நெற்றியில் விபூதி
அய்யா அவர்களும், குன்றக்குடி அடிகளாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். குன்றக்குடி ஆதீனத்துக்கு வரும்படி அய்யா அவர்களை அடிகளார் அழைத்தார். அன்புக்குக் கட்டுப்பட்ட அய்யா அவர்களும் ஒப்புக்கொண்டு சென்றார்கள். பூரண கும்பத்துடன் அடிகளார் வரவேற்பு அளித்தார். அப்பொழுது அவர்களின் நெற்றியில் குன்றக்குடி ஆதீனத்தைச் சேர்ந்த அடியார்கள் சிலர் விபூதி பூசி வரவேற்றார்கள். அந்நாளில் இந்நிகழ்ச்சி பரபரப்பாகப் பேசப்பட்டது. அடுத்த சில நாளில் தஞ்சையில் மாநாடு. அய்யா அவர்களுடன் நானும் போயிருந்தேன். மாநாட்டுப் பந்தலில் அய்யா அவர்கள் ஓய்வாக அமர்ந்து இருந்தார்கள். நானும் போய் அமர்ந்துகொண்டேன்.
அடிகளாருடன் பேசிய விவரங்களை அய்யா அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அன்பே சிவம் என்கிறீர்கள் ஆனால், உங்கள் கடவுள்கள் கொலைகூட செய்து இருக்கிறார்களே என்றாராம் அய்யா அவர்கள். அதற்குப் பதிலாக அடிகளார், கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர் (கொலையில் கொடியவர்களுக்கு வேந்தன் கொலை தண்டனை வழங்குவது, பயிரைக் காப்பாற்றக் களைகளைக் களைவது போன்றது) என்ற குறளை அடிகளார் சொன்னாராம். அய்யா அவர்கள், இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் என்ற குறளைக் கூறி அடிகளாரை மடக்கினார்களாம்! (இதனால்தான் அய்யா அவர்கள், ஆ... ஓ... என்றால் ஒரு குறளைக் கூறிவிடுவார்கள் என்று சொல்லுவது வழக்கம்!).
நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டது பற்றிக் கேட்டேன். நான் எங்கே பூசிக் கொண்டேன்! அடிகளார் பூசி விட்டார். அவ்வளவு பெரியவர் இதை எனக்குச் செய்யும் மரியாதையாகக் கருதுகிறார். அந்த நேரத்தில் நான் தலையைத் திருப்பிக் கொள்வது அவரை அவமதிப்பதுபோல ஆகாதா என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.
- அ.மா.சாமி, தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள்
விடுதலை
மலர்
Comments
Post a Comment