புரட்சியாளர் பெரியார்


தமிழகக் கல்வி நெறிக் காவலராகத் திகழ்ந்த, பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமாகி, கல்வி வள்ளல் காமராசரால் கல்வித் துறை இயக்குநராக்கப்பட்ட நேர்மையாளர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று (12.10.2012) சென்னையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

சான்றோர்கள், கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்ட அவ்விழாவில் புரட்சியாளர் பெரியார் என்ற தலைப்பில், சென்னைப் பல்கலைக் கழகத்தில், பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆற்றிய அதன் மேனாள் துணை வேந்தரான நெ.து.சு. அவர்கள், பிறகு அப்பொழிவுகளை மேலும் விரிவாக்கி அதே தலைப்பில் ஒரு புத்தகமாகவும் எழுதி, அவர்கள் மன்றத்திற்குப் பயனுறு வகையில் அளித்தார்கள்.

அந்நூல் இப்போது மீண்டும் சென்னை சாந்தா பப்ளிஷர்ஸ் மூலம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களின் வாழ்வு, வாக்கு, அறப்பணி, தொண்டூழியம்பற்றி அரிய பல தகவல்களின் அற்புதமான திரட்டான அந்நூலில் தந்தை பெரியாரின் எளிமையும், சிக்கனமும் எத்தகையது என்பதை இரண்டு தன் வாழ்க்கை நிகழ்வுகள் மூலம் மிக அருமையாக எடுத்துக் கூறியுள்ள நெ.து.சு. அவர்கள், அந்நிகழ்வுகளைவிட மிகச் சிறப்பானது அதன் உண்மைத் தத்துவம் என்ன என்பதையும் விளக்கியுள்ளார்கள்.

பெரியாரின் தனித்தன்மை என்ற தலைப்பில், அந்நூல் (பக்கம் 191 இல்) பெரியார் சிக்கனத்திற்குப் பெயர் பெற்றவர். அவர் தன்னுடைய செலவைப் பொறுத்தமட்டும் சிக்கனத்தை கடைப் பிடிக்கவில்லை. பிறர் தனக்குச் செலவு செய்தபோதும் அதே துலாக்கோலைப் பயன்படுத்தினார். மண்ணோடு மண்ணாக, கண்டவர்களுக்கெல்லாம் மண்டியிட்டுக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை அடி தெரியக் கலக்கிய, தன்மான இயக்கத்தின் தந்தை .வெ.ராமசாமியை 1935 இல் நான் தற்செயலாகக் காண நேர்ந்தது.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் 403 எண் வீட்டில் குடியிருந்த நண்பர், குத்தூசி குருசாமியைக் காணச் சென்றேன். வழியில் கண்ட நண்பரொருவர், ராமசாமி பெரியார் அவ்வேளை அங்கு இருப்பதாகக் கூறினார்.

அருகில் இருந்த பழக்கடைக்குச் சென்றேன். நாலணா கொடுத்து ஆஸ்திரேலிய ஆப்பிள் பழம் ஒன்றை வாங்கிக் கொண்டு, குருசாமி வீட்டுக்குப் போனேன்.

குருசாமி என்னை பெரியாருக்கு அறிமுகப்படுத்தினார். பெரியார் எழுந்து நின்று கை குலுக்கினார். பழத்தைப் பெரியாரிடம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டதும், என்ன மணம் என்று பாராட்டினார். அடுத்த நொடி, என்ன விலைங்க அய்யா என்று அவருக்கே உரிய அடக்கத்தோடு கேட்டார்.

அதிகம் இல்லை என்றேன். விட வில்லை. மூன்று முறை கேட்ட பிறகு, நாலணா என்றேன். பெரியாருக்குச் சினம் பொங்கிற்று.

என்ன ஜம்பம்; நாலணாவுக்கு ஒரு பழம். அந்தப் பணத்துக்கு இரண்டு சீப்பு வாழைப் பழம் வாங்கியிருக்கலாம். இத்தனை பேருக்கும் கொடுத்திருக்கலாம். ஒரு பழத்திற்கு நாலணா என்ன அநியாயம் என்று பெரியார் கடிந்து கொண்டார். அதிர்ச்சியடைந்தேன்; ஆனால், அடங்கியிருந்தேன். ஏன்? அவருடைய சிந்தனை ஓட்டத்தின் சிறப்பு புரிந்தது. அது என்ன?

இருப்பது சிறிதே ஆயினும் அதை எவ்வளவு அதிகமானவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அந்த வகையில் செலவிட வேண்டும் என்பதே பெரியாருடைய எண்ணம். அது நொடியில் எனக்கு விளங்கிவிட்டது. அப்புறம் அதே தவறைச் செய்யவில்லை.

அடுத்து 1940 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 25 ஆம் நாள், செல்வி காந்தம்மாவும், நானும் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதைப் பார்க்க, பெரியார் சென்னைக்கு வந்திருந்தார். பெரியார், பதிவாளர் அலுவலகத்திற்கு எங்களுடன் வந்தால் அங்கே கூட்டம் கூடிவிடுமென்று இயக்கத் தோழர்கள் கூறியதால், பெரியாரை திருவல்லிக்கேணியில் என் மாமனார் திரு. சுப்ரமணியம் இல்லத்திலேயே இருக்கும்படி வேண்டிக் கொண்டோம். பெரியார் பெருந்தன்மையோடு இசைந்தார்.

திருமணத்தைப் பதிவு செய்தபின், நாங்கள் இருவரும் மட்டும், வழியில் புகைப்படம் எடுக்கும் நிலையத்திற்குச் சென்றோம். புகைப்படம் எடுப்பதில் சற்றுக் காலதாமதம் ஆயிற்று. காலந்தாழ்த்தி வீட்டிற்குத் திரும்பிய எங்களைப் பார்த்து பெரியார், ஏன் இவ்வளவு நேரம்? புது மணமக்கள் எங்கே போய்விட்டீர்கள் என்று கேட்டார்.

புகைப்படம் எடுத்துக்கொள்ளக் காலதாமதம் ஆனதைக் கேள்விப்பட்ட பெரியார், புகைப்படம் எடுக்க என்ன கட்டணம்? என்று கேட்டார்.

நான் மூன்று ரூபாய்கள் என்றேன். எத்தனைப் படங்களுக்கு என்று கேட்டார் பெரியார்.

நான் ஒரு படத்திற்கே என்றதும் பெரியார் வெகுண்டார்.

உடனே அவர் ரூபாய்க்கு மூன்று படம் கொடுக்கிற கடைகள் ஏராளம் இருக்கையில், எப்படி ஒரு படத்திற்கு மூன்று ரூபாய்கள் கொட்டிக் கொடுக்கலாம்? என்று கனல் கக்கக் கேட்டார்.
பதில் சொல்ல விரும்பாது திகைத்தேன். உடனிருந்த (பூவாளூர்) பொன்னம்பலனார், இவ்வளவு சிக்கனமாகத் திருமணஞ் செய்து கொண்ட அத்தான் மூன்று ரூபாய்கள்தானே பாழாக்கி விட்டார். நீங்கள் செலவு செய்ய முன்வந்த ஈராயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி விட்டாரே அய்யா! என்று சொல்லவும் பெரியாரின் சினம் தணிந்தது!
இப்படிப் பல பல உண்டு.

தம் வாழ்வில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் சிலர் பிறர் பொருளைச் செலவழித்தால் அதை தாராளமாக ஓடவிட்டு மகிழும் இரட்டை வேடம் அவரிடம் இல்லாதது எவ்வளவு சிறப்பான - நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் நெறி பார்த்தீர்களா?

நேற்றைய விழா இறுதியில், நிறைவுரை ஆற்றிய இனமானப் பேராசிரியர் . அன்பழகன் அவர்கள் பெரியாரின் இச்சிக்கனத்தை விளக்கி மேலும் இரண்டு சம்பவங்களை மகிழ்ச்சிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தார்.

எனது மாமா மாயூரம் நடராசன் வீட்டில் அக்காலத்தில் மாயவரம் என்ற மயிலாடுதுறைக்கு வரும்போது தங்குவார்கள். நான் மாணவனாக இருந்து கண்டுகளித்திருக்கிறேன். சாப்பிட்டு முடிந்தவுடன், ஒருவர் சொம்பைக் கொண்டு, தந்தை பெரியார் கைகளை கழுவுவதற்காக ஊற்றினார். சிறிது நேரத்தில் நிறுத்து என்றார்; ஊற்றியவர் சரியாகத்தானே செய்தோம் என்ற சங்கடத்தோடு நிறுத்தினார். ஏன் இப்படி ஊற்றுகிறீர்கள் என்றார் பெரியார்.

தண்ணீர் தானே என்றார் என் மாமா! தண்ணீர் என்றால் வீணாக்கலாமா? - அதையும் சிக்கனத்தோடு பயன்படுத்த வேண்டாமா? என்றார் பெரியார்.
அது இன்று எப்படிப்பட்ட தொலை நோக்குப் பார்த்தீர்களா? காசு கொடுத்து குடிதண்ணீர், வழக்குப் போட்டும் கிட்டாத காவிரி நீர் - இப்படி உள்ள நிலை இன்று!

அதோடு இன்னொரு அனுபவத்தையும் கூறினார். தந்தை பெரியார் வேனில் நாங்கள் செல்லுவோம் சில வேளைகளில், திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும்போது, வாலி கண்டாபுரம் என்ற ஊரில் வண்டியை நிறுத்தச் சொல்லி, டிரைவரை அழைத்து டிபன்கேரியரைக் கேட்டு, பிறகு 2 ரூபாய் எடுத்துக் கொடுத்து, எங்களில் ஒருவரிடம், அதோ அந்த மரத்தடியில் ஒரு அம்மா இட்லி சுட்டு விற்பார், அங்கே சென்று இதற்கு இட்லி, சட்னி வாங்கி வாருங்கள், எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.

இதை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், பெரியார் மகா கஞ்சர் போலும்; இவ்வளவு பெரிய தலைவர் இப்படியா? என்று சிலர் எண்ணக்கூடும்.
ஆனால், இதில் குறைந்த செலவில், மொத்தம் உள்ளவர்கள் பசியாறுகிறோம் என்பது மட்டுமா? அந்த அம்மையார் இதை விற்றால்தானே அவருக்கு அன்றாட ஜீவனம்; அவருக்கும் எவ்வளவு மகிழ்ச்சி; வாழ்வளிப்பதாகவும் அமைகிறதே என்பதைப் புரிந்துகொண்டால், நாமும் வாழவேண்டும்; நம்மால் பிறரும் வாழவேண்டும் என்கிற தத்துவம் அல்லவா நமக்கு அவரால் - அச்சம்பவம்மூலம் போதிக்கப்படுகிறது!

எனவே, சிக்கனத்தின் மற்றொரு பக்கம் பிறரை வாழ வைப்பது - பண்டங்களை வீணாக்கக் கூடாது என்பதற்காகவே கையில் மூட்டை கட்டி எடுத்து பிறருக்குத் தர, பயன் விளையும்படிச் செய்ய அவர் கூச்சப்பட்டதே இல்லை. இதன்மூலம் போலி ஆடம்பரம், போலி கவுரவம் தகர்க்கப்பட்டுள்ளதே!

எல்லாவற்றையும்விட இச்சிக்கனத்தை வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டால், மனிதன் கடன் வாங்கி, மானங்கெட்டு, மறைந்து திரியவேண்டிய அவசியம் இராதே!

- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி - 9.


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை