பெரியாரின் நன்றி உணர்வு



அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, திருப்பத்தூரில் (வடஆர்க்காடு) அய்யா பெரியார் - அண்ணா இருவரும் கலந்துகொண்ட நகராட்சி நூற்றாண்டு விழா; அப்போது நகர் மன்றத் தலைவர் திரு.சி.கே.சின்னராசு அவர்கள். அந்த விழா முடிந்து அய்யா அவர்கள் தமது வேனில் சென்னைக்கு வர, இரவே திரும்பிக் கொண்டிருந்தார்கள். அன்னை மணியம்மையாரும், புலவர் கோ.இமயவரம்பனும் வேனில் அய்யாவுடன் வந்தனர். ஆம்பூர் அருகில் (என்று நினைக்கிறேன்) அய்யா வேன் பழுதடைந்து விட்டது; அதைச் சரிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அய்யா, அம்மா இருவரும் வண்டியில் உறக்கத்துடன் இருந்தனர்.

நடிப்பிசைப் புலவர் திரு.கே.ஆர். இராமசாமி அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் (அவர் பெரிதும் அண்ணா அவர்களுடன் எப்போதும் உடன் பயணம் புரிபவர் நண்பர் சி.வி.இராஜகோபால் போல!) கே.ஆர். இராமசாமி கார் வந்து கொண்டிருக்கும்போது, அய்யாவின் வேன் நடுச்சாலையில் நிற்பதைக் கண்டு பதறி, அய்யாவை வற்புறுத்தி உடனே தமது காரில் அய்யாவையும், அம்மாவையும் ஏற்றி வந்து பெரியார் திடலுக்கோ அல்லது எனது இல்லத்திற்கோ (சிற்சில நேரங்களில் எனது இல்லத்திலும் தங்குவார்) வந்துவிட்டுச் சென்றார் மகிழ்ச்சியோடு!
அய்யா எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை! அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? அய்யா பயணம் செய்து சென்னை வந்த பிறகு, மறுநாள் என்னிடம் கேட்டார்: கே.ஆர்.ஆர். வீடு எங்கே உள்ளது? அவருக்கு நேரில் சென்று நான் நன்றி கூறித் திரும்ப வேண்டும். உடனே விசாரியுங்கள் என்றார். அப்போது அவர்கள் அடையாறு காந்தி நகர் 3ஆவது முதன்மைச் சாலையில் ஒரு வீட்டில் குடியிருந்தார். அய்யா வருகிறார் என்று சொன்னவுடன், கே.ஆர்.ஆர். பதறி விட்டார். வேண்டாமே, இதற்காகவா அய்யா வருவது. நீங்க சொல்லுங்க... என்றார். அதெல்லாம் எங்களால் முடியாது; அய்யா முடிவு செய்துவிட்டால், அதை ஏற்பதும், செயல்படுத்துவதும்தானே எங்கள் வேலை என்று கூறினேன். அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் மிக்க மகிழ்ச்சி ஒருபுறம்! திருமதி கே.ஆர்.ஆர். கல்யாணி அவர்களுக்கு அய்யாவை நன்கு தெரியும். ஈரோட்டில் நாடக சபை நடந்தபோது நடித்தவர். அய்யாவிடம் அளவற்ற பாசமும், பக்தியும் கொண்ட பண்பாளர் அவர்.

அவரும் அன்பு பொங்க வரவேற்றுப் பல பழைய நிகழ்வுகள் பற்றியெல்லாம் பேசினார். நடிப்பிசைப் புலவருக்கே ஏகப்பட்ட மகிழ்ச்சி, உற்சாகம்!
பெரியாரின் நன்றி உணர்வு எவ்வளவு சிறப்பானது பார்த்தீர்களா?

இதைவிட நமக்கு நல்ல வாழ்க்கைப் படிப்பினைகள் வேறு வேண்டுமா?

- கி.வீரமணி நூல்: வாழ்வியல் சிந்தனைகள், தொகுதி-2


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை