உடல் நலக் குறைவிலும் ஓயாப் பணி
தந்தை பெரியாரின் 90 வயதிற்குப் பின்னர் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினையும், குடல்வாதமும் இருந்தது. பிரபல மருத்துவர், சிறுநீரியல் துறை அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் எச்.எஸ்.பட் அவர்கள் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்து குடல் பகுதியில் பெருமளவு குடல் வாதமாக இறங்கிவிட்டதால், அதற்கான அறுவைச் சிகிச்சை செய்வது கடினம் உயிருக்கு ஆபத்து என்று முடிவெடுத்து, தந்தை பெரியாரின் சிறுநீர்ப்பையில் ஒரு துளை வைத்து, குழாய் மூலம் சிறுநீர் வெளியேறும் சிகிச்சையினை செய்தார்கள்; தந்தை பெரியார் இந்த நோயினால் தளர்ந்து விடவில்லை; தந்தை பெரியார் கால்கள் ஓரளவு செயலிழந்திருந்தன. சிறுநீரை சேகரிக்கும் ஒரு பையையும் உடனே சுமந்து, எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டும், சுயமரியாதை கருத்துக்களை பாமர மக்களுக்குத் தொடர்ந்து எடுத்துரைத்த வண்ணமும் செயல்பட்டு வந்தார்கள்; வேறு யாரேனும் இவ்வளவு உடல் நலக்குறைவிருந்தும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கும் மனோபாவம் பெற்றிருப்பார்களா என்பது கேள்விக்குறியே! பொதுக்கூட்டங்களில் பேசும்போதும், கட்டிலில் அமர்ந்திருக்கும்போதும் அம்மா, அம்மா என்று முனகுவார். சிறுநீர்க்குழாயின் ஒரு பகுதி அவருக்கு அவ்வப்போது ஏற்படுத்தும் வலிதான் அந்த முணுமுணுப்பு; சிறுநீரியில் அறுவைச் சிகிச்சையில் சிறப்புப் பட்டம் பெற்றவர் என்ற முறையில் தந்தை பெரியாருக்கு அவ்வப்போது சிற்சில மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் செய்து வந்தேன். 1969ஆம் ஆண்டு, சென்னை மருத்துவக் கல்லூரியின் விடுதிக் காப்பாளராக இருந்தபோது எங்கள் இல்லத்திற்கு தந்தை பெரியார் அவர்களையும், அன்னை மணியம்மையாரையும் மதியவுணவுக்கு அழைத்திருந்தோம். அவர் எங்கள் இல்லம் வந்து, உணவருந்தி, உரையாடி எங்களை கவுரவித்தார்கள். நாங்கள் பெருமகிழ்ச்சியடைந்தோம்.
Comments
Post a Comment