இந்திய அரசுக்கு ஆதரவு
திராவிட நாட்டுப் பிரிவினைக்குப் போராடிய பெரியார், அப்போராட்டங் காரணமாக பலமுறை சிறை வாழ்க்கையும் பூம்பூம் மாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பு அலைகளையும் தாங்கிக் கொள்ள நேர்ந்தது வரலாற்று உண்மைகளாகும். அத்தகைய தந்தை பெரியார் ராமசாமி விடுதலை பெற்ற இந்தியா, சிக்கிக் கொண்ட எல்லாப் போர்களிலும் இந்திய அரசுக்கு ஆதரவாகவே நின்றார், எழுதினார்; பேசினார்.
பிரிவினைவாதியாம் தந்தை பெரியார் எவ்வளவு இந்தியப் பற்றாளராக விளங்கினார் என்பதை உணரும் அரிய வாய்ப்பு ஒருமுறை எனக்குக் கிட்டியது.
1971ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் கடைசி வாரம் பெரியார் சென்னைக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்தார். அப்போது நான், சோவியத் நாட்டில் பதினைந்து நாள்கள் சுற்றுப் பயணம் செய்து, நட்புறவு கூட்டங்களில் கலந்து கொண்டு, சென்னைக்குத் திரும்பி வந்தேன்.
பெரியார் சென்னையில் இருப்பதைக் கேட்டு, அவரைப் பார்க்கச் சென்றேன். என்னை அன்பொழுக வரவேற்ற பெரியார், தனக்கு அருகில் கட்டிலின்மேல் உட்காரச் சொன்னார், கீழ்ப் படிந்தேன்.
பயணத்தைப் பற்றி சில மணித்துளிகள் பேசினார். அடுத்து, மிகுந்த கவலையோடு, இன்னும் பதினைந்து நாள்களில் பாகிஸ்தான் நம்மோடு சண்டைக்கு வந்துவிடும். அப்போது ரஷிய உதவி உடனே கிடைக்குமா? உதவி உடன்படிக்கை காகிதத்தோடு நிற்குமா? ரஷிய உதவி கிடைத்தால் பிழைத்தோம். இல்லாவிட்டால்... சொற்றொடரை முடிக்கவில்லை. அக்கறை தோய்ந்த கவலை தெரிந்தது.
எத்தனை கொடுமைகளுக்கு ஆளானபோதிலும் இந்திய நாடு தோற்க வேண்டுமென்று எண்ணாத பெரியாரை, வெற்றி பெற்று வாழவேண்டுமே என்று ஏங்கிய பெரியாரை அன்று புதுக் கோணத்தில் புரிந்துக் கொண்டேன்.
கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்காக வாதாடும் வழக்கறிஞர், கொலைப் பெருக்கத்துக்கு ஊற்றுக்கால் என்று நினைப்பது தவறல்லவா? சட்டம், ஒழுங்கு, அமைதி கெடச் செய்பவர் என்று கருதுவது நியாயமாகுமா?
சூத்திரர் என்று குற்றம் சாட்டப்பட்ட கோடிக் கணக்கானவர்களை அப்பொய்க் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து ஆக வேண்டுமென்னும் பெருந் துடிப்பில், திராவிட நாடு பிரிந்தால் அங்கே சமதர்மப் பொருளியல் முறையையும் சமுதாய சமத்துவத்தையும் நடைமுறையாக்குவது எளிதாகும் என்று சரியாகவே கணக்கிட்டார் பெரியார். எனவே, திராவிட நாட்டைப் பிரித்து விடுங்கள் என்று உரத்து வாதாடினார். பெரியார் கருத்துக்களை எதிர்த்து அரை நூற்றாண்டை வீணாக்கிய பிறகே மக்களுக்குத் தெளிவு ஏற்படும். எனவே இதில் பொதுமக்கள் போதிய ஆதரவு காட்டவில்லை. திராவிட நாட்டுக்காக வாதாடிய பெரியார் எவ்வளவு இந்தியப் பற்றாளர் என்பதை அவ்வேளை உணர்ந்தேன்.
Comments
Post a Comment