நான் கண்ட பெரியார்
வியப்பு
1931இல் நானும் பெரியாரும் பல ஊர்களுக்குச் சென்று ஈரோடு சந்திப்பு நிலையத்திற்கு வந்தோம். நான் திருச்சி வண்டி ஏறியதும், வழியனுப்பிய அவரைப் பார்த்து நீங்கள் சுகமாக வீட்டுக்குப் போகிறீர்கள். நான் வீடு போய்ச்சேர இன்னும் பல மணி நேரமாகும் என்று கவலையோடு சொன்னேன். பெரியார் அதற்கு, அய்ந்து நாட்களாக ஒரு கவலையும் இல்லாது உங்களோடு சுற்றுப்பயணம் செய்தேன். இப்போது வீடு போய்ச் சேருவதுதான் எனக்குக் கவலை என்றார். ஏன் அப்படி? என்றேன். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் செலவுக்குப் பணம் கேட்பார்கள். குடிஅரசு பத்திரிகை ஆபீஸில் பேப்பர்காரன் பணத்திற்கு காத்திருப்பான். கம்பாஸிட்டர்களும், வேலையாட்களும் பணம், பணம் என்று என்னை அரிப்பார்கள். என்ன செய்வது? என்று கவலையோடு சொல்லிச் சென்றார்.
எனக்கு அப்போது வீடுபோய்ச் சேருவது மகிழ்ச்சியாகவும், வெளியில் அலைவது துன்பமாகவும் இருந்தது. ஆனால், பெரியாருக்கு வெளி அலைச்சல் இன்பமாகவும், வீடு போய்ச் சேருவது துன்பமாகவும் இருந்தது, எனக்கு வியப்பைத் தந்தது.
துணிவு
1932இல் பெரியாருடன் திருநெல்வேலி மாவட்டங்களில் சில பொதுக் கூட்டங்களில் பேசிவிட்டு பட்டிவீரன்பட்டி டபிள்யு.பி.எஸ். வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தோம். வழிநெடுகிலும் பெரியாருக்கு வயிற்றுவலி. திரு டபிள்யு.பி.எஸ். வீட்டுக்குள் நுழைந்ததும் எங்கள் இருவருக்கும் விருந்து. வலி மிகுதியால் வழியில் டாக்டரிடம் காண்பித்தபோது, மருந்து கொடுத்த டாக்டரோ அசைவ உணவை ஒரு வாரம் சாப்பிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். திரு.டபிள்யு.பி.எஸ். வீட்டிலோ எனக்கு வழக்கம்போல சைவ உணவும் பெரியாருக்கு அசைவ உணவும் காத்திருந்தது. வாளை மீன் பொறியலையும், வறுத்த கறியையும் சுவைத்து சுவைத்து உண்ட பெரியாரை நானும் தடுக்கவில்லை. விருந்து முடிந்து டபிள்யு.பி.எஸ். காரிலேயே ரயில் நிலையம் வந்தோம். வண்டி ஏறிய பின்னர் வலியும் வந்துவிட்டது. திண்டுக்கல் முதல் மணப்பாறை நெருங்கும் வரையில் அவர் பட்டபாடு சொல்ல முடியாத துன்பத்தை எனக்குத் தந்தது. நான் பெரியாரைப் பார்த்து மணப்பாறை வரை பொறுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் டாக்டரிடம் காண்பிப்போம் என்றேன். அவர் என்னிடம் கொஞ்சம் பொறுங்கள் சரியாகப் போய்விடும் என்று பதில் சொன்னார். எனக்கு வியப்பாக இருந்தது. வண்டி மணப்பாறை நெருங்க நெருங்க வலிமிகுதியால் அப்பா அம்மா என்று வாய் விட்டே அலறினார். மணப்பாறையும் வந்தது. வண்டி நின்றபின் இறங்குங்கள் சீக்கிரம் டாக்டரிடம் போவோம் என்று வலியுறுத்தினேன். அப்போது அவர் கொஞ்சம் சும்மா இருங்கள் சரியாய் போய்விடும் என்றார். வண்டியும் அதற்குள் புறப்பட்டு விட்டது. அவர் வலியைப் பொறுக்கும்வரை பொறுத்திருந்து முடியாமற் போகவே, வண்டி ஓடும்போதே ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாயில் விரலை விட்டு சாப்பிட்ட அனைத்தையும் வாந்தி எடுத்தார். பின்னர் வாயைக் கொப்பளித்துவிட்டு என் அருகில் உட்கார்ந்துக் கொண்டே, இப்பொழுது எல்லாம் சரியாய்ப் போயிற்று என்றார். என் பயமும் ஒருவாறு தெளிந்தது. டாக்டர் சொல்லியும்கூட அசைவ உணவை ஏன் சாப்பிட்டீர்கள்? என்று சிறிது கோபத்தோடு கேட்டேன். அதற்குப் பெரியார், வைத்தியர் அதை மட்டுமா சொன்னார்; புளியும் மிளகாயும்கூட சாப்பிட வேண்டாம் என்றார். இவைகளையெல்லாம் சாப்பிடாமல் நடைபிணமாக இருந்து எதற்காக உயிர்வாழ வேண்டும். சாவு வருவதானால் அது எப்போதும் வரட்டும். அதற்காகப் பயந்து நாம் நம் தேவையைக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னார்.
இத்தகைய துணிவை பெரியாரிடமின்றி வேற எவரிடமும் நாம் எதிர்பார்க்க முடியாது.
பொதுஜனம்
1935இல் பெரியாரின் இல்லத்தின் மாடியில் கூட்டத்தில் வசூலித்த காசுகளை நான் எண்ணிக் கொண்டிருக்க, பெரியார் ஏதோ எழுதிக்கொண்டு வேலையுடன் இருந்தார். திடீரென்று ஒருவர் ஓடிவந்து திரு.சி.ஆர். உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்று பெரியாரிடம் சொன்னார். உடனே பெரியார் தன் மேல் சால்வையை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஓடிப்போய் அவரை வரவேற்று மாடிக்கு அழைத்துவந்து உட்காரச் செய்து, ஏது இவ்வளவு தூரம், வீடு தேடி வந்தீர்கள் என்று கேட்க, திரு.சி.ஆர். அவர்கள் அருகில் இருந்த என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். குறிப்புணர்ந்த பெரியார், இவர் நம்மவர் தான். சொல்லக்கூடியதைக் கூசாமல் சொல்லுங்கள் என்றார். அதற்கு சி.ஆர். ஒன்றுமில்லை, ஒரு ஆலோசனைக் கேட்டுப் போகலாம் என்று வந்தேன் என்றார். பெரியார் உடனே, என்ன? கேலி பண்ணுகிறீர்களா? ஆலோசனையா? அதுவும் தாங்களா? என்னிடமா? இது நன்றாய் இல்லையே! என்று அடுக்கடுக்காக மெதுவாகச் சொன்னார். திரு. சி.ஆர். பதில் அளிக்கையில் இல்லை நாயக்கரே! பல நாள் யோசனை செய்தேன், சிக்கலாக இருந்தது, கடைசியாக உங்களை ஆலோசனை கேட்கலாம் என்று பிரச்சினையை முன் வைத்தார். அந்தச் செய்தி அருகில் இருந்த எனக்கும்கூட சிக்கலாகவே தோன்றியது. ஆனால், சி.ஆரின் பிரச்சினைக்கு அவர் சொல்லி முடிக்குமுன் பெரியாரும், தாங்கள் அப்படிச் செய்யலாமே! இது உங்களுக்குத் தெரியாதா என்று எளிதான யோசனையையும் சொன்னார். அதற்கு சி.ஆர். நானும் அப்படிச் செய்யலாமென்றுதான் எண்ணினேன். ஆனால் பொதுஜனங்கள் நம்மைப்பற்றி தப்பாக நினைப்பார்களே என்று அச்சப்பட்டேன் என்றார். அற்குப் பெரியார் சிரித்துக்கொண்டே, மற்றவர்கள் பொது ஜனங்கள் என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. தாங்களும் நானும் பொது ஜனங்கள் என்று சொல்லலாமா? என்று திருப்பிக் கேட்டார். உடனே சி.ஆரும் அப்ப சரி என்று கூறி எழுந்து போய்விட்டார்.
நாம்தான் பொதுஜனங்களையே உண்டு பண்ணுகிறவர்கள் என்ற இப்புதிய கருத்து எனக்கு அன்றுதான் விளங்கியது.
- முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்
தந்தை
பெரியார் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்
Comments
Post a Comment