பெரியாரின் பெருமை




திரு.வி..வின் வாழ்க்கை முடிவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், அவர் படுக்கையில் இருந்தபோது அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். சம்பந்தா! என்னுடைய வாழ்வு முடிந்த பிறகு எனக்குக் கொள்ளி வைக்கும் பணியை உனக்கு விட்டுவிடுகிறேன். அனைவரிடமும் கூறிவிட்டேன்; அதை நிறைவேற்றிவிடு என்றார். அதன் பிறகு சில நாள்கள் கழித்து அவரைப் பார்க்கச் சென்ற மு. வரதராசனிடம் என்னிடம் கூறியதையே எடுத்துக் கூறி நீ ஊரிலிருந்தால் நீயும் அவனுடன் சேர்ந்து கொள்ளி வைக்கும் பணியைச் செய்க என்று கூறினாராம்.

ஒரு வகையாக தமிழ்த் தென்றலின் மூச்சு நின்றது. பெருங்கூட்டம் கூடிற்று. மரியாதை செய்யவேண்டும் என்று சொல்லித் தொழிற்சங்கத்தார் அவருடைய பூதவுடலைப் பெரம்பூருக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். போகிற போக்கில் அன்று மதியம் ஜெமினிவரை தாங்கள் உடலைக் கொண்டு வருவதாகவும், அதன்பிறகு உடலைப் பெற்று மேற்கொண்டு காரியங்களைச் செய்யலாம் என்றும் கூறிச் சென்றனர். எனவே, மதியத்தில் திரு.வி..வின் சகோதரர் உலகநாத முதலியாரின் இரண்டு மருமகன்களும், மு.வரதராசன், நான் ஆகியோரும் ஜெமினியில் நின்று கொண்டிருந்தோம்.

பெரியார் .வெ.ரா. அவர்களும், மிகப்பெரிய அவரது தொண்டர் படையணியும் நின்று கொண்டிருந்தது. வண்டியில் சடலம் வந்தது. எல்லோருமாகச் சேர்ந்து அய்.ஜி. அலுவலகத்தை அடுத்துள்ள சுடுகாட்டிற்கு வந்தோம். சிதையில் உடலும் வைக்கப்பட்டது. பெரியாரின் தொண்டர்கள் பத்துப் பேர் கொள்ளி வைப்பதற்குரிய சிறுசிறு பந்தங்களை வைத்துக் கொண்டு சுற்றி நின்றனர். பெரியார் அவர்களும் தடியை ஊன்றிக் கொண்டு நின்றார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கூடியிருந்த கூட்டம் முழுவதும் பெரியாரின் தொண்டர் கூட்டம். சைவப் பெருமக்கள் யாருமோ, தமிழ்ப் புலவர்கள் யாருமோ ஒருவர் இருவர் தவிர சுடுகாட்டிற்கு வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமலிருந்த என்னை, பெரியாரிடம் சென்று நாமிருவரும்தான் கொள்ளி வைக்கவேண்டும். இதுதான் அய்யாவின் விருப்பம் என்று சொல்லுமாறு வேண்டினார் மு. வரதராசன்.

எனவே, நானே பெரியாரிடம் சென்று, அய்யா! நானும், வரதராஜனும் கொள்ளி வைக்கவேண்டுமென்பதே சின்னய்யாவின் விருப்பம். அப்படித்தான் மரிப்பதற்குச் சில நாள்களுக்கு முன்னர் என்னிடம் கூறினார் என்று கூறி நிறுத்தினேன்.
இப்பொழுது பெரியாரின் பெருமை வெளிப்பட்டு நின்றது.
அப்படியா சொன்னார் கலியாணசுந்தரம்! அப்படீன்னா நீங்களே செய்யுங்க என்று சொல்லிவிட்டு, தீப்பந்தங்களோடு சிதையைச் சுற்றி நின்ற தம் தோழர்களை மீண்டு வந்துவிடுமாறு பணித்தார்.
ஆனால், அவர்களோ வருவதாக இல்லை.

உடனே பெரியாருக்குச் சினம் வந்தது. சொல்றனே காதில் விழலை, தீப்பந்தங்களை ஓரமா வெச்சிட்டு வாங்கப்பா என்று கர்ஜித்தார்.
பக்கத்தில் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து, தம்பி! நீங்க எப்படிச் செய்வீங்க இதை என்று கேட்டார்.

அய்யா! சின்னய்யா அவர்களுக்கு மிகவும் பிடித்த திருவாசகத்தில், சிவபுராணத்தைச் சொல்லிச் சிதைக்குத் தீ மூட்டுவோம் என்றேன்.
அப்படியே செய்யுங்க தம்பி என்று சொல்லிய பெரியார், அவ்விடத்தை விட்டுப் புறப்படாமல், அங்கேயே நின்றார்.
நானும், வரதராஜனும் தலைமாட்டில் அமர்ந்து சிவபுராணத்தைத் தொடங்கினோம். 17 வரிகள் பாடுகின்றவரையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பெரியார் ஆகிய அப்பெரியார், தம்முடைய அருமை நண்பருக்கு இறுதியாக ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தொண்டர் படை சூழப் புறப்பட்டுப் போய்விட்டார்.
தேசத் தொண்டு, தமிழ்த் தொண்டு, சைவ சமயத் தொண்டு ஆகியவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த அம்மகானின் இறுதி ஊர்வலத்தில் தேச பக்தித் தொண்டர்கள், தமிழ்ப் புலவர்கள், தம்மைச் சைவர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் யாரும் வரவில்லை. எதிர்க்கட்சியினர் என்று குறிக்கப் பெற்ற பெரியார் .வெ.ராவும், அவர்களுடைய தொண்டர்கள் நூற்றுக்கணக்கானவர்களும் இறுதிவரை நின்று இறுதி வணக்கம் செய்து போயினர். தமிழகம் தனக்கும், மொழிக்கும் இறுதிவரைத் தொண்டாற்றிய திரு.வி.. போன்ற பெருமக்களுக்கு எப்படி நன்றி பாராட்டுகிறது என்பதை அன்று கண்கூடாகக் காண முடிந்தது.

(.. ஞானசம்பந்தம் எழுதிய நான் கண்ட பெரியவர்கள் தமிழ்த்தென்றல் திரு.வி.., பக்கம் 131-133)

குறிப்பு: சைவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் திரு...ஞா. என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தகையவர்களே தந்தை பெரியார் அவர்களின் பெரும் பண்பின் முன் மலைத்து நிற்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
- பேராசிரியர் .. ஞானசம்பந்தம்

தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை