அமெரிக்க நெருக்கத்தின் அந்தரங்கம்


 அமெரிக்கா ஆதிக்கவாதிகளின் சிகரம். முதலாளித்துவத்தின் முகடு. சமதர்மக் கொள்கை உலகில் வலுப்பெற்று விடக்கூடாது என்பதில் தன் முழுக் கவனத்தையும் முழுப் பலத்தையும் செலுத்தும் தலைமையகம்.
இந்தியா சோசலிசக் கொள்கையைத் தனது தலையாய கொள்கையாகக் கொண்ட நாடு. சோசலிசம் என்பதற்கு சமதர்மம் என்பதே பொருள். ஆக, அமெரிக்காவிற்கு நேர் எதிரான கொள்கையினை உடைய நாடு.
இருந்தாலும், பா... தலைதூக்க, தலைதூக்க அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவோடு அதிகரிக்கிறதே, அதன் மர்மம் என்ன?
சிவப்பு கம்பள வரவேற்பும், சிறப்பான விளம்பரங்களும் ஏன்? திடீரென இந்தியாவின்மீது பொத்துக் கொண்டு வந்த பாசம் எதனடிப்படையில்?
ஆர்.எஸ்.எஸ். அச்சில் இயங்கக்கூடிய பி.ஜே.பி. கூட்டத்தின் உள்நோக்கம் என்ன? அதில் அடங்கியுள்ள அந்தரங்க விஸ்வாசமும், ஈர்ப்பும் என்ன?
ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அமைப்புகளை, ஆரம்பத்திலிருந்து ஆராய்ந்தால் இவற்றிற்கான விடைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு மதவாத பாசிச அமைப்பு என்பதால், அதற்கு சோசலிசக் கொள்கையுடைய அமைப்புகளை அறவே பிடிக்காது. முஸ்லீம்களை வெறுக்கக்கூடிய அதே அளவிற்கு கம்யூனிஸத்தையும், கம்யூனிஸ்ட்டுகளையும் வெறுக்கக் கூடியவர்கள் இவர்கள். கம்யூனிச வளர்ச்சி இந்த நாட்டில் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாய் இருக்கக் கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், பி.ஜே.பி.காரர்களும்.
ஹெட்கேவருக்குப் பின்வந்த கோல்வால்கர் கம்யூனிஸ எதிர்ப்பைத் தனது முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டார்.
கம்யூனிஸ்ட்டுக்கள் எல்லா மனிதர்களும் சமம் என்பார்கள். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆரிய பார்ப்பனர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் என்பார்கள்.
“We (Aryans) are the good, the enlighted people. We were the people who know abou the law of nature of laws of the sprit. We had brought into actual life almost every thing that was beneficial to man kind. Then the rest of humanity was just bipeds and so no distinguish same was given to us. Sometimes in trying to distinctive our people from others, we were called the enlightened - the Aryas - and the rest the melachas”
 (ஆதாரம்: கோல்வால்கரின்Bunch of Thoughts)
அதாவது, நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள், அறிவுத் திறன் கொண்டவர்கள். இயற்கையின் விதிகளையும், ஆன்ம விதிகளையும் அறிந்தவர்கள் நாம்தான். மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியவற்றையெல்லாம் கொண்டு வந்தவர்களும் நாம்தான். அப்போது நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் இரண்டு கால் பிராணிகளைப் போல் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே, நமக்கென்று குறிப்பிட்ட பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. சில நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம் அறிவுத் திறனுடைய ஆரியர் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள் (இழிமக்கள்) என்பதே கோல்வால்கர் கூறுவதன் பொருள்.
ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களையெல்லாம் ஆடு மாடுகளாக, அதனினும் கீழாகக் கருதக் கூடியவர்கள் இந்த பி.ஜே.பி. கூட்டத்தினர்; ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர்.
எனவே, எல்லா மக்களும் சமம் என்ற கம்யூனிச, சோசலிசக் கொள்கையை அவர்கள் வெறுத்தனர்.
சோசலிசத்தின் பெயரால் என்ன நடந்திருக்கிறது? சீனாவில் நடந்ததுதான் இந்தியாவிலும் நடக்கும். நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஒழிக்கப்பட்டனர். இழப்பீடு கொடுக்காமலே சொத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும். கூட்டுப் பண்ணை விவசாயம், வங்கிகள் தேசிய மயம் நடக்கும். எல்லோரும் அடிமைகளாக்கப்படுவோம். இது கல்லில் செதுக்கப்பட்ட உண்மை. சோசலிசத்திடம் எச்சரிக்கையாய் இருங்கள். சோசலிசம் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் எந்தவித நன்மையும் இல்லை. ரஷ்யாவில் எந்த நன்மையும் மக்களுக்கு ஏற்படவில்லை என்று எழுதிய கோல்வால்கர்.
சோசலிசம் வேண்டாம்; இந்து ராஷ்ட்டிரமே (Not Socialism, but Hindu Rastra”)  என்ற தலைப்பிலே ஒரு நூலே எழுதினார்.
எந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்று கூர்ந்து கவனித்துவரும் அமெரிக்காவின் கண்களில் கோல்வால்கர் (ஆர்.எஸ்.எஸ்.) சோசலிச எதிர்ப்புத் தெளிவாய்த் தெரிந்தது.
வர்க்கபேதம் - முதலாளி, தொழிலாளி என்ற அடிப்படையில் கொள்கை அமைப்பது தவறு; மத அடிப்படையிலே அரசு அமைய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸின் பாசிசக் கொள்கை அமெரிக்காவின் பார்வையை ஆர்.எஸ்.எஸ். மீது திருப்பியது. அமெரிக்க உளவு நிறுவனமான சி.அய்..வில் உயர் அதிகாரியாய் இருந்து ஜே.. குர்ரான், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை, அவற்றின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தார்.
அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்தது. ரஷ்யாவின் ஆதிக்கம் அய்ரோப்பிய நாடுகளில் செல்வாக்குப் பெறக் கூடாது, காலூன்றக் கூடாது என்ற நோக்கத்தோடு, ஜெர்மனியோடு கூட்டுச் சேர்ந்து செயல்பட அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதே சி.அய்.. அமைப்பு. ஆனால், இந்த அமைப்பின் நோக்கு தோல்வி அடையவே, அந்த அமைப்பு (சி.அய்.) கலைக்கப்படாமல், உளவு நிறுவனமாக தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. சி.அய்.. அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் - கம்யூனிசம் தோன்றாமல் தடுக்கவே இவர்கள் அனுப்பப்பட்டனர்.
இவர்களின் நோக்குக்கு ஏற்ப ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்தியாவில் செயல்படுவதை அறிந்த அமெரிக்க சி.அய்.. நிறுவனம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆய்வு செய்தனர். மேலே கூறப்பட்ட குர்ரான் ஒன்றரை ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடு தங்கியிருந்து ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வுகளின் தொகுப்பே, 1951ஆம் ஆண்டு  “Militant Hinduism in Indian Politics”  என்ற நூலாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
1979இல் Qaumi Extra Sammelam என்ற நிறுவனத்தால் இந்தியாவிலும் இந்நூல் வெளியிடப்பட்டது.
கம்யூனிசத்தை எதிர்க்கின்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. பரிவாரங்கள் என்பதால், இந்தியாவிலுள்ள பணக்காரர்களும், நிலப்பிரபுக்களும் போட்டியிட்டுக் கொண்டு பணத்தை இந்த அமைப்புகளுக்கு வாரி வாரிக் கொடுக்கின்றனர். எனவே அவர்கள் பொருளாதார வலிமையை எளிமையாய் பெற ஏதுவாயிற்று.
இந்துத்வாவாதிகள் முஸ்லீம்களைவிட அதிக அளவில் சோசலிஸ்ட்டுகளுக்கே, கம்யூனிஸ்ட்டுகளுக்கே அதிகம் அஞ்சுகின்றனர். அவர்களையே அதிகம் எதிர்க்கின்றனர். காரணம் இந்துத்துவாவின் அடிப்படைக்கே அணுகுண்டுகளாக அவற்றின் கொள்கைகள் அமைந்துள்ளன.
முதலாளித்துவம் அல்லாத அமைப்புகள் தகர்ந்து போய்விடும்; நிலைக்காது என்பது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.களின் அழுத்தமான பிரச்சாரமாகும்.
காரணம், அவை நிலைத்தால் இவர்கள் குலைந்து போவார்கள். அவர்கள் அறிவியல் கோட்பாடுகளை உடையவர்கள், கடவுள் இல்லை என்பவர்கள், மதம் ஒரு போதை என்று சாடக் கூடியவர்கள். கடவுளும் மதமும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். இவற்றின் அடித்தளம். முதலாளித்துவத்தின் பாதுகாப்பு கடவுளும் மதமும். எனவே, சோசலிசம் வேண்டாம், முதலாளித்துவம் வேண்டும் என்றனர்.
தனக்கு எது வேண்டுமோ அது நிலைக்கும் என்பர். தனக்கு எது வேண்டாமோ, எதிரானதோ அது அழியும் என்பர். தன் விருப்பங்கள் எதுவோ அதுவே நடக்கும் என்ற நேர் நோக்குள்ளவர்கள் - ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் (ஆரியக் கூட்டத்தினர்).
இந்து மகா சபையானாலும் சரி, அந்தக் கொள்கையுடைய மற்றைய அமைப்புகளானாலும் சரி, அவர்கள் நடவடிக்கைகள் எனக்கு ஆத்திரத்தைத் தருகின்றன. சுயநலமும், குறுகிய தீவிரவாதமும் உடையவர்கள். முதலாளிகளும், மன்னர்களும் மேல் தட்டு நடுத்தரவாதிகளும் கொண்ட ஒரு வகுப்புவாதி கூட்டம் இது என்று சோசலிச சிற்பி நேரு இவர்களைக் கடுமையாகத் தாக்கினார்.
(ஆதாரம்: Selected works of Nehru Vol. 6 page 156)
இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, ஜனசங் இவற்றின் பிழிவான பி.ஜே.பி. முதலாளித்துவக் கொள்கையை மூச்சாகக் கொண்டதாகும். இவர்கள் ஆரம்பம் முதலே அமெரிக்க விசுவாசிகளே. ஆட்சியில் இல்லாத போதே இவர்கள் அமெரிக்காவை ஆதரிக்கக் கூடியவர்கள்.
ஆட்சி கிடைத்ததும் அதை சரியாகப் பயன்படுத்தத் துடிக்கின்றனர். அமெரிக்க அரசும் இந்தியாவை தனது வலைக்குள் கொண்டுவர தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நேரு காலத்திலும், இந்திரா காலத்திலும் அது சாத்தியமில்லாமல் போனது. தற்போது பி.ஜே.பி.யின் ஆட்சியேற்பு அமெரிக்காவுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுத (சி.டி.பிடி.) மோதல்கள் எல்லாம் வெளி வேஷங்கள்தான். உள்ளுக்குள் அவர்கள் உரசிக் கொண்டு தான் சுகங் காண்கிறார்கள். கிறித்தவ தலைமையைப் பயன்படுத்தி கொர்பசேவ் என்னும் கூர்வாளால் இரஷ்ய கம்யூனிசத்தைக் கூறு போட்டு, குலைத்த அமெரிக்காவிற்கு, இந்தியாவில் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்வதில் இடர்ப்பாடு ஏதும் இல்லை!
முதலாளித்துவத்தின் பாதுகாப்பரண் மட்டுமல்ல மதம், சமதர்மத்தின் சத்துருவும் அதுவே!
அமெரிக்க ஆதிக்கத்தின் அந்தரங்கத் திட்டத்தின்படி, முதலாளித்துவ பாஸிச பி.ஜே.பி. தனக்கு ஏற்புடைய, இனிப்பான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்திய சோசலிசத்திற்குச் சுருக்குக் கயிற்றை எப்போதோ அவர்கள் மாட்டி விட்டார்கள்.
மெல்ல மெல்ல, ஓசை எழாமல், சோசலிசத்தைச் சிதைத்து முதலாளித்துவத்தை எழுப்பும் பணியை எவ்வித எதிர்ப்பும் இன்றி பி.ஜே.பி. அரசு செய்து வருகிறது.
அரசுத் துறையெல்லாம் தனியார் துறையாக ஆக்கப்படுவதும், கட்டுப்பாடற்ற வர்த்தகத் தொடர்பும், அந்நிய முதலீடுகளை அவிழ்த்து விட்டதும் அதன் அடிப்படையில் தான்.
தொழில் துறை முழுவதும் தனியார் மயம் என்ற அபாயம் அரும்பத் தொடங்கிவிட்டது.
முதலாளிகளுக்கு எது லாபம் தருமோ அதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
கம்யூனிச ஆட்சி இருக்கும் இடங்களில் அதை அப்புறப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டு விட்டது. மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தற்போதைய நெருக்கடிகள், நிகழ்வுகள், பி.ஜே.பி. அமெரிக்க உறவின் நெருக்கத்தைக் காட்டுகின்றன.
பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் முதலாளித்துவத்தை, தனியார் மயத்தைத் தாங்கிப் பிடிக்க இரு முதன்மைக் காரணங்கள் உள்ளன.
1. இவர்கள், சமுதாயத்தில் ஆண்டான் அடிமை, ஏற்றத் தாழ்வு வேண்டுகின்றனர். அதற்கு முதலாளித்துவ அமைப்பே ஏற்றது.
இவர்களின் இந்து ராஷ்ட்ரா திட்டத்திற்கு மதமும், கடவுளும் அவசியம். மதமும் கடவுளும் மறுக்கப்படாத, மாறாக பாதுகாக்கப்படக்கூடிய அமைப்பு முதலாளித்துவம். அதனால் முதலாளித்துவத்தை ஆதரிக்கின்றனர்.
2. தனியார் மயம் என்ற ஒரு அற்புதமான கருவியின் மூலம் சமூக நீதி, இட ஒதுக்கீடு என்ற தத்துவத்தை, பிடிமானத்தை உயிர் மூச்சை செயலிழக்கச் செய்ய முற்படுகின்றனர்.
அரசுத் துறைகளையெல்லாம் தனியார் துறை ஆக்கிவிட்டால் மண்டல் எல்லாம் சுண்டல் ஆகிவிடும் என்பது அவர்களின் சூட்சமம்.
அது தெரியாமல், திராவிட பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்று தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்கின்றவர்கள் இந்தத் தனியார் மயத்துக்குத் தாளம் போட்டு நிற்கின்றனர்.
இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்த ஆரிய பார்ப்பனர் கூட்டம். அது இயலாமல் போகவே; இட ஒதுக்கீட்டு கோரிக்கை வலுப்பட்டு வரவே, தனியார் துறையாக மாற்றுவதன் மூலம் இட ஒதுக்கீடே இல்லாமல் செய்துவிட முயற்சிக்கின்றனர்.
கோடிகளைக் கண்டுவிட்ட திராவிடக் கோமான்களுக்கு தெருக்கோடியில் திக்கற்று கிடக்கும் சூத்திரர்கள் பற்றி அக்கறையில்லாமல் போய்விட்டது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமா? என்று நழுவப் பார்க்கின்றனர்.
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வந்தே தீரவேண்டும். இல்லையெனில் பழையபடி சூத்திரன் சுத்த சூத்திரனாக்கப்படுவான்.
அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வர, ஆதாரமான இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை, முதலாளித்துவப் பாதையில் தனியார் மயமாக்கி, தகர்க்க முயற்சி செய்கின்றனர். எனவே, இச்சூழ்ச்சி சூத்திரர்களால் உணரப்படவேண்டும்.
ஆக, ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. எல்லாம் முழுமையான முதலாளித்துவ கொள்கையுள்ளவர்கள். முதலாளித்துவம் மனித நேயத்தின் முதல் எதிரி; மதவாதிகளின் பாசறை; ஆதிக்கத்தின் அடிப்படை. எனவே, இந்துத்துவா கூட்டத்திற்கு முதலாளித்துவம் வேண்டும்; முதலாளித்துவத்தின் ஆதரவு அமெரிக்காவிற்கு வேண்டும்.
ஆக, ஆதிக்கவாதிகள் அடையாளங்கண்டு நெருங்குகிறார்கள். அவர்கள் நெருக்கம் நம்மைச் சாறு பிழிந்து சக்கையாக்கி விடும்; சூத்திரக் குப்பையாக்கி விடும் என்பதை விழிப்போடு உணர்ந்து; ஆதிக்கப் பேர்வழிகளை அகற்றும் முயற்சியில் அணி திரள வேண்டும். சமதர்ம, பகுத்தறிவு, மனித நேயப் பார்வையில் சமூக நீதி காக்கும் ஆட்சியாளர்களை மத்தியில் அமர்த்த வேண்டும். இடதுசாரிகளின் உழைப்பும், ஒற்றுமையும், உறுதியும் இன்றைய உடனடித் தேவைகள் ஆகும்.

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                                 ஆசிரியர் - மஞ்சை வசந்தன்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை