பெரியாரின் பெருங்குணம்!


அந்நாளில் டி.கே.பிரதர்ஸ் நாடகக் கம்பெனி மிகவும் பிரபலமானது. முத்தமிழ் கலா வித்துவ ரத்தினங்கள் என்ற பட்டம் பெற்று தமிழகத்தின் நாடக உலகின் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள்; டி.கே.முத்துசாமி, டி.கே.சங்கரன்,டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகிய சகோதரர்களில் டி.கே.எஸ். மிகவும் பிரபலமானவர். அடுத்து டி.கே.பகவதி அவர்களோடு இணைந்திருந்தவர் அன்றைய பகுத்தறிவாளர் டி.என்.சிவதாணு.

திரு.டி.கே.எஸ். எழுதிய எனது நாடக வாழ்க்கை என்ற நூலில் காணும் உருக்கமான ஒரு செய்தி:

காசநோயின் கொடுமையைப் பற்றி அறிய அதற்குமுன் எனக்கு வாய்ப்பு ஏற்படவில்லை! மனைவியை சானட்டோரியத்தில் சேர்த்த பிறகு தான் அதைப்பற்றி நன்கு தெரிந்துகொண்டேன். கரூர் பண்டித இராமசர்மாவுக்கு மனைவியின் நிலையைப் பற்றி விவரமாக எழுதினேன். உடனே பதில் கிடைத்தது. தங்கள் மனைவிக்குக் காச நோய் என்பது எனக்கு முன்பே தெரியும். அதனால்தான் அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கூறினேன். இதனால் தங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் தங்களுக்குச் சில மருந்துகள் கொடுத்தேன். இப்போது தங்களைப் பொறுத்தவரை எதுவுமே இல்லை. தங்கள் மனைவிக்குக் குணம் உண்டாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று எழுதியிருந்தார். சர்மா இதை முன்பே என்னிடம் கூறியிருந்தால் சில மாதங்களுக்கு முன்பே நோயின் ஆரம்ப நிலையிலேயே தக்கபடி சிகிச்சை செய்திருக்கலாமே என்று தோன்றியது. இப்போது மனைவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது

அவள் தொடர்ந்து இருமுவதைக் கேட்கும்போது என் உள்ளமெல்லாம் உருகும். அவளுடைய தாங்க முடியாத வேதனையை எண்ணி நான் துன்பப்படுவேன். அருகிலிருந்து ஆறுதல் கூறுவேன். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி வரை மனைவியோடிருப்பேன். அதற்குமேல் ஈரோட்டுக்கு வருவேன். நாடகத்தில் எனது கடமையை நிறைவேற்றுவேன். நாடகம் முடிந்ததும் உடனே காரில் பெருந்துறை சென்று மனைவிக்குத் துணையாக அவள் அறைக்கு வெளியேயுள்ள தாழ்வாரத்தில் படுத்துக் கொள்வேன். இப்படியே பகல் முழுவதும் பெருந்துறையிலும், இரவு பாதிநேரம் ஈரோட்டிலுமாக ஏறத்தாழ மூன்று மாத காலம் அலைந்தேன். இந்த நிலையிலுங்கூட நான் ஈரோட்டிலிருந்து நாடகம் முடிந்து திரும்பும் வரை மனைவி உறங்குவதில்லையென்று அவள் தமக்கையார் கூறினார். அவள் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருந்தனவோ; இறைவனே அறிவான்!

1943 அக்டோபர் 30ஆம் நாள் குடும்ப விளக்கு சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது. டாக்டர் வந்து பார்த்தார். கண் கலக்கத்தோடு நின்ற எனக்கு ஆறுதல் கூறினார். அதிகமாகப் போனால் இன்னும் ஒரு வார காலந்தான்... நீங்கள் விரும்பினால் இப்பொழுதே ஈரோட்டுக்குக் கொண்டு போகலாம். இனி நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றார். இது நான் முன்னரே எதிர்பார்த்ததுதான். எனவே புதிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை. குடும்பத்தார் அனைவரும் வந்து பார்த்தார்கள். பெரியண்ணாவிடம் கலந்து பேசினேன். மனைவியை ஈரோட்டுக்கே கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்தோம். ஆனால் புதிய சிக்கல் ஏற்பட்டது. காச நோயால் பீடிக்கப்பட்டுக் காலனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என் காதல் மனைவியாளை ஈரோட்டில் எங்கே படுக்க வைப்பது? இன்னும் இரண்டு நாளில் இறந்து விடுவாள் என்ற நிலையில் பட்டக்காரர் பங்களாவில் படுக்க வைப்பது எனக்கே சரியாகத் தோன்றவில்லை

தனி வீடு தேடி அலைந்தேன். நிலைமையை அறிந்த எவரும் எங்களுக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் வீடு கொடுக்க அஞ்சினார்கள். அப்போது ஔவையார் நாடக நூல் பெரியாரின் தமிழன் அச்சகத்தில் அச்சாகி முடிந்திருந்தது. அதற்குப் பதிப்புரை எழுத வேண்டியது தான் பாக்கி. சிந்தனையைச் சிறிது இலக்கியத் துறையில் செலுத்த எண்ணித் தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். துணையாசிரியர் புலவர் செல்வராஜ் அவர்களிடம் நிலைமையைச் சொல்லிக் கொண்டிருந்தேன்

உள்ளிருந்து .வெ.ரா. பெரியார் வந்தார். என்ன மிகவும் சோர்ந்திருக்கிறீர்களே; மனைவி எப்படியிருக்கிறார்? என்று அன்போடு விசாரித்தார். டாக்டர்கள் கைவிட்டதையும் மனைவியை ஈரோட்டுக்குக் கொண்டு வர இருப்பதையும் கூறினேன். பெரியார் மிகவும் கவலையோடு ஆறுதல் கூறினார். மனைவியை இங்கு கொண்டு வந்து படுக்க வைக்க வீடு கிடைக்காமல் திண்டாடுகிறேன் என்றேன். உடனே பெரியார் அவசர அவசரமாக ஒரு சாவியை என்னிடம் கொடுத்தார். பக்கத்தில் நம்முடைய புதிய வீடு இருக்கிறது. சுயமரியாதை சங்கத்திற்காக வாங்கியது. சுண்ணாம்பு அடித்துச் சுத்தமாக வைத்திருக்கிறது. உடனே அங்கே கொண்டு வந்து படுக்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றார். நான் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. பெரியாருக்கு நன்றி கூறிவிட்டுப் பெருந்துறைக்கு விரைந்தேன். அன்று மாலையே என் மனைவி ஈரோட்டுக்குக் கொண்டு வரப்பட்டாள்.

சேலத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்கள் வந்தனர். இளமைக் கனவுகள் நிறைவேறாமல் ஏக்கத்தோடு என்னை விட்டுப் போகும் இல்லாள் மீனாட்சிக்காக எல்லோரும் கண்ணீர் விட்டனர்.

நவம்பர் முதல் நாள் மாலை உற்றார் உறவினர் சூழ, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் மீனாட்சி படுக்கையிலே கிடந்தாள். அவளை அமைதியாக இருக்க விடுங்கள் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அருகிலுள்ள தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். எழுதாமல் விட்டிருக்கும் ஔவை நாடக நூலின் பதிப்புரையினை எழுதத் தொடங்கினேன். சிந்தனையை ஒருமுகப்படுத்திக்கொண்டு ஒருவாறு எழுதி முடித்தேன். யாரோ வந்தார்கள். மனைவி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னார்கள். விரைந்து சென்றேன். மனைவியின் அருகில் அமர்ந்தேன். தனியே பேச விரும்பியதால் எல்லோரும் சற்று விலகி நின்றார்கள்...

முத்தமிழ் கலாவித்துவ ரத்தினம் டி.கே.சண்முகம்
எனது நாடக வாழ்க்கை நூலிலிருந்து


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை