எல்லோரையும் மதித்தார்
பெரியவர்களை மட்டுமா பெரியார் மதித்தார்? இல்லை, எல்லோரையும் மதித்தார். அரும்புமீசை மாணவர் நெருங்கினாலும் எழுந்துநின்று வரவேற்பதும், போகும்போது மீண்டும் எழுந்துநின்று வழியனுப்புவதுமான பெருந்தன்மை பெரியாரின் தனிச் சிறப்பாகும்.
வைதீகர்கள், வெல்லக்கட்டியைக் கிள்ளி, வெல்லப் பிள்ளையாரைச் செய்து வைப்பார்கள். மீண்டும் கொஞ்சம் வெல்லத்தைக் கிள்ளி, அதே வெல்லப் பிள்ளையாருக்குப் படைப்பார்கள். அதேபோல, தந்தை பெரியார் எங்கெங்கோ இருந்த, எண்ணற்றவர்களை தன்மானமுள்ள, பகுத்தறிவைப் பயன்படுத்தும் தொண்டு செய்யும் மனிதர்களாக்கினார். அவர்களுக்குப் பெருமை செய்து மகிழ்ந்தார், மானுடத்தின் பக்தராகிய தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி.
செட்டி நாட்டரசர், டாக்டர் எம்.ஏ. முத்தையாவிற்கு மணிவிழா, வைதீக முறைப்படி 2.8.1965 அன்று செட்டிநாட்டில் சிறப்பான விழா எடுத்தார்கள். பல்லாயிரவர் கண்டு மகிழ்ந்தார்கள். அதில் நானும் ஒருவன். சில நாள்களுக்குப்பின் 11.8.1965 அன்று மாலை மணிவிழாவையொட்டி, சென்னை செட்டிநாடு மாளிகையில், தேநீர் விருந்து நடந்தது. எத்தனை ஆயிரம் பேர்கள் உண்டு மகிழ்ந்தார்கள் என்ற கணக்கு எளிதில் பிடிபட்டிருக்காது. அவ்வளவு பெருங் கூட்டம்.
தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியும் அவர் துணைவியார் மணியம்மையும் தொடக்கத்திலேயே - அய்ந்தரை மணிக்கே வந்து கலந்து கொண்டார்கள்.
என் மனைவி காந்தம்மாவும் நானும் ஆறு மணிபோல் காரில் செட்டிநாடு மாளிகைக்குள் நுழைந்தோம். உள்ளே நுழையும் நெடுவழியில், பாதியில் சக்கர வண்டியில் தந்தை பெரியார் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். அருகில் திருமதி மணி அம்மையாரும் சில தோழர்களும் இருந்தார்கள். பெரியாரின் வேனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள்.
பெரியாரைக் கண்டதும் என் காரை சட்டென்று நிறுத்தச் சொன்னேன். அவருக்கு அய்ந்தாறு மீட்டர் தொலைவில், நான் காரைவிட்டு இறங்கி நடந்தேன். இல்லை. பசுவைக் கண்ட கன்றைப் போல் ஓடினேன். அதற்குள், மணியம்மையார், பெரியார் இடம் காதில் நம்ம டைரெக்டர் வருகிறார் என்று சொன்னார்கள். அதுவும் என் காதில் வீழ்ந்தது. அடுத்த நொடி, பெரியார் தடியை ஊன்றிக் கொண்டு, எழுந்து நின்றார். நான் பதறிப் போனேன். வீழ்ந்தடித்துச் சென்றேன்.
அய்யா! நான் உங்கப் பையன். என்னைக் கண்டு தாங்கள் நிற்கலாமா? என்று பதைப்போடு உருகினேன்.
சுந்தரவடிவேலு நம்ம பிள்ளை, டைரெக்டருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமென்று மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாமா? என்று பதில் கூறினார். கையைப் பிடித்துக் குலுக்கினார். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. மெல்ல, பெரியாரை நாற்காலியில் அமரச் செய்தோம். வேன் வந்ததும் பெரியாரை அனுப்பி வைத்தோம்.
சட்டம் ஒழுங்கை காப்பதிலும் முன்நின்றார்
வாழ்நாள் முழுவதும் புரட்சிச் சிந்தனைகளிலும் கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டிருந்த பெரியார் சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் முன்நின்றார்.
அறிஞர் அண்ணா மறையவும் ஒன்றை நினைக்கின் அது ஒழிந்து மற்றொன்று ஆகும் என்னும் நிலை உருவாயிற்று.
அய்ந்தாண்டில் தமிழ்நாட்டு முதியோர் அனைவரையும் எழுத்தறிவு உடையவர்களாக்கிவிட வேண்டும்; மாணவர்களும் ஆசிரியர்களும் தீவிர அரசியலில் ஈடுபடக் கூடாது. இவ்விரு கொள்கைக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இவ்விரண்டு பணிகளுக்காக, பெரியார் விரும்பியபடி, முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை புதுதில்லி, இந்தியக் கல்வி அமைச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த என்னை, தமிழ்நாட்டு அரசின் முதன்மைக் கல்வி ஆலோசகனாக அழைத்து வந்தார். அவர் மறையவும் நான் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வேண்டிய நிலை வந்தது. தந்தை பெரியாரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.
நான் துணைவேந்தராக இருந்தபோது, ஈரோடு சிக்கைய்யா கல்லூரியில் சங்கடமான நிலையொன்று உருவாயிற்று. அது என்ன?
தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆறு, ஏழு துணைப் பேராசிரியர்களின் பணி, அடுத்த கல்வியாண்டில் தேவையில்லை என்று அவர்களுக்கு வேலை நீக்க அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் கொதித்தார்கள். பல்கலைக் கழகத்திற்கு எழுதினார்கள். வேலை நிறுத்தம் தொடங்க நேரிடும் என்பதும் புலனாயிற்று.
வேலை நீக்க அறிவிப்பு சரியா தப்பா என்று பல்கலைக் கழகம் முடிவு சொல்ல வேண்டும். அதற்குமுன், கல்லூரி நிர்வாகத்தின் வாதத்தைக் கேட்க வேண்டும். இது விதிமுறை.
கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் தந்தை பெரியார்; தாளாளர் திரு. கோவிந்தராசன், தன்னை எந்த நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கும் எதிர்பார்க்கக் கூடாது; தன்னிடம் நன்கொடை எதிர்பார்க்கக் கூடாது என்னும் இரு நிபந்தனைகளின் பேரில், தந்தை பெரியார் குழுத் தலைவராக இருந்தார். ஒரு குழுக் கூட்டத்திற்கும் பெரியார் சென்றதில்லை. பெரியாருக்கும் மேற்கூறிய வேலை நீக்கத்திற்கும் தொடர்பு இல்லை என்பது எனக்குத் தெரியும். மேலும், எல்லாக் கடிதப் போக்குவரத்துகளும் தாளாளரோடுதான் என்பது விதிமுறை. இருப்பினும், பெரியாருக்கு நியாயத்தைப் புரிய வைப்பது எளிது என்பது என் அனுபவம். எனவே, திருச்சியில் தங்கியிருந்த தந்தை பெரியாரிடம் தொலைபேசியில் பேசினேன்.
ஈரோடு சிக்கைய்யா கல்லூரியில் ஆறேழு துணைப் பேராசிரியர்களுக்கு வேலை நீக்க அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். அது பெரிய சிக்கலை எழுப்பியுள்ளது. நான், நான்கு நாட்களில் திருச்சி வரவேண்டும். அப்போது தங்களோடு நேரில் பேசுகிறேன். அதுவரை தாளாளர் மேற்கொண்டு ஒன்றும் செய்ய வேண்டாமென்று சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
வைஸ்சான்சலர் அய்யா என்னைத்தேடி வரவேண்டாம். நானே தங்களைப் பார்க்க வருகிறேன். அதற்குள் கோவிந்தராசனோடு பேசிவிட்டு, தகவல்களோடு வருகிறேன் என்றார் பெரியார்.
தகவல்களைச் சேகரித்துக் கொள்ளுங்கள். நான் வரும்போது உதவியாக இருக்கும். தயவுசெய்து தாங்கள் வரவேண்டாம் என்று வேண்டினேன். பெரியார் திட்ட வட்டமான பதில் சொல்லவில்லை.
மூன்றாம்நாள் மாலை, அய்ந்தரை மணியளவில், விடுதலை அலுவலக நிர்வாகி, திரு. நா.ச. சம்பந்தம் என்னோடு தொலைபேசியில் பேசினார்.
அய்யா திருச்சியிலிருந்து இப்போதுதான் வந்துள்ளார்கள். தாங்கள் வீட்டில் இருக்கிறீர்களாவென்று விசாரிக்கச் சொன்னார் என்றார்.
நான் இங்கே வருவதற்காக அப்படிக் கேட்டிருக்கலாம். தயவு செய்து, பெரியாரிடம் தகவல் கொடுக்காமல் பத்துப் பன்னிரெண்டு மணித் துளிகள் தப்பிவிடுங்கள். நான் அதற்குள் அங்கு வந்து விடுகிறேன் என்றேன்.
திரு. சம்பந்தம், மன்னிக்கணும். அய்யா கோபப்படுவார் என்றார். நான் அடம் பிடித்தேன். அவரு எனக்குக் கட்டுப்பட இசைந்தார்.
நான் விரைந்து சென்றேன். பெரியார் அறை திறந்து இருந்தது. கட்டிலில் அய்யா உட்கார்ந்திருந்தார். நான் சட்டென்று உள்ளே நுழைந்துவிட்டேன்.
என்னைக் கண்ட பெரியார் எழுந்தபடியே, கைகூப்பி வணங்கிக் கொண்டே, சம்பந்தம், சம்பந்தம் என்று உரத்துக் கூப்பிட்டார்.
சம்பந்தம் மெதுவாக, உள்ளே காலடி எடுத்து வைத்தார். அவ்வளவுதான். பெரியார் அவரிடம்,
உனக்கு இவ்வளவுக்கு ஆய்விட்டதா? என்.டி.எஸ். அய்யா ஊரில் இருக்கிறாரா என்று கண்டுபிடி என்றால், நேராக அவரிடமா தெரிவிப்பது? அவரை இங்கேயா வரவழைப்பது. இன்னும் சில சூடான சொற்களைக் (கொச்சை இல்லை) கொட்டினார்.
நான் தலையிட்டேன். சம்பந்தம்பேரில் குற்றமில்லை. நான் வெளியே புறப்படும் நேரம் மணியடித்தது. நானே எடுத்து விட்டேன். என் வற்புறுத்தலினால் அவர் இருதலைக் கொள்ளி எறும்பானார் என்று விளக்கினேன். எனக்காகக் கோபத்தை அடக்கிக் கொண்டார். அப்புறம்?
Comments
Post a Comment