அய்யாவும் ஆச்சாரியாரும் பங்கேற்ற சுயமரியாதைத் திருமணம்


குற்றாலத்தில் 31.5.1936ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை தோழர் எஸ்.டி.சண்முகம் (பட்டணம் பொடி) கம்பெனி புரோப்ரைட்டர் தோழர் எஸ்.தங்கவேலு அவர்களுக்கும் மதுரை அய்யம்பாளையம் வியாபாரி தோழர் கே.எஸ். இராமசாமி பிள்ளை அவர்கள் குமாரத்தி பூரணத்தம்மாளுக்கும் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் பங்களாவில் தோழர் .வெ.ராமசாமி அவர்கள் தலைமையில் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் நடந்தது.
அதுசமயம் தோழர்கள் .வெ.ராமசாமி, சி.இராஜகோபாலாச் சாரியார், டி.கே.சிதம்பரநாத முதலியார் பி..பி.எல்., பப்ளிக் பிராசிக்கியூட்டர் பி.ஆவுடையப்பபிள்ளை, .பொன்னம்பலனார், .வேணுகோபால், பி.பிச்சையா, கே.சி.ராமசாமி (கொல்லம்), .கே.கே.குற்றாலலிங்க முதலியார், சு.ரா.அருணாசலம் பிள்ளை, .எல்.ஆலியாராவுத்தர், கே.சங்கரலிங்கம் பிள்ளை, எஸ்.சண்முகசுந்தரம் பிள்ளை முதலியவர்கள் வந்திருந்தார்கள்.
மணமக்கள் சபைக்கு வந்து ஆசனத்தில் அமர்ந்ததும் மணமகள் தந்தையார் எழுந்து தோழர் .வெ.ரா.வை தலைமை வகித்துத் திருமணத்தை நடத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
தோழர் .வெ.ரா. தலைமை வகித்து முகவுரையாக, தான் இங்கு இந்த ஸ்தானம் வகித்தது புரோகித முறையில் திருமணம் நடத்திக் கொடுக்க அல்லவென்றும் புதிய முறையானதால் ஜனங்களுக்கு திருப்தி ஏற்பட ஏதாவது நான்கு வார்த்தைகள் பேசவும், கொஞ்ச நேரமாவது இதில் கவனம் செலுத்தச் செய்யவும்தானே ஒழிய வேறில்லை என்றும் சொல்லி மணமக்களை தங்கள் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கெண்டார். மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களைச் சொல்லி மாலை மாற்றிக் கொண்டதன் மூலம் திருமண ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. பின் மணமகன் தாலியையும் கட்டினார்.
பிறகு தலைவர் தோழர் சி.இராஜகோபாலாச்சாரியாரை இத்திருமணத்தைப் பற்றி கொஞ்சம் பேசுவதன் மூலம் வாழ்த்துக் கூறும்படியாகக் கேட்டுக் கொண்டார்.
தோழர் சி.இராஜகோபாலாச்சாரியார் பேசியதன் சுருக்கம் வருமாறு:-
நண்பர்களே! இந்தக் கல்யாணத்தைப் பார்க்க எனக்கு மிகவும் திருப்தி ஏற்படுகிறது. நல்ல முறையில் இந்தக் கல்யாணம் நடத்தப்பட்டது. எனது நண்பர் இராமசாமி அவர்கள், தான் இதற்குப் புரோகிதர் அல்ல என்று சொன்னார். அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர் புரோகிதர்தான். நூறு தடவை சொல்லுவேன். ஆனால் இந்தப் புரோகிதம் மேலான புரோகிதமாகும். அவர் இதை விடாமல் மக்கள் க்ஷேமத்துக்காக இன்னமும் வெகு நாளைக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ராமசாமி இதனால் தேசத்துக்கு நன்மை செய்து வருகிறார். கல்யாணத்தில் அநேக செலவு, கஷ்டம் இருந்து வருகின்றன. அது மாற வேண்டும். கல்யாணம் என்பது வெகுநாளைக்கு இருக்கவேண்டிய வாழ்க்கை சம்பந்தமானதால் அது - கடையில் சாமான் வாங்கியது போல இல்லாமல் எப்போதும் ஞாபகம் இருக்கும்படியாகவும் அந்த செய்கையிடம் மதிப்பு இருக்கும்படியாகவும் கல்யாணம் நடத்தப்படவேண்டும். கல்யாணத்தில் தம்பதிகள் சேமமும் சந்தோஷமும் முக்கியமானவை. அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். கல்யாணம் அடிக்கடி மாறக்கூடியதாய் இருக்கக் கூடாது. அப்படியானால் குடும்பம் நடத்துவதில் கஷ்டம் அதிகரிக்கும். ராமசாமி அவர்கள் என்னை ஆசீர்வதிக்கும்படி சொன்னார். அவர் எப்படியோ தவறி சொல்லிவிட்டார். நான் ஆசீர்வாதத்துக்குத் தகுதியற்றவன். கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். ஆனாலும் அவர் சொன்னதற்காக நான் மணமக்களை சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் நீண்ட நாள் வாழ வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.
மணமகன் பெண்ணுக்கு சம உரிமை கொடுக்கவேண்டும். கல்யாணங்கள் எல்லாம் சீர்திருத்த முறையில் நடக்க வேண்டும். இம்மாதிரி எல்லோரும் செய்ய முன்வரவேண்டும் என்று பேசினார்.
பின் தலைமை வகித்த தோழர் .வெ.ராமசாமி தன் முடிவுரையாக பேசியதாவது:-
எனது மதிப்பிற்குரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும், தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது.
இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும் இன்றைய திருமணத்தில் நான் கலந்திருப்பதை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப்பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக் கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக் கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக்கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.
எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத்திருமணத்திற்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இதுதான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவுதான் வேலை என்றும் இருந்தால் நான்அந்த புரோகிதப் பட்டத்தை ஏற்க தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவும் மாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும் அப்படி இருந்தும் அதற்கு செல்வாக்கு இருப்பதாலும் தான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கிறேன். மற்றபடி எனக்கு வேறு எண்ணம் இல்லை. இன்று நடந்த இந்த காரியங்கள்கூட இல்லாமல் திருமணம் என்பவை நடக்க வேண்டும் என்பது எனது அவா. அப்படியே அநேக இடங்களில் நடக்கின்றன. ஆணும் பெண்ணும் ரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போய் வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லி கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் போதும். அந்த வெறும் கையெழுத்து திருமணத்துக்கு இதைவிட அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. புருஷன் பல பெண்ஜாதிகளைக் கட்டிக் கொள்ள முடியாது. ஆண் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் சரிபங்கு உண்டு. நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஆணோ பெண்ணோ பிரிந்து இஷ்டமானால் வேறு கல்யாணமும் செய்து கொள்ளலாம். புரோகித கூலி, தட்சணை, தாம்பூலம், சாப்பாடு, ஆடல், பாடல், ஆடம்பரம் ஆகிய செலவும் தொல்லையும் கிடையாது. இன்று கூட நாம் இங்குக் கூடி இந்தக் காரியங்களைச் செய்வது இந்த வாழ்க்கை ஒப்பந்தத்துக்கு ஒரு விளம்பரத்துக்கு ஆகவே ஒழிய மற்றபடி இப்படிச் செய்தால்தான் கல்யாணம் ஆகும் என்பதற்கு ஆக அல்ல. ஆகையால் வர வர இவைகள்கூட அவசியமில்லாத மாதிரி செய்து கொள்ள வேண்டும். சட்டங்களிலும் சீர்திருத்தம் வேண்டும்.
மற்றும் ஆச்சாரியார் அவர்கள், நான் அவர்களை திருமணத்தை பாராட்டி வாழ்த்தும்படி கேட்டதை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டதாகவும், அது கடவுளுக்குத்தான் உரிமை என்றும் சொன்னார். நான் கேட்டுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆச்சாரியார் பாராட்டுதலக்கும் வாழ்த்துதலுக்கும் மதிப்பு உண்டென்று இப்போதும் கருதுகிறேன்.
இத்திருமண முறையை பெரியார் ஆச்சாரியார் ஆதரித்து விட்டதால் எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டுவிட்டது.
இத்திருமண முறைக்கு இன்று ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டுவிட்டதென்றும் அது இம்முறை பெருக ஒரு நல்ல ஆதரவு என்றும் சொல்லுவேன்.
இது நமக்கு ஒரு லாபகரமான காரியம் என்றே கருதுகிறேன். இதற்கு ஆக அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டவனேயாவேன்.
நிற்க ஆசீர்வாதம் செய்யச் சொன்னேன் என்பதிலும் எனக்கு ஆட்சேபணையில்லை.
ஆனால் அதற்கு தான் தகுதியில்லை என்றும் கடவுள்தான் செய்யவேண்டும் என்று சொன்னதற்கு நான் சொல்லக்கூடிய சமாதானம் என்னவென்றால் ஆச்சாரியார் அவர்கள் ஆசீர்வாதம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் என்றே சொல்லுகிறேன். அவர் போன்றவர்கள் இம் மணமக்கள் வாழ்க்கை நலத்தில் ஆசை கொண்டு ஆசி கூறிவிட்டால் அந்த ஆசி வீண் ஆசியாகவோ, கடவுள் ஆசியாகவோ, தட்சணைக்கு ஆக செய்யவும் ஆசியாகவோ ஆகிவிடுமா?
உதாரணமாக அரசியல் உலகில் ஒரு வைசிராய் ஒரு ஆசாமியைப் பார்த்து நீ முன்னேற்றமடைய தகுதி உடையவன், நீ முன்னேற்றமடைந்து பெரிய பதவிகளுக்கு வரவேண்டுமென்று ஆசைப்படுகின்றேன் என்று ஆசி கூறுவாரேயானால் அந்த ஆளுக்கு அந்த ஆசி பயன்படுமா, படாதா என்று யோசித்துப் பாருங்கள். வைசிராயானவர் அந்த ஆசாமிக்கு ஆபத்து வரும் காலத்தில் எல்லாம் தன்னால் கூடியதைச் செய்து தன் வாக்கு நிறைவேற முயற்சிப்பாரா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். அதுபோல் ஆச்சாரியார் அவர்களால் ஆசி பெற்றுவிட்டால் மணமக்கள் வாழ்க்கையில் ஆச்சாரியார் அவர்கள் கண்காணிப்பும் கவலையும் இருந்துதான் தீரும். அதற்கு ஆகத்தான் தகுந்தவர்களிடம் ஆசி பெறவேண்டும் என்பது.
மற்றபடி கடவுள் ஆசி என்றால் அரை அணா வாங்கிக் கொண்டு தெருவில் போகின்றவன் யாதொரு பொறுப்பும் இல்லாமல் மணமக்கள் 16 மக்கள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று சொல்லி விடுவார்கள்.
அதனால் என்ன ஆகிவிடும்? 10, 12 குழந்தைகள் பெற்று அவைகள் பசியால்வாடி அழுதால் ஆசீர்வாதக்காரன் பக்கத்து வீட்டில் இருந்தால் என்ன சொல்லுவான்? தன் ஆசீர்வாதத்தால் ஏற்பட்டதென்றோ, தனது பிரார்த்தனையில் கடவுள் கொடுத்தார் என்றோ எண்ணி உதவி செய்வானா? இதென்னடா எழவு பன்றி குட்டி போட்ட மாதிரி 10, 12 உருப்படிகள் பெற்று பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு நமக்கு வீண் தொந்தரவு கொடுக்கிறார். தூக்கமில்லை என்று வெறுப்புடன் இழிந்துரைப்பான்.
ஆகையால் யாரும் ஆசீர்வாதம் செய்யலாம் என்பதும், கடவுள்மீது பழி போடலாம் என்பதும் நியாயமாகிவிட்டது. மணமக்களுக்கு ஆச்சாரியார் அவர்களது ஆசீர்வாதத்தை உண்மையாகவே பெருமையாய் கருதுகிறேன்.
ஆசீர்வாதம் என்றாலும், வாழ்த்து என்றாலும் ஆசி என்றாலும், ஆசைப்படுகிறேன் என்றாலும் கருத்து ஒன்றுதான், தனது ஆசையையும் நல்ல எண்ணத்தையும் தெரிவிப்பதேயாகும்.
தோழர் சிதம்பரநாத முதலியார் அவர்களும் இத்திருமணத்தை பாராட்டியதும் இங்கு விஜயம் செய்ததும் பாராட்டுக்குரியதேயாகும்.
கடைசியாக இவ்வளவு சுருக்கமுறையில் திருமணம் நடத்திக் கொள்ள முற்பட்ட மணமக்களுக்கும் அதை ஒப்புக்கொண்ட மணமக்கள் பெற்றோர்களுக்கும் இங்கு விஜயம் செய்த பெரியோர்களுக்கும் நன்றி கூறி அமருகிறேன் என்று பேசினார்.
பிறகு தோழர் வேணுகோபால் தலைவருக்கும் வந்திருந்தவர்களுக்கும் நன்றி கூறும்போது வடதுருவம், தென் துருவம் ஒன்று பட்டதுபோல் இரு மாபெரும் தலைவர்கள் இன்று ஒன்றுகூடி இத்திருமணத்தில் ஒருமனப்பட்டு நடத்திக் கொடுத்தது, என்றும் நிலைத்திருக்கக்கூடிய கவுரமென்றும், இது சாதாரண நிலையில் கிடைக்கக்கூடிய தல்லவென்றும் புகழ்ந்து கூறி நன்றி செலுத்தினார்.
- குடிஅரசு, 7.6.1936

தந்தை பெரியார் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் விடுதலை

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை