திருவனந்தபுரம் சிறையில் தந்தை பெரியார்
கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ. ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல் இருமடங்கு வேலை செய்கிறார்.
ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார். ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காகத் தாம் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே - அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வரவேண்டாமா?
- கே.பி.கேசவமேனன், மலையாளத்தில் தன் வரலாறு
தந்தை
பெரியார் 108ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment