பெரியாரின் தனித்தன்மை



பொதுநலம்பற்றி சிறியோர் சொல்லினும் பொறுமையோடு கேட்டு விளக்கம் கூறும் இயல்பு பெரியாருக்கு இருந்தது. எடுத்துக்காட்டாக, 1941ஆம் ஆண்டு கோடைக்காலம். நானும் என் மனைவி காந்தம்மாளும் தஞ்சை கணபதி நகரில் புதுக்குடித்தனம் கட்டியிருந்தோம். உதவிக்காக என் மாமியார் திருமதி தங்கம்மா வந்திருந்தார். அவருடைய மாமிச சமையல் பெரியாருக்கு மிகப் பிடிக்கும்.

அவ்வமயம் தஞ்சைக்குப் பொதுக் கூட்டத்திற்கு வந்த பெரியாருக்கு என் வீட்டில் உணவுக்கு ஏற்பாடு செய்யும்படி பூவாளூர் .பொன்னம்பலனார் எழுதியிருந்தார். அப்படியே செய்யப்பட்டது. பொதுக் கூட்டம் முடிந்த பிறகு, ஒற்றை மாட்டு வண்டியில் பெரியார் வந்து சேர்ந்தார்.
அப்போது பெரியாருக்கு நல்ல காய்ச்சல்; வயிற்றுக்கோளாறு. மருத்துவர் சொன்னதையும் கேளாது, மருந்து சாப்பிட்டுக் கொண்டே திருச்சியிலிருந்து பொதுக் கூட்டத்திற்கு வந்து, வழக்கம் போல நீண்ட நேரம் பேசினார். எங்கள் வீட்டிற்கு வந்தபோது களைப்புற்று இருந்தார்.

உடல் நலமற்று இருப்பதை உடன் வந்த தோழர்கள் தெரிவித்தார்கள். உடனே, பெரியாரிடம் வேண்டினேன்: அய்யா, மருத்துவர் சொற்படி நொடிப்பொழுதில் கஞ்சி வைத்துக் கொடுக்கச் சொல்கிறேன், தயவு செய்து அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
தங்களுக்கு விருந்து கொடுத்தேன் என்னும் பெருமையைவிட, தங்கள் உடல் நலம் கெடாதிருக்க உதவி செய்தேனென்பதையே நான் விரும்புகிறேன். தயவு செய்து இன்று கஞ்சி குடியுங்கள் என்றேன். பெரியார் ஒப்புக் கொண்டார்.
உடன் வந்தவர்கள், உணவு அருந்தினார்கள். பெரியார் பக்கத்தில் நான் உட்கார்ந்திருந்தேன்.

நான் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கி ஒதுங்கிப் போவதைப் பலர் தவறாகக் கருதுகிறார்கள் - இறுமாப்பு என்று எண்ணுகிறார்கள். உண்மையான காரணம் என்ன? எவ்வளவு பெரியவரோடு பேச நேர்ந்தாலும், குழைந்து பேசாமல் உள்ளதை உளறிவிடும் குறை உடையவன் நான், அன்று பெரியாரோடு பேசும்போது அக்குறை வெளிப்பட்டது.

அய்யா! நீதிக்கட்சிக்கு நல்ல தலைவர் தேவை. அதேபோல, தன்மான இயக்கத்திற்கும் ஒருவர் தேவை. முந்தியதற்கு, சில பேர்களாவது நினைவுக்கு வரும். தன்மான இயக்கத்திற்கு, ஜாதி ஒழிப்பு இயக்கத்திற்கு, குருட்டு மூடநம்பிக்கையைத் தகர்க்கும் இயக்கத்திற்கு, ஈராயிரத்து அய்ந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தாங்கள் ஒருவரே கிடைத்திருக்கிறீர்கள். புரட்சிக்கு தலைமை தாங்க வேண்டிய தாங்கள் ஒரு கட்சிக்குத் தலைவரானது எனக்குப் பிடிக்கவில்லை. தன்மான இயக்கத்தின் வேலை சூடு பிடிக்காது என்று அஞ்சுகிறேன் என்றேன். நொடியும் தயங்காது.

அய்யா சொல்வது தப்பல்ல. அப்படித்தான் நானும் நினைக்கிறேன். நான் என்ன செய்யட்டும்? நான் சிறையில் இருந்தபோது, இப்படிச் செய்துவிட்டார்கள்.

சர் பன்னீர்செல்வம், தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்திற்கும் நம் இயக்கத்திற்கும் பெரும் ஆதரவு கொடுத்தவர். அப்படிப் பட்டவர்களின் முடிவை தட்டிவிட வெளியிலா இருந்தேன்? மெல்ல, நீதிக்கட்சியை நம் வழிக்கு மாற்றுவோம். இல்லாவிட்டால், சரியான தருணம் பார்த்து, வேறொருவரிடம் ஒப்படைத்து விடுவோம் என்றார்.
உணவருந்திக் கொண்டிருந்த எஸ்.வி.லிங்கமும் பொன்னம்பலனாரும் பெரியாரிடம் வந்தபோது, அத்தான் ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டோம் என்றார்கள். பெரியார் அப்போதாவது வெகுளுவாரென்று எண்ணி ஏமாந்தேன். வெகுளாமல், அவர் சொல்வது தன்னுடைய ஆதாயத்துக்கு இல்லையே. மக்கள் நன்மையைக் கருதியே சொல்லுகிறார், அதில் பொருள் இருக்கிறது என்றார்

துல்லிய கணக்கு

உண்மை என்ன? காங்கிரசில் இருந்த காலத்திலும் சரி, பிந்திய நீண்ட பொது வாழ்க்கைக் காலத்திலும் சரி, நாள்தோறும் பல பேர், பெரியார் வீட்டில் உண்டு போவதோடு நிற்கவில்லை. அவர்களிலே பல பேர்கள் பண உதவியும் பெற்றுப் போவார்கள்.

எத்தனை ஆயிரம் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் இயக்கப் பேச்சாளர்களை தன் சொந்தச் செலவில்அழைத்துக் கொண்டு போய் இருந்தார்; அனுப்பி வைத்திருக்கிறார்.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலமாகினும் பெரியார், பெரிதும் தன் பணத்தைச் செலவு செய்து இயக்கம் நடத்திய பிறகே, பொதுக் கூட்டங்களுக்கு அழைப்போர், பயணச் செலவை ஏற்கும் நிலை ஏற்பட்டது என்பதை நினைவுறுத்துவது என் கடமை. பெரியார் சிக்கனக்காரர் ஆக இல்லாமல், ஓட்டைக் கையராக இருந்திருந்தால், தன்மான இயக்கம், அய்ந்தாறு ஆண்டுக்குள் நிதி வசதியில்லாமல், கூட்டம் நடத்த முடியாமல் மறைந்து போயிருக்கும்.


குறைந்தது ஆண்டுக்கு ஆயிரம் கூட்டங்களிலாவது பெரியார் பங்கு கொண்டார். பிற்காலத்தில் கூட்டந்தோறும் மாலைக்குப் பதில் சிலரோ, பலரோ, சிறு தொகையோ, பெருந்தொகையோ அளித்தது உண்மை. அய்ம்பது காசு கொடுத்திருந்தாலும் அதை அப்போதைக்கப்போது குறித்து வைத்து, ஒழுங்காகப் பணத்தைக் காத்து, கணக்கோடு பொதுத் தொண்டிற்கு விட்டு வைத்தவர் பெரியார்.

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை