தந்தை பெரியாரின் கொள்கை வெற்றிப் பெற்று வருகிறது
முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் - இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் கே.டி.கே. தங்கமணி அவர்களை 6.9.1998 அன்று மாலை, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி அலுவலகத்தில் பாலன் இல்லத்தில் சந்தித்து தந்தை பெரியார் 120ஆவது ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலருக்காக ஒரு பேட்டி கேட்ட போது, தமது 85ஆவது வயதிலும் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு, நடமாட முடியாத தன்மையில் இருந்த நிலையிலும் மிகவும் மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார்.
என்னுடைய தந்தையாருக்கும் பெரியாருக்கும் வியாபாரத் தொடர்பு உண்டு. மிகச் சின்ன வயதில் இருந்தே பெரியாரைப் பார்த்திட, அவரின் அன்பைப் பெற வாய்ப்புப் பெற்றவன் நான். என்னுடைய தந்தையார் அடிக்கடி சொல்லுவார் - நாயக்கர் மிகப் பெரிய மனிதர். மிகவும் நாணயமானவர் என்று!
என்னுடைய மைத்துனர் திருமங்கலம் மணிமாறன் அவர்களும் நானும் இளம் வயதிலேயே சுயமரியாதை இயக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டோம்.
1929இல் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டுக்கு நான் செல்லவில்லை - திருமங்கலம் மணிமாறன் சென்றார். இரண்டாவது மாநாடு ஈரோட்டிலும் மூன்றாவது மாநாடு விருதுநகரிலும் நடைபெற்றது. அந்த இரண்டு மாநாடுகளுக்கும் பிரதிநிதியாகச் சென்று இருக்கிறேன்.
விருதுநகர் மாநாட்டில் நாடார்கள்தான் சமையற்காரர்கள். அந்தக் காலத்தில் நாடார்கள் என்றால் ஜாதியில் தாழ்ந்தவர்கள் - ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு காலத்தில் பெரியார் செய்தது பெரிய சாதனையாகும்! செயற்கரிய செய்வார் பெரியார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சாணானை விட்டுச் சமைக்கச் சொல்லி, வடுகன் புத்தியைக் காட்டி விட்டான் பார்த்தீர்களா? என்றெல்லாம் பேசினார்கள். அதற்கெல்லாம் கவலைப்படுபவரா பெரியார்? Nobody was dare to do it
திருமங்கலத்தில்
இளைஞர்கள் அமைப்பு ஒன்றை நடத்தி வந்தோம். பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்தினோம்.
அப்பொழுதெல்லாம் கூட்டம் என்றால் பெரியாரிடம் கேள்விகள் கேட்பார்கள். பெரியாரைப் போல் கேள்விக்குப் பதில் சொல்பவர்களைப் பார்க்க முடியாது.
நீ ஏன் பிராமணர்களைத் துவேஷிக்கிறாய்? என்று ஒரு கேள்வி. அதற்குப் பெரியார் சொன்னார்: கொசுக் கடிக்கிறது என்பதற்காகக் கொசு வலை கட்டிக் கொண்டால் கொசுத் துவேஷியா?
கள்ளன் திருடிக்கொண்டு போய் விடுவான் என்பதற்காகப் பணத்தை பெட்டியில் வைத்துப் பூட்டினால் கள்வர்கள் துவேஷியா என்று கேள்விக்குக் கேள்வியாலேயே பதில் சொன்னார்.
ருசியா, மாஸ்கோ என்றெல்லாம் பெரியார் பெயர் சூட்டினார். அப்பொழுதுகூடக் கேட்டார்கள் - என்ன ஊர் பெயரை வைக்கிறாய் என்று, உன் பெயர் என்ன என்று கேட்டார் பெரியார். சிதம்பரம் என்றான். அது ஊர்ப் பெயர் இல்லையா என்று திருப்பிக் கேட்டார். வாயடைத்துப் போனார்.
1932இல் நான் திருச்சியில் பி.ஏ. ஹானர்ஸ் படித்தேன். விடுதியில் தங்கி இருந்தேன். விடுதியிலேயே எனக்கு மட்டும்தான் குடிஅரசு பத்திரிகை வரும். என்னை சு.ம. என்று கூறுவார்கள்.
பெரியார் ருசியாவுக்குச் சென்று வந்தார். திருமங்கலம் இரயில்வே ஸ்டேசனில் சிறப்பாக வரவேற்புக் கொடுத்தோம். நான்தான் பெரியாரை வரவேற்று கோஷம் கொடுத்தேன்! நமது கொள்கை என்ன என்று அப்பொழுது கேட்டதற்கு பொதுவுடைமை தான் என்று பட்டென்று பதில் சொன்னார்.
1935இலிருந்து 1940 வரை இலண்டனுக்குப் படிக்கச் சென்று விட்டேன். அந்தக் காலகட்டத்தில் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.
லண்டன் சென்று வந்தபின் சிங்கப்பூர் சென்று விட்டேன். அங்கு சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டேன். தலைவர் அய்யாளு அவர்கள்... அங்கு எனது மாமனார் வீட்டில்தான் பெரியார் வந்தால் தங்குவார். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு சுயமரியாதை இயக்கத்துக்குப் பணம் அனுப்புவார்கள்.
சுயமரியாதை இயக்கத்திலிருந்து நான், ஜீவானந்தம், நாகை முருகேசன் ஆகியோர் கம்யூனிஸ்டுக் கட்சிக்குச் சென்றோம். அதை ஒரு முரண்பாடு என்று நான் கருதுவதில்லை. சுயமரியாதை இயக்கம் என்பது ஒரு அஸ்திவாரமாகும். சுயமரியாதை இயக்கத்திலிருந்து பொதுவுடைமைக் கட்சிக்குச் சென்ற எங்களுக்கு என்று ஒரு தனித் தன்மை கட்சியில் உண்டு. வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கு இங்கு இடமில்லை என்று பாடலைப் பாட பேதம் செய்து வீண் வார்த்தை பேசி வம்பளக்கும் காதகர்க்கு இங்கு இடமில்லை என்று மாற்றி கம்யூனிஸ்டுக் கட்சி மேடைகளில் பாடினார்கள். நானும், ஜீவாவும் விடவில்லை - மிக அழுத்தமாக எதிர்த்து, பழையபடியே பாடச் செய்தோம். நான் ருசியாவுக்குச் சென்றேன். அப்பொழுது லெனின் நூலகத்துக்குள் சென்றேன். 1931ஆம் வருடம் குடிஅரசு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட லெனினும் மதமும் என்ற நூல் அங்கு இருக்கக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். என்னோடு வந்திருந்தவர்களிடத்தில் எல்லாம் மிகப் பெருமையாகக் குறிப்பிட்டேன்.
ஒரு துரதிர்ஷ்டம் சுயமரியாதை இயக்கமும், கம்யூனிஸ்டுக் கட்சியும் இணைந்து இங்கு செயல்படாமல் போனதும், கம்யூனிஸ்டுக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டதும்தான்!
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் Nagative Movement அல்ல - அது ஒரு Positive Movement ஆகும்.
சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ யாராவது குறை கூறினால் நான், ஜீவா, நாகை முருகேசன் போன்றவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் - மறுப்புக் கூறுவோம்! ஆசிரியர் (மானமிகு வீரமணி) எனது 80ஆவது ஆண்டு விழாவில், மதுரையில் கலந்து கொண்டு என்னைப் பாராட்டிப் பேசினார்.
பெரியார் ஜாதி ஒழிப்புக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டவர். திராவிடர் கழகக்காரர்களுக்கும் கம்யூனிஸ்டுக்காரர்களுக்கும் ஜாதி உணர்ச்சி கிடையாது. அந்த உணர்ச்சியை மற்றவர்களும் ரத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்.
ஆதியில் தொழிலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பிரிவுகள் இருந்தன. ஆனால் ஆரியர்களின் வருகைக்குப் பிறகுதான் நால் வருணப் பிளவுகள் ஏற்பட்டு, அவை பல் நூறு ஜாதிகளாகப் பெருகின.
அரசியல்வாதிகள் தேர்தல் கண்ணோட்டத்தில் ஜாதிக்கு ஊக்கம் கொடுக்கிறார்கள் - அது தவறு! ஜாதியை எதிர்த்துப் பெரிய அளவில் பிரச்சாரம் நடத்தப்படவேண்டும்.
இன்றைய தினம் பி.ஜே.பி. என்கிற மதவாதக் கட்சி நாட்டை ஆள்கிறது. இது பெரிய ஆபத்தான போக்காகும்.
தந்தை பெரியாரின் கொள்கை வெற்றி பெற்று வருகிறது. உலகம் பூராவும் அவர் கொள்கை பரவி வருகிறது. அவர் காலத்தில் நாம் எல்லாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை!
இலட்சியத்தையும், துணிவையும் அவர் நமக்குச் சொல்லிக் கொடுத்துச் சென்றுள்ளார். இளைஞர்கள் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் பிறந்தநாளில் எனது வேண்டுகோளாகும்.
-
கே.டி.கே.தங்கமணி பார்-அட்-லா பேட்டி : கவிஞர் கலி.பூங்குன்றன்
தந்தை
பெரியார் 120ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment