கி. வீரமணி-மோகனா திருமண விழாவில் பெரியார் உரை
(தந்தை பெரியார் உரைத் தொகுப்பு)
07.12.1958-
தந்தை பெரியார் தலைமையில் மானமிகு கி.வீரமணி எம்.ஏ., மோகனா வாழ்க்கை துணை ஒப்பந்த விழா. திருச்சி பெரியார் மாளிகையில்:-
தந்தை பெரியார் அவர்களின் உரை பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர்களே! நண்பர்களே!
இன்றைய தினம் நாம் எல்லாரும் இங்கே மணமக்களாகிய செல்வர்கள் வீரமணி - மோகனா ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை முன்னிட்டு நாம் எல்லாம் இங்கே கூடியிருக்கிறோம்.
நண்பர் வீரமணி, மணமகன். வீரமணியை நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அவர் சிறுவயது முதலே நம்முடைய கழகப்பற்று உள்ளவர். மோகனா அவர்களைப் பற்றி கூறவேண்டுமானால் மோகனா அம்மை நண்பர் சிதம்பரம் - ரெங்கம்மாள் ஆகியோர்களுடைய அருமை மகள். நண்பர் சிதம்பரம் - ரெங்கம்மாள் ஆகியோர்கள் நமது திருச்சி நகர தேவஸ்தானத்தில் சுமார் இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு மணம் செய்து கொண்டவர்கள்.நண்பர் சிதம்பரம் காரைக்குடியை அடுத்த கோட்டையூரிலே பெரிய செல்வந்தர். தனவைசிய குலம் என்று சொல்லுகிற நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பைச்சேர்ந்தவர். ரெங்கம்மையார்,
திருவண்ணாமலை ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர்கள் கலப்பு மணம் என்பதோடு மறுமணம் என்பதையும் சேர்த்து 20, 25 ஆண்டுகளுக்கு முன்பாக மணம் செய்து கொண்டார்கள்.
அவர்களுடைய குழந்தைகள் நான்கிலே,
2ஆவது மூத்த மகன் மலாயிலே பெரிய தொழில் செய்து கொண்டு இருக்கிறார்.
இந்த பெண் இரண்டாவது.
அதற்காக அவர் பெர்மிட் வாங்கி தொழில் செய்கிறார். இதுலே ஒரு வேடிக்கையான ஒரு செய்தி - சொல்ல வேண்டுமானால் இவர்களுடைய திருமணம் நடந்து நாலு குழந்தைகளையும் பெற்று, நல்ல நிலைக்கு வந்து, வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு விவாகரத்திலே இந்தத் திருமணம் செல்லாது என்று ஹைக்கோர்ட்டிலே தீர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர்களுக்கு ஒன்றும் பாதகம் இல்லை. அதை அவர்கள் லட்சியம் செய்யவும் இல்லை.
சாஸ்திரப்படியும் சட்டப்படியும் செல்லாது
எல்லாவற்றுக்கும் காரணம் ரொம்ப வேடிக்கை - சுயமரியாதை திருமணம் செல்லாது என்று சொன்னது, சுயமரியாதை திருமணம் சாஸ்திரப்படியும் நடக்கலே,
சட்டப்படியும் நடக்கலே. ஆனதுனாலே இது செல்லாதுன்னுட்டானுங்க. அநேக காரியங்கள் திருமணத்திலே என்ன நடக்க வேண்டுமோ முக்கியமான காரியங்கள், எல்லாம் நடந்துதான் இருக்குது. சாஸ்திரத்திலே திருமணத்திலே என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அதுக்கு நேர் விரோதமான காரியமெல்லாம் நடந்திருக்குது.
ஆனதினாலே புரோகிதர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் கோபம் இருக்குது.
ஜட்ஜூம் பார்ப்பனர் - அதுலே என்ன அப்ஜெக்சன்? எனக் கேட்டு இன்னின்ன மாதிரி இருக்க வேண்டும் என்று, இன்ன ஆதாரம், இன்ன முறை, இன்ன சாட்சி, என்றும் சுலோகங்கள் சொல்லும் முறை இல்லை அதனாலே செல்லாது என்கிறான்.
அந்த மாதிரியான ஒரு நிலைமை இருக்கு. இருந்தாலும் அவர்கள் ஜாதியிலே, இன்பத்திலே,
செல்வங்களிலே,
எல்லாவற்றிலும் யாவும் திருப்திகரமாக நடத்திவருகிறார்கள். அவர்களுடைய திருமணம் எப்படி ஒரு கலப்பு மணமாக அந்தக் காலத்தில் நடந்துள்ளதோ அதே மாதிரியாகவே தன்னுடைய பெண்ணுக்கும் கலப்பு மணமாக நடக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். 25 வருடம் ஆகின்ற போதும் கூட திருமணமாகி அப்போது தான் எனக்கு இவரைத் தெரியும். காரைக்குடியிலே நடந்த மாநாட்டுக்கு அய்யாதான் வரவேற்புக் குழு தலைவர் (சிரிப்பு, கைதட்டு) அது 1938லே அதனாலேதான் கலப்பு மணம் நடந்தது. இன்னை வரைக்கும் அவர் நம்முடைய இயக்கத்துக்கு நல்ல ஆதரவு. பிடிவாதமான பற்றுதல். பற்றுதலோடு பின்பற்றுதல் முதலிய காரணங்களுக்காக இந்த மாதிரியாக கலப்பு மணமாக தம் மகளுக்கு நடத்த வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
அய்யா அம்மா சொல்கேட்டு வாழ்க்கைத்துணை ஏற்றார்
அவருடைய எண்ணத்தை என்னிடம் கூறினார். எனக்கு வீரமணி ஞாபகத்துக்கு வந்தது. வீரமணி நினைக்கவே இல்லை தனக்கு ஒரு திருமணம் ஏற்பட்டு அது இவ்வளவு விரைவில் நடக்கும் என்று. ஏதோ வீட்டில் வீரமணி இருந்தால் அது அவருக்கு துணையாய் இருக்கும் என்று நினைத்து உடனே நான் இது பற்றி அவரிடம் கூறினேன். அவர் கேட்டுவிட்டு ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தார். நான் சொன்னேன் உனக்கு நல்ல துணை என்று நினைக்கிறேன். நல்ல வசதி உள்ள இடம் என்றேன். அவர் உடனே சொன்னார் அதைப்பற்றி என்னிடம் சொல்லாதீங்க.
வசதியோ,
வசதி இல்லையோ அதைப்பற்றி எனக்கு கவலையே இல்லை என்று சொன்னார். அய்யா சொல்றீங்க,
அம்மா சொல்றாங்க என்பதுக்காக என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்கிறேன் என்றார். நானும் சரி - எப்படியென்றாலும் சரி என்றேன். அய்யா ஊர்ல இல்லை (பெண்ணின் தகப்பனார்) மலேயாவில் இருக்கிறார் என்று சொன்னாங்க.
சரி இப்ப நிறையபேருக்கு வீரமணியை ஒத்துக்க வச்சிருக்காங்கன்னு தெரிஞ்ச உடனே அம்மா எழுதினாங்க அண்ணன்மார்,
தம்பிமார் எல்லாரும் ஒத்துகிட்டாங்க.
சரி சந்தோஷமா இருக்கட்டும்னாங்க.
பிறகு மலாய் நாட்டிலிருந்து வந்தார்கள்.
திருமண காரியங்களை இதுநாள் வரையிலும் சுருக்கமாகவே நடத்த வேண்டும் என்று என்னுடைய ஆசை மட்டுமல்ல என்னுடைய சுபாவம் அப்படி. அந்தமுறையால் தான்நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஆனா முடியலே. கொஞ்சம் கஷ்டம்தான் ஆனாலும் நல்லபடியா திருப்தியா நடக்குது. எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். கமிட்டியோ, ஒரு மகாநாடோ போட்டா எப்படி நடக்குமோ, அது போலத்தான் நம்முடைய கழகத் தோழர்களுக்கு எல்லாம் அந்த மாநாடு நிகழ்ச்சிக்கு வரவேண்டியது. நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்ள இந்த மாதிரி நிகழ்ச்சிதான். வேறொன்றும் கிடையாது.
நாம் தேர் திருவிழாவிற்கு போவது இல்லை. மாநாட்டிலே தான் சந்திக்கிறோம்.
மகாநாடு நடத்த வேண்டும் என்றும் யாராவது கேட்டால் மகாநாடு நடந்து, அதிலே என்ன பேசி அதுலே என்ன தீர்மானம் பண்ணி, அதுக்கப்புறம் செயல்படப்போறோம் மாநாடு என்றால் பத்தாயிரம் பேர், இலட்சம் பேர் கூடினாலும் நாம் பேசிக்கிட்டே இருப்போம்.
நம்ம மாநாட்டுக்கு நான்கு ஆயிரம் பேர், அய்ந்தாயிரம் பேர் வந்தாலே அதிகம். 10
ஆயிரம்,
20 ஆயிரம், 30 ஆயிரம் பேர் வரணும்னா நாம் ஊர் ஊராகப் போய் கூட்டனும்.
ஆனதுனாலே மகாநாடு கூட்டுறது என்பதிலே இருக்கிறே ஒரு யுக்தி என்னவென்றால், இயக்க சம்பந்தமான எல்லா மக்களையும் இயக்க பார்வையில் ஒரு இடத்தில் ஒருத்தருக்கொருத்தர் சந்திக்கிற வாய்ப்பு. அதுதான் முக்கியம்.
உண்மையிலேயே அதுக்காகவேதான் மாநாடு. அந்த முறையிலே இயக்க சம்பந்தமான தோழர்களையெல்லாம் சந்திக்கும் படியான வாய்ப்பு.
தாம்பூலத்திற்கு பதிலாக நூல் வழங்கல்
நம் நண்பர்களை, மரியாதைக்குரியவர்களை எல்லாரையும் காண்றதுக்கு ஒரு நல்ல வாய்ப்புங்கிற முறையிலே, மகாநாடு நடத்துகிறோம்.
ஆகவே இன்றைய தினம் நமது இயக்கத்தை சார்ந்த தோழர்களுக்கு திருமணம் நடத்துகிறது,
இந்த திருமணத்திலே ஒரு சின்னகாரியத்தைப்புகுத்தியுள்ளேன். வீரமணியும் அபிப்பிராயப் பட்டதன் பேரில் திருமணத்திற்கு வந்திருக்கிறவர்களைப் பாராட்டி நாம் தாம்பூலம் தருவதென்ற பழக்கம் எந்தக் காரியத்தின் பேரிலோ, எப்படியோ நம்மிடம் உள்ளது. என்னைக் கேட்டார்கள் வெத்திலை, பாக்கு, சந்தனம், பழம், தேங்காய் இவை தருவதென்றால் எப்படியும் நான்கணாவாவது ஆகும். நண்பர் சிதம்பரம் அவர்கள் நகரத்தார் என்ற முறையில் ரூ2,3க்கு கூடச் செய்வார்.
ஆப்பிள்,
ஆரஞ்சு பழம் என்று போட்டு வாங்கிக் கொண்டு செல்பவர்கள் அதை சரியாக உபயோகிப்பதும் இல்லை. இந்த வியாபாரம் நமக்கு வேண்டாம். நாம் கொடுத்தது அவர்களுக்கு பயன்படும் முறையில் இருக்கட்டுமே என்று கருதி ஒரு புத்தகம் போட்டு அதாவது நான் எப்போதோ பல திருமணங்களில் பேசிய 10, 20 பேச்சுக்களை தொகுத்துப் போட்டு அதற்கு, வாழ்க்கைத் துணைநலம் என்பதாகப் பெயர் கொடுத்து அதனை திருமண விருந்தினர்க்கு அன்பளிப்பாகத் தருகிறோம். இந்தக் கருத்தை தோழர் வீரமணிதான் கூறினார். நான் என்ன செய்வது என்று பேசிக்கொண்டிருக்கும் போது அவர் நான் பல திருமணங்களில் பேசியவற்றிலிருந்து சிலவற்றைக் தொகுத்துப் போட்டு சிறு நூலாகத் தரலாம் என்றார். அதன்படி ஏற்பாடு செய்யப்பட்டு அது வழங்கப்பட இருக்கிறது. அதனை நன்கு படிக்க வேண்டும். இந்தத் திருமணம் நம் இயக்கத்திற்கு பயன்பட வேண்டும். வீரமணியின் எண்ணமும் இதன் மூலம் இயக்கத்திற்கு தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணமும் தான். இன்று பல அறிஞர்கள் வந்திருக்கிறார்கள். முதலில், வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியை நடத்தி விடுகிறேன்.
பிறகு பலரும் அவரை வாழ்த்துவார்கள். நீங்கள் அமைதியாக இருந்து கேட்க வேணும் என்று கோரிக் கொண்டு இவர்களின் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியை நடத்துகிறேன் என்று குறிப்பிட்டார்.
வாழ்க்கை ஒப்பந்தம்
அடுத்து மணமக்கள் இருவரும் தங்களின் வாழ்வில் ஏற்படும் உயர்விலும் தாழ்விலும் சம பங்கேற்று சம உரிமை அளிப்பதாக உறுதி மொழியினைக் கூறி மலர்மாலை மாற்றிக் கொண்டனர். மணமகன் தனது திருவுருவம் பொறிக்கப்பட்ட மோதிரத்தை மணமகளுக்கு அணிவிக்க வாழ்க்கை ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரதிதாசன் அவர்களின் உரை
இளைய தலைமுறையின் எழுச்சி ஞாயிறு
இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீர மணியிடம் நேரில் கண்டுள்ளேன்
பாடிக்கை வீசிப் பலருடன் உலவி
வேடிக்கை பேசும் வாடிக்கை தன்னை
அவர்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்
உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்
நற்றவம் என்பர் தொண்டடென நவில்வர்
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயவனைக்
கொண்டது குழந்தைப் பருவத்தி லேயே.
தமிழன் அடிமை தவிர்ந்து குன்றென
நிமிர்தல் வேண்டும் என்றே பெரிதெனக்
கருதிய கருத்து வீர மணியை
வீண்செயல் எதிலும் வீழ்த்த வில்லை
அண்டிப் பிறரை அழிக்க அல்ல
உண்டிக் கல்ல உயர்வுக் கல்ல
தொண்டுக் காகக் கல்வித் துறையிற்
சேர்ந்தோன் எம்.ஏ தேர்விலும் தேர்ந்தோன்
நினைவின் ஆற்றல் நிறைந்த வீரமணி
படிக்கும் நேரத்திலும் பார்ப்பனார் கோட்டையை
இடிக்கும் நேரம் எட்டுபங் கதிகம்
விட்டே னாபார் தமிழரின் பகைவரைக்
கட்டா யம்தொலைப்பே னெனக் கழறும்
எட்டாம் பத்தாண் டாசிரி யர்க்கோர்
சட்டாம் பிள்ளை என்னத் தகுந்தோன்
பெருங்கூட் டத்துப் பெரியவரும் பிள்ளையும்
விரும்பப் பேசும் ஆற்றல் மிக்கோன்
கல்வியும் செல்வமும் கனக்க உடைய
அரங்கம்மை சிதம்பர னார் அளித்த
கற்றார் வியக்கக் கலையினால் விரிந்த
தோகை மயில்நிகர் மோகனா இந்நாள்
பெற்ற பேறு யாவரே பெறுவார்
தமிழர் தமக்கும் தமிழ் மொழிக்கும் உழைப்பதே உயர்ந்த செல்வமாய் கொண்ட
மாண்பார் வீர மணியும் மணியும்
ஒருமன மானதை உறுதி செய்யுமித்
திருமண நன்னாள் தென்னாட்டுத் திருநாள்
வாழ்க! வீர மணியொடு மோகனா
இன்னுடல் இருவர்க்கும் இரும்பின் குண்டென
எய்தும் இன்பம் கரும்பின் சாறென
மற்றவும் பெற்றும் பல்லாண்டு வாழ்க!
தந்தை பெரியார் அவர்கள் செய்து வைத்த இந்தத் திருமணமானது அந்த இருவருக்கும் மிக மகிழ்ச்சியூட்டுவதாகும்,
மிகப் பயன் தருவதாகும்.
இந்நாளில் எப்படிப்பட்ட மனோ நிலையோடு இருக்கிறார்களோ எவ்வளவு இன்பமாக அவர்களுடைய உள்ளத்திலேயே இருக்கின்றதோ அவ்வளவு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டுமென்று நான் வாழ்த்துகிறேன்
- அன்றியும் மணமக்கள் இருவருமே எங்கள் இயக்கத்துக்கு பெரியாருடைய முயற்சிக்கு ஒத்த வகையிலே தொண்டு செய்வதை இன்பமாகக் கொள்வார்கள் என்று, நான் அவர்களை இருவர் சார்பிலும் கேட்டுக் கொண்டு மீண்டும் அவர்களை வாழ்த்தி என்னுடைய உரையை முடிக்கிறேன்.
டாக்டர் ஏ.சிதம்பரனார் அவர்களின் உரை தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் சிறந்த தொண்டு பல்லாண்டுகளாக ஆற்றி மொழியும் மக்களும் செழிக்குமாறு வாழ்ந்த அருமைத் தலைவர் பெரியார் அவர்களே! இங்கே வந்திருக்கின்ற நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் என் அன்பு உரித்தாகுக.
சங்ககாலம் என்று சொல்லப்படுகின்ற தமிழகத்தில் அதற்கு
2000 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழ் மக்கள் அனைவரும் அவரவருடைய மனநிலையிலேயே தத்தம் சொந்த மொழியாகிய தமிழ் மொழியிலேயே பேசியிருக்கிறார்கள் என்பதால் இந்த அவைக்கு இன்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது ஏனென்று நீங்கள் அனைவரும் முன்னரே உணர்வீர்கள்.
இதைப் போன்ற திருமணங்கள் தமிழர்களுக்கு ஆற்றி தொண்டு நமக்கு பண்டைய நன்னாளினை மீண்டும் மீண்டும் என்பதை மட்டும் நினைப்பூட்ட விரும்புகிறேன்.
2000 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழ்நாட்டிலே,
வீட்டிலும் சரி, நாட்டிலும் ஏட்டிலும் பிற அல்லாவற்றிலும் சரி, தமிழே தழைத்திருந்த காரணத்தினாலே தமிழ் மக்கள் இனிமையான வாழ்க்கையுடையவர்களாய் இருந்தார்கள் என்பதே வரலாறு கண்டது.
தமிழ்நாட்டிலே யசூர் வேதமும், சாம வேதமும், ருக்கும் நுழைவதற்கு முன்னாலேயே தமிழ்மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. அப்பொழுது தமிழர்கள் தங்களுடைய மொழியாகிய தமிழ்மொழியிலேயே மணவினை முறையை - பிறவினை முறையை செய்து கொண்டு வாழ்ந்த காரணத்தினால் மோட்சம் புகாது இருந்தார்கள்என்று யாரும் சொல்லத் துணியமாட்டார்கள் என்று நம்புகிறோம்.நம்முடைய நாட்டிற்கு சமஸ்கிருத மொழியானது வருவதற்கு முன்னாலேயே வாழ்ந்த நமதுமூதாதையர்கள் பாதாள லோகத்துக்குத்தான் சீட்டு வாங்கிகொண்டு போனார்கள் என்று சொல்லுவது எவ்வளவு பேதமை என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.
நீங்கள் சிந்தித்தல் வேண்டுமென்றால் பிறர் சிந்திக்க வேண்டுமென்று எண்ணப்படும்.
வியாசர் என்ற வேதநூலார் வகுப்பதற்கு முன்னாலேதான் தமிழ் இருந்தது என்பதும் தமிழ்நாட்டிலே தொல்காப்பியம் போன்ற நூல்கள் இருந்தன. நச்சினார்க் கினியார் போன்ற உச்சிமேற்புலவர்கள் என்று சொல்லப்படுபவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை அவ்வாறு இருந்தும் இப்பொழுது அண்மையில் நாங்கள் என்னவோ சீர்திருத்தம் செய்துவிடுகிறோம் என்றும் இல்லாததை ஒன்றைக் கொண்டுவந்து விடுகிறோம் என்ற காரணத்தினாலே இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை வெறுக்கிறார்களோ! மறுக்கிறார்களோ! தடை செய்கிறார்களோ! நாம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய மூதாதையர்கள் நடந்தபடி நடக்க வேண்டும் என்று சொல்லுகிறபொழுது இடைக்காலத் தமிழகத்தில் எவ்வாறு சீர்மையாளர்கள் வாழ்ந்தார்களோ அதைப் போல வாழவேண்டும் என்று சொல்லப்படுகிறதே ஒழிய உண்மையான, தொன்மையான, புராதனமான,பழமையான தமிழகத்தின் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் அவ்வாறே வாழவேண்டும் என்று சொல்லப்படவில்லை.
பழமையான காலத்தில் மக்கள் சமுதாயத்திலே தமிழ்மொழியை எல்லோரும் தனக்குத் துணையாகக் கொண்டு வாழ்ந்ததுபோல நாம் வாழவேண்டும் என்று சொல்லுகிறோமே அன்றி இடைக்கால சமுதாயத்தில் சீர்கேடுகளோடு அந்த கால நிலையிலே வாழ்தல் வேண்டும் என்று சொல்லுதல் கூடாது. பொருத்தம் எனவே பழங்காலச் சமூகம் போய் இடைக்கால சமுதாயத்தில் நாங்களெல்லாம் பலர் நாங்கள் நாங்கள் என்று சொல்லுகிறோம் என்பதை அறியாமலேயே அந்த மணவினையின் போது புரியாத மொழியிலே புரியாத ஒரு ஆள் கூற அதைக் கேட்டு இவர்களை தமிழ் கூட்டிக் கொண்டு தன்மானம் இழந்த செய்திகள் இது என்பதை சீர்திருத்தி நாட்டை நிறைபேறு உடையவர்களாக தமிழ் மக்கள் செய்தார்கள் என்பதை பெருமையோடு,
பொறுமையோடு கலை நுணுக்கத்தோடு செய்து வருகின்ற இந்த தன்மான இயக்கத்தைப் போல.
தன்மானம் உள்ளவர்கள் நாம் யாவரும் வாழவேண்டும் என்று நான் மாத்திரம் இல்லை எல்லா மனிதரும் தன்மானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். எல்லா தேசங்களும் தன்மானம் உள்ளதாக இருக்க வேண்டும் உலகிலே உள்ள யாவருக்கும் தன்மானம் கட்டாயம் வேண்டுமென்ற முடியில் தமிழர்களுக்கு மாத்திரம் ஏன் தன்மானம் கூடாது என்பது கேள்வி. ஆகையினாலே நாம் இன்று இவர்கள் வெளிப்படையாக தங்களுக்குத் தெரிந்த -நமக்குத்தெரிந்த-மொழிகளிலேவாழ்க்கையை சீர்திருத்தி மாற்றியிருக்கிறோம்.
அதை பார்த்து மாற்றியிருக்கிறோம்,
கேட்டு மாற்றியிருக்கிறோம். காரணம் இவர்களுக்குப் புரிந்த மொழியிலே இன்று உங்கள் முன்னிலையிலே தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இது கட்டாயம் அவர்களுக்கு எப்போதும் தேவை.
கிருஷ்ணரும்
- இலக்குமியும் ஒருவரையொருவர் இணைபிரியாமல் மார்பகத்தே கையத்தே ஒன்றினைந்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.
இவர்கள் மற்றவர்களுடைய படத்தை உருவத்தை எப்போதும் கையும் மெய்யுமாக நாங்கள் வைத்திருப்போம் என்ற அக்கருத்துப்பட இவர்கள் உறவுகள் நல்ல முறையில் அமைந்திருப்பதை திருச்சியில் நான் மிகவும் பாராட்டுகிறேன். வீ என்று போட்டுக்கொண்டால் வீரமணியா,
வீராசாமியா அல்லது வேறொருவரா என்று தெரியாமல் போகலாம். அவ்வாறில்லாமல் வீரமணியினுடைய திரு உருவத்தையே பொறித்திருக்கக் கூடிய மோதிரமானது மோகனா என்ற உருவத்தை அடிக்கடி அவருடைய சிந்தனையிலே கொண்டுவருவதுமாக எப்போதும்இவர்கள் அமைத்துக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இவர்கள் சொல்லுகின்ற வாழ்க்கை ஒப்பந்தமானது நல்ல தமிழ்மொழியில் இருக்கின்ற காரணத்தினாலே ஏதாவது ஒரு உரிமை எப்போதாவது மோகனாவுக்கு வீரமணி வழங்காவிட்டால் எல்லா உரிமைகளையும் சம உரிமைகளையும் உனக்குக் கொடுப்பேன் என்று அன்று மேடையில் படித்தேனே என்று வீரமணியினுடைய சிந்தைக்குக் கட்டாயம் வரும்.
அதனாலே தான் இந்த நடவடிக்கை இந்த உடன்பாடு இந்த உடன்படிக்கையானது தமிழ் மொழியிலே உள்ளது என்பது பெருமை. அதே மாதிரி மோகனாவும் உங்களுடைய வாழ்விலேயும் தாழ்விலேயும் நான் பங்கு பெறுவேன் என்று சொன்னதை கட்டாயம் மறக்கமாட்டார். ஏனென்றால் இந்த நினைவு அவருக்கு ஆயுள் முழுவதும் என்றும் இருந்து கொண்டேயிருக்கும். இவையல்லாமல் நமக்குத் தெரியாததொரு மரபிலேஏதாவதொன்றை உளறிக்கொண்டே இருந்திருப்போமேயானால் அது காரணமாகத்தான் தலைவர்கள் தலைவியைப் பிரிவது அதிகமாகி தலைவி ஒருவர் நொந்து கொண்டே எப்போதாவது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று அமைந்திருக்கிறது என்ற முறையிலே வாழ்த்துக் கூறி அமைகிறேன்.
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment