பிறர் உணர்வை மதிக்கும் பெரியார்!
திருவாங்கூரைச் சேர்ந்த பரூரையடுத்துள்ள மூத்த குன்னத்தில் பரூர் காஸ்மாபாலிட்டன் புரோக்ரசிங் சங்கத்தாரால் 1933 பிப்ரவரி 11, 12 ஆகிய நாள்களில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. முதல் நாள் மாநாட்டுக்கு தோழர் கே.கேளப்பன் பி.ஏ., அவர்களும் இரண்டாம் நாள் மாநாட்டுக்கு தந்தை பெரியார் அவர்களும் தலைமையேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தார்கள்.
முதல் நாள் மாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் கேளப்பன் அவர்கள் சமதர்ம கொள்கைகளையும் ருசிய முறைகளையும் தாக்குகின்ற முறையில் பேசினார். கூடியிருந்தோர் தோழர் கேளப்பன் உரையை எதிர்த்து அவ்வப்போது குரல் கொடுத்த வண்ணம் இருந்தனர். மாநாட்டுத் தலைவர் கேளப்பன் அவர்கள்தான் இம்மாநாட்டுக்குத் தலைவனாக இருந்து பேசுவதாகவும், தனது அபிப்பிராயம் தெரிவிக்க இவ்வளவு ஆட்சேபணை இருக்கும் என்றால், தான் பேசாமல் உட்கார்ந்து விடப்போவதாகவும் சொன்னார். அந்த நேரத்தில் தந்தை பெரியார் குறுக்கிட்டு, தோழர் கேளப்பன் அவர்கள் பேசும்போதே இப்படி இருந்தால் மற்றபடி நாளை தாம் பேசும்போது எப்படி இருக்குமோ என்று பயப்படுவதாகவும் சொன்னதோடு, உங்கள் இஷ்டப்படி பேச நாங்கள் இங்கு அழைக்கப்பட்டோமா அல்லது எங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க இங்கு அழைக்கப்பட்டோமா என்பதை முதலில் தெரிவித்துவிட்டால் பிறகு நமக்குள் அபிப்ராய பேதம் இருக்க இடமிருக்காது என்று (கேலியாக) பேசினார். அதன்பிறகு கூட்டத்தினர் மிகவும் பொறுமையாக தோழர் கேளப்பன் உரையைக் கேட்டனர்.
தோழர் கேளப்பன் அவர்கள் பேசிய பேச்சின் கருத்து தந்தை பெரியாரின் கருத்துக்கு விரோதமானதாக இருந்தாலும், கேளப்பன் அவர்கள் பேச்சுக்குக் குந்தகம் விளைவித்ததைத் தந்தை பெரியார் அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், கூட்டத்தினர்க்கு அறிவுரை சொன்ன விதமும், தன்மையும் தந்தை பெரியார் அவர்களின் பண்பாட்டுக்கும், பிறர் உணர்வை மதிக்கும் பெருந்தன்மைக்கும், குறிப்பிட்டதோர் சூழ்நிலையில் மக்களிடம் எப்படிப் பேசி மடக்க வேண்டும் என்கிற அணுகுமுறைக்கும் தலைசிறந்த எடுத்துக்காட்டாகும்.
குடிஅரசு,
26.2.1933
தந்தை
பெரியார் 118ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment