பண்பாளர்



தந்தை பெரியார் .வெ.ராமசாமி என்றால், நாத்திகர் என்னும் காட்சியே முதலில் மின்னும், அது தவறும் அல்ல. அந்த நாத்திகர், கடவுள் நம்பிக்கையாளரிடம் எவ்வளவு பண்போடு நாகரிகத்தோடு நடந்து கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் மூன்று நிகழ்ச்சிகளைக் காண்போம்.
பல்லாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் பள்ளியின் பொற்காலம் நிலவியது. ஊர்தோறும் குழு அமைத்து, பணம் திரட்டி, பள்ளிகளில் நடுப்பகல் உணவைக் கொடுத்தார்கள். பள்ளிக்கூட பகல் உணவுத் திட்டம் படிப்புக்குத் துணை நின்றதோடு, எல்லா ஜாதிப் பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உண்ணும் பழக்கத்தையும் வளர்த்தது. அதோடு நிற்காமல், பள்ளிகளைச் சீரமைப்பதற்கு வேண்டிய தளவாடங்கள், துணைக் கருவிகள், பாட நூல்கள், விரிந்த படிப்பிற்கான நூல்கள், பலவேளை பள்ளிக்கட்டடங்களையும் உள்ளூர் மக்கள் தனித்தனியாகவோ, கூட்டாகவோ கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வதில் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம் அது.
அப்போது சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், பள்ளிச் சீரமைப்பு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கால கட்டத்தில், இந்தியப் பேரரசில், இரயில்வே இராச்சிய அமைச்சராக இருந்த திரு.எஸ்.வி.ராமசாமி, இந்தியப் பேரரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர் ஸ்ரீமாலி என்பவரை அம்மாநாட்டுக்கு அழைத்து வந்தார். சென்னை மாநிலக் கல்வி அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியமும் அம்மாநாட்டில் பங்கு கொண்டார். எனவே, பொதுக் கல்வி இயக்குநராக இருந்த நானும் அவர்களோடு மாநாட்டுக்குச் சென்றேன்.
தாரமங்கலத்திற்குப் புறப்படுவதற்குமுன், சேலம் சந்திப்பில் இரயில்வே அமைச்சரின் தனிப் பெட்டியில் கூடினோம். அப்போது சேலம் காங்கிரசார் பலர், அங்கு வந்து அமைச்சர்களுக்கு மாலை சூட்டினார்கள்.
சேலம் நகராட்சி மண்டபத்தில் முதல் அமைச்சர் காமராசரின் படத்தைத் திறந்து வைத்த நிகழ்ச்சி நன்றாக நடந்ததா என்று கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் கேட்டார்.
வந்தவர்கள், வெகு சிறப்பாக நடந்தது, திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த பெரியார் அருமையாகப் பேசினார். பெரியாரை அழைத்தவுடன் இசைவு தந்தார். அழைப்பிதழ் அச்சிட்டபோது, வழக்கம்போல, நிகழ்ச்சி நிரலில் கடவுள் வாழ்த்து என்று முதலில் குறித்திருந்தார்கள். அழைப்பினைப் பெற்ற ஒரு நண்பர், நகராட்சித் தலைவரிடம், பெரியார் கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து வைத்திருக்கிறீர்களே! பெரியார் கோபப்பட்டு, கடவுள் மறுப்புப் பேச்சாகவே முழுவதும் பேசிவிட்டால் என்ன செய்வது? என்று அச்சுறுத்தினார்.
விழாவிற்கு ஏற்பாடு செய்தவர்கள் கலந்து பேசினார்கள். பெரியாரை, நகரமன்றத் தலைவர் அறைக்கு அழைத்துப் போய் உட்கார வைத்து விடுவோம். விழா மண்டபத்தில் கடவுள் வாழ்த்து பாடிய பிறகு, பெரியாரை மண்டபத்திற்கு அழைத்து வருவோமென்று முடிவு செய்தார்கள். தந்திரம் பலிக்கவில்லை.
வழக்கம்போல பெரியார், சில மணித் துளிகள் முன்னதாகவே வந்துவிட்டார். நகரமன்றத் தலைவரின் அறைக்குச் சென்றார். குறித்த நேரத்திற்கு மூன்று மணித்துளிகள் இருக்கும்போது, பெரியார் எழுந்து விழா மண்டபத்தை நோக்கி நடந்தார். மேடையில் அமர்ந்ததும், அங்கிருந்த நிகழ்ச்சி நிரலைப் பார்த்துவிட்டு, தடியூன்றி எழுந்து நின்றார். கடவுள் வாழ்த்து என்று இவரே அறிவித்துவிட்டார்.
கடவுள் வாழ்த்து முடியும் மட்டும் பெரியார் நின்று கொண்டிருந்தார். தமது பேச்சில் கடவுள் பக்கமே வரவில்லை. காமராசரின் கல்விச் சாதனைகளைப் பற்றி பிரமாதமாகப் பேசினார். எல்லோருக்கும் சொல்ல முடியாத மகிழ்ச்சி என்று அறிவித்தார்கள்.
கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் மேற்கூறியவற்றைக் கேட்டுவிட்டு, பெரியாரால் தாக்கப்படாத புனிதமான கருத்துக்கள் எதுவும் இல்லை. எவ்வளவு பெரிய மனிதராயினும் ஒவ்வொரு இந்தியத் தலைவரும் அவரால் ஒரு முறையாவது தாக்கப்பட்டிருப்பார். எதிர்ப்புக் கடலுக்கிடையில், அவர் குலைக்க முடியாத செல்வாக்கோடு பொது வாழ்வில் இருப்பதற்குக் காரணமே நீங்கள் சில நாள்களுக்குமுன் கண்ட அவருடைய தன்னடக்கமும் பண்பாடும் கட்டுப்பாடும் ஆகும் என்று சொன்னார்.
அடுத்து, 1966ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஈரோடு சிக்கைய்யா கல்லூரி நாள். சிறப்புரையாற்ற நான் இசைந்தேன். அதைக் கேள்விப்பட்ட பெரியார் - கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர், அதுவரை கல்லூரிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர் - தானே விழாவிற்குத் தலைமை தாங்குவதாக எழுதிவிட்டார். அப்படியே வந்து தலைமை ஏற்றார். அவ்விழாவிலும் முதல் நிகழ்ச்சி, கடவுள் வாழ்த்து என்று குறிக்கப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் விழாவைத் தொடங்கிய பெரியார், எழுந்து நின்று, கடவுள் வாழ்த்து என்று அறிவித்தார். கடவுள் வாழ்த்துப் பாடினார்கள். பெரியார் பொறுமையாக இருந்தார்; பின்னர் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கல்வி பற்றியே பேசினார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தை பெரியாரை திருச்சியில் பெரியார் மாளிகையில் நான் காண நேர்ந்தது. அவர் கொடுத்த சிற்றுண்டியை உண்டபடியே அய்யாவோடு பேசிக் கொண்டிருந்தேன். கூட்டுப் பாட்டு காதில் வீழ்ந்தது. பாட்டு முடியும் மட்டும் பொறுத்திருந்தேன்.
முடிந்ததும் நான் அய்யா, நம் அனாதை இல்லப் பிள்ளைகள், கடவுள் வாழ்த்து என்று நீராடும் கடலுடுத்த என்னும் பாட்டைப் பாடுகிறார்களே! என்று வியப்போடு கேட்டேன்.

அதற்குப் பெரியார், ஆதரிக்க ஆள் இல்லாத குழந்தைகள் இவை. சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக, நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கலாமா? வயது வந்தால், அவர்களாகப் படித்துத் தெரிந்து கொள்வார்கள். தங்கள் சிந்தனையின் விளைவாக நாத்திகர்கள் ஆனால் அது சரி! என்று அமைதியாகக் கூறினார்.
கடவுள் வாழ்த்து காதில் வீழ்வதால், தன்னுடைய நாத்திகக் கற்புக்குப் பழுது ஏற்பட்டுவிட்டதாகக் கருதவில்லை பெரியார். என்னே அவரது பெருந்தன்மை; தாராள மனப்பான்மை; பொறுமை.




Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை