ஒழுங்கை பேணுபவரிடம் மட்டுமே கடன் வாங்க வேண்டும்
தந்தை பெரியார் அவர்களுடன் எனக்கு, என் சிறிய வயது, அய்ந்தாவது வயது முதல் நாற்பத்தேழு வயது முடிய, தொடங்கிய உறவின் முறையிலும், மற்ற அன்பின் அடிமையாகவும் இருந்த போது அன்றாட வகையில் ஏற்பட்ட அனுபவங்களும், அறிவுரைகளும் கலந்தவைகளை, பெரியார் மலரின் பொன்னெழுத்துக்களை படிக்கும் தோழர்களும் படித்து தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் பேருதவியாக அமையும் என்ற ரீதியில் எழுதியுள்ளேன். ஒரு சமயம் என் நினைவில் 1959இல் என்று ஞாபகம். நான் செய்யும் மஞ்சள் மண்டிக்குப் பணம் தேவைப்பட்டு அவரிடம் பணம் கேட்டேன். அந்தக் காலத்தில் அது பெரிய தொகைதான். பிராமிசரி எழுதிக் கொடுத்துவிட்டு தொகை வாங்கினேன். அப்போது எல்லாம் பிராமிசரி நோட்டுக்கு ஒரு அணா ரெவின்யூ ஸ்டாம்பு நான்கு ஒட்டி, பிராமிசரியை பூர்த்தி செய்து கொடுத்தேன். பெரியார், வாங்கி பார்த்ததும் என்னிடம், நீ நன்றாக சிக்கலில் மாட்டிக் கொண்டாய் என்றார். நான் எதார்த்தமாக விவரம் கேட்டேன். அவர் ஸ்டாம்புகளின் பின்புறம் தண்ணீர் தடவினால், ஸ்டாம்புகள் மட்டுமே தானாகவே வந்துவிடும். பின் அதையே எடுத்து பெரிய தொகைக்கு பிராமிசரி எழுதி ஒட்டிவிட்டால் விளைவுதான் வேறாகும் என்றார். நான் உடனே எப்படி என்றேன். அதற்கு நான்கு ஸ்டாம்புகளுக்குள் உன் கையெழுத்து அடங்கிவிட்டது. அதனால்தான் என்றார். நான் உடனே பிராமிசரி நோட்டை வாங்கி, இரண்டு மூன்று கையெழுத்து ஸ்டாம்பு மேல் போட்டு பெரியதாக போட்டுவிட்டேன். அதற்கு சொன்னார். கடன் வாங்குவதில் அலட்சியம் கூடாது, கவனம், ஒழுங்கை பேணுபவரிடம் மட்டுமே கடன் வாங்க வேண்டும் என்ற உண்மை வெளிப்படையானது. எச்சரிக்கையாக நான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஃ ஒரு சமயம் பெரியாரும் அன்னை மணியம்மையாரும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அன்று அம்மாவுக்கு பிறந்த நாள். எங்கள் அம்மா (கண்ணம்மாள்)வுக்கு எனக்கு மட்டும் ஞாபகத்தோடு தெரியும். மதியம் பிரியாணி மற்ற வகை உணவு விருந்து மகிழ்ச்சியாக நடந்து முடிந்து உடன் எங்கள் அம்மா, அன்னை மணியம்மையாருக்கு கருப்புப் பட்டுப் புடவையும் ஜாக்கெட்டும் கொடுத்ததுதான் தாமதம் ஓ வென்று அம்மாவைப் பிடித்துக் கொண்டு அழுதார்கள். அவர்கள் என் அம்மாகூட இதுமாதிரி என்னை பெருமைப்படுத்தியது இல்லை என்றார்கள். இதையெல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த பெரியார், நான் என்ன கவனிக்கப்படாதவனா என்றார். எங்கள் அம்மா, நீங்கள் இப்படி கூறுவீர்கள் என்று வஞ்சகம் இல்லாமல் உங்களுக்கும் கைலியும், சர்ட்டும் கொடுக்கிறேன் என்று கொடுத்தார்கள். அய்யா சொன்னார்: நீ என் தங்கச்சி கண்ணுதான் (கண்ணு என்றுதான் கூப்பிடுவார்) (தான் ஆட, தன் சதை ஆடும் என்றது உண்மை).
பெரியார், எங்கள் வீட்டிற்கு வரும்போது, என் மக்கள் வாங்க தாத்தா என்று அன்போடு சொல்லுவார்கள். உடனே ஒவ்வாருவர் பெயரையும் சொல்லுவேன். ஒரு சமயம், பெயரை சொல்ல வேண்டாம். எத்தனை குழந்தை என்று சொல்லு என்பார். நான் இதுதான் என் கடைசி குழந்தை என்றேன். உடனே எப்போ உனக்கு புத்தி வந்தது என்றாரே! சுளீர் என்று என் மனதில் பட்டது. நாம் செய்த மாபெரும் தவறுதான். ஒரு விஷயத்தை புத்தியில் படுமாறு எவ்வளவு லாவகமாக கூறும் பண்பு இருக்கிறது. அவர்தான் பெரியார்.
ஈரோடு
எஸ்.ஆர்.சாமி
தந்தை
பெரியார் 117ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment