முட்டுக் கட்டைப் போடாதே!



பார்ப்பனர் ஒருவர் ஈரோட்டில் அந்தக் காலத்தில் மஹாஜன ஹைஸ்கூலில் கரஸ்பான்டெண்டாக இருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை குமுதம் வார ஏடு வெளியிட்டிருந்தது. அதை அப்படியே தருகிறேன்.

காலஞ்சென்ற என் தகப்பனார் திரு. ராமசாமி அய்யர் அய்ம்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்னர் ஈரோட்டில் மஹாஜன ஹைஸ்கூலில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது அந்தப் பள்ளியின் செகரட்டரி, திரு..வெ.ராமசாமி நாயக்கர், விநாயக சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் மனமுவந்து திரு. நாயக்கர் அவர்கள், தங்கள் தோட்டத்துக் காய்கறிகளையும், பழங்களையும் வழங்குவது வழக்கம். தவிர, அவர் எல்லோரையும் ஆண்டவனுக்குப் பூஜை செய்து வாழ்தல் அவசியம் என்ற உணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு இருந்தார்.

என் தகப்பனார் பி..,எல்.டி., தேறி முதன்முதல் உத்தியோகத்துக்கு வந்திருந்தார். அங்கே, முறைப்படி தலைமை ஆசிரியரிடம் மூன்று வருடம் உத்தியோகம் கண்டிப்பாகப் பார்ப்பதாக ஓர் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்திருந்தார். ஆயினும், அந்தக் காலத்தில், தனிப்பட்டோர் அலுவலகங்களில் வேலை செய்வதைவிட அரசாங்கத்தில் வேலை செய்வதுதான் சிறந்தது என்ற நிலைமை இருந்தது. அதனால் என் தகப்பனாரும் அரசாங்கத்தில் உத்தியோகம் பெற முயற்சி செய்தார். அதன் பயனாக, அவருக்குத் திருவாரூர் கவர்ன்மெண்டு ஹைஸ்கூலில் கணித ஆசிரியர் பதவிக்கு அரசாங்க உத்தரவு கிடைத்தது.

மிக்க மகிழ்ச்சியுடன் என் தகப்பனார் தலைமை ஆசிரியரை அணுகி, தன்னை மஹாஜன ஹைஸ்கூல் பதவியிலிருந்து விலக்கி விடுமாறு வேண்டிக் கொண்டார். தலைமை ஆசிரியர் சொல்லொணா கோபம் கொண்டு, முந்திய ஒப்பந்தத்தை நினைவுபடுத்தி, என் தகப்பனாரை விடுவிக்க முடியாது என்றும், ஒப்பந்தப்படி மூன்று வருடம் கழிந்த பிறகே இன்னொரு உத்தியோகத்திற்குப் போக முடியும் என்றும் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

இந்தச் சங்கடமான நிலையில், என் தந்தை திரு.ராமசாமி நாயக்கரைப் பயத்துடன் அணுகி, தனக்கு உதவி பண்ணும்படி வேண்டிக் கொண்டார். உடனடியாகத் திரு.ராமசாமி நாயக்கர் தலைமை ஆசிரியரை வரவழைத்து, ஏன் அய்யா! இந்தச் சிறு வயதுக்காரர் தன் வாழ்க்கை உயர்வதற்காக அரசாங்கத்தில் புக ஆசைப்படுகிறார், அரசாங்கமும் உத்தரவு கொடுத்துவிட்டது. நீர் ஏன் வீணில் இன்னொருவன் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறீர்? உடனடியாக அவரை ரிலீவ் செய்துவிடுங்கள். இன்னொருவனுக்கு வாழ்க்கையில் உதவி செய்தால், உம் வாழ்க்கை உயருமய்யா! என்று சொல்லி என் தகப்பனாருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்க உதவி செய்தார்.

பெரியார் ராமசாமி நாயக்கரைப்பற்றி என் தகப்பனார் மூலம் தான் கேட்ட பல உண்மைகளில் இது ஒன்று. இன்று திரு.ராமசாமி நாயக்கர் எத்தனையோ மாறுதல்களை அடைந்து இருந்தபோதிலும், எங்கள் குடும்பத்தில் பெரியாரைப் பற்றி பேசும்போதோ அல்லது படிக்கும் போதோ, அவருடைய கடந்த கால அரும்பெரும் செயல்கள்தான் ஞாபகத்தில் வருகின்றனவே தவிர, நிகழ்கால வருஷங்கள் நினைவில் வருவதேயில்லை.

- ஆர்..ராஜன் (குமுதம் வார ஏட்டில்)
(தந்தை பெரியார் 128ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்)


Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை