தந்தை பெரியார் செய்த உதவி



அங்கு (ஈரோட்டில்) பெரியார் அவர்களோடு இருந்தபொழுது, கா.சு.பிள்ளையவர்கள் (உங்களுக்குத் தெரியும் கா.சு.பிள்ளை அவர்கள் கா.சுப்பிரமணிய (பிள்ளை) என்பது அவர் முழுப் பெயர்).
தமிழ்நாட்டிலே மறைமலையடிகளைப் போலப் பேரும் புகழும் சிறப்பும் வாய்ந்த பேரறிஞர். அதோடு சட்டத் துறையிலே பெரும் வல்லவர். அவருக்கு இணையான சட்ட அறிஞர் அக்காலத்தில் ஒருவரும் இல்லையாம். தாகூர் சட்ட விரிவுரையாளர் என்ற பட்டமும் அதற்காகப் பதினாயிரம் உருபா பரிசும் பெற்றவர். அந்தக் காலத்திலே, தென்கிழக்காசிய நாட்டிலே குற்றவியல் சட்டப் பொத்தகத்தை எழுதி, அதிலே முதல் பரிசு பெற்ற பெரியார், தமிழில் நூற்றிருபது நூற்களுக்கு மேல் எழுதியவர். பேரறிஞர்; ஆனால் அவர் கடைசிக் காலத்திலே, அஃதாவது நான் ஈரோட்டில் இருந்த பொழுது கா.சு.பிள்ளை அவர்கள் (அவரை எம்.எல்.பிள்ளையென்றும் சொல்லுவார்கள். ஏனென்றால், அந்தக் காலத்திலேயே எம்.., எம்.எல். படித்தவர் அவர்). சென்னை தாகூர் சட்டக் கல்லூரியிலேயே பேராசிரியராகவிருந்தவர். அவர்கள்தம் கடைசிக் காலத்திலே ஆதரிப்பாரின்றி, நோயுற்றுத் திருநெல்வேலியிலே வாடி, வதங்கிக் கிடந்தார். பெரியார் அய்யா அவர்களுடன் ஒருநாள் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது கா.சு.பிள்ளை அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தது. சாமி, மறைச்சாமி, நம் கா.சு.பிள்ளை அய்யா அவர்கள் இவ்வளவு நோயுற்று தளர்ந்து கிடக்கிறாராம். என்ன கொடுமை! இவ்வளவு பெரிய தமிழறிஞரை நம் தமிழர்கள் இப்படி மறந்து விட்டார்களே! அய்யோ என்று மிகவும் வருத்தப்பட்டுக் கண் கலங்கிச் சொல்லி, அவர்களுக்கு நான் இன்று ஓர் அய்ம்பது உரூபா அனுப்பியுள்ளேன். இனிமேல் மாதந்தோறும் உரூபா அய்ம்பது அனுப்புவேன் என்றும் கூறினார்.
அப்போது நான் நினைத்தேன். கா.சு.பிள்ளைக்கு வேறொரு பெயர் பூசைப் பிள்ளை என்பது. கடைசி மூச்சு நிற்கிற வரைக்கும் நாள்தோறும் சிவபூசையை மணிக்கணக்காகச் செய்தவர். ஆழ்ந்த சிவபக்தர், உயர்ந்த சிவநெறியாளர். சிறந்த சைவர். அப்படிப்பட்ட இறை நம்பிக்கையுடையவர் (ஆத்திகர்) இடத்திலே, இறை நம்பிக்கையற்றவர் (நாத்திகர்) என்று சொல்லப்படுகின்ற நம் பெரியார். அந்தக் கருத்து வேற்றுமையைப் பாராட்டாது. தமிழர்களில் ஒரு பெரிய அறிவாளி. இப்படி ஆதரிப்பார் அற்றுக் கிடப்பதா என்று எண்ணி, அன்பு வைத்து, வருந்தி இரங்கி மாதந்தோறும் (நான் அங்கிருந்து நான்கு மாதமும் தவறாமல் அனுப்பியதை நேரிலேயே பார்த்தேன்) அவருக்கு அய்ம்பது உரூபா அனுப்பி வந்த பெருந்தன்மையை என்னென்பது) அப்பொழுது நான் வேறொன்றையும் எண்ணி வருந்தினேன். எவ்வளவோ சைவ மடாதிபதிகள் எவ்வளவு சைவச் செல்வர்களாக இருக்கிறார்களே! அவர்களுக்கெல்லாம் இந்த அன்பில்லையே. இவர் இறை மறுப்புக் கொள்கையுடையவராயிருந்தும் தமிழர் என்ற ஓர் உணர்ச்சிக்காக இப்படி பெருங்கொடை வழங்குகின்றாரே என்றும் எண்ணினேன். (அப்போது அய்ம்பது உரூபா என்றால், இப்போது எண்ணிப் பார்த்தால் அய்நூறு உரூபா).
- மறை திருநாவுக்கரசு நன்றி: இளந்தமிழன், மே 2009
தந்தை பெரியார் 131ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் 


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை