உண்மையில் அவர் பெரியார் தான் என்பதை உணர்ந்தேன்
2003 ஆம் ஆண்டு ஞானபீடம் என்றொரு நாடகம் போட்டேன். கல்வி ஞானம் இருந்தால் தலித் ஒருவனும் மடாதிபதி ஆகலாம் என்பது இந்தக் கதையின் மய்யப் பொருள். இந்த நாடகம்பற்றி காஞ்சி சங்கர மடத்தின் ஜெயேந்திரரிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னை சங்கர மடத்துக்கு அழைத்தார். அந்த நாடகத்தை நிறுத்த வேண்டும் என்றார். மிரட்டலும் இருந்தது. இந்தச் செய்தி பரவியதால் எனக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அஞ்சினார்கள்; நண்பர்கள் வட்டமும் சுருங்கியது. இது ஒரு ஆன்மீகவாதியின் அரசியல் போல எனக்குப்பட்டது.
ஆனால், 50 வருடங்களுக்கு முன்னால் 1957 ஆம் ஆண்டு கடவுள் இல்லை என்று பெரியார் தீவிரப் பிரச்சாரம் செய்த காலம். அப்போது ம.பொ.சி. அவர்களின் எழுத்தாலும், பேச்சாலும் ஈர்க்கப்பட்ட நான், கடவுள் எங்கே? என்ற நாடகம் போட்டேன். பெரியாரின் கருத்துக்கு எதிர்மறையான வசனங்கள் கொண்ட நாடகம் அது. ம.பொ.சி. அவர்களுடன் சேர்ந்து பெரியாரை சந்திக்கும் ஒரு வாய்ப்பு அப்போது கிடைத்தது.
இவர் பெயர் மகாலிங்கம், குழந்தை மாலி என்ற பெயரில் நாடகம் போடுகிறார் என்று பெரியாரிடம் ம.பொ.சி. அறிமுகம் செய்து வைத்தார்.
கடவுள் எங்கே? நாடகம் போட்ட பையனா நீ என்றார் பெரியார்.
ஆமாங்கய்யா, அதுல உங்க கருத்தை கடுமையா எதிர்த்து வசனம் எழுதியிருக்கேன் என்றேன் நான்.
அதனாலென்ன? உன் கருத்த நீ சொல்ற. என் கருத்த நான் சொல்றேன். தப்பு ஒண்ணுமில்ல. மக்கள் முடிவு பண்ணிக்குவாங்க என்று பெரியார் சொன்னார். எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும், ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் அவர் பெரியார்தான் என்பதை உணர்ந்தேன்.
அரசியலில் ஒரு ஆன்மீகவாதியாகப் பெரியாரைப் பார்க்க வைத்த சம்பவம் இது. இப்போதும் இந்த இரண்டு சம்பவங்களும் என்னை இயக்கிக் கொண்டே இருக்கின்றன என்கிறார் நாடகத் துறையில் அரை நூற்றாண்டு கால அனுபவம் கொண்ட மாலி என்கிற மகாலிங்கம் அவர்கள்.
- தீக்கதிர், 16.5.2011, திருச்சி
தந்தை
பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment