தந்தை பெரியார் செய்து வைத்த சமாதானம்
மேயர் வேலூர் நாராயணனுக்கும், அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையாருக்கும் இடையே தந்தை பெரியார் செய்து வைத்த சமாதானம்!
வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம்; வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும் அமைச்சர் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதி பெயரைச் சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது.
அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார். வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர், அப்படி சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படிச் சொல்லியிருந்தால் அவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லுகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி ஏதாவது சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாக பேசினார் தந்தை பெரியார்.
அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள் ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதைக் கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை; ஒரு சமயம் பிள்ளையிருந்தால் அதுவும் பெண்ணாக இருந்தால் மாண்புமிகு சத்தியவாணிமுத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன். அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன்.
காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படிச் சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லிவிடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன் என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக் கூட்டத்தில் (11.12.1968) பேசினார்.
தந்தை
பெரியார் 129ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment