நேர்மை தவறாத தந்தை பெரியார்
1903இல் தந்தை பெரியார் அவர்கட்கு சுமார் 24 வயதாக இருக்கும். அப்போது வியாபாரத்தில் நல்ல விளம்பரம் உண்டு. தந்தை பெரியார் தகப்பனார் பெயரில் இருந்த ரூபாய் ஆயிரத்திற்காக டிக்கிரியை திருச்சியில் நிறைவேற்ற டிக்கிரி நகலை எடுத்துக் கொண்டுபோய் வக்கீலிடம் கொடுத்து, வக்காலத்து பாரத்தில் அவருடைய தகப்பனார் கையெழுத்தை பெரியாரே போட்டுக் கொடுத்துவிட்டார். அவசரப் படிகட்டி, ஆளைப் பிடித்துச் சேவகன் கையில்விட்டு உடனே ஈரோட்டிற்கு வந்துவிட்டார்.
பிரதிவாதி டிக்கிரி பணத்தை வக்கீலிடம் கட்டி ரசீது கேட்டார். அத்தோடு செலவைத் தள்ளிக் கொடுக்க வேணுமாய் கேட்டுக் கொண்டார்.
அதற்கு வக்கீல் சற்றுமுன் வந்திருந்தால் வாதியிடமே கேட்டிருக்கலாம் அவர் போய் விட்டாரே என்று வக்கீல் கூறவும் பிரதிவாதி வந்தவர் வாதி அல்லவென்றும் வாதியின் மகன் இவருடைய பெயர் இராமசாமி நாயக்கர் என்றார். பிரதிவாதிக்கு ரசீதைப் போட்டுக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
மறுநாள் வக்கீல் ஆத்திரப்பட்டு முன்சீப் கோர்ட்டில் ஒரு விண்ணப்பம் தாக்கல் செய்தார். அந்த விண்ணப்பத்தில் பெரியார் ஆள் மாறாட்டம் செய்துவிட்டார் என்றும் போர்ஜரி கள்ளக் கையெழுத்துச் செய்து தன்னை மோசம் செய்து விட்டதாகவும் எழுதியிருந்தார்.
முன்சீப் பெரியாருக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டார். அந்த நோட்டீஸில் உன்மீது வழக்கு நடத்த ஏன் அனுமதி கொடுக்கக்கூடாது? என்று கேட்கப்பட்டிருந்தது.
தென்னிந்திய வியாபார உலகமே ஆடிவிட்டது. காரணம் வியாபாரத்தில் அந்த காலகட்டத்தில் இவர்கள் கொடி கட்டி ஆண்டு கொண்டிருந்தனர்.
பெரியாரின் தகப்பனார் இந்த நோட்டீஸை எடுத்துக்கொண்டு பி.டி.சுப்பிரமணிய அய்யர் சி.விஜயராகவாச்சாரியார் என்ற இரண்டு பிரபல சேலம் வக்கீல்களிடம் சென்றார். அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக உங்கள் மகன் இந்தக் கையெழுத்தை நான் போடவில்லை என்று சொல்லிவிட வேண்டும் என்று சொன்னார்கள். பெரியாரின் தகப்பனாருக்கு பெரியார் ஜெயிலுக்குப் போகாமல் இருப்பதற்கு எதையும் செய்யத் தயாரானார். ஆதலால் வக்கீலிடம் அதற்கு சம்மதித்து வந்துவிட்டார். ஈரோட்டிற்கு வந்து மகனைக் கேட்டார். அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதற்காக ஏன் பொய் சொல்லவேண்டும். வருவது வரட்டும் என்று சொல்லிவிட்டார். தந்தை வெங்கட நாயக்கர் எவ்வளவோ மன்றாடியும் மகன் இராமசாமி சம்மதிக்கவில்லை.
பெரியாரின் மைத்துனர் நோட்டீஸை எடுத்துக்கொண்டு நார்ட்டன் துரையிடம் சென்றார். அவரும் இதில் கையெழுத்துப் போடவில்லை என்று கூறுவதைத் தவிர வேறு டிபன்ஸ் இல்லை; இதற்காக எனக்கு ஏன் ரூ.2000, 3000 கொடுக்க வேண்டும் என்று கூறி வரவிருப்பமில்லை என்றும் கூறிவிட்டார்.
கடைசியாக டி.டி.ரெங்காச்சாரியார் என்ற ஒரு முன்சீப்பை சிபாரிசு பிடித்து டி.தேசிகாச்சாரியை வக்கீல் வைத்து முனிசீப்பிடம் பெரியாரின் தகப்பனார் எவ்வளவோ கெஞ்சியும் அவர் சாங்ஷன் கொடுத்துவிட்டார். உடனே பெரியார் காப்பு கொலுசு, கடுக்கன் எல்லாவற்றையும் கழற்றி எறிந்துவிட்டு தாடி வளர்த்துக் கொண்டு, கேழ்வரகுக் களி சாப்பிட்டுப் பழகிக் கொண்டு தலையணை இல்லாமல் பாயில் படுத்துப் பழக ஆரம்பித்துவிட்டார் - ஜெயிலுக்குப் போனால் அப்படியெல்லாம் இருக்க வேண்டியிருக்கும் அல்லவா - அதற்காக அந்தப் பயிற்சிகள்! பெரியாரின் தாயாருக்கு ஒரு வேளை சாப்பாடுதான். பல கோயில்களுக்கு அர்ச்சனை செய்கிற வேலை. ஆனால் பெரியார் மட்டும் ஜெயிலுக்குப் போவது உறுதி என்று கருதி ஜமீன் மைனர் மாதிரி எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபட்டார். அசிஸ்டெண்ட் கலெக்டர் மெக்பர்லெண்டு என்பவரிடம் கேஸ் வந்தது. பெரிய வர்த்தகர்கள் உள்பட 500 பேர் கோர்ட்டில் வேடிக்கை பார்க்கக் கூடியிருந்தார்கள்.
கலெக்டர் ஆசனத்தில் அமர்ந்து 5, 6 வழக்குகளைக் கூப்பிட்டு விசாரித்து முடிவு சொல்லிவிட்டார். எல்லா கேஸ்களிலும் தண்டித்துவிட்டார்.
அந்த கலெக்டருக்கு 28 அல்லது 30 வயது இருக்கும்.
வக்கீல் கணபதி அய்யர் அப்போது பப்ளிக் பிராசிகியூட்டர். கலெக்டரிடம் அனுமதி பெற்று பெரியாருக்காக இந்த வழக்கில் ஆஜரானார். கலெக்டர், கணபதி அய்யரிடம் எங்கு வந்தீர்கள்? உங்களுக்கு இன்று கேஸ் ஒன்றும் இல்லையே என்றார். கணபதி அய்யர் எனக்கு போர்ஜரி கேஸ் இருக்கிறது என்றார்; வழக்கு நம்பரையும் கூறினார்.
கலெக்டர் அரசாங்க சார்பில் உம்மை அழைக்கவில்லையே என்றார். கலெக்டர் அனுமதி பெற்றுத்தான் இந்த வழக்கில் ஆஜராகிறேன் என்று கணபதி அய்யர் கூறினார். ஏன் அப்படி என்றார் அஸிஸ்டெண்ட் கலெக்டர். அதற்கு கணபதி அய்யர் சர்க்காருக்கு உபயோகமற்ற கேஸ், பலமற்ற கேஸ் அதோடு இது சென்சேஷனல் கேஸ் ஆனதால் அனுமதி கேட்டேன். கொடுத்தார் என்றார்.
சாட்சியைக் கூப்பிடு என்றார் கலெக்டர். முதல் சாட்சி வக்கீல் ஜம்புநாதய்யர். அவர் கொஞ்சம் கூட்டிச் சேர்த்து இந்த ஆளை நீ தான் வாதியா என்றேன். உன் பெயர் என்ன என்றேன். ஆம் வெங்கிட்ட நாயக்கர் என்றான் என்றார். ஏன் அப்படிக் கேட்டீர் என்றார் கலெக்டர். அதற்கு நான் யார் வந்தாலும் அப்படித்தான் கேட்பது வழக்கம் என்று வக்கீல் கூறினார்.
வக்காலத்து பாரம் ரிஜிஸ்டர் செய்த கிராம முன்சீப் ஒரு சாயபு. அவர் கிழவனார். அவருக்குக் கண் பார்வை சரியாகத் தெரியாது. ஒரு வாலிபமான ஆள் - காப்பு, கொலுசு கடுக்கன் போட்டுக் கொண்டு வந்து என் எதிரில் நான்தான் வெங்கிட்ட நாயக்கன் என்று சொல்லி கையெழுத்துப் போட்டார். அந்த ஆள் இதோ காப்பு, கொலுசு போட்டுக் கொண்டு நிற்கிறாரே இவர்தான் என்று பெரியாரைக் காட்டி நின்றார்.
கலெக்டர் ஆங்கிலத்தில் பெரியாரைப் பார்த்து, நீ என்ன சொல்லுகிறாய்? என்றார். வக்கீல் மொழி பெயர்க்க பெரியார் நான் தான் கையெழுத்துப் போட்டேன் என்று கூறினார்.
ஏன் போட்டாய் என்றார். அதற்கு பெரியார் அப்படித்தான் கோர்ட், ரயில் நடவடிக்கைகளில் எப்போதும் நான் போடுவது வழக்கம் என்றார். ஏன் அந்தப் பழக்கம்? என்றார் கலெக்டர். அதற்குப் பெரியார் எங்கள் அப்பா கிழவனார். நான்தான் வேலை பார்ப்பது அந்த வியாபாரமும், பணமும் என்னுடையது. அவர் பெயர் பிரபலம் ஆனதால் அந்தப் பெயர் வைத்து நான் வியாபாரம் செய்கிறேன் என்று கூறினார்.
சரி, வெங்கிட்ட நாயக்கரைக் கூப்பிடு என்றார் கலெக்டர். வெங்கிட நாயக்கர் அழுதுகொண்டே பெட்டி மேலேறி வக்கீல் கேட்டதற்கு பெரியார் சொன்னதை ஆதரித்தே பதில் சொன்னார். ஜம்பு நாதய்யரைப் பார்த்து கலெக்டர் எனிதிங் என்றார். எல்லோரும் சிரித்தார்கள் ஜம்புநாதய்யர் ஒன்றும் பேசவில்லை. உடனே கலெக்டர் கேஸ் தள்ளப்பட்டு விட்டது. நீ போகலாம் என்று கூறிவிட்டார்.
தீர்ப்பு என்னவென்றால் இந்த நடவடிக்கை இந்த செக்ஷனின் கருத்துக்குப் பொருந்தாது. எதிரி யாரையும் மோசம் செய்ய இந்தக் காரியம் செய்யவில்லை வழக்குத் தள்ளப்பட்டது என்று இருந்தது.
- இப்படிப் பல நிகழ்ச்சிகள் தந்தை பெரியார் வாழ்க்கையில் நிகழ்ந்தது உண்டு.
நேர்மை, வாய்மை, நாணயம், தண்டனைக்குப் பயந்து தப்ப வேண்டும் என்று கருதாமை போன்ற குணங்கள் தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை இயல்பாகவே அமைந்துவிட்ட பண்புகள்!
தள்ளாத வயதில் தனது தந்தையார் அழுது புரண்டும் நண்பர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கூட பொய்ச் சொல்ல மறுத்த நேர்மையின் கருவூலம் பெரியாரன்றோ!
தந்தை
பெரியார் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment