தந்தை பெரியாரின் எளிமையான தோற்றமும் உ.வே.சா.வின் தடுமாற்றமும்



ஸ்ரீமான் நாயக்கர் செல்வமென்னும் களியாட்டில் அயர்ந்தவர்; உண்டாட்டில் திளைத்தவர்; வெய்யில் படாது வாழ்ந்தவர்; ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஸ்ரீமான் நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார் போல் எளிய உடை தரித்து, எளிய உணவு உண்டு. இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்?
என்று 24.5.1924இல் நவசக்தியில் திரு.வி.. அவர்கள் எழுதி உள்ளார்.
தந்தை பெரியார் அவர்கள் 1919இல் ஈரோட்டில் தாம் வகித்து வந்த நகரசபைத் தலைவர் பதவியையும் பல்வேறு கவுரவப் பதவிகளையும் துறந்து காங்கிரசில் சேர்ந்தார். அவர் துறந்த பதவிகள் 29 என்றால் எவரே இவ்வாறு செய்ய வல்லவர்?
ஆண்டு ஒன்றுக்கு அந்தக் காலத்திலேயே சுமார் ரூ. 20,000 வருவாய் வரக்கூடியதான சீரும் சிறப்புடனும் நடைபெற்று வந்த வியாபாரத்தினை விட்டொழித்தார்.
காந்தியாரின் கதர்த்திட்டம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகிய நிர்மாணத் திட்டங்களால் மனம் கவரப்பட்டவராய் அவரின் சீடரானார். ஒத்துழையாமை இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அல்லும் பகலும் அயராது உழைக்கலானார். உயர்ந்த பட்டாடைகளும், சரிகை அங்கவஸ்திரமும், உயர்ரக தலைப்பாகையும் அணிந்து பழக்கப்பட்டவர், சாதாரண முரட்டுக் கதரை அணியத் தொடங்கினார். சிகரெட் புகைக்கும் பழக்கத்தை விட்டொழித்தார். தாம் மட்டும் எளிய கதராடை அணிந்து தொண்டதோடு நிற்கவில்லை உயர்தர பட்டாடை உடுத்தி வந்த தமது மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் 80 வயது நிறைந்த தாயார் மற்றும் சுற்றத்தார், நண்பர்கள் ஆகிய அனைவரையும் கதர் உடுத்தச் செய்தார்.
திருச்செங்கோட்டில் ஆச்சாரியார் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த கதர் ஆசிரமத்தை துவக்கி வைத்தவரே தந்தை பெரியார் அவர்கள்தாம் என்பது கோடிட்டு காட்டப்பட வேண்டிய செய்தியாகும். தந்தை பெரியார் அவர்களின் அயராத உழைப்பின் காரணமாகவே கதர் இயக்கம் அன்றைக்கு தமிழகத்தில் வேர் ஊன்றியது. ஏராளமான கதர் வஸ்திராலயங்கள் தந்தை பெரியார் அவர்களாலே ஏற்படுத்தப்பட்டன. அதற்கு முதன் வரையிலும் தனிப்பட்ட வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்கவல்லதாக இருந்த கதரை காங்கிரஸ் இயக்கத்துடன் இணைத்த பெருமை தந்தை பெரியார் அவர்களையே சாரும். பல ஆண்டுகள் கதர் போர்டு தலைவராக இருந்து அவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது.
தக்ளியில் நூல் நூற்று தந்தை பெரியார் அவர்களின் கைகள் சிவந்தன. இராட்டையினையும், கதர் மூட்டைகளையும் தோளிலே சுமந்து சுமந்து அவர் தோள்கள் இரண்டும் கன்னி, அவ்விடங்களில் காய்ப்பு வடு ஏற்பட்டு விட்டது. இட்ட வேலையினைச் செய்ய எத்தனையோ ஆள், அம்பு ஏவலர்கள் ஆகியோரைக் கொண்டு இராஜ வாழ்வு வாழ்ந்து வந்த தந்தை பெரியார் அவர்கள் அனைத்தையும் துறந்து தமது தோளிலே கதரையும், கை ராட்டையையும் சுமந்து தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சுற்றிச் சுற்றி காங்கிரஸ் பிரசாரமும், கதர் பிரசாரமும் செய்து விற்பனை செய்யலானார்.
தந்தை பெரியார் அவர்கள் ஒரு சமயம் ஈரோட்டுக்கு அடுத்த கொடுமுடி வட்டாரத்தில் காங்கிரஸ் பிரசாரமும் கதர் விற்பனையும் செய்துவிட்டு மீதம் உள்ள கதராடைகளை மூட்டையாகக் கட்டி முதுகில் சுமந்து கொண்டு, தொண்டர்கள், பொதுமக்கள் புடைசூழ கொடுமுடி புகைவண்டி நிலையம் வந்தடைந்தார். புகைவண்டி நிலையத்திற்கு வெளியிலேயே அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு உள்ளே பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருந்த புகைவண்டியில் ஏறினார். தந்தை பெரியார் ஏறிய பகுதியில் (கேரேஜில்) இருந்த பிரயாணிகள் நாயக்கர் வருகின்றார், நாயக்கர் வருகின்றார் என்று கூறி பரபரப்புடன் அவரவர் தத்தம் இடங்களை காலி செய்து, பெரியார் அவர்கள் உட்காருவதற்கு இடம் தர ஒவ்வொருவரும் முன்வரலானார்கள். அதே இரயிலில் அவினாசிக்கு ஒரு சமயச் சொற்பொழிவுக்காகப் பயணம் செய்து கொண்டிருந்தார் காலஞ்சென்ற டாக்டர் .வே.சாமிநாத அய்யர் அவர்கள்.
பயணிகளில் சிலர் நாயக்கர் நாயக்கர் என்று ஆரவாரத்துடன் கூறுவது கண்டு .வே.சா. அவர்கள் பக்கத்தில் இருந்தவரிடம் நாயக்கரா யார்? ஈரோட்டு ராமசாமி நாயக்கரா என்று கேட்டார். பக்கத்தில் இருந்தவரும் ஆம் அய்யா! ஈரோட்டு நாயக்கர்தான் என்று கூறிக்கொண்டு எழலாயினர்.
திரு. .வே.சாமிநாத அய்யர் அவர்களும் எழுந்து நமஸ்காரம் என்றார். தந்தை பெரியார் அவர்களும் வணக்கம் என்று கூறிக் கொண்டு டாக்டர் .வே.சா. பக்கத்தில் போய் அமர்ந்தார். திரு. .வே.சாமிநாத அய்யர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அய்யா அவர்கள் ஈரோடு நகரின் பெரியதனக்காரராக, வியாபாரியாக, நகரச் சபைத் தலைவராக இருந்த காலங்களில் .வே.சா. அவர்கள் தந்தை பெரியார் இல்லத்திற்கு வந்து உதவி பெற்றுச் சென்று இருக்கின்றார். தந்தை பெரியார் அவர்களும் அவர்களை அழைத்து பல இலக்கியச் சொற்பொழிவுகள் நகரில் நடத்தச் செய்து சிறப்பும் செய்தும் இருக்கின்றார். இப்படியாக தந்தை பெரியார் அவர்களுக்கும் .வே.சா.விற்கும் அறிமுகம் ஆகி இருந்தது.
.வே.சா. அவர்கள் தந்தை பெரியார் அவர்களை ஆடம்பர பட்டாடை, சரிகை, அங்கவஸ்திரம், வைர மோதிரம், தங்கத்தால் ஆன பொத்தான், பாக்கட்வாட்சு செயின் ஆகியவற்றுடன் கூடிய சட்டை இவைகளுடன் கூடிய கோலத்தில் பார்த்துப் பழக்கப்பட்டவர்.
.வே.சா.வின் பதற்றம்!

முரட்டு அழுக்கேறிய கதராடைகளுடன் வெயில், மழை என்று பாராது ஊர் ஊராக சுற்றித் திரிந்து வருவதால் பொன்னிற மேனியில் புழுதித் துகள்கள் படிந்தும், மேனியில் பளபளப்புக் குன்றியும் தந்தை பெரியார் அவர்கள் காணப்பட்ட நிலை கண்டு .வே.சா. அவர்கள் ஆச்சரியமும், மிக்க பரிதாப உணர்வும் கொண்டார். சுமந்து வந்த மூட்டையினை தமது பக்கத்தில் இறக்கி வைத்துவிட்டு அமர்ந்த அய்யா அவர்களை சில நிமிட நேரங்கள் இமை கொட்டாது .வே.சா. அவர்கள் உற்று நோக்கினார்.
சற்று மனதை திடப்படுத்திக்கொண்டு விதியின் கொடுமை யாரைத்தான் விட்டு வைத்தது. நாயக்கர்வாள், தங்களையும் அலைக்கழித்துவிட்டதே.
செல்வச் சீமானாக, பெரும் வணிகராக பொது மக்களின் நன்மதிப்பினைப் பெற்ற நகர சபைத் தலைவராக வாழ்வாங்கு வாழ்ந்த தாங்கள் இன்று வணிகத்திலும் செல்வத்திலும் வீழ்ச்சி அடைந்து, இப்படி மூட்டை சுமந்து ஊர் சுற்றி விற்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டீர்களே என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.
தந்தை பெரியார் அவர்களோ எத்தகைய மறுமொழியும் கூறாது வாளாய் இருந்தார். .வே.சா. தமது கோலங்கண்டு தாம் வணிகத்தில் நொடித்துப்போய் கஷ்ட ஜீவனம் நடத்துவதாக எண்ணிக்கொண்டு பேசுகின்றார் என்பதை எண்ணி, தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார்.
.வே.சா. அவர்கள் அத்துடன் தமது உரையினை நிறுத்திக்கொள்ளவில்லை. தந்தை பெரியாரின் தாய் தந்தையர்கள், பாகவதர்கள், படித்த புலவர்கள், சன்னியாசிகள் முதலியவர்களுக்கு வாரி வாரி வழங்கியதையும், தந்தை பெரியார் அவர்கள் கற்றறிந்தோர்களை ஆதரித்து சிறப்புச் செய்ததையும் எண்ணி எண்ணி நெகிழ்வுற்றார். இப்படிப்பட்ட குடிப்பிறப்பு உள்ளவருக்கா வாழ்வில் இத்தகைய இன்னல்கள் என்று எண்ணி ஆயாசப்பட்டார்.
கைகளைப் பற்றி உபதேசம்!
.வே.சா. அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு நாயக்கர்வாள், மனம் தளர்ந்து விடாதீர்கள், தங்களுடைய முன்னோர்களும் தாங்களும் செய்த தான தர்மங்கள் எல்லாம் வீண்போகாது, முயற்சி திருவினையாக்கும். தாங்கள் இப்படி மூட்டை தூக்கி விற்கும் நிலை சிறிது காலத்திலேயே மாறி தாங்கள் மீண்டும் பெரும் வணிகராக, செல்வந்தராக ஆவது உறுதி என்று ஆறுதல் மொழி கூறலுற்றார். இத்துடன் நிறுத்திக் கொண்டாரா? இல்லை?
தந்தை பெரியார் அவர்களின் மனச் சோர்வினை நீக்கி அவரை ஆறுதல் அடையச் செய்து உற்சாகப்படுத்துவதாகக் கருதிக் கொண்டு தாம் படித்த இலக்கியங்களில் இருந்து செல்வம் நிலையாமை குறித்து சில பாடல்களை எடுத்து விரித்துரைக்கத் தொடங்கினார்.
நாயக்கர்வாள் அவ்வையார் தமது நல்வழி என்கின்ற நூலில் இந்த செல்வம் நிலையாமை பற்றி ஒரு பாடலில் விவரிக்கின்றார் பாருங்கோ.
ஆறிடும் மேடும் மடுவும் போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர். ஆற்று வெள்ளம் காரணமாக மேடாய் இருந்த இடம் பள்ளமாகவும், பள்ளமாய் இருந்த இடம் மேடாகவும் ஆவதுபோல செல்வமானது ஒருவரிடம் சேருவதும் தேய்வதும் ஆகும் என்றார்.
மற்றும் நாலடியார் பாடல் ஒன்றில் செல்வம் நிலையாமைப்பற்றி கூறி இருப்பதை பாருங்கோ.
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறு சிகை நீக்கி யுண்டாரும் - வறிஞராய்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம் ஒன்
றுண்டாக வைக்கற் பாற்றன்று.
அறுசுவையுள்ள உணவை மனைவி விரும்பி உண்பிக்க மறுபடி தவிர்த்து உண்ட செல்வரும் ஒரு காலத்தில் வறுமையாராகி எங்கேனும் ஓர் இடத்தில் போய் கூழுக்கும் கூட இரப்பார்கள். ஆதலினால் செல்வம் என்பது நிலையுடையதாக மனதில் கருதக் கூடியது அன்று என்று மொழிந்துள்ளார். மேலும் பாருங்கோ நாயக்கர்வாள், செல்வம் என்பது ஒருவரிடம் நிலைத்து நில்லாமல் கைமாறிச் செல்ல வல்லது. இதன் காரணமாகவே இதனை செல்வம் என்றனர். அதாவது யாம் செல்வோம், யாம் செல்வோம் என்று அது கூறுவதாகவே குறிப்புணர்த்தும் முறையில் அதனைச் செல்வம் என்றார்கள்.
இந்தக் கருத்தானது குசேலோ பாக்கியானம் பாடல் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
பல்கதிர் விரித்துத் தோன்றிப்
     பாடுசெய் கதிரே போல
மல்லல் நீருலகில் தோன்றி
     மறைந்திடும் நும்மை விட்டுச்
செல்வமென்று றுவதற்குஞ்
     செல்வ மென்று ரைக்கும் பேர் நன்று
அல்லலை விளைப்ப தாகா
     தரும் பெறற் செல்வம் பாவாய் - பாடல் எண் 112
உலகத்திலே சூரியன் தோன்றுவதும் மறைவதும் போல் செல்வமானது ஒருவர் இடத்தில் தோன்றுவதும் மறைவதும் ஆகும்.
ஒருவரிடத்தில் தரித்திரோம், தரித்திரோம் என்பதையே தரித்திரம் என்ற சொல் உணர்த்துகிறது. செல்வோம், செல்வோம் என்பதையே செல்வம் என்ற சொல் உணர்த்துகிறது என்பதையே வேதநாயகம் பிள்ளை தமது நீதி நூலில்
தரித்திரம் தரித்திரம் என்னும் தாரணி
     சிரித்திடச் செல்வம் செல்வம் என்னும்
- என்று பாடியுள்ளார்.

இன்னும் ஒன்று பாருங்கோ நாயக்கர்வாள். ஈரோடு நகரில் தாங்கள் பழுத்த மரமாய் காட்சி அளித்தீர்கள். மரம் பழுத்தால் வவ்வாலை வாவென்று அழைப்பார்தான் உண்டோ? தங்களின் செல்வச் செழுமை காரணமாக எத்தனையோ கற்றறிந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் உதவிநாடி வந்த வண்ணமாய் இருந்தார்கள். இன்றைக்கு தங்கள் செல்வம் குறைவுபட்ட காலத்தில் அவர்கள் எல்லாம் தங்களை நாடி வாராது நின்றுவிட்டார்கள். சிலராவது தங்கள் பொல்லாத காலமானது நாயக்கரையும் வறுமைக்கு உள்ளாக்கிவிட்டதே என்று மனம் வருந்தச் செய்து இருக்கவும் கூடும்.

விவேக சிந்தாமணி ஆசிரியர் இத்தகைய நிலை பற்றி ஒரு பாடலில் சொல்லி இருக்கிறார்.

ஆலிலை பூவுங் காயும்
     அளிதரு பழமும் உண்டேல்
சாலவே பட்சி சாலம்
     தன்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து கூடி
     வந்திப்பர் கோடி கோடி
ஆலிலை யாதி போனால்
     அங்கு வந்திருப் பாருண்டோ

ஆலமரத்தின் இலை, பூ, காய், கனி ஆகியவைகள் நிறைந்து இருக்கும்போது பறவைக் கூட்டங்களானது அந்த ஆலமரத்தினை தங்களின் இருப்பிடமாகவே எண்ணி வாழும்.
வாலிபர்களும் மற்றோரும் அதன் நிழலில் இளைப்பாறி அம்மரத்தின் சிறப்புப் பற்றி வானளாவ வாழ்த்துவார்கள். ஆனால் அந்த ஆலில் இலை, பூ, காய், கனி முதலியன அற்றுப் போனால் யார் அதனை நாடிச் செல்வார்கள்? அதுபோலவே செல்வச் செழிப்பு ஒருவரிடம் இருக்கும் போதுதான் மக்கள் அவரிடம் உதவி நாடிச் செல்வார்கள்; செல்வம் குன்றிய நிலையில் எவர்தான் அவரை நாடிச் செல்லுவார்கள்?
எனவே நான் ஆரம்பத்திலேயே தங்களிடம் குறிப்பிட்டதுபோல தங்களின் செல்வம் குன்றிய நிலை எண்ணி மனம் தளர்ந்துவிடாதீர்கள். முயற்சி திருவினையாக்கும். விதியையும் மதியினால் வெல்லலாம் என்றார் நம் முன்னோர்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலை வின்றித் தாழாதுஉ ஞற்று பவர்
என்று வள்ளுவர் கூறியுள்ளார் பாருங்கோ, என்று கூறி பொருள் விரிக்கத் தொடங்கினார்.

இதற்குள்ளாக ரயில் ஈரோடு சந்திப்புக்கு வந்துவிட்டது. தந்தை பெரியார் அவர்கள் .வே.சா. அவர்களிடம் தமிழ் நூல்களிலிருந்து ஏராளமான கருத்துக்களை சொன்னீங்க. ரொம்ப நன்றி வருகிறேன் என்று கூறி விடைபெற்று, தமது மூட்டைகளை மீண்டும் முதுகிலே சுமந்துகொண்டு ரயிலை விட்டு இறங்கி நடக்கலானார்.

.வே.சா.வும் தந்தை பெரியார் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

உலகம் ஒரு மனிதனை அவனது புறத்தோற்றத்தைக் கொண்டே மதிப்பீடு செய்கிறது. எதுவும் அற்றவர்களாய் இருப்பினும் ஆடம்பரமாக ஆடையலங்காரம் செய்திருந்தால் அவர்களைச் செல்வவான்களாகவும் சிறப்பு மிக்கவர்களாகவும் கருதி வெகுவாக மதிப்பதும், அறிவு, ஆற்றல், ஒழுக்கம், செல்வம் ஆகிய அனைத்தும் உடையவராயிருந்தும் எளிமைக் கோலம் பூண்டிருப்பாரேயானால் அத்தகையோரை இல்லாமைக்கு ஆட்பட்டோர், இகழ்ச்சிக்குரியவர் என்று எண்ணி அவமதிப்பது உலக நடைமுறையாகி விட்டது. பொருளாதார நிலையில் குறைவு ஏற்படாவிடினும் தாம் மேற்கொண்ட பொதுத் தொண்டு காரணமாகத் தந்தை பெரியார் அவர்கள் எளிமைக் கோலம் பூண்டிருந்த நிலையில் காண நேர்ந்ததும் அவர் செல்வ நிலையில் தாழ்வுற்று, மூட்டை சுமந்து வாழ்க்கை நடத்தவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டதாக அய்யர் முடிவு கட்டிவிட்டார். அதனாலேயே செல்வத்தின் நிலையாமைப்பற்றி தாம் கற்றறிந்த கருத்துக்களைக் கூறினார், .வே.சா. அவர்கள். அப்போதும் தந்தை பெரியார் அவர்கள் புன்முறுவல் பூத்த வண்ணம் அய்யர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாரேயல்லாமல் இடைமறித்து, அய்யா நான் ஒன்றும் அற்ற வறிஞன் ஆகிவிடவில்லை; நானே வலிந்து மேற்கொண்டதுதான் இந்த எளிமைக்கோலம் என்று மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஏன் பெரியார் மறுப்பு தெரிவிக்கவில்லை? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதும் காந்தியின் நிர்மாணத் திட்டங்களை செயற்படுத்துவதில் முழு மூச்சுடன் செயலாற்றி வந்ததும் நாடறிந்த செய்திகளாகும். அதை அய்யரும் அறிந்திருக்க வேண்டும். ஒருவேளை அய்யர் அதை மறந்திருந்தாலும் அய்யா அவர்கள் தாம் செய்து வரும் பொதுத் தொண்டினைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்பாமையாகிய அடக்க உணர்வு ஒரு காரணம் ஆகும்.

பொதுத் தொண்டிற்கு வந்தவர்கள் மானம் கருதக் கூடாது என்ற அவரது கருத்து மற்றொரு காரணமுமாகும். இதனாலேயே தந்தை பெரியார் அவர்கள்,

குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

என்ற குறள் தனது மனதுக்குகந்த குறளாகும் என்பார். எனவே எளிமைக் கோலம் பூண்டிருந்ததாலோ, கதர் மூட்டையைச் சுமந்து சென்றதாலோ தமக்கு அவமானம் ஏற்பட்டதாக அவர் நினைத்ததில்லை. இதனை தந்தை பெரியார் அவர்களே,
நான் மூட்டை சுமப்பதில் பாரத்தினால் வேண்டுமானால் கஷ்டப்பட்டு இருப்பேனே ஒழிய மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒருபோதும் கஷ்டப்பட்டது இல்லை என்று குறிப்பிட்டுள்ளது என்றும் நினைவு கூரத்தக்கதாகும்.

(தமிழர் தலைவர்)

குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் தந்தை பெரியார் அவர்களே பல சந்தர்ப்பங்களில் விவரித்துக் கூறக் கேட்டு எழுதப்பட்டவையாகும்.
தந்தை பெரியார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை