பெரியார் கொடுத்த நன்கொடை!



அறிஞர் அண்ணாவிடம் பற்று மிகக் கொண்டிருந்தாலும் பெரியார் என்றால் பெரிய அளவில் பிரியம் விழுந்திருந்தது கலைவாணருக்கு. பெரியாரை அவர் மிகப் பெரியாராக மதித்தார். பெரியார் இனி எதுவுமே செய்ய வேண்டாம். தமக்குக் கிடைத்த அந்தப் பட்டத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று என்.எஸ்.கிருஷ்ணன் சொல்லியதுண்டு.

பெரியாரும் கலைவாணரின் சீர்திருத்தக் கருத்துக்களை வரவேற்று, பல தடவைகள் பேசியிருக்கிறார். திருச்சிக்குச் சென்றால் கலைவாணர் பெரியாரைச் சந்தித்துப் பேசாமல் இருக்கமாட்டார். பெரியாரும் கலைவாணரை அன்போடு வரவேற்றுப் பல மணி நேரம் மனம் விட்டுப் பேசி பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.

சிக்கனத்திற்குப் பெயர் போன பெரியாரிடம் ஒரு சமயம் மதுரம் நன்கொடை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். டாக்டர் தருமாம்பாள் தலைமையில் ஒரு நிதி வசூல் குழு சில ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்தது. பலரிடம் நிதி வசூல் செய்து மதுரம் ஒரு நாள் கலைவாணரிடம், இன்று பெரியார் அய்யாவிடம் சென்று நிதி வசூலிக்கப் போகிறேன் என்றார்.

கலைவாணர் பரபரப்போடு புதிய பார்வை புதிய மதுரத்தை நோக்கி, என்ன? என்ன? அய்யாவிடம் நிதி வாங்கப் போகிறாயா? நடக்குமா அது? என்று வியப்போடு கேட்டார்.
இருந்தாலும், மதுரத்தின் உற்சாகம் குறையவில்லை. குறையாத நம்பிக்கையோடு பெரியாரைப் பார்க்கச் சென்றார்.
பெரியார், மதுரத்தை வழக்கம்போல் வா, வா என்று வரவேற்றார். அவருடைய அடுத்த கேள்வி, எல்லா வகையிலும் சவுக்கியந்தானே? என்று இருந்தது. சவுக்கியந்தான் அய்யா என்று மதுரம் அவருக்கே உரிய கணீர்க் குரலில் பதிலளித்து விட்டுத் தம்மிடமிருந்த நிதி வசூல் புத்தகத்தை மெல்லப் பெரியாரிடம் எடுத்து நீட்டினார்.
பெரியார் அதை என்ன என்று கூடக் கேட்காமல், ஒரு தடவை புரட்டிப் பார்த்து விட்டுக் கீழே வைத்தார். சரிதான், பணம் வாங்க முடியாது பெரியாரின் அருகில் கிடக்கும் வசூல் புத்தகத்தை நாமே எடுத்துக் கொண்டு தோல்வியோடு கிளம்பிட வேண்டியதுதான் என்று எண்ணினார் மதுரம்.
ஆனால், ஆச்சரியம் காத்திருந்தது. பெரியார் மணியம்மையாரை அழைத்து நூறு ரூபாய்க்குச் செக் எழுதிக் கொண்டு வருமாறு பணித்தார். மதுரத்திற்குச் செவிகளை நம்பவே முடியவில்லை. பெரியார் கையெழுத்திட்டுக் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்டு மகத்தான சாதனையைச் செய்துவிட்ட திருப்தியோடு திரும்பினார்.

கலைவாணரிடம் பெரியார் கொடுத்த செக்கை மிகவும் பெருமிதத்தோடு காட்டியபடி இப்பொழுது என்ன சொல்றீங்க? என்று கேட்டார்.
கலைவாணர், நீ மிகவும் கெட்டிக்காரி, அரிச்சந்திரன் காலத்து நட்சத்திரையன்கள் எல்லாம் உங்கிட்ட நிக்க முடியாது! என்றார்.
கலைவாணர் கதை என்ற நூலிலிருந்து

- பம்பாய் மு.அறவரசன்
தந்தை பெரியார் 126ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை