நாடகக் கலைஞர்களுக்குப் பெரியார் அளித்த விருந்து



திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி, ஈரோடு முதலிய ஊர்களுக்குச் சென்றோம். ஈரோட்டில் ஒரு நாள் பெரியார் .வெ.ரா. அவர்களைக் காண அவரது குடிஅரசு அச்சகத்திற்குச் சென்றேன். முன்புற அறையில் உட்கார்ந்திருந்த ஒருவர் என்னை அன்புடன் வரவேற்றார்.
கருத்து அடர்ந்த மீசை, கம்பீரமான தோற்றம். பேச்சிலே இனிமை தவழ்ந்தது. அவர் எங்கள் தேசபக்தி நாடகத்தைச் சிறப்பாகப் புகழ்ந்தார். அதில் பாரதிப் பாடல்களைப் பாடுவதற்காக மிகவும் பாராட்டினார். தங்கள் பெயரென்ன? என்றேன். ஜீவானந்தம் என்று பதில் கிடைத்தது. தேசிய உணர்ச்சி ஏற்பட்ட பின்பு, தொடர்ந்து தமிழில் வெளிவந்த எல்லாப் பத்திரிகைகளையும் நான் படித்து வந்தேன். அவற்றில் பூவாளூர் .பொன்னம்பலனாரின் சண்டமாருதம் ஒன்று. அதில் படித்த, தோழர் ஜீவாவின் பாடல் என் நினைவுக்கு வந்தது.

பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - அதன்
பட்டினியழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்
இட்டு வணங்குகிறார் முக்திக்கென்றே!
இப்பாடல் பல அடிகளைக் கொண்டது. இந்தப் பாடலை எழுதிய ஜீவானந்தம் என் இதயத்தில் இடம் பெற்றிருந்தார். அவரே இப்போது எதிரில் இருப்பவர் என்பதை அறிந்ததும் என் உள்ளம் மகிழ்ந்தது. தோழர் ஜீவா என்னைப் பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அறிமுகப்படுத்தி வைத்தார். எங்கள் நாடகங்களைப் பற்றிப் புகழ்ந்தார். பெரியார் அவர்கள் என்னை மகிழ்வுடன் வரவேற்றார். குடிஅரசுப் பதிப்பகம், பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தாம் வெளியிட்ட நூல்களையெல்லாம் கொண்டுவரச் சொன்னார். சிறிதும் அயர்வுறாது அத்தனை நூல்களிலும் கையொப்பமிட்டுக் கொடுத்தார். அன்றுமுதல் பெரியார், ஜீவா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத் தோழர்களுடன் எங்களுக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது.

கடவுட் கொள்கையில் எங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்தன என்றாலும் சுயமரியாதை இயக்கத்தின் ஜாதி ஒழிப்பு, குழந்தை மணத் தடை, கலப்பு மணம், கைம்பெண் மணம் முதலிய சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகள் என்னை மட்டுமல்ல, எங்கள் குழுவினர் அனைவரையும் கவர்ந்தன. தோழர் ஜீவாவின் சமதர்ம உணர்வும், அதுபற்றிய அவரது பாடல்களும் சொற்பொழிவுகளும் எனக்கு ஓர் உறுதியான இலட்சியத்தை வகுத்துத் தந்தனவென்றே சொல்ல வேண்டும். எனக்கு அரசியலறிவு ஊட்டிய அறிஞர்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கவர் தோழர் ஜீவானந்தம் அவர்களே ஆவார்.
நாங்கள் நடத்தி வந்த சமுதாயச் சீர்திருத்த நாடகங்களைப் பெரியார் அடிக்கடி வந்து பார்த்தார். அந்த நாடகங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. எங்கள்மீது பற்றுக் கொள்ளச் செய்தன. எங்கள் குழுவினர் அனைவருக்கும் ஒரு நாள் பெரியார் இல்லத்தில் விருந்து நடந்தது. அப்போது பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார் உயிருடன் இருந்தார்கள். அவர்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். பெரியார் அவர்கள் எங்கள் நாடகக் கம்பெனிக்கு விருந்து வைத்ததைக் கண்டு ஊரே வியந்தது. எப்போதும் சிக்கனத்தைக் கையாளும் பெரியார் அவர்கள் ஒரு நாடகக் கம்பெனியாரிடம் இவ்வளவு தாராளமாகப் பழகியதும், விருந்து வைத்ததும் வியப்புக்குரிய செய்தியல்லவா!

- அவ்வை தி.. சண்முகம், (முகம், சனவரி 2005)
தந்தை பெரியார் 127ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர்



Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை