நம்ம லட்சியத்துல வெற்றி காண முடியும்
திருச்சியில் ஒரு சமயம் பெரியாரை பேட்டி காணச் சென்றபோது அவர், வாங்கய்யா! என்று வாய் நிறையச் சொல்லி வரவேற்ற பண்பு கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். பழுத்த பழம் போன்ற மேனி, உடல் தளர்ந்து போன வயோதிகம். அழுத்தம் திருத்தமான அவருடைய பேச்சில் உணர்ச்சி கொப்பளித்தது.
பேட்டி நடந்து கொண்டிருந்தபோது கரூரிலிருந்து கட்சித் தொண்டர்கள் சிலர் கும்பலாக அய்யாவைப் பார்க்க வந்திருந்தார்கள். எங்க வந்தீங்க? என்று விசாரித்தார் பெரியார். அடுத்த புதன்கிழமை கரூர்ல மீட்டிங். நீங்க வந்து பேசணும் அய்யா. ஏழரை மணிக்கு வச்சுக்குங்க. வந்துடறேன் அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்கள். இந்த வயசில் மீட்டிங் அது இதுன்னு இப்படி அலையறீங்களே, முடியுதா? என்று கேட்டேன் நான்.
முடியுதாவது! ஒரு நாளைக்கு ரெண்டு மூணு கூட்டத்துலகூட பேசறதுதான். முதல் நாள் நான் மீட்டிங் பேசப் போனப்ப எவ்வளவு உற்சாகமாப் போனேனோ, அதே உற்சாகத்தோட இன்றைக்கும் போய்க்கிட்டிருக்கேன். உழைக்கணும், நல்லா உழைக்கணும், அப்படி பிடிவாதமா பிரசாரம் செஞ்சாத்தான் நம்ம லட்சியத்துல வெற்றி காண முடியும்! என்றார்.
இந்த வார்த்தைகள் ஆணி அடித்த மாதிரி என் உள்ளத்தில் பதிந்து விட்டன. அன்று பெரியார் அவர்களிடம் கற்றுக் கொண்ட அந்தப் பாடத்தை நான் இன்றுவரை என் வாழ்க்கையில் மறக்காமல் கடைப்பிடித்து வருகிறேன்.
- சாவி (குங்குமம் 14-20 அக்டோபர் 1994)
Comments
Post a Comment