துறையூர் வை.க. நடேசன் இல்ல திருமணத்தில் பெரியார் உரை
13.11.1967-இல் துறையூர் பெருமாள் மலைஅடிவாரத்தில் துறையூர் திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் உயர்திரு வை.க.நடேசன் அவர்கள் மகள் பிச்சையம்மாள் - மு.முத்துக்கருப்பன் ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஆற்றிய உரை:-
தாய்மார்களே!
தோழர்களே!
இனி எதிர்க்காலத்திலே திருமணம் செய்வதையே கிரிமினல் ஆக்கிவிட வேண்டும்.இம்மாதிரியான சுயமரியாதைத் திருமணங்கள் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சிகள் பழமையான வைதீக முறைகளுக்கு மாறாக இப்போது நாட்டிலே ஏராளமாக நடக்கிறது. நாங்கள் போகிற இடத்தில் தான் நம் கொள்கைப் படி நடக்கின்றன என்பதல்ல. நாங்கள் போகாமலேயே நாட்டில் எத்தனையோ நடக்கின்றன. அது போலவே இதுவுமாகும். அருமைத் தோழர்களே!
எனக்குப் பின்னாலே பேசுகிற தோழர்களுக்கும் நான் முன்னுரையில் சொல்லுவதற்கும் இடம் வைத்துக் கொண்டு இப்பொழுது முதலாவதாக வாழ்க்கை ஒப்பந்தத்தை மணமக்கள் நிறைவேற்றிக் கொள்ள தொடங்கிவைக்கிறேன். மணமகன் உறுதிமொழி தாய்மார்களே, பெரியோர்களே, உயர்திரு முத்துசாமி அவர் களுடைய மகன் முத்துக்கருப்பனாகிய நான் உயர்திரு நடேசன் அவர்களுடைய மகள் பிச்சையம்மாளை நான் எனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டேன். இன்று முதல் எங்கள் வாழ்வில் நிகழும் இன்பம் - துன்பம்
-நன்மை தீமை ஆகிய நிகழ்ச்சிகள் யாவும் எங்கள் இருவருக்கும் சம உரிமையுடைய பொது நிகழ்ச்சியே ஆகும். வாழ்க்கையில்
பிச்சையம்மாளிடமிருந்து நான் என்னென்ன உரிமைகள் எதிர்ப்பார்க்கிறேனோ அவ்வளவும் என்னிடமிருந்து எதிர்ப்பார்க்க பிச்சையம்மாளுக்கு உரிமை உண்டு. இந்த ஒப்பந்தத்தின் மீது அதன் அறிகுறியாக இந்த மலர்மாலையையும் பொன் அணியையும் அணிவிக்கின்றேன்.
மணமகள் உறுதிமொழி தாய்மார்களே,
பெரியோர்களே,
உயர்திரு நடேசன் அவர்களது மகள் பிச்சையம்மாளாகிய நான் உயர்திரு முத்துசாமி அவர்களது மகன் முத்துக்கருப்பன் அவர்களை (இன்னொரு தடவையும் சொல்லும்படி பெரியார் அவர்கள்கூற) முத்துக்கருப்பன் அவர்களை என் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டேன். இன்று முதல் எங்கள் வாழ்வில் நிகழும் இன்ப துன்பம் நன்மை தீமை ஆகிய நிகழ்ச்சிகள் யாவும் எங்கள் இருவருக்கும் சம உரிமையுடைய பொது நிகழ்ச்சியேயாகும்.
உயர்திரு செல்வர் முத்துக்கருப்பன் அவர்கள் என்னிடமிருந்து என்னென்ன உரிமைகள் எதிர்பார்க்கிறாரோ அவ்வளவும் அவரிடமிருந்து எதிர்பார்க்க எனக்கு உரிமையுண்டு என்கிற இந்த ஒப்பந்தத்தின் மீது அதன் அறிகுறியாக இந்த மலர் மாலையை அணிவிக்கின்றேன்.
(உறுதி மொழிக்குப் பின் பெரியார் உரைத் தொடர்ச்சி):-
இந்த திருமணத்திற்கு சட்டப்படி இவ்வளவு தான் தேவையிருக்கு. சட்டத்திலே பதிவு செய்து கொள்ளுவது என்கிற ஒரு முறையும் இருக்கிறது.
அந்த முறையிலே ரிஜிஸ்ட்ரார் முன்னிலையிலே இவ்வளவு தான் நாம சொல்லவேணும். ஆனால் அங்கேவிட இங்கு என்னா விஷேசம்னா ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமம். ஆணுக்குப் பெண் அடிமையல்ல. எங்களுடைய முயற்சியையும் கருத்தையும் கொண்டு இதை நடத்தி வைத்தேன். இந்தத் திருமணம் இதுவரைக்கும் சட்டப்படி செல்லாது. இனி மேல் செல்லும். இந்த மக்கள் அரசாங்கம் (அறிஞர் அண்ணா முதல்வராக) வந்ததற்குப் பின்னாலே, இதைச் சட்டம் செய்யப் போவதாக நமது முதல் அமைச்சர் (அறிஞர் அண்ணா) அவர்கள் சொல்லிவிட்டதினாலே அனேகமாக நடக்கும். அது நடக்கவில்லை- யானாலும் எங்களுக்கு ஒண்ணும் கஷ்டமில்லே.
சட்டம் வந்தால் நல்லது. பிச்சையம்மாள்,
முத்துக்கருப்பன் ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி இனிது நிறைவேறியது.
அறிஞர்களான திருவாளர்கள் டி.டி.வீரப்பா
, பெரியசாமி அழகுமுத்து , ஆணைமுத்து ,ஆகியவர்கள் மிக அருமையாகச் சொற்பொழிவாற்றி உங்களுக்கு உணர்ச்சியை ஊட்டியிருக்கிறார்கள்.
இப்பொழுது முடிவுரை என்னும் பேரால் சில வார்த்தைகள் சொல்லி இந்த நிகழ்ச்சியை நான் முடிவுக்குக் கொண்டுவர ஆசைப்படுகிறேன்.
தோழர்களே!
சுயமரியாதைத் திருமணம் என்றாலும் சீர்திருத்தத் திருமணம் என்றாலும், இதுதான் அதற்குச் செயல் முறைத் திட்டம் என்று கருதிவிடாதீர்கள். மனிதனுடைய பகுத்தறிவு ஆற்றல் இருக்குமளவுக்கு அவ்வப்போது பல மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டேவரும். நான் முன்னேயே சொன்னேன். திருமணம் என்றாலே கிரிமினல் குற்றம் ஆனாலும் ஆகும் என்று சொன்னேன். அது அதிசயமல்ல. இந்த திருமணம் செல்லாது என்று விதி இருந்தும் ஆயிரக்கணக்கா, பதினாயிரக்கணக்கா திருமணங்கள் நடந்துகிட்டே வந்தது. இப்ப திடீரென இது செல்லும்கிற நிலைமை வந்துவிடவில்லையா?
அதை இந்த அரசு செய்யப் போகிறாங்க சட்டம். அதுபோலதான் இதுவும் (கலியாணம் செய்வது சட்ட விரோதம் என) திடீரென வரும். ஆனதினாலே இந்த திருமண முறை 1967-ஆவது வருஷத்திய மாடல். அவ்வளவுதான்;
கார் எப்படி அந்தந்த வருஷத்துக்கு ஒரு மாடல் வருகுதோ அதுபோல. இன்னும் 1968 ம் வருஷத்துக்கு என்ன மாடல் வருமோ? இன்னும் தீவிரமாக இருக்கும். மனுஷன் வளருகிறான்.
தன் புத்தியைப் பற்றிச்சிந்திக்கிறதுக்குத் துணிஞ்சிட்டான். அப்பப்பஎன்னா வருமோ அதுபடிதான் நடக்கும். இனி பழசுன்னா? நம்ம ஜாதிஎன்னா?
பழக்கமென்னா?
வழக்கமென்னா?
என்பதெல்லாம் போயே போயிடும். பேசுகிறவன் எல்லாம் காட்டுமிராண்டி பழமையே இருக்க வேணும்கிறவன் (கைத்தட்டல்)அவன் காரியத்திலேயும் யோக்கியமாக நடந்துக்கிறதல்ல.
அது மாத்திரமட்டுமல்ல.
அவனுக்கு வேண்டிய காரியத்துக்குப் பழசைச் சிந்திக்க வேண்டியதில்லை. வேண்டாத காரியத்துக்கு நம்முன்னோர் சாஸ்திரப்படி மதம் வெங்காயம் என்கிறான். ஆனதினாலே அந்த எண்ணம் தைரியம் வந்திட்டா நாளைக்கு எது மாறினாலும் மாறும். இதுவே முடிவுன்னு நினைக்காதீங்க; வரும். இப்ப சாதாரணமாகவே பாருங்களே.
ஒரு ஆம்பளை பொம்பளை கழுத்திலே தாலிகட்டுகிறான்.
நாளைக்கு பொம்பளை ஆம்பளை கழுத்திலே தாலி கட்டுகிறதாக வரும். (கைத்தட்டல் சிரிப்பு) பொம்பளை பார்த்துத்தனக்கு ஒரு வேலைக்காரனை நியமிச்சிகிறதுக்கு ஒரு ஆம்பளையைப்பிடிச்சுக்குவாள்.
அதிசயம் என நினைக்காதீங்க.
பெண்களை தகுந்த அளவுக்கு நாம் முன்னேற்றமடையச்செய்து,
அவர்கள் சக்தியை எல்லாம் பயன்படும் படியாகச் செய்தால், சம்பளத்துக்கே ஒரு புருஷனை வைச்சிக்குவாள்.
இப்ப நாம (ஆம்பிள்ளை) சம்பளத்துக்கு ஒரு வைப்பாட்டியை வைச்சுக்கிறான்.
மாதம் ஏதோ கொடுத்துவிட்டு போக்குவரத்திலே வைச்சிக்கிறான்.
அந்த மாதிரி. அப்படி எல்லாம் நடக்குமான்னு நினைப்பீங்க.
இந்த திருவாங்கூருக்குப் போனீங்கன்னா திருவாங்கூர் ராணி அவள் புருஷனுக்கு மாதம் ரூபாய் 80ம்
120ம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இன்னைக்கும் கொடுக்கிறாள். இன்னைக்குச் சம்பளம் உசந்திருக்கும். நாங்கள் பார்க்கிற போது சம்பளம் ரூ 80 (என்பது)தான். யாருக்கு ராணியோட புருஷனுக்கு.
அந்த சம்பளத்தை ராணி கொடுக்கிறாள். எதுக்கு? அவளுக்கு அவன் (இன்பம் தர - கலவி செய்யும்) ஒரு வேலைக்குதான்.
(சிரிப்பு)
இவன் இப்படியே இருந்துகிட்டு இருப்பான் மாதம் எண்பது ரூபாய் சம்பளமாய் வரும். இப்ப பிறந்திடுதே திருவாங்கூர் ராணிக்குப் பிறந்த பிள்ளைகள் சம்பளத்துக்குள்ள புருஷனுக்குப் பிறந்த பிள்ளைதான். சாஸ்திரப்படி. அது சரியாக இருந்தால், அதிலே அப்புறம் வெட்கமென்னா வந்தது? அவுங்களா கொளுத்துப் போய்ப் பண்ணிகிட்டா வெட்கம். சாஸ்திரப்படி பாப்பானுக்குத்தான் அம்மாதிரி சம்பளம் கொடுத்து வைச்சிக்க வேணும். அவனுக்குப் பிள்ளை பிறந்தால் அது தான் செல்வமுள்ள பிள்ளை அப்படின்னு இருந்தா அதிலே தப்பு என்னா? இப்ப நம்மோடு சேர்ந்ததாலே மலையாளிகள் கொஞ்சம் பேரு கோவிச்சிக்குவாங்க. மலையாளத்திலே பெரிய மனுஷனாக இருக்கிற அத்தனைபேரும் பாப்பானுக்குப் பிறந்தவன். பிறந்தவன் எல்லாம் அந்தப் பாப்பான் பேரையே வைச்சிகிறான்.
இன்னைக்கும் நடக்குது. இதெல்லாம் தப்பூன்னு சொல்லாதீங்க. என்ன வேணுமானாலும் நடக்கும்.
சட்டம் சாஸ்திரம் என்று பெயர் வைச்சிகிட்டா என்னா செய்தாலும் சரி. மனுதர்ம சாஸ்த்திரத்திலே உள்ளதைச் சொல்லுகிறேன்.
(புத்தகம் கொண்டு வந்திருக்கிறீங்களா இல்லாட்டா சரி) நான் சொல்லுகிறதை ஒரு செய்தி என்கிற அளவிலே - ஒத்துக்கங்க இன்னைக்கும்.
மலையாளத்திலே பெரிய வீட்டிலே கலியானமானால் கிராமணி என்று பெயரு அந்த பெரியவீட்டுக்கு எல்லாம் அவர்கள் ஒரு காலத்திலே ராஜாவாக இருந்து, பிறகு மிட்டாதாரோ ஜெமீன்தாராகவோ ஆனவங்க. இன்னமும் அந்த அந்தஸ்த்திலேயே வாழுகிறாங்க.
அவர்கள் பொண்ணுக்குக் கலியானமானால் வழக்கம் என்ன தெரியுமோ? பொண்ணுக்குக் கலியாணமானால் மூணுநாள் தொடர்ந்து பாப்பான்தான் அவளிடம் (சாந்தி முகூர்த்தம்) படுத்துக்க வேணும்.
முதன் முதல். (சிரிப்பு) நான் அது பற்றிய புஸ்தகம் கொண்டு வந்திருக்கிறேன்.
அய்யரே போட்ட புஸ்தகம் தான்.
இன்னைக்கு கலியாணமானால் இன்னைக்கு ராத்திரி வைச்சிகிட்டாலும் சரி. இல்லாட்டா நாளைக்குச் செய்து கொண்டாலும் சரி. நாளைக்கு நாளை மறுநாளைக்கு அடுத்தநாள் மூணுநாளைக்கும் அந்தப் பாப்பான் தான் அந்தப் பொம்பளைகிட்டே படுத்துக்க வேணும். நாலாவது நாள் தான் சொந்த புருஷனோடு படுத்துக்கவேணும். இரண்டு நாள் படுத்து மூன்றாம் நாள் உடம்பு (பெண்ணுக்கு)
சவுகரியமில்லையானால் சௌக்கியமாகிற வரைக்கும் சொந்த புருஷன் பாப்பானுக்குக் காசு கொடுக்கவேணும். நாலாவது நாள்தான் சொந்தபுருஷன் அவளிடம்(கலவிக்கு)
படுத்துக்க வேணும். சாஸ்த்திரப்படி இது மாதிரி நடக்கவேண்டு மென்றால் இதற்குப் பெயருஎன்னா? இங்கே இருக்கிற உங்களில் எத்தனை பேரு திவசம் பண்ணுகிறீங்க. அவுக அப்பனுக்கு.
தெவசம் பண்ணுகிறவன் பாப்பான் கலக்கித்தருகிற மாட்டுச்சாணி மூத்திரத்தை (கோவியம்) குடிக்கிறானா இல்லையா? இப்படிதான் சாஸ்த்திரப்படி அவனுங்க விதி. மலையாளத்திலே,தெவசம் பண்ணுகிறவன் (மாட்டுச் சாணி)
மூத்திரம் குடிக்கிறது சகஜமாகப் போச்சோ அதே மாதிரி அவனுக்கு (மலையாளத்திலே உள்ளவனுக்கு) அது சகஜம்.
இதிலே தப்பு என்னா? அது தப்பு அல்ல.
கடவுளின் பேராலே, மதத்தின் பேராலே, சாஸ்திர சம்பிரதாயத்தின் பேராலே,
பழக்க வழக்கங்களின் பேராலே, சட்டத்தின் பேராலே கொண்டுவந்து புகுத்திட்டான். எல்லா முட்டாள் தனமும் நடக்குது. அறிவைக் கொண்டு எல்லோருக்கும் உடலுழைப்புச் சக்தி வந்தால்தான் நாம சிரிக்க லாயக்குடையவங்க.
அதுவரைக்கும் நீ லாயக்கில்லே இன்னொருவனை பரிகசிக்க.
இன்னும் சொல்லுகிறேன். இங்கே ஒரு ஆம்பளைக்கு ஒரு பொம்பளை பொண்டாட்டி.
மலையாளத்திலே ஒரு பொம்பளை 12
புருஷன் வரைக்கும் வைத்துக் கொள்ளலாம். அது சாஸ்திரப்படி.
(சிரிப்பு,
கைத்தட்டல்)
அதாவது உலகம் எப்படி இருக்கிறது என்று புரிஞ்சாதான் விஷயம் புரியும். மலையாளத்திலே இன்னைக்கும் அப்படி நடக்குதுன்னா ஏன்? எல்லாம் சிக்கனம்.
12 ஆம்பளை 12 பொம்பளைங்களை வைச்சி குடித்தனம் பண்ணுகிறதுக்கு
- ஒரு பொம்பளை 12 புருஷனை வைச்சிகிட்டு குடித்தனம் பண்ணுகிறதுக்கு எவ்வளவோ சல்லிசா (அதிக செலவு இல்லாமல்) குடும்பம் நடக்கும்? திப்புசுல்தான் செத்தபிறகு அங்கே ஒரு உத்தரவு போட்டான்.
இனிமேல் ஒரு பொம்பளை ஒரு புருஷனோடு மட்டும் தான் இருக்க வேணும்ன்னு.
அவன் போட்டானே தவிர. இப்பவும் பழைய முறைப் படிதான் நடக்குது சில குடும்பங்கள்.
இப்படியாகப் பலக்காரியங்கள் நடக்குது. காலப் போக்கில் இவைகளை எல்லாம் மாற்றணும்.
இப்ப மலையாளிகள் ரொம்ப பேரு பாப்பான்னா கோவிச்சிக்கிறாங்க. நம்ம உணர்ச்சி அங்கே ஏற்பட்ட பிறகு. இங்கே ஏன் அவன் வந்தான்?. என்னா வேலை அவனுக்கு? என்றெல்லாம் கேட்கிறாங்க. இன்னும் பொம்பளைங்களுக்கும் மாறலே. அவுங்க கொஞ்சம் குறைச்சிக்கனும்ன்னு நினைக்கிறாங்க.
இப்படியாகப் பல பழக்கவழக்கங்களை நாம வெறுக்க வேண்டியிருக்குது. துணிஞ்சி செய்ய கஷ்டப்படுகிறோம். அவ்வளவுதான். மற்றும் சொல்லறேன். நம்ம பெண்கள் விஷயங்களிலே நாம செய்யவேண்டிய திட்டங்கள்.
காரியங்கள் நிறைய இருக்குது.
பெண்களும் நினைக்கணும். ஆண்களும் அவர்களை அந்த அளவுக்குப் பக்குவப் படுத்தவேணும்.
இப்ப நாம பெண்களை என்ன பண்ணியிருக்கிறோம்.
அவர்களை எல்லாம் பொம்மையாட்டம் சிங்காரிச்சி வைக்கிறதாலே நம்ம நேரம் சரியாய்ப்போச்சி.அவர்களுக்கும் சிங்காரிப்பதிலேயே உணர்ச்சி. குரங்கு மாதிரி காது மூக்கிலே பத்து ஓட்டை போட்டுக்கவேணும். சீலை 16 முழம் கட்டிக்கணும். 12 முழம் கட்டிக்கணும்.
தலைமுடியை எவ்வளவு நீளமாகுமோ அதுவரைக்கும் வளர்த்தனும்.
இது எல்லாம் என்னா? வெள்ளைகாரிச்சியைப் போய்ப் பாருங்க. கிராப்பு வெட்டிக்கிறா?
ஒரே மேலேயிருந்து முழங்கால் வரை உடுப்பு போட்டுக்கிறாள். மேல் பாடியை திறந்து விட்டுகிறாள்.
ஒரு புத்தகமிருக்கு. கொஞ்சநாள் பொறுத்துவரும்.
ஏன் அப்படி அவர்கள் செய்துகிறாங்கன்னா? நம்ம பெண்கள் நகை ஏராளமா செய்து போட்டுகிறதுக்கு அவர்கள் தான் காரணம். அவனுங்களும் ஆண்கள் ஆசைக்கு அவ்வளவு செய்து போட்டு தன் அன்பைக் காட்டிக் கொள்ளுவதற்கும் காரணம். பெண்களின் அலங்காரத்தைப் பார்த்துச் சீக்கிரம் கவர்ச்சியடைகிறான். அவர்கள் விட்டுவிடமாட்டார்கள் நம்ம தாய்மார்களை.
ஆனால் எதுக்காகத் தாய்மார்கள் சிங்காரித்துக் கொள்ளுகிறார்கள்?
புருஷன் தான் தன்னோடு வீட்டிலேயே இருக்கிறான்.
அவனுக்கு ஏன் நம்ம அழகை சீவி சிங்காரிச்சி, பெருக்கிக் காட்டுகிறது?
மற்றவங்கள் பார்த்து தன்னை அழகாக இருக்கிற மாதிரி தெரிய வேண்டாமா? எதுக்கு உம் அழகைப் பார்த்து, இன்னொருத்தன் பார்த்து உணர்ச்சி பெற வேண்டும்? (சிரிப்பு)
ஒரு புத்தகத்திலே ஒருவர் எழுதியிருக்கிறாரு நகை,
சீலை,
சிங்காரம் என்கிற எல்லா தடபுடல் எல்லாம் போட்டுகிட்டு அவனைக் கவர்ச்சி பண்ணுகிறதை விட உடம்பிலே நல்லா பாகத்தை எல்லாம் காட்டுகிற மாதிரி மூலம் ஆண்களைக் கவர்ச்சி பண்ணிடலாம். அவனிடம் சினேகிதம் வைக்கிறோமோ இல்லையா அது வேறு சங்கதி. அவன் பார்த்துத்தன்னை ஆசைப் படவேண்டும் என்பதற்காகதானே. நீங்கள் நகைகள் போடுவதற்கு என்னா அர்த்தம்? சீவல், கோணல், வாக்கு,நகைசிங்காரம், உடை சிங்காரம்,
யாருக்காக உங்களுக்காகவோ நீங்களே பார்த்துக்கவா பண்ணிக்கிறீங்க?
மற்றவன் பார்த்து உம்மை ரசிக்க கவர்ச்சிக்காகத்தானே?
நம்ம பெண்களுக்கு அந்த நகை உடை அலங்காரம் தான். அது போகணும். நான் ஒண்ணும் தடபுடலா ஓர் ஏற்பாடு பண்ணினேன்.
மேல் நாடுபோய்வந்ததுக்கு அப்புறம்.
நம்ம பெண்டுகளெல்லாம் (சீலைக்கு பதிலாக)
லுங்கி கட்டவேணும் 4 முழத்திலே சொக்காயும்
போட்டுக்கணும். வேணுமானால், ஒரு துண்டு இப்படி (மார்பைப் காட்டி பெரியார்) இப்படி போட்டுக்க வேணும். இதுமாதிரி தான் பர்மாவிலே. மலேயா, சிங்கப்பூரிலே, சுமத்திரா, ஜாவா ஆகிய இடங்களில் பொம்பளைங்க. சீலையே கட்டுவதில்லை.
சைனாபூராவும் அப்படித்தான். இடுப்பிலே ஒரு லுங்கி மேலுக்கு ஒரு சட்டை. அங்கே ராஜா பொண்டாட்டி கூட அப்படிதான் அணிகிறார்கள்.
அதனாலே அவர்களுக்கு எவ்வளவு வேலை குறைஞ்சி போச்சி. எவ்வளவு வசதி ஏற்பட்டுப் போச்சி. பிள்ளைங்களையும் நம்மை போலவே வளர்க்கிறோம். உடை மாற்றம் ஒரு வேலைக்காக அல்ல.வசதிக்காகத்தான்.பிள்ளைங்கள்எப்படி சுதந்தரமாக வளரமுடியும்?
சுதந்தரம் வரவேண்டுமான எல்லாத்தையும் சல்லிசா எடுத்துக்க வேணும். அவள் புருஷன் அடிக்க வந்தால் அவள் கையை ஓங்கணும். அவன் நீட்டுகிறதுக்குள்ளே நாம போடறதுக்குத் தயாராக இருக்கவேணும்.
அதற்குத் தகுந்த பக்குவத்தோடு இருந்தால் அல்லவா ஆகும்? காலிலே மாட்டிகிட்டு கையிலே மாட்டிகிட்டு இங்கே (காதிலே) பட்டாலும் சரி இங்கே (மூக்கிலே) பட்டாலும் சரி போயிடும். மாட்டுக்கு மூக்கனாங்கயிறு போடுராப்பிலே. நம்ம பெண்களை
20 வருஷம், 22 வருஷம் வரைக்கும் கூட படிக்க வைக்கணும். படிப்பு முடிஞ்சிது
200 ரூபாயிலிருந்து 500 ரூயாய் வரையிலான வேலை காத்துகிட்டு இருக்கவேணும்.
அந்த மாதிரி அமைப்பு தகுதி நம்ம சமுதாயத்திலேவந்த பிறகுதான் கலியானம் செய்கிறதுக்குத் தாய்தகப்பன் நினைக்கணும்.
நீங்கள் அப்படி நினைக்கிறதே இல்லை. இந்த சனியன் பெரிசாயிடுச்சே இதை யாரு காத்துகிட்டு இருக்கிறது? இந்த எழவை காப்பாத்தறது? எப்படி தள்ளுகிறது.
இது
- கழுவி குப்பையைப் போட்டாப்பிலே ஆச்சே எவனுக்காவது கட்டிக் கொடுத்தால் தானே எனக்கு நிம்மதி என்று அந்தமாதிரி கருதும்படியாக ஆயிடுது பொம்பளைங்களுக்கு.
குடும்பத்திலே ஒரு பொட்டை பிள்ளை பிறந்ததுதானே இதற்குக் காரணம். அது குடும்பத்துக்கு ரொம்ப பாரமா இருக்குது.
எல்லாத்தையும் படிக்க வையுங்க. எல்லாரும் படிக்கட்டும். பொட்டை பிள்ளைங்க குறைஞ்சது - ஒரு பத்தாவது வரைக்கும் படிக்க வையுங்க. பின்னே பாருங்க அவுக நிலை எவ்வளவு மேலுக்கு வரம்ன்னு. பாசுபண்ணின அன்றைக்கே அப்பெண்ணுக்கு ரூ 100 சம்பளமிருக்குது.
இதுவும் பாஸ் பண்ணி வாத்தியார் படிப்பும் பாஸ் பண்ணிட்டா
200 ரூபாய் இருக்கு அவுங்களுக்கு.
ரொம்ப படிச்சிபாஸ் பண்ணினா ரூ 300 வரை கிடைக்கும்.
அப்புறம் ரொம்ப ஏறும் மளமளன்னு. இதெல்லாம் ரொம்ப நாளாகவே பாப்பானுக்கு மாத்திரமே சொந்தமாக இருந்தது. அப்புறம் பாப்பாத்திக்குச் சொந்தமாக இருந்தது. இப்ப நம்மவரிலே சிலபசங்களுக்குச் சொந்தமாக இருந்தது. இனி நம்ம பெண்களுக்கு இதுவெல்லாம் (படிப்பும் வேலையும்)
சொந்தமாக வேணும்.
இப்ப சட்டம் வரப்போகுது.
அனேகமாகவரும்.
நாம எதிர் பார்க்கிற பல துறைகளிலும் பல சட்டங்கள் வரும். காங்கிரசு அமைப்பே மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. இருந்தாலும் இப்போ நம்மவர் ஒருவர் (அறிஞர் C.N. அண்ணா துரை தமிழக முதலமைச்சராக)
இருக்கிறார்.
அவர் நம்ம கூடவே இருந்தவர். அவரு 21 வயசுக்கு முன்னாலே கலியாணம் பண்ணினால் அது கிரிமினல்,
என சட்டம் வரப்போகுது.
இதை யார் யாரோ தடுக்கிறாங்க. ரகசியமாக எதிர்க்கிறாங்க.
எதிர்ப்பு பலன் தராது. பெண்கள் சமுதாயம் முன்னேற்ற-
மடையவேண்டுமானால் நாட்டிலே பிறக்கிற பிள்ளைங்களோட எண்ணிக்கையை குறைக்க வேண்டுமானால் நல்லா கவனிச்சிக்கங்க பெண்கள் சமுதாயம் முன்னேற்ற மடையவேணுமானால்,
நாட்டிலே சும்மா ஜனங்கள் எண்ணிக்கை கண்னை மூடிக் கொண்டு வளருது. அதுவெல்லாம் குறைய வேண்டுமானால் முதலாவது பொம்பளைங்க 22 வயசு வரைக்கும் பெண்கள் கல்யாணம் பண்ணக்கூடாது. அதுவும் 21 வயசுக்கு இப்ப பண்ணிகிட்டாங்க.
21 வயசு வரைக்கும் கலியானம் பண்ணக்கூடாது.21 வயதுவரைகலியாணம்
கூடாது என்பதில் இரண்டு லாபம். முதலாவது ஒரு நாலு குழந்தையாவது மிச்சமாகும். 21 வயது வரை வருஷத்துக்கு ஒண்ணு கணக்கில் 5,6 பிள்ளைகள் ஆகிவிடும்.
இரண்டு வருஷத்துக்கு ஒண்ணு என்றால் அதில் பாதிபங்காகும். இது ஒரு லாபம். குழந்தை பிறப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
இரண்டாவது லாபம் 21 வயசுக்கு மேலே கலியாணம் என்றால் அதுவரைக்கும்படிப்பு வளரும் பெண்களுக்கு. நல்ல படிப்பு மளமளன்னு படிக்க வாய்ப்பு இருக்கு. மூணாவது அந்த பிள்ளையை ஒரு தாய் தகப்பன் பார்த்து கலியாணம் பண்ணாமல் அதுவா தனக்கு வேண்டியவனைப் பார்த்து பழகி தேர்ந்தெடுக்கும்.
இந்த மாதிரி மூணு காரியம் லாபம். 21 வயசுக்கு மேலே கலியாணம் பண்ணினால் அது கெட்டுபோகும்னுசிலபேரு சொல்வாங்க.
இப்ப அதை ஒத்துகிட்டாங்க.
அறிவை அடிப்படையாக கொண்டு. ஆனால் நாம் குரங்குப்பிடியாக
(பழயமுறையிலே பிடிப்பை வைச்சிக்கொண்டு)
அதிலே மாறக்கூடாது என்றே நாம் இருக்கிறோம்.
இப்படி இருப்பதினாலே பலன் என்னவென்றால் உலகத்திலே காட்டுமிராண்டி யாருன்னா? தமிழன் உலகத்திலே காட்டுமிராண்டி நாடு எதுவென்றால்?
தமிழ்நாடு உதவிக்கு ஏதாவது சேர்த்துக்க வேண்டுமானால் இந்தியா, இந்தியர். இது நாட்டுக்கு அவமானம். சமுதாயத்துக்கு அவமானம். வளர்ச்சிக்கு பெரிய கேடு.
ஆனதினாலே நாங்கள் சிந்தித்து மக்கள் சமுதாயத்தை பகுத்தறிவாதிகளாக வளரச்செய்ய வேண்டும். ஆயிரம் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னத்து மாதிரியாகவே இருக்கிறானே?
மற்ற நாட்டு மக்கள் எல்லாம் அதிசயமாக வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சந்திர மண்டலத்துக்குப் போயிட்டுவருகிறாங்க.
பத்தாயிரம் மைலுக்கு அந்தப்புறம் இருக்கிறவனோடு நேருக்குநேராகப் பேசுகிறது போல பேசுகிறாங்க. இன்னமும் சொல்லுகிறேன்.
உங்களுக்குஅதிசயமாயிருக்கும்.
பத்தாயிரம் மைலுக்கு அந்தப்புற மிருக்கிறவனை பித்தானை அமுக்கிப் போட்டுப் பார்த்தால் பக்கத்திலே இருக்கிறாப்பிலே தெரிவான்.
இதை Television என்று சொல்லுவாங்க.
ஆங்கிலத்திலே.
போட்டு இந்த (ஒலிபெருக்கி) பெட்டி மாதிரி,
ரேடியோ மாதிரி, நாம வாங்கி வைத்துக் கொண்டால் டெல்லியிலே இருக்கிறவனைப் பார்க்க வேண்டுமானால் இப்படி(பித்தானை)தள்ளிவிட்டுப்பார்த்தால் அவன் நம்ம முன்னாலே நிற்பான்.
இப்ப நாம் டெல்லியில் இருக்கிறவனிடத்தில் பேச வேண்டுமானால் அலோவ் ன்னா டெலிபோனிட்டே போயி நாம் கூப்பிட்ட உடனே அவன் ஏன் என்று கேட்கிறானா இல்லையா? நீங்கள் கவனிக்க வேணும். ஏன்னா நான் சொல்லப் போகிறதுக்கு ஆதாரம் உங்களுக்கு இருக்க வேணும் என்கிறதுக்காகச் சொல்லுகிறேன்.
நாம இப்ப டெல்லியிலே இருக்கிறவன் கிட்டே பேசனும் இந்தத் துறையூரிலே இருக்கிறவங்க மதறாசிலே (சென்னையிலே) இருக்கிறவங்ககிட்டேபேசணும் யாரையும் எந்த ஆளையும் அனுப்புகிறதில்லே. டெலிபோனை வைச்சிகிட்டு நெம்பர் சொன்ன உடனே அலோவ் அப்படீங்கிறான் ஏன் அப்படீன்னு கேட்கிறான்.
அவன்கிட்டே நீங்க பேசுகிறீங்க.புரிஞ்சிதான்னா?
புரிஞ்சுது.
அதேமாதிரி ஆறாயிரம் மைலுக்கு அந்தப்புறமிருக்கிற இலண்டனில் உள்ளவனிடம் பேசுகிறீங்க.
அதே மாதிரி பத்தாயிரம் மைலுக்கு அப்பாலில் இருக்கிற அமெரிக்காகாரனிடம் பேசுகிறீங்க. உங்களுக்குத் தெரிஞ்சிதோ இல்லையோ பத்திரிகையைப் பார்த்தீங்களோ இல்லையோ கேள்விபட்டிருக்கிறோம்.ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் மைலுக்கு மேலே இருக்கிற சந்திர மண்டலத்துகிட்டேபோயி ஒருத்தன் இருந்துகிட்டு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மைலுக்கு இப்பால் இருக்கிற நம்மகிட்டே அவன் பேசுகிறான்.
தினம்
(இச்செய்தி)
பத்திரிக்கையிலே வருகுது. நேற்று 12-11-1967இல் என்னடா வந்ததுன்னா சந்திரமண்டலத்திலே இருக்கிற மண்னை எடுத்துப் பார்த்தால் நம்ம மண்ணாட்டந்தான் இருக்குது. அப்படீன்னு அவன் சொல்லி இருக்கிறான்.
நாம காட்டுமிராண்டீங்கிறதுக்கு இதை விட வேறு உதாரணம் வேண்டாம். இதையெல்லாம் நாம் செய்வதுமில்லே புரிஞ்சிக்கிறதுமில்லே.
இப்ப எழுதியிருக்கிறான் இங்கே இருந்து போயி குடியேற வேணும் மனுஷன். ஒண்ணரைலட்சம்,இரண்டுலட்சதுக்கு மேலே இருக்கு. அப்படிப்பட்ட முயற்சிகள் இருக்கிற காலத்திலே இருக்கிற நாம் என்னமா இருக்கிறோம்? சூரியனுக்கு, சந்திரனுக்கு,
சாந்தி கழிச்சிகிட்டு வருகிறோம்;
இப்ப நாம. செவ்வாய்க்கு வெங்காயத்துக்குச் சாந்தி கழிக்கவேணும்கிறான்.
(சிரிப்பு கைத்தட்டல்) என்னடான்னா அங்கே இருக்கிற சந்திரன் இங்கே வந்திட்டான் என்கிறான். உங்களுக்கு கொஞ்சம் கிரகம் பத்தாது அதுக்காகச் சாந்தி கழிக்கவேணும்கிறான் பாப்பான்.
சொல்றவன் கெட்டிக்காரன்னு சொல்ல வரலே. நாம அவ்வளவு காட்டு மிராண்டி. ஜோசியம் சகுனம்ன்னு இருக்குதே.
இதை எடுத்துச் சொல்ல ஆள் இல்லையே. ஏதோ நாம ஓர் அளவிலே துணிஞ்சி இருக்கிறோம். மற்ற நாட்டிலே இந்த மாதிரி ஆளு இருந்தால் கொன்னே போடுவான்.
இப்ப நாம அடியோடு மனித சமுதாயத்தை மாற்றப் போகிறோம். மாற்றி அமைக்க போகிறோம். முடியாதுன்னு நீங்கள் ஒண்ணும் சொல்ல மாட்டீங்க.
முயற்சி பண்ணினால் முடியும். எங்க அய்யா எங்கப் பாட்டான்; நீங்கள் உங்கள் அய்யா உங்கள் பாட்டான்; அந்தக் கால வாழ்க்கைக்கு மாறுதலாக இப்ப நீங்க மாறுதலாக நடந்து கொண்டு வருகிறீங்களா இல்லையா? அருமைத் தோழர்களே (யாரோ ஒலிபெருக்கி ஒயரை மிதிச்சிகிட்டு இருக்கிறாங்க சத்தம் கேட்கலே என்கிறார் பெரியார் சரி செய்யப்பட்டது)
காலம் வரவர மாறிக் கொண்டே போகும் உலகம். நீங்கள் ஏதோ சில பேர் காட்டு மிராண்டியாய் இருப்பேன். நான் மாற மாட்டேன். நான் எங்க அய்யா பண்ணின படி தான் பண்ணுவேன். எங்கள் மதத்திலே உள்ளபடிதான் நடந்துக்குவேன்.
எங்கள் சாதிக்கேற்றபடி தான் செய்வேன் அப்படீன்னு சொல்லிட்டு இதிலே நாம காக்கிறதுக்குக் குரங்குபிடியாக இருப்போம்.
ஆனால் மற்ற காரியத்திலே கட்டை வண்டியிலே போகிறவன் சைக்கிளிலே போக ஆரம்பிச்சிடுவான்.
பஸ்ஸிலேபோக ஆரம்பிச்சிடுவான். ரயிலிலே போக ஆரம்பிச்சிடுவான். ஆகாயக்கப்பலிலே போக ஆரம்பிச்சிடுவான். இதிலே எல்லாம் அவுக அப்பன் பாட்டன் போனானான்னு தெரிஞ்சிக்கிறதில்லே (சிரிப்பு)
(கைத்தட்டல்)
முட்டாள்தனமானகாரியங்களுக்குத்தான் எங்கள் அப்பன், அம்மா,
பாட்டன் இப்படி நடந்தாங்க என்பான். நாங்கள் இதையெல்லாம் மக்களிடத்திலே விஷயங்களை எடுத்துச் சொல்லவேணும் என்கிற உணர்ச்சியுள்ளவங்க.
மக்களுடையமடமையைப் பயன்படுத்திக் கிட்டுவாழலாம் என்கிறவங்கதான் நிலையா இருக்கிறாங்க. ஆகவே அருமைத் தோழர்களே! இவைகளை எல்லாம் அடியோடு மாற்ற வேணும்.
இதை செய்வதிலே நாங்கள் சில காரியங்களிலே வெற்றி பெறுகிறோம்.
மற்ற காரியங்களிலே பெறலே. எத்தனையோ காரியங்களிலே நாம மாறிட்டோம். எத்தனையோ துறைகளிலே ஒவ்வொன்னுலேயும் நாம பழயபடி இருக்கிறோம்ன்னு சொல்ல முடியாது. ஆனால் மாறாமல் சுத்த காட்டு மிராண்டித்தனமான வாழ்வு என்னான்னா?
இந்த வாழ்வுதான் புருஷன் - பொண்டாட்டி
-கலியாணம் பொம்பளைங்க கழுத்திலேகயிறு கட்டுகிறது. பொம்பளை ஆம்பளைக்கு அடிமையாகவே இருக்கவேணும்கிறது.
அதிலே மதசம்பிரதாயங்கள் அதற்கேற்றாற்போல நம் முன்னோர்கள் பாடினாங்க - சொன்னாங்கங்கிற பேச்சுக்கள் இதுவெல்லாம் நடந்து இப்ப என்னா பண்ணுகிறோம்ன்னா வாழ்க்கையிலே நாமலும் இன்னும் உருப்படியாகலே. அடைய வேண்டிய அளவுக்கு நாம முன்னேற்றம் அடையவில்லை.
நம்முடைய தாய்மார்களும் இன்னும் மிருகத்தன்மையிலே அடிமைத் தன்மையிலே இருக்கிறாங்க.
அவுங்களும் கவலை எடுத்துக்கமுடியாது.
அவுங்க என்னா கவலை எடுத்துக்க முடியும்? ஊம் என்றால் ஆண்கள் உதைக்கிறதுக்கு தயாராக இருக்கிறாங்க. அப்படி நிலைமையென்றால் அப்ப அவர்கள் என்ன பேச முடியும்? கொஞ்சம் துணிஞ்சி பெண்கள் பேசிவிட்டால் அவர்கள் வாழ்கிறதுக்கு லாயக்கில்லேன்னு சொல்லிவிடுகிறார்கள்.
இப்படி சில நிர்பந்தங்களினாலே நாமும் வளரலே. அவுங்களும் வளரலே. இதன் பயனாலே வளரவேண்டிய நாடும் முன்னேற்றமடையலே. இப்ப நாம ஒவ்வொரு துறையிலேயும் மாறுதலை முன்னிட்டுத் தொண்டாற்றி வருகிறோம்.
ஏதோ சில மாறுதல்களைப் பார்க்கிறோம். அந்த முறையிலே இந்தத் திருமணம் என்கிற முறைகளை கொண்டு வருகிறோம்.
இந்த அளவுக்கு மாற்றம் எங்கே எவ்வளவு தூரம் போய் நிற்கும் அப்படீன்னு நீங்கள் தெரிஞ்சிக்கவேணுமானால் பயப்படாதீங்க நம்ம லட்சித்தைச் சொல்லுகிறேன்.
இந்த மாதிரி புருஷன் பொண்டாட்டியாக்குகிற திருமணம் என்கிற காரியம் வாழ்க்கைத்துணை ஒப்பந்தம் என்கிற காரியம் எதுவானாலும் சரி. கல்யாணம் என்கிற காரியமானாலும் சரி நடந்ததுன்னு கேள்விப்பட்டால் உடனே அதைக் கிரிமினல் குற்றமாக்கி தண்டிக்கிறது என்கிற அளவுக்குத் திட்டங்கள் நாங்கள் போட்டுக் கொண்டுள்ளோம்.
நல்லா இதைச் சிந்திக்கவேணும்.
சாதாரணமாக இன்னைக்கு கள்ளோ சாராயமோ குடிச்சிருந்தா அவனுடைய வாயை ஊதிப்பார்த்து அவனைத் தண்டிக்கிறதுன்னு வைச்சிருக்கிறோமல்லவா நாம?
இந்தக் காரியத்திலே நம்ம சாமியெல்லாம் (மதுரைவீரன், கருப்பு முதலான சாமிகள்) குடிச்சிக்கிட்டு தானே இருக்குது.
நம்ம சாமிக்கு கள்ளுச் சாராயம் வைச்சித்தானே படைக்கிறோம். குடிச்சா தண்டிக்கிறது போல கலியாணம் செய்து கொண்டால் அவர்களுக்கும் அதைக் குற்றமாக்கிக் தண்டிக்க வேண்டும். ரொம்ப நேரமாச்சி.
தாய்மார்கள் சிந்திக்கணும். நண்பர் துறையூர் வை.க.நடேசன் அவர்கள் நீண்ட நாளாக நம் இயக்கத்துக்காரர்.
அவர் சுயமரியாதைக்காரர். நம் கொள்கைப் படி தம் மகளுக்கு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கும் அவருக்கும் இவ்வளவு நேரம் என் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த உங்கள் எல்லாருக்கும் என் நன்றியைத் தெரிவித்து என் பேச்சை முடிச்சிக்கிறேன்.
வணக்கம்.
நூல் - பெரியாரின் சிந்தனைத் திரட்டு
தொகுப்பாசிரியர் - து.மா.பெரியசாமி
Comments
Post a Comment