்துவமாகப் பழக வேண்டும் என்று கூறுகின்றீர்களே! தாழ்த்தப்பட்டவர்களாகிய எங்கள் வீட்டில் நாளைக்கு நீங்கள் சாப்பிட வருவீர்களா? என்று கேட்டார்.
தந்தை பெரியார் அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார், அய்யா! மிக்க நன்றி. நான் யார் வீட்டிலே வேண்டுமானாலும் சாப்பிடத் தயாராக இருக்கின்றேன். நாக்குக்கு ருசியாகவும், மூக்குக்கு மணமாகவும் சாப்பாடு போட்டாலும் நான் சாப்பிடுவேன். நீங்கள் சொல்லும் வீட்டில் தாராளமாக நான் வருகின்றேன். எப்போது வரவேண்டும் - என்றைக்கு வரவேண்டும்? என்று கேட்டார்கள். கேள்வி கேட்டவரோ திகைத்துப்போய் நின்று விட்டார்.
அந்தக் காலத்தில் இப்படி அய்யா அவர்கள் கூறியது அவர்களுக்குப் புதியதாகவும், அதிசயமாகவும் பட்டது. அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு விட்டார்கள்.
உடனே, ஏராளமான தாழ்த்தப்பட்டத் தோழர்கள் எழுந்து அய்யா நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்! எங்கள் வீட்டுக்கு வாருங்கள்!! என்று உணர்ச்சி மேலிட்டவர்களாக அய்யா அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்கள்.
அய்யா அவர்கள் வேடிக்கையாகக் கூறினார்கள். எல்லார் வீட்டுக்கும் வருவதானாலும் தினம் ஒரு வீட்டுக்கு வருகின்றேன். எனக்கு சாப்பாட்டுச் செலவு மிச்சமாயிற்று. ஆனால், நீங்கள் உங்களுக்குள்ளாகவே முடிவு பண்ணிக்கொண்டு யார் வீட்டுக்கு வர வேண்டும், என்றைக்கு வர வேண்டும் என்பதைக் கூறுங்கள் வருகின்றேன். இன்னொன்னும் சொல்கின்றேன். நான் வருவதாக இருந்தால் நான் மட்டும் தனியாக வர முடியாது. மணியம்மையார் மற்றும் நான்கைந்து பேர்களாவது கூட வருவார்கள். உங்களுடைய நிலைமைக்கு இத்தனை பேருக்கும் உணவு போட வசதி இருக்காது. இதற்கு நான் ஒரு வழியும் சொல்கின்றேன். தாராளமாக நீங்கள் இன்னும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் ஏற்பாடு செய்யுங்கள். நான் வேண்டுமானால் அரிசி, பருப்பு, செலவுக்கு பணம் ஆகியவைகளும் கொடுக்கின்றேன்.
நீங்களே சமைத்து உங்கள் இடத்திலேயே போடுங்கள். உங்கள் கஷ்ட நிலைமையை நன்றாக உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால் சொல்லுகின்றேன். நான் கொடுத்துச் செய்யச் சொல்லுகின்றேன் என்பது தங்களுக்கு இழுக்கு என்று தயவுசெய்து கருத வேண்டாம். மீண்டும் சொல்லுகின்றேன். உங்கள் நிலையினை அறிந்து சொல்லுகின்றேன். ஏனென்றால், உற்சாகத்தில் நீங்கள் சாப்பாடு போடுவதாக ஒப்புக் கொண்டு வீட்டுக்குச் சென்று தடுமாற வேண்டாம், ஆகவேதான் சொல்லுகின்றேன் என்று கூறிவிட்டு மேடைக்குப் பின்புறத்தில் அமர்ந்து இருந்த அன்னை மணியம்மையார் அவர்களை அழைத்து அம்மா, நாளைக்கு இவர்கள் வருவார்கள் எத்தனை பேருக்கு சாப்பாடு செய்கின்றார்களோ அதற்குத் தேவையானவைகளை எல்லாம் கொடுத்து விடு என்றார்.
பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்களின் அறிவுரையினைக் கேட்டுவிட்டு அனைவரும் வீடு சென்றனர்.
அடுத்த நாள் இரண்டு மூன்று ஆண்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள் இரண்டொருவருமாக அய்யாவின் இருப்பிடத்திற்கு வந்து நாங்கள் சுமார் 20, 25 பேர்களுக்கு சமைக்கலாம் என்று இருக்கின்றோம். இந்த ஊரில் உள்ள பெரியவர்களை எல்லாம் கூப்பிட்டுப் பார்க்கின்றோம். யார் யார் வருகின்றார்கள் என்று பார்த்து விடுவதாக உள்ளோம். தங்களைப் பற்றி எங்களிடம் தவறான கருத்துக்களைச் சொல்லி வைத்தவர்களுடைய வண்டவாளமும் இதில் இருந்து விளங்கிவிடும். அய்யா, நீங்களும் உங்களைச் சார்ந்தவரும் அவசியம் வரவேண்டும் என்று அழைத்து விட்டு அம்மா அவர்கள் தயாராக வாங்கி வைத்து இருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றைய தேவையான பண்டங்களையும் பெற்றுச் சென்றார்கள்.
மாட்டுக் கொட்டிலில் ஆகா விருந்தோ விருந்து!
சாப்பாடு இரவு வேளைக்கு வைத்து இருந்தார்கள். அய்யா அவர்களோடு தந்தை பெரியார் அவர்களிடம் செயலாளராக இருந்த காலஞ்சென்ற அமைச்சர் திரு.என்.வி. நடராசன், சேலம் பிரபல வியாபாரியும் தந்தை பெரியாரிடம் நெருங்கிய நட்பு பூண்டிருந்தவருமான காலஞ்சென்ற திரு. ரோ.சு.அருணாசலம், அம்மா மற்றும் இரண்டொருவருமாகச் சென்றார்கள். விருந்து நடந்த இடம் ரோடில் இருந்து பள்ளத்தில் இறங்கி சந்து வழியாக உள்ளே போகவேண்டும். கீழே மாட்டுக் கொட்டகைகள் நிறைய மாடுகள் கட்டக்கூடிய இடம் அது. ஏர்க்காடு மலைப் பிரதேசம் ஆனபடியால் குளிர் அதிகம். வெய்யிலும் அதிகம் அடிக்காது. ஆகவே, அங்கு மாட்டுச் சாணங்கள், மூத்திரங்கள் எல்லாம் சீக்கிரத்திலே காயாது. அதனாலே ஈரம் எப்போதும் சொத சொத என்று இருந்துகொண்டே இருக்கும்.
வசதியற்ற சூழ்நிலையில் வசித்த அவர்கள் அன்பின் மிகுதியால் தங்கள் குடிசையிலேயே சாப்பாடு, கோழி எல்லாம் செய்து வைத்துவிட்டு பரிமாறுவதற்கு வசதி இல்லாததினால் பக்கத்தில் இருந்த மாடுகளை எல்லாம் வேறு இடத்துக்குக் கொண்டுபோய் கட்டிவிட்டு, மாட்டுக் கொட்டிலில் இருந்த மாட்டுச்சாணம் கும்பிகளை எல்லாம் வழித்து எடுத்துச் சுத்தம் செய்துவிட்டு அதன்மேலே மணலைத் தூவி அதன் மேல் வைக்கோலைப் போட்டு அதன் மேலே ஏதோ அவர்களிடம் இருந்த தடுக்குகளை எல்லாம் பரப்பி அதன்மீது இலைகளைப் போட்டு பரிமாறி அவர்களையெல்லாம் உட்கார வைத்தார்கள்.
துர்நாற்றம் மூக்கைத் துளைக்க...
என்னதான் அவர்கள் இடத்தைச் சுத்தம் செய்து மண்ணைக் கொட்டி வைக்கோல் போட்டு இருந்தாலும் காலை வைத்தால் உள்ளே அமுங்குகின்றது. ஏன் என்றால் நீண்ட நாட்களாகவே அவைகள் ஊறிக்கொண்டு இருந்த இடம் ஆயிற்றே. எவ்வளவுதான் அவர்கள் கும்பிகளை எல்லாம் வழித்துச் சுத்தம் செய்திருந்தபோதிலும் அந்த துர்நாற்றத்தில் இருந்து தப்பிக்கவே முடியவில்லை.
விருந்தும் பரிமாறப்பட்டு விட்டது. ஒரு பக்கம் துர்நாற்றம், இன்னொரு பக்கம் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஜில் என்று ஈரம் ஏறுகின்றது. இரவு நேரமானபடியால் குளிரோ தாங்க முடியவில்லை.
அந்தக் காலகட்டமோ அம்மா அவர்கள் அப்போதுதான் அய்யாவிடம் தொண்டு புரிவதற்காக வந்து சேர்ந்த புதிது. அம்மா அவர்கள் மிகத் துடிப்பாகப் பணியாற்றுபவர் என்ற போதிலும் அம்மா அவர்களுக்கே அது ஒரு புதிய அனுபவமாக அமைந்துவிட்டது. என்னால் அன்று அந்த நாற்றம், ஈரம், குளிர் முதலியவைகளை தாங்கிக் கொள்ள முடியாதவளாக ஆகி, உமட்டலும், வாந்தியும் ஏற்படும்படி ஆகிவிட்டது என்று அம்மா அவர்களே கூறியுள்ளார்கள்.
அம்மா அவர்கள் இலையில் வைக்கப்பட்ட சாப்பாட்டினை சாப்பிடுவதுபோல் பாவனை செய்து கொண்டும், யாரும் பார்க்காதபோது கொஞ்சம் கொஞ்சமாக சோற்றினை இலைக்கு அடியே எடுத்து வைத்துக் கொண்டும் இருந்தார்கள்.
இதனை எப்படியோ பார்த்துவிட்ட தந்தை பெரியார் அவர்கள் சாப்பிடு அம்மா, சாப்பிடு அம்மா! என்று சொல்லிக் கொண்டு அம்மா அவர்கள் கீழே வைத்து இருந்த சாப்பாட்டை எல்லாம் அவரது இலையிலேயே அள்ளி அள்ளி போட்டார். அம்மா அவர்களோ சாப்பிட்டால் வாந்தி வந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டதால் சாப்பிடாமல் தயங்கித் தயங்கிக் கொண்டு இருந்தார்கள்.
அம்மா கன்னத்தில் வீழ்ந்ததே ஒரு அடி!
அய்யா அவர்கள் அந்த வீட்டுக்கார அம்மாவைப் பார்த்து (அந்த அம்மா பெயர் மங்காணி) மங்காணி கொஞ்சம் குழம்புக் கொண்டு வா அம்மா! என்று கூறினார்கள். அந்த அம்மாவும் வீட்டிற்குள் குழம்பு எடுக்கச் சென்று விட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் அம்மா பக்கம் திரும்பி கன்னத்தில் ஓங்கி ஓர் அடி கொடுத்தார். அவ்வளவுதான், அந்த அம்மா குழம்பை எடுத்துக் கொண்டு திரும்பி வருவதற்குள்ளாக இலையில் இருந்த சோறு, கறி எல்லாம் உள்ளே போய்விட்டது.
பக்கத்தில் உள்ள இலையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த திரு.என்.வி.நடராசன் அவர்களும், திரு.ரோ.சு.அருணாசலம் மற்றவர்களும் கபக், கபக் என்று அவர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள்.
அம்மா அவர்கள் அந்த நிகழ்ச்சியினைப் பற்றிக் குறிப்பிடும்போது பக்குவப்படாத அந்தக் காலத்தில் பட்ட அந்த அடி எனக்கு என்றென்றைக்கும் உதவும்படியான பல படிப்பினைகளை எல்லாம் தந்தது என்று பல தடவைகள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
குறிப்பு: இந்த நிகழ்ச்சி தந்தை பெரியார், அம்மா ஆகியோர் வாயிலாக முன்பு கூறியதை வைத்து எழுதப்பட்டது.
- புலவர் கோ.இமயவரம்பன்
தந்தை
பெரியார் 119ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment