ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பே


ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச இயக்கம் என்பது அதன் செயல்பாடுகள் எளிதில் விளக்கிவிடும். அது அரசியலில் ஈடுபடாததால் அது ஒரு சமுதாய இயக்கமா? அல்லது மதவாத இயக்கமா? என்ற அளவில் பலரது பார்வை நின்று விடுகிறது.
ஆனால், உண்மையில், ஆர்.எஸ்.எஸ். என்பது பாசிச வெறிபிடித்த அரசியல் அமைப்பேயாகும். ஆர்.எஸ்.எஸ். எப்படி அரசியல் அமைப்பாகும்? என்று அதிசயம் எழுந்தாலும் உண்மையில் அது அரசியல் அமைப்புதான்; அரசியல் இயக்கந்தான் என்பதை ஆணித்தரமாக இங்கு ஆதாரங்களோடு நிரூபிக்க விரும்புகிறேன்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு விலாங்கு மீன்: பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுவது விலாங்கு மீன் என்பர். இரண்டையும் ஏற்கச் செய்வது மட்டுமல்ல, இரண்டிடமிருந்து தப்புவதும் அதில் அடங்கியுள்ளது.
அதே வகையில் ஆர்.எஸ்.எஸ். தன்னை அரசியல் இயக்கமாகவும், இந்து சமூக இயக்கமாகவும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது.
இந்த ஏற்பாட்டிற்கு நுட்பமான காரணங்கள் உண்டு.
1. இந்துத்வா கொள்கையை, மதச் சார்புடைமையை நேரடியாக வடிவமைத்து, கொள்கைப் பிரகடனம் செய்து, அரசியல் கட்சியாகக் களம் இறங்கினால், இன்றுள்ள போட்டி அரசியலில் அது எடுபடாமல் போகும்.
அரசியல் கட்சியாக அறிவித்துக் கொண்டு இந்துக்கள் அனைவரையும் ஒன்று திரட்டவும் முடியாது. அரசியல் காழ்ப்பில் இந்துக்கள் இதன்கீழ் இணையமாட்டார்கள்.
வெறும் இந்து சமுதாய இயக்கமாக காட்டிக் கொண்டு விட்டால் ஆட்சி பீடம் அரிதாகிவிடும்; வெறும் அரசியல் கட்சியாகக் காட்டிக் கொண்டால் அனைத்து இந்துவையும் இணைக்க முடியாது. எனவே, இரண்டையும் தன்னகத்தே கொண்டுவிட்டால் (விலாங்கு மீன் போல்) இடத்திற்கேற்ப, தேவைக்கேற்ப காட்டி வென்றுவிடலாம், ஆட்சிப் பீடத்திற்குச் சென்றுவிடலாம் என்ற காரணங்களுக்காகவே இரட்டை உருவத்தை - இரட்டை வேடம் அல்லவா ஆர்.எஸ்.எஸ். ஏற்றுள்ளது. அவர்களின் இரட்டை உறுப்பினர் திட்டத்தின் மூலம் இதை எளிதில் அறியலாம்.
இரட்டை உறுப்பினர் யுக்தி:
ஆர்.எஸ்.எஸ். தனது வளர்ச்சியை எளிமைப்படுத்திக் கொள்ளவும், இந்துக்களை ஒரே சரட்டில் தொடுக்கவும் இந்த யுக்தியை உண்டாக்கியது. அரசியல் கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் உறுப்பினராக இருக்கலாம் என்ற இரட்டை உறுப்பினர் (Due Membership)  முறையை அது உருவாக்கியது.
இந்த யுக்தி, தன்னை அரசியல் இயக்கமாக எப்போது வேண்டுமானாலும் காட்டிக் கொள்ளவும், தான் அரசியல் இயக்கம் அல்ல என்று எப்போது வேண்டுமானாலும் கூறிக்கொள்ளவும் ஆர்.எஸ்.எஸ். பயன்பட்டது; பயன்கூடுகிறது.
இந்த மோசடியின் பின் விளைவை 1934லே உணர்ந்த காங்கிரஸ் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. காங்கிரஸ் கட்சியிலே உறுப்பினராக இருக்கக்கூடியவர்கள் ஆர்.எஸ்.எஸ்.இல் உறுப்பினராக இருக்கக் கூடாது என்பதே அத்தீர்மானம்.
1977இல் ஜனதா கட்சி ஆட்சியின்போதும் இந்த இரட்டை உறுப்பினர் பிரச்சினை வெடித்துக் கிளம்பியது. ஜனதாக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.இல் அங்கம் வகிக்கலாமா? என்ற கேள்வி பெரிதாகி ஜனதாவே உடைந்து சிதறியது.
ஆக, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் இலக்கு ஆட்சியைப் பிடிப்பதே! அரசியலோடு தன்னை இரண்டறப் பிணைத்துக் கொண்டே வளர வேண்டும் என்பதே அதன் திட்டம். அரசியல் கட்சியாக அடையாளங் காட்டாத; அறிவித்துக் கொள்ளாத அரசியல் கட்சியாகவே அது வளர்ந்தது; வளர்ந்தும் வருகிறது.
2. ஆர்.எஸ்.எஸ்.இன் முழக்கங்கள்:
. முஸ்லீம்கள் இராமரைத் தம் வீர புருஷராகக் கருதட்டும், வகுப்புவாத பிரச்சினைகள் எல்லாம் முடிந்து விடும்.
- ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் 20, ஜூன் 1971
. அரசியலை இந்து மயமாக்கு. இந்து மதத்தை இராணுவ மயமாக்கு                                           - சவர்க்கார் (ஆர்.எஸ்.எஸ்.)
அவர்கள் எத்தனையோ முழக்கங்களை முழங்குகிறார்கள் என்றாலும், இந்த இரண்டு முழக்கங்களையும் இங்கு கூர்மையாக நோக்கின் ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பே என்பது வெளிப்படும்.
ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சார இயக்கம் என்றால், முதலில் அதன் கலாச்சாரம் எது என்று அறிவிக்க வேண்டும். இந்து மதத்தின் கலாச்சாரம் என்றால், இந்து மதத்தின் கலாச்சாரம் எது என்று காட்டவேண்டும்.
அப்படிக் காட்டும் கலாச்சாரத்தின் மேன்மையை, அதனை மக்கள் பின்பற்றினால் வரும் நன்மையை, அதனை எல்லோரும் ஏற்கவேண்டியதன் அவசியத்தை எடுத்து, பண்போடும், அன்போடும் மக்களுக்கு அறிவுறுத்தி, அவர்களே விரும்பி ஏற்கும்படியாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அப்படிச் செய்கின்ற அமைப்பு கலாச்சார அமைப்பாக இருக்க முடியும்.
அதைவிடுத்து, இன்னொரு மதத்தைப் பின்பற்றுகிறவர்களை, இன்னொரு இறையை நம்புகின்றவர்களை, அவற்றை விட்டுவிட்டு இராமனை ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்படி ஏற்கவில்லையென்றால் வகுப்பு மோதலும், வன்முறையும் தொடரும் என்று ஒரு அமைப்புக் கூறினால், அது கலாச்சார அமைப்பாக எப்படி இருக்க முடியும்? சமுதாய அமைப்பாக எப்படி அமையும்?
உண்மையில் ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பு!
இந்திய நாடு முழுவதும் ஒரே கொள்கையின்கீழ், ஒரே கோட்பாட்டின் கீழ் கொண்டு மற்றக் கோட்பாடுகளை அழித்து, மறைத்து, ஆரிய தர்மத்தின் சட்டங்களை நிறைவேற்றும் இந்து சாமியார்களை ஆட்சியின் தலைமையாகக் கொண்டு, அவர்களின் கட்டளைக்கிணங்க, நாட்டையும், மக்களையும் நடத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரே ஆட்சியை அமைக்க மக்களை உணர்வேற்றி, வெறியேற்றி ஒன்றுபடுத்தவேண்டும்; அதற்காக பல உருவங்களில் ஆக்டோபஸ் போல தான் பல விதங்களில் தோன்றி பல வழிகளில் மக்களைக் கவர வேண்டும் என்கின்ற பாசிச போக்குடைய ஓர் அரசியல் அமைப்பு!
மக்களாட்சி முறைப்படி உருவாகின்ற அரசியல் கட்சிகளை நினைத்துக் கொண்டு நம் மக்கள் மயங்குவதால், ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பு என்பதை அவர்களால் அறிய முடியாமல் போகிறது.
அப்படிப்பட்ட மக்களுக்கு விளங்கவே இரண்டாவது முழக்கத்தை இங்கு காட்டியுள்ளேன்.
அரசியலை இந்து மயமாக்கு; இந்துமதத்தை இராணுவ மயமாக்கு, இந்த முழக்கம் அவர்களை அப்பட்டமாக அடையாளங்காட்டுவதோடு அவர்கள் எப்படிப்பட்ட அரசு அமைக்க விரும்பும் அரசியல் வாதிகள் என்பதை அடையாளங்காட்டுகிறது.
மதச்சார்பற்ற அரசு என்ற நிலை, அறவே மாற வேண்டும். இந்து ஆட்சி என்பதே இந்தியாவின் ஆட்சியாக இருக்க முடியும். ஆக, இந்திய அரசு என்பது இந்து அரசு என்று ஆக்கப்படவேண்டும். அந்த அரசு இராணுவம் இந்திய நாட்டின் எல்லையைப் பாதுகாப்பது மட்டுமல்ல; அது இந்துக்களையும், அவர்களின் தர்மங்களையும் பாதுகாப்பது. அதாவது மதரீதியான மோதல்களுக்கு இராணுவம் பயன்படுத்தப்பட வேண்டும். இதுவே இரண்டாம் முழக்கத்தில் இழையோடும் இலக்கு!
அதாவது, இந்து மதம் என்றால் ஆரிய மதம்; இந்து தர்மம்என்றால் ஆரிய தர்மம். இந்தியா என்றால் ஆரிய நாடு. இந்தியாவின் ஆட்சிமொழியென்றால் அது சமஸ்கிருதம் - என்ற உண்மையான இலக்கை உள்ளடக்கி மேலே, இந்து, இந்து தர்மம் என்ற போர்வையை, பூச்சைப்பூசி, கவர்ச்சியைக் காட்டி, களத்தில் மோதி, களறியை ஏற்படுத்தி, அப்பாவி மக்களின் உணர்ச்சிகரமான ஒத்துழைப்போடு ஆட்சியைப் பிடித்து, அதன் மூலம் ஆரிய ஆதிக்கத்தை நிலை நாட்டும் முயற்சியில்; போரில் ஆக்டோபஸ்ஸாகவும், விலாங்கு மீனாகவும் மர்ம வேடதாரிகளாகவும், உத்தமர்கள் போல் நடிக்கும் முகமூடிகளாகவும் பல்வேறு பெயர்களில், அமைப்புகளில் புறப்பட்டிருக்கும் ஓர் அரசியல் அமைப்பே ஆர்.எஸ்.எஸ்.
இது ஓர் வினோத, விபரீத அரசியல் அமைப்பு என்பதால்; விலாங்கு மீன் அமைப்பு என்றால் இனங் காண்பது எளிதல்ல ஆயினும், ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பே என்பதை ஆணித்தரமாக நிரூபிக்க ஆதாரங்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.
1. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குருதட்சணை வருவாய்ப் பற்றி, வருமான வரித்துறை தொடுத்த வழக்கில், 06.03.1978இல், ஆர்.எஸ்.எஸ். சார்பில் அதன் தலைவர் தேவராஸ், மற்றும் பொதுச் செயலாளர் இராசேந்திரசிங்கும் நாக்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்) ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பு என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
“It must be held that R.S.S. activity is akin to a work for political purpose, though the R.S.S. as on organisation eschews participation in active palities of power as a policy.”
அதாவது,
நாங்கள் அதிகார அரசியலில் தீவிரங் காட்டாவிட்டால்கூட, ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகள் அப்பட்டமான அரசியல் நோக்கங்களை  கொண்டதுதான்.
“Nevertheless its member may and do take part in politics subject to the present policy limitations of the Constitution. It is undisbuted that several memebrs of the R.S.S. are actively Participating in political activity and many of them are even member of parliment and several of them are in the union and state cabinets.”
அதாவது,
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலர் அரசியல் நடவடிக்கைகளில் தீவிர பங்கு கொண்டுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. பல ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அநேகர் மத்திய மாநில அரசுகளில் அமைச்சர்களாகவும் உள்ளனர்.
இவ்வாறு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே அழுத்தந்திருத்தமாய் ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் அமைப்பே என்று வாக்குறுதிப் பத்திரம் அளித்தபின், அது ஓர் அரசியல் அமைப்பல்ல என்று சொல்லி, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் சேரலாம் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! எவ்வளவு பெரிய மோசடி!
2. ஆர்.எஸ்.எஸ். ஒரு விலாங்குமீன் என்பதற்கிணங்க, அவர்களின் அரசியல் அங்கந்தான் ஜனசங்கம் என்பது.
இந்த ஜனசங்கம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் முயற்சியினால் அமைக்கப்பட்டது. 1931இல் ஷியாம் பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை ஆரம்பித்தார். அப்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை அனுப்பி உதவி செய்தார். இவ்வாறு அனுப்பப்பட்ட ஊழியர்களுள் முக்கியமானவர்கள்:
1. தீன்தயாள் உபாத்தியாயா 2, வாஜ்பேயி, 3. அத்வானி.
இப்படிப்பட்ட உருவாக்கப்பட்ட ஜனசங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட வாரிசுதான் பி.ஜே.பி. ஆக, வடிவங்கள் வேறாயினும், வார்த்தைகள் வேறாயினும், நோக்கங்கள் ஒன்றே.
ஜனசங்கத்தை ஷியாம் பிரசாத் முகர்ஜி மூலம் உருவாக்கிய, உறுதுணை புரிந்த அதே ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர்தான் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற வி.எச்.பி. உருவாகவும் காரணமானார்.
1964இல் மதத் தலைவர்களையும், சாமியார்களையும் சந்தித்து, இந்து மதத்தின் எல்லாப் பிரிவுகளையும் ஒன்று சேர்த்து ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கும் பொறுப்பை கோல்வால்கர் ஏற்றுக் கொண்டார். அவ்விதம் ஏற்படுத்தப்பட்ட வி.எச்.பி. முதல் 10 ஆண்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் இயங்கியது. 1981இல் தமிழ்நாட்டில் நடந்த மீனாட்சிபுரம் கலவரத்திற்குப் பின் இந்த அமைப்பு இந்தியா முழுவதும் பரவியது.
ஆக, எல்லா அமைப்புகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்புகளே.
சில உறுப்புகள் அரசியலில் நேரடியாகப் பங்கு கொள்ளும், சில உறுப்புகள் அந்த அரசியல் உறுப்புகளுக்கு உரிய பலத்தைச் சேர்க்க, உறுப்பினர்களை உருவாக்கிக் கொடுக்கும் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, கலவரங்களை ஏற்படுத்தி மத ரீதியான ஆதரவை அரசியல் அமைப்புக்கு ஏற்படுத்தும். அரசியல் அமைப்பு (பி.ஜே.பி.) அதை வாக்குகளாக மாற்றும்.
ஆக, ஆட்சியைப் பிடிக்க, அதிகாரத்தைப் பிடிக்க, ஆதிக்கத்தைச் செலுத்த, அதன்மூலம் ஆரிய தர்மத்தை அமல்படுத்த இந்த அமைப்புகள் ஆளுக்கொரு பணியை மேற்கொண்டு செய்கின்றனவே அல்லாமல் இவை வெவ்வேறானவை அல்ல. எனவே, இவை அனைத்துமே அரசியல் அமைப்புகளே. இவற்றின் நோக்கம் இந்து அரசு அமைத்து, இந்து சாத்திரத்தைச் சட்டமாக்கி, ஆரிய மொழியை (சமஸ்கிருதத்தை) ஆட்சி மொழியாக்குவது தான்; ஆரியர் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதுதான்.
3. ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் அணுகுமுறைகள், அரசமைக்கும் நோக்கமும் கொண்டே ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் செயல்படுகின்றன என்பதைக் கீழ்க்கண்ட செயல்பாடுகள் தெளிவுபடுத்தும்.
() 1970ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். தன் கிளைகளைத் தொகுதி வாரியாக மாற்றியமைத்தது. இது, தேர்தல் அரசியலுக்கு ஏற்ப தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைத்துக் கொள்வதை தெளிவாக வெளிப்படுத்தியது.
() சட்டமன்றத் தேர்தல்களில் ஈடுபடுதல் மட்டுமின்றி, தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், மாதர் சங்கங்கள் என்று அரசியல் கட்சிகளின் பாணியில் ஆர்.எஸ்.எஸ். தன்னை அகலப்படுத்திக் கொண்டே செல்கிறது.
4. மேலும், அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் ஆர்.எஸ்.எஸ். அரசியல் கட்சிகளின் பலவீனங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கட்டங்கட்டமாக அரசியலில் அது வளர்ந்து வருகிறது.
இந்திராகாந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தை, அதன் கொடுமைகளை, காங்கிரஸ் மீது இருந்த வெறுப்பை, தனது அரசியல் ஆதாயத்திற்கு அறுவடை செய்ய ஆர்.எஸ்.எஸ். முயன்றதன் விளைவே ஜனசங்கம்.
காங்கிரஸ் மீதான வெறுப்பை தனது வாக்குகளாக மாற்றிக்கொண்ட ஜனசங்கம் 1977இல் 93 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது - வென்றது.
ஆனால், அது நிலையில்லாத கூட்டாட்சியாக, நெல்லிக்காய் மூட்டையாகக் கலையவே,
1981இல் நடந்த தேர்தலில் ஜனசங்கத்தின் எண்ணிக்கை 16 ஆகக் குறைந்தது.
இந்நிலை நீடித்தால் தங்களின் அரசியல் பிரவேசம், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சி தோற்றுப் போகும் என்ற முடிவில்,
தனது அரசியல் பிராண்டை மாற்றியமைத்து, பாரதீய ஜனதா என்று ஆக்கி, புதிய பெயரில் அரசியல் போட்டியில் இறங்கியது ஆர்.எஸ்.எஸ்.
ஆனால், ஏமாற்றம் மிஞ்ச, 1984இல் நடைபெற்ற தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டுமே பாரதீய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) வென்றது.
அரசியலில் பி.ஜே.பி. தோற்றாலும் அதன் மற்றொரு அங்கமான ஆர்.எஸ்.எஸ். இராமர் பிறந்த இடம், இராமர் கோயில் என்ற மத உணர்வைத் தூண்டி வளர்ந்து கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். வட மாநிலங்களில் குறிப்பாக உத்திரப்பிரதேசத்தில் விரைவான வளர்ச்சி பெற்றது.
இதன் விளைவு, அடுத்தடுத்த பாராளுமன்றத் தேர்தல்களில் தெரிந்தது. பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று விட்டது.
அதாவது, ஆர்.எஸ்.எஸ். எந்த அளவிற்கு மதவெறியைத் தூண்டுகிறதோ, எந்த அளவிற்கு கலவரங்களைத் தூண்டுகிறதோ அந்த அளவிற்கு பி.ஜே.பி.யின் வாக்குகள் கூடுகின்றன.
ஆக, ஆணிவேர் ஆர்.எஸ்.எஸ்.; பழம் பழுக்கும் கிளை பி.ஜே.பி. இங்கு மரம் மேலே தெரிந்தாலும், ஆணிவேர் தான் மரத்தின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
ஆணிவேரையும், மரத்தையும் பிரித்துப் பார்ப்பது எவ்வளவு மடமையோ, அந்த அளவிற்கு மடமை ஆர்.எஸ்.எஸ்.யையும், பி.ஜே.பி.யையும் பிரித்துப் பார்ப்பது.
எனவே, ஆர்.எஸ்.எஸ்.சும், அரசியல் அமைப்புதான் பி.ஜே.பி.யும் அரசியல் அமைப்புதான். இரண்டும் ஒரே அமைப்புதான். ஒன்று வெளியில் தெரிகிறது. மற்றது மறைந்திருக்கிறது அவ்வளவே!
இது புரியாமல் தோளில் சுமக்கும் ஏமாளிகள் இனியாவது திருந்தி, பி.ஜே.பி.க்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்கவேண்டும். அதற்குச் சரியான மாற்று காங்கிரசை விட்டால் வேறு வழியில்லை.
எனவே, மற்றவற்றையெல்லாம் (விருப்பு வெறுப்புகளை) ஒதுக்கிவிட்டு, காங்கிரஸ் அணியைப் பலப்படுத்தி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் அமைக்கத் தவறினால், காவிக் கொடி பறக்கப் போவதையும், ஆரியம் ஆதிக்கம் செலுத்தப் போவதையும், இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடப் போவதையும் யாராலும் தடுக்க முடியாது! இது எச்சரிக்கை மட்டுமல்ல; யதார்த்தமும் அதுவே!
ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவாரங்களும் மத உணர்வை உசுப்பி வெளியேற்றும் நடவடிக்கையில் இந்துக்களின் வாக்குகளை பி.ஜே.பி.க்குக் கிடைக்கும்படியாகச் செய்கின்றன.
இன்னொரு பக்கம் பி.ஜே.பி. நேரடியாக அரசியலில், மாநில வாரியாக, ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்குள்ள கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து தனது செல்வாக்கை வளர்த்து வருகிறது.
இந்த இரு தரப்பு வளர்ச்சியும் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராத மாநிலக் கட்சிகள், மாநிலத்தில் காணப்படும் தங்களது மோதல்களை, தனிநபர் விரோதங்களை மனதில் கொண்டு பி.ஜே.பி.க்கு துணை நிற்பது, பேராபத்து என்பது மட்டுமல்ல, பேரழிவையும் ஏற்படுத்தும் செயலாகும்.
மாநிலப் பகைமையை மாநிலத் தேர்தலோடு நிறுத்திக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசில் பி.ஜே.பி.யைப் பிரித்து, தனித்து விடுவதே அறிவுடையச் செயலாகும்.

மாநிலத் தேர்தலில்கூட, தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யோடு எந்த அணியும் கூட்டுச் சேர்வதில்லை என்று முடிவெடுத்தால், அது பெரியார் பிறந்த மண்ணுக்கும், மாண்புக்கும் அழகாகும். பி.ஜே.பி.யால் எந்த அணிக்கு லாபம்? பி.ஜே.பி.க்கு மட்டுமே இலாபம். தமிழகத் தலைவர்கள் தலைமுறையை எண்ணியாவது திருந்தட்டும்! இல்லையேல், பி.ஜே.பி.யோடு எவர் கூட்டுச் சேரினும் அவர்கள் தமிழின எதிரிகள், தமிழினத்தை அடிமையாக்கியவர்கள், அழித்தவர்கள் ஆவர்.

நூல்பி.ஜே.பி ஒரு பேரபாயம்
                                           ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? -தந்தை பெரியார்

ஜாதி ஒழிப்பு மாநாட்டில் பெரியார் உரை!

தந்தை பெரியார் விதைத்த விதை