சின்னாளப்பட்டி கலவரம்!



16.1.1946 மாலை 4 மணிக்குத் தனிக் காரில் பெரியாரவர்களும் மற்றும் பலரும் சின்னாளப்பட்டி வந்து சேர்ந்தனர். உடனே ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாகச் சென்றது. வழிநெடுக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. நான்கரை மணிக்குக் கூட்டம் ஆரம்பமாகியது. ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியுடன் உட்கார்ந்து பெரியாரவர்களின் உணர்ச்சிமிக்க சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இவ்வுணர்ச்சியைக் கண்ட காங்கிரஸ் காலிகள் தூரத்தில் நின்று கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். ஒலி பெருக்கி நன்றாக இருந்ததால் பெரியாரவர்கள் காலிகளின் கூச்சலை லட்சியம் செய்யாமல் மிக உணர்ச்சியுடன் பேசுவதையும், மக்கள் கேட்டுக் கொண்டிருப்பதையும் கண்ட காலிகளுக்கு மிகவும் அவமானம் உண்டாகவே எப்படியேனும் இங்கு காலித்தனம் செய்ய வேண்டுமென்று கருதி கற்களை வீசினர். உடனே பெரியாரவர்கள், சால்வையை எடுத்துத் தலையில் கட்டிக் கொண்டு எல்லோரும் தலையில் துண்டைக் கட்டிக் கொள்ளுங்கள், ஒருவரும் கலைய வேண்டாம் என்று கூறி மீண்டும் பேசிக் கொண்டே இருந்தார். இதைக் கண்ட காலிகள் மிகவும் அதிகமாக கூச்சலிட்டுக் கற்களை மாரிபோல் வீசினர். உடனே அங்கு வந்திருந்த போலீசார் தடியடிப் பிரயோகம் செய்தார்கள். உடனே கூட்டம் கலைய ஆரம்பித்தது. அவ்வூரில் போலீஸ் இல்லாததால் இங்கு ஒன்றும் கலவரம் நடக்காதென்று கருதி வெளியூரிலிருந்து இரண்டு போலீஸ்காரர்களும், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மட்டுமே வந்திருந்தனர். கலவரம் அதிகமாகவே சப்-இன்ஸ்பெக்டர் பெரியாரிடம் கூட்டத்தைக் கலையுங்கள் என்றார். உடனே பெரியார், நீங்கள் என்னால் சமாளிக்க முடியவில்லை கலைத்துவிடுங்கள் என்று எழுதிக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார். பின்பு சப்-இன்ஸ்பெக்டர் நாளையோ, மறுநாளோ வேண்டுமானால் நான் பாதுகாப்போடு உங்கள் கூட்டத்தை நடத்தித் தருகிறேன் என்று கூறிவிட்டு அவரே ஒலி பெருக்கி முன்னால் நின்று, காலிகள் கலகம் செய்வதாலும் நான் போதிய பஸ்தோபஸ்துடன் வராததாலும் இக்கூட்டத்தைக் கலைக்கிறேன் என்று கூறினார். பின்பு உள்ளூர்த் தோழர்களும் பெரியாரை வேண்டிக் கொள்ள பெரியார் கூட்டத்தை முடித்தார். இவ்வளவு கலவரம் நடந்தும் பெரியாரவர்கள் 1 மணி நேரம் பேசினார். திராவிடர் கழகத்தின் சார்பிலும், முஸ்லீம் லீக்கின் சார்பிலும், சித்தையன் கோட்டை திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்திதழ்களும் மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டன. –
குடிஅரசு, 19.1.1946


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை