திண்ணைக் கடையில் புட்டுச் சாப்பிட்ட கதை!
திருப்பூரிலிருந்த தமிழ்நாடு காதி போர்டின் தலைவராக ஈ.வெ.ரா. இருந்தார். க.சந்தானம் அதன் காரியதரிசி.
தெருத்தெருவாய் கதர் சுமந்துகொண்டு போய் விற்பதற்கு அய்யாசாமியும், நானும் நாயக்கரிடம் கதர் கடனாகக் கேட்டோம். அவரா கடன் கொடுப்பவர்! அய்ந்நூறு ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துக் கதர் எடுத்து வந்து விற்பனை செய்தோம்.
அதன் பின்னர் கோவை காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவில் கோவை ராஜவீதியில் தேர்முட்டிக்கு எதிர்ப்புறம் ஒரு கதர் கடை ஆரம்பித்து அதற்குக் கிருஷ்ணமூர்த்தி என்பவரை நிர்வாகியாகப் போட்டோம்.
அதற்குப் பிறகு சி.பி.சுப்பையாவை அவ்வேலையில் நியமித்தோம்.
அங்கிருந்து பிரதிதினமும் கதர் எடுத்துச் சென்று வீடுகள்தோறும் விற்பனை செய்தோம்.
காங்கிரஸ் பிரசாரத்துக்கு நாயக்கர் சென்ற இடங்கட்கெல்லாம் நாங்களும் போனோம்.
நாயக்கர் ஒரு சிறந்த உழைப்பாளி, அவரது அயராது உழைப்பும் ஊக்கமும் எங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தன.
சோறு, தண்ணீர், உறக்கம் ஆகியவற்றை அவர் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. எந்த இடத்தில் எது கிடைத்ததோ அதைச் சாப்பிட்டு விட்டுத் தெருவிலோ, திண்ணையிலோ, மரத்தடியிலோ, எங்கு வேண்டுமானாலும் அவர் துப்பட்டியை விரித்துப் படுத்துறங்கினார். நாயக்கர் ஒரு கர்மயோகியாகவும், தன்னலமற்ற தியாகியாகவும் அந்நாள்களில் விளங்கினார்.
ஒரு சமயம் நாயக்கரும் நானும் சேலம் ஜில்லாவிலுள்ள மல்லசமுத்திரம் என்ற ஊரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம்.
காலையில் தூங்கியெழுந்தவுடன், ஊரைச் சுற்றிப் பார்க்க நாயக்கரும் நானும் புறப்பட்டோம். சிறிது தூரம் சென்றதும், அங்கொரு வீட்டுத் திண்ணையில் ஒரு பெண் புட்டுச் சுட்டு விற்றுக் கொண்டிருப்பதை நாயக்கர் பார்த்தார். பார்த்ததும் மளமளவென்று உள்ளே நுழைந்தார்.
நாயக்கரையும், என்னையும் காணோமென்று தேடியலைந்த மகாநாட்டு நிர்வாகிகள் எங்களிருவரையும் அங்கே கண்டு பிரமித்துப் போனார்கள்.
நாளடைவில் நாயக்கருக்கும் எனக்குமிடையே ஆழ்ந்த நட்பும் தோழமையும் ஏற்பட்டது. நாயக்கர் எனக்கொரு ஆதர்ஷ புருஷராக விளங்கினார். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியாத தோழர்களானோம்.
- கோவை அ.அய்யாமுத்து
நூல்:
எனது நினைவுகள், தந்தை பெரியார் 109ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment